சிக்கோ

சிவாஜி படத்தின் 107வது திரை விமர்சனம் படிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா அத விட்டுட்டு, முதல் வேலையா, தி பைரேட் பே போய் சிக்கோ திரைப்படத்துக்கான டொரன்ட் கோப்புகளை உங்க கணினில பதிவிறக்கிப் படத்தைப் பாருங்க. கோப்புகளைப் பதிவிறக்கும் முன்னர் பிட்டொரன்ட் நிறுவிக்கங்க.

மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் – கல்வி போன்ற அடிப்படை மனித உரிமைகள் கூட வணிக மயமாக்கப்பட்டா அது எந்த அளவு பரிதாபமான நிலைக்குச் சமூகத்தை இட்டுச் செல்லுங்கிறதுக்கான ஒரு விழிப்புணர்வுப் படமா பார்க்குறது நல்லது.

திரைப்படத்தில் மனதைத் தொட்ட காட்சிகள்:

1. கனடா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள்ல உள்ள அரசு மருத்துவ வசதிகளைக் காட்டும் காட்சிகள். பிரிட்டனில் மருத்துவமனைக்கு வந்து போகும் செலவையும் அரசே தருகிறது. பிரான்சில், தொலைபேசியில் அழைத்தால் 24 மணி நேரமும் மருத்துவர் வீட்டுக்கே வந்து இலவசமாக மருத்துவம் பார்க்கிறார். பிரான்சில், பிள்ளை பெற்ற தாய்க்கு அரசே துணிகளைத் துவைத்துத் தருகிறது !!

நெதர்லாந்து வந்த புதிதில் உடல்நலக் குறைவுக்காக விடுப்பு போட்டப்ப அதுக்காக சம்பளத்தைக் குறைக்கவோ, ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் விடுப்பு நாட்களைக் குறைக்கவோ இல்ல. குறைந்தது இத்தனை நாட்களுக்குள்ள பணிக்குத் திரும்பனும்னும் சொல்லல. மாறா, என் மருத்துவரே இவருக்கு இத்தனை நாள் விடுப்பு கொடுங்கன்னு எங்க பேராசிரியருக்கு எழுதிக் கொடுத்தார். ஏன்னு கேட்டா, உடம்பு சரியில்லாட்டி வேலை செய்யாம ஊதியம் பெற இயல்வது மனித உரிமைன்னு சொன்னாங்க !!! ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களேய்யான்னு வடிவேலு மாதிரி உணர்ச்சி வசப்பட வேண்டியதாச்சு. இது மாதிரி நம்ம நாட்டோட அரசு மருத்துவ வசதிகள் முன்னேறுமா? எப்ப முன்னேறும்? அதற்கான வழிமுறைகள் என்னங்கிற கேள்விகள் தான் படம் பார்க்கும் நேரம் முழுக்க மனசில நிழலாடிக்கிட்டு இருந்தது.

2. காப்பீட்டு நிறுவனத்துக்கு இலாபம் ஈட்டுவதற்காகப் பல நோயாளிகளுக்கு மருத்துவம் தர மறுத்துப் பின்னர் மனம் திருந்திய மருத்துவர் மன்னிப்பு கேட்கும் காட்சி.

3. வளரும் நாடான க்யூபா, தனது எதிரி நாடான அமெரிக்க நாட்டு மக்களுக்கு மனித நேயத்துடன் கொடுக்கும் மருத்துவ கவனிப்பைக் கூட தங்கள் சொந்த நாட்டில் அமெரிக்கர்கள் பெற இயலாமல் இருக்கும் நிலை. மருத்துவத்துக்கு காசில்லாத அமெரிக்கர்கள் வீதியில் கடாசப்படும்போது அவர்கள் முகத்தில் காணப்படும் அவமானம், இயலாமை ! க்யூபாவில் 5 centsக்கு கிடைக்கும் மருந்து அமெரிக்காவில் 120 டாலர் என்று ஒருவர் உணரும்போது வரும் கோபம், ஆற்றாமை.

4. நிறைய பணம் உள்ள வளர்ந்த நாடுகளும் வளரும் கியூபா போன்ற நாடுகளும் செய்ய இயன்றதை ஏன் அமெரிக்காவால் செய்ய முடி்யவில்லை என்ற கேள்வி ! அரசியலும் வணிகமும் கை கோர்த்து மக்களை முட்டாளாக்கி வைக்கும் உத்தியை பிரிட்டனின் முன்னாள் அரசியல்வாதி விளக்கும்போது, அட்பபாவிங்களான்னு தோணுச்சு !

5. We charge the patients according to their means and treat them according to their needs என்ற பிரெஞ்சு மருத்துவரின் பேட்டி.

இந்தப் படம் குறித்த பொதுவுடைமைப் பார்வைக்கு மயூரனின் பதிவைப் பாருங்க.

– வணிகம், அரசியல் தாண்டி ஒருவருக்கு ஒருவர் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதால், ஒருவருக்கு ஒருவர் பரிவுடன் இருப்பதால் எந்த விதத்திலும் சமூகம் பொருளாதார நிலையில் குறைந்து போய் விடாது என்பதை வலியுறுத்திப் படத்தை முடிக்கிறார் மூர். படத்தில் பிடித்திருந்த கருத்தும் இது தான்.

– அவனவன் முடிஞ்சா, காசு இருந்தா பொழைச்சுக்கட்டும்னு இல்லாம, இயன்றவர்கள் இயன்ற அளவு தந்தா எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் தானே? ஒருவருக்கு ஒருவர் சார்ந்து, பகிர்ந்து வாழும் வாழ்க்கையைத் தான் எல்லா உயிரினங்களும் மேற்கொண்டிருக்கின்றன. மனுசன் மட்டும் தான் பகிர்வதற்குப் பதில் பதுக்குவதில் குறியாக இருக்கிறான்.

– காமராஜர் படத்தில், “கல்வி, தாய்ப்பால் மாதிரி, அதைப் போய் விற்க முடியுமா?” என்று காமராஜர் கேட்கிற மாதிரி வரும் ஒரு காட்சி.

– சில நாள் முன்னர் நண்பரின் ஆய்வகம் பக்கத்தில் ஓடித் திரியுற முயல்குட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு யாரோ தீயணைப்புத் துறைக்கு அழைக்க, அவங்க ஒரு வண்டியும், மூனு ambulance வண்டியும் எடுத்துக்கிட்டு வந்தாங்களாம்.

இப்படி, பல சிந்தனைகள் படம் பார்க்கும் போது மனதில் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

படம் நாளைக்குத் தான் திரையரங்குல வெளியாகுது. ஆனா, இப்படி இணையத்துல இருந்து பதிவிறக்கிப் படம் பார்க்கிறதை இந்தப் படத்தின் தயாரிப்பாளரே ஆதரிக்கிறார் !!! இப்படிப் பார்ப்பதைத் திருட்டாகத் தான் கருதலைன்னும் நாம விரும்பியதை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள நல்ல வழின்னும் சொல்றார். படத்தில அறிவுரை சொல்றதோட இல்லாம, உண்மைலயும் அவர் அது படி நடக்கிறது நல்ல விசயம் தான்.

உலகத்தில் எல்லா திரைப்பட, பாடல் வெளியீட்டாளர்களும் இவரை மாதிரி இருந்துட்டா, சொர்க்கம் தான் !!! அப்புறம், இந்த பிட்டொரன்ட் மென்பொருளை வைச்சு http://www.tamiltorrents.net தளத்தில் திருட்டுத்தனமா டிவிடி தரத்தில் படங்களைப் பதிவிறக்கலாம் என்பதையும் மூர் சொல்லச் சொன்னார் 😉