நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:
குறிப்பு: தூய தமிழ்ப் பெயர்களைத் தரும் இணையத்தளங்களை அறியத்தருவதும், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்கள் குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். தயவு செய்து, உங்கள் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்த ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம். நாள், நட்சத்திரம் பார்க்காமல் மனதுக்கினிய பெயரை வைப்பதே சிறந்தது என்பதே என் நிலைப்பாடு. நன்றி.
**
தமிழர் பெயர்களில் பிற மொழித் தாக்கம்:
முந்தா நேத்து காலையில தூங்கிட்டிருந்தப்ப அண்ணன் அழைச்சார். அண்ணனுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கு.
“தம்பி, பையனுக்கு பேர் வைக்கணும். ர-வுல ஆரம்பிக்கிற நல்ல பேரா சொல்லுப்பா”
காலாங்காத்தால அண்ணன் எழுப்பி விட்ட கடுப்பு எனக்கு.
“ரவிசங்கர்-னு வையுங்க” 🙂
“தம்பி, புதுசா உள்ள பேரு சொல்லுப்பா. ராம், ராஜா-னு பழைய பேர் எல்லாம் வேண்டாம்”
“சரிண்ணே, இணையத்தில பார்த்து சொல்றேன்”
வலையில தேடினப்புறம் தான் தெரியுது. இந்த எழுத்தில் புதுப் பெயர்கள் ரொம்பக் குறைவு. இருந்தாலும் ரோஷன், ரோஹித்-னு எல்லாம் வட நாட்டுப் பெயரா இருக்கு. அதையும் மீறி புதுசா வைக்கணும்னா rembrandt-னு டச்சு ஓவியர் பேரை தான் வைக்கணும். கண்டிப்பா, இந்தியால இது புதுப் பேர் தான் 🙂
முன்ன எல்லாம் சாமிப் பெயர், குலசாமிப் பெயர், முன்னோர் பெயர், புகழ் பெற்றவர் பெயர், அரசியல்வாதி பெயர், தலைவர் பெயர்னு வைப்பாங்க. செட்டியார் வீட்டுப் பிள்ளைகள் பலர் இப்படி அழகம்மை, வள்ளியம்மை-னு இப்பவும் பேர் வைச்சிருக்கிறத பார்த்திருக்கேன். இப்ப நிறைய பேர் தொலைக்காட்சித் தொடர்கள்ல வர்ற பாத்திரங்கள் பேர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹர்ஷினி, வர்ஷினி, தர்ஷினி-னு எல்லாம் நாடக நடிகர் பேர். ஸ, ஷ, ஜ, ஹ கலந்து பேர் வைச்சா இன்னும் ரொம்ப மகிழ்ச்சி மக்களுக்கு.
தொலைக்காட்சித் தொடர்களும் எண் ராசி, சோதிட நம்பிக்கைகளும் பெருமளவில் ஊர்ப்புறங்களை கெடுத்து வைச்சிருக்கு. எங்க சித்திப் பையன் பேர் ஹர்ஷத். ஏன் ஹர்ஷத் மேத்தான்னே வைச்சிருக்கலாமேன்னு கேட்டேன் 😉 200 மக்களும் 50, 60 மாடுகளும் இருக்க ஒரு பட்டிக்கு எதுக்கு இந்தப் பெயர்?
புதுசா பேர் வைக்க வேண்டாம்னு இல்ல. ஆனா,முதல்ல வீட்ல உள்ளவங்க அதக் கூப்பிட முடியுற மாதிரி வைக்க வேண்டாமா? ஏற்கனவே சத்யாங்கிற எங்க உறவினர் பொண்ணுக்கு வீட்டுப் பெயர் வேலாயி. காயத்ரிங்கிற பொண்ணுக்கு வீட்டுப் பெயர் காயம்மா. இந்த வீட்டுப் பெயர்கள் எல்லாம் அப்பத்தாக்கள், அமத்தாக்கள் வசதிக்காக வைச்சது. வாயுல நுழையுற மாதிரி ஒரு பேர முதல்லயே வைச்சிருக்கலாம்ல. எங்க அக்கா பையன் பேரு ஹரீஷ். இருந்தாலும் அப்பத்தா அரீசு-னு தான் கூப்பிட முடியும். கிரந்த எழுத்து குறித்த எந்தக் கொள்கையும் அவங்களுக்கு கிடையாது 🙂 ஆனா, அவங்க வாயுல இப்படி தான் வருதுன்னா எது இயல்பான ஒலியமைதி கெடாத தமிழ், எது திணிக்கப்பட்ட ஒலின்னு எளிமையா புரிஞ்சுக்கிடலாம்.
பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு மகிழ்ச்சியையும் பார்த்திருக்கேன். எனக்கு எங்க அப்பா முன்னமே யோசிச்சாரான்னு தெரில. ஆனா, இந்தப் பெயர் தான் வைக்கணும்னு வைச்சாராம். மகிழ்ச்சி. அது என்ன அரும்பாடு பட்டு சுமந்து பெத்துட்டு பேரு வைக்க சோதிடனையும் அகராதியையும் பக்கத்து வீட்டுக் காரனையும் ஆலோசனை கேட்கிறது?
எங்க அம்மா ஒரு பழமொழி சொல்லுவாங்க..”ஒன்னு மண்ணும் இல்லையாம்..புள்ளைக்குட்டி அஞ்சாறாம்”-னு 🙂 அதனால் என்னோட இந்த தொலைநோக்குக் கவலைய நிறுத்திக்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி, புள்ளைக் குட்டி பிறக்கும் போது பார்த்துக்கிறேன் 😉
தொடர்புடைய இடுகை: தமிழர் பெயர்கள்