F

தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.

தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும் போது, தமிழர்கள் அனைவரும் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். தற்காலத்திலும், குடித்து விட்டு சாலையில் வருகையில் காவலர்கள் மறித்து ஊதிக் காட்டச் சொன்னால் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். இதில் இருந்து F ஒலி தமிழர்களுக்கு அறிமுகமானதே என்று அறியலாம்.

தமிழர்களுக்கு அறிமுகமான இந்த F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட முடியவில்லை என்றால், வரும் தலைமுறை தமிழைப் புறக்கணித்து தமிழ் அழியும் நிலைக்குச் செல்லும். எனவே, நமக்குத் தேவையான F ஒலியை ஆங்கிலத்திடம் இருந்து பெற்று தமிழில் சேர்த்துக் கொள்ளத் தயங்கக்கூடாது. புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது எம்மொழிக்கும் அழகு. இதுவே மொழி வளர்ச்சியாகும். இது வல்லினமா, மெல்லினமா, இடையினமா, அகர வரிசையில் எங்கு சேர்ப்பது, எவ்வளவு மாத்திரை, புணர்ச்சி விதி என்ன என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.

இனி, fரான்சு, fரெட்ரிக், fரெஞ்சு என்றே எழுத வேண்டும். முன்னர் பல காலமாக பிரான்சு, பிரெட்ரிக், பிரெஞ்சு என்றெல்லாம் எழுதி வந்திருந்தாலும் அனைவரும் இனி கட்டாயம் F எழுத்து கொண்டே எழுத வேண்டும். அப்படி எழுதியும் F உச்சரிக்க வராதவர்கள் நாட்டுப்புறத்தான்கள், பாமரர்கள், படிப்பறிவற்றவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள், காட்டான்கள். F எழுத மறுப்பவர்கள் தனித்தமிழ் வெறியர்கள், முட்டாள்கள், தமிழரை அறியாமையில் மூழ்கடிப்பவர்கள், பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள், Fல் தொடங்கும் பெயருடையவர்களை அவமதிப்பவர்கள், Fஆசிசுட்டுகள், நார்சியவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஆங்கில-வெளிநாட்டு-கிறித்தவ-fரெஞ்சு வெறுப்பாளர்கள்.

இனிமேல் F தமிழ் எழுத்து.

முற்றும்.

ஸ்ரீ X சிறீ X சிரீ

திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம்

தமிழ் விக்கிப்பீடியாவில் மஞ்சுஸ்ரீ என்ற கட்டுரை இயற்றப்பட்ட போது அதை ஏன் மஞ்சுசிறீ என்றோ மஞ்சுசிரீ என்றோ எழுதக் கூடாது என்றொரு சுவையான உரையாடல் வந்தது. முழு உரையாடலுக்கு பேச்சு:மஞ்சுஸ்ரீ பார்க்கவும்.

ஸ்ரீ கட்டுரையில் இருந்து முக்கியமான தகவல்:

தமிழுடன் கலந்து எழுதப்படும் பிற கிரந்த எழுத்து வடிவங்களைப் போலன்றி, ஸ்ரீ என்பது ஒரே பொருள் குறித்து மட்டுமே அனைத்து இடங்களிலும் பயன்படுவதும் பிற உயிர், மெய் ஒலிகளுடன் சேராது எப்போதும் தனி எழுத்தாகவே பயன்படுவதும் குறிப்பிடத்தக்கது. தெளிவாகச் சொல்வதானால், ஒரே ஒரு சொல்லுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கூடுதல் எழுத்து. தமிழில் பிற மொழிச் சொற் கலப்பை தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்னும் சொல்லுக்கு இணையான திரு, திருமிகு, அருள்மிகு போன்ற சொற்களை இடத்துக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகின்றனர். எனினும், திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம். தற்காலத்தில் ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர் முற்கால வைணவ இலக்கியங்களிலேயே திருவரங்கம் என்று குறிக்கப்பட்டு இருப்பதும், திரு + அரங்கம் என்னும் சொற்கூட்டு தரும் பொருளும் ஸ்ரீ + ரங்கம் என்னும் சொற்கூட்டுத் தரும் பொருளும் முற்றிலும் வேறாக இருப்பதையும் காணலாம். எனவே, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே திரு என்னும் சொல் இருந்த இடங்கள் தவறுதலாக ஸ்ரீ என்ற மொழிமாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கருதலாம்.

கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்ற எழுத்துக்கு மாறாக அதற்கு நெருங்கிய ஒலிப்பு தரும் சிறீ, சிரீ என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியத்தில் சிரீ என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)

தூமனத் தனனாய்ப் பிறவித்

துழதி நீங்க என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென்

செய்கேனென் சிரீதரனே!

என்று வருவதைக் கவனிக்கலாம்.

இலங்கையில், ஸ்ரீ என்பதற்கு மாறாக சிறீ என்று எழுதும் வழக்கம் இருக்கிறது. எனினும், இந்த மாற்றத்துக்கு அந்நாட்டு அரசியல் சூழலும், வரலாற்று நிகழ்வுகளும் ஒரு காரணமாகும்.

புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா?

புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

திண்ணையில், சோதிர்லதா கிரிசா எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள்.

அக்கட்டுரையின் முக்கிய கருத்து:

* கங்கை என்பதை kangkai, gangai, gankai என்று பலவாறு பலுக்கிக் குழம்பலாம் என்பதால் g, d, dh, b போன்ற இத்தகைய குழப்பம் தரும் ஒலிகளுக்கு புதிய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைச் சேர்க்கலாம். இப்படி பல புதிய எழுத்துக்களைப் பெறுவது பிற மொழியினரின் குழப்பத்தை நீக்கி தமிழைத் திக்கெட்டும் பரப்ப உதவும்.

சோதிர்லதாவுக்கு என் கேள்விகள்:

1. read என்று ஒரே மாதிரி எழுதி விட்டு நிகழ்காலத்தில் ரீட் என்கிறார்கள். இறந்த காலத்தில் ரெட் என்கிறார்கள். போதாதற்கு red நிறம் வேறு இருக்கிறது. character – கேரட்கடர் என்கிறார்கள். chalk – சாக் என்கிறார்கள். சொல்லின் முதலில் ch வந்தால் சா என்பதா கா என்பதா என்று குழப்புகிறது. இது போல் ஆங்கிலத்தில் பல குழப்பங்கள். இவற்றைத் தெளிவிக்க எந்த இலக்கண விதிகளும் இல்லை. இவை ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதை யாரிடம் சொல்லி எப்படி மாற்றுவது?

2. இந்தக் குழப்பங்களால் தமிழைக் கற்கச் சிரமமாக இருக்கிறது என்று எத்தனை இலட்சம் வேறு மொழித் தமிழ் மாணவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா?

3. இந்தி இந்தியாவில் பரவியதற்கு அம்மொழியின் இனிமை காரணமா? இல்லை, அதனைத் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையும் அதற்குப் பின்னால் இருக்கும் நடுவண் அரசுக் கொள்கையும் காரணமா?

4. நீங்கள் சொல்லும் அத்தனை ஒலிகளையும் / எழுத்துக்களையும் கொண்டுள்ள ஒரு மொழி ஏன் வழக்கொழிந்து போனது?

சரி கேள்விகள் போதும்.

* ஒரு காலத்தில் இந்தியாவில் வடமொழித் தாக்கம் இருந்தது. ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் பிரெஞ்சும் தற்போது ஆங்கிலமும் உலக மொழிகளாக இருக்கின்றன. அடுத்து எந்த மொழி அதிகம் வழங்குமோ! இப்படி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் வருகிறவர், போகிறவர், பிற மொழி மாணவர்களுக்காக எல்லாம் ஒரு மொழியின் இயல்பை மாற்ற முடியாது.

* ஒரு மொழி எவ்வளவு தான் கடினமாக இருக்கட்டுமே? அதை ஒழுங்காகக் கற்பிக்கத் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கற்றுக் கொள்வது தான் மாணவரின் அழகு. ஒரு கணிதத் தேற்றத்துக்கான நிறுவம் சிரமமாக இருக்கிறது என்று தேற்றத்தையே மாற்ற முடியுமா?

* முதலில் கேட்டு, பிறகு பேசி அதற்குப் பிறகு தான் வாசிப்பது என்னும் நிலைக்கு ஒரு மொழியின் மாணவன் வருகிறான், முதல் இரு நிலைகளிலேயே ஒவ்வொரு சொல்லும் எப்படி ஒலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் சொற்களில் ஒலிப்பை இப்படித் தான் உணர்கின்றனவே தவிர, எழுத்துக்களைப் பார்த்து அல்ல. இது பிற மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முறையை மாற்றுவதன் தேவையை உணர்த்துகிறதே தவிர, தமிழையே மாற்ற எந்தத் தேவையும் இல்லை.

* தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு. இது போன்ற இலக்கணம் எத்தனை மொழிகளுக்கு உண்டு? பள்ளிக்கூடம் வந்து கற்றறியாதோரும் அனுவத்தாலேயே இந்த இலக்கணத்தை அறிந்திருக்கின்றனர்.

* எந்த ஒரு மொழியின் அனைத்து ஒலிப்புகளையும் எல்லா பிற மொழிகளாலும் எழுதிக் காட்டி விட முடியாது. இது பிற மொழிகளின் குறை அன்று. அது அவற்றின் இயல்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்தனி உயிரினம் போல. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு உயிரினத்தின் பரிணாமத்தை ஒத்த கூறுகள் உள்ளன. “ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.

* செருமன் முதலிய உலக மொழிகள் எல்லாம் ஏற்கனவே இருக்கிற எழுத்துக்களைக் குறைத்துத் தான் வருகின்றனவே ஒழிய எந்த பெரிய மொழியும் புதிதாய் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதாய் தெரியவில்லை.

இது போன்று, “புது எழுத்துகளால் தமிழ் வளரும்”, என்ற பரப்புவோர் / பசப்புவோரிடம் பின்வரும் கேள்விகளுக்கு விடை சொல்லலாம்:

– இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

தொடர்புடைய இடுகைகள்:

இது குறித்து திண்ணையில் வெளிவந்த எனது விரிவான கடிதம்

சோதிர்லதா கிரிசாவின் எதிர்வினை

F