புத்தகம் இரவல் தருவது குற்றமா?

புத்தகம் என்பதை எழுத்தாளன் – வணிகம் – காசு என்ற எல்லைக்குள் அடக்க இயலாது. அதை ஒரு அறிவு மூலமாகப் பார்க்க வேண்டும். காப்புரிமை என்ற பெயரில் மிகையாகப் பயமுறுத்தி பகிர்தல் என்ற மனித இயல்புக்கும் அறிவு பெறல் என்ற மனித உரிமைக்கும் எதிராகவும் குற்ற உணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுகிறோமா என்று சிந்தித்திப் பார்க்கலாம். நாம் படிக்கும் ஒவ்வொரு நூலையும் காசு கொடுத்து வாங்கித் தான் படிக்க வேண்டும் என்றால் அறிவுப் பரவலுக்கும் பெருந்தடையாகவும் இல்லாதவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருக்கும்.

பாலாவின் நாட்டு நடப்பு நூல் குறித்த அறிமுகம் தந்த லக்கிலுக் அந்நூலை வாங்கிப் படிப்பவர்கள் அதை யாருக்கும் இரவல் தர வேண்டாம் என்றும் திரைப்படத் திருட்டு போல் இதுவும் ஒரு தார்மீகக் குற்றம் என்று சொல்லி அதிரச் செய்தார் !

தமிழ்நாட்டில் பலரும் தமிழ் நூல்களை இரவல் வாங்கியே படிப்பதால் புத்தக விற்பனை குறைவதால் தமிழ் எழுத்தாளர்களால் எழுத்தை ஒரு முழு நேரத் தொழிலாகக் கொள்ள இயல்வதில்லை என்பதே அவரது முக்கிய வாதமாக இருந்தது. எனினும், எந்த வகையிலும் இதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

என்னுள் எழுந்த சிந்தனைகள்:

– முதலில், திருட்டு என்பது என்ன? ஒரு படைப்பை முறையான உரிமம் இன்றி பெரும் அளவில் தயாரித்து குறைந்த விலையில் விற்பதன் மூலம் முறையான உரிமம் பெற்றவருக்கு நட்டத்தை ஏற்படுத்துவதாகும். இதையும் ஒருவர் தான் காசு கொடுத்து வாங்கிய நூலை இரவல் தருவதையும் எப்படி ஒப்பிட முடியும்?

– புத்தகம் மட்டுமல்ல, நாம் காசு கொடுத்து வாங்கும் மென்பொருள், புத்தகம், திரைப்பட, இசை வட்டுக்கள் எதையும் நம் நண்பர்களுக்குத் தாராளமாகத் தரலாம். அது நம் உரிமை மட்டுமல்ல, பகிர்ந்து கொள்வது தான் மனித இயல்பும் கூட.

– நான் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் பெரும்பாலான எழுத்தாளர்கள் முதன் முதலாக இன்னொரு நண்பரின் இரவல் புத்தகம் மூலம் அறிமுகமானவர்கள் தான். அப்படி அறிமுகமாகி இராவிட்டால் தொடர்ந்து அவர்களின் புத்தகங்களை வாங்கி இருக்கப் போவதில்லை. நல்ல எழுத்து நிலைக்கும். முதல் புத்தக இரவலால் இழப்பு என்று நினைப்பதை விட அடுத்தடுத்து வரும் அவருடைய எழுத்துகளுக்கு மேலதிக வாசகர்களைப் பெற்றுத் தரும் ஏன் நினைக்கக்கூடாது?

– புத்தகங்களை இரவல் தரலாமா கூடாதா என்பதை எழுத்தாளரின் நோக்கில் இருந்து மட்டும் பார்க்காமல் மெய்யியல் நோக்கில் இருந்து பார்க்கணும். ஒருவருக்கு ஒரு நூலைப் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், காசு இல்லை என்பதால் வாங்க இயலாத நிலை. அப்போதும் அவர் இரவல் வாங்குவது குற்றமா?

– எனக்கு காசு உண்டு. ஆனால், வாங்குவதற்கு முன் அது வாங்கத் தகுந்த புத்தகமா என்று அறிய ஆவல். இதற்காகவே பல முறை இரவல் வாங்கிப் படித்தது உண்டு. பிறகு, நன்றாக இருந்தால் திரும்ப அதை விலை கொடுத்து வாங்கி என் சேகரிப்பில் வைப்பதுடன் பல நணபர்களுக்கும் பரிசாக அளிப்பேன். புத்தகங்கள் மட்டும் அல்ல, இசை வட்டுக்கள், திரைப்பட வட்டுக்கள் போன்றவையும் இப்படியே. நன்கு தெரிந்த படைப்பாளி என்றால் நம்பி வாங்கலாம். தெரியாத எத்தனை படைப்பாளிகளை நம்பி செலவழிப்பது. Alchemist புத்தகம் இப்படி எனக்கு அறிமுகமாகி பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்குப் பரிசு அளித்திருக்கிறேன். அவர்களும் ரசித்து இன்னும் பலருக்குப் பரிசளித்தார்கள். இப்ப நான் முதலில் இரவல் வாங்கியது சரியா தவறா?

– பொது நூலகங்கள் இருப்பது கூட எழுத்தாளருக்கு இழப்பு தானே? அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கானோர் அல்லவா பயன் அடைகிறார்கள்?

– நாம் வாங்கும் புத்தகத்தை நம் குடும்பத்தினர் படிக்கும் போது ஏன் நம் நண்பர்கள் மட்டும் காசு கொடுத்து வாங்க வேண்டும்? நண்பர்களைக் குடும்பத்தில் இருந்து பிரித்துப் பார்க்கிறோமா? இல்லை, நண்பர்களுக்குத் தரலாம், நண்பர்கள் அல்லாத பிறருக்கு மட்டும் இரவல் வேண்டாமா? இல்லை, குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாரும் தனித்தனியாக ஒவ்வொரு பிரதியாக வாங்கித் தான் படிக்க வேண்டுமா? ஒரு பிரதியை எத்தனை பேர் படிக்கலாம் என்பதற்கு எல்லை என்ன?

எந்த எழுத்தாளர்களின் நன்மைக்காகப் பேசுகிறோமோ அவர்கள் பெற்றிருக்கும் அறிவில் பெரும்பகுதியே கூட இப்படி இரவல் புத்தகம் வாங்கிப் படித்து வந்ததாகத் தான் இருக்கும். இப்போது பிறருக்கு அப்படி இலவசமாக அவரது அறிவைத் தரும் முறை என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான் 😉

– பதிப்பகங்கள் ஏன் எழுத்தாளருக்குக் கூடுதல் உரிமைத் தொகை தரலாகாது? விற்கும் நூல்களுக்கு ஒழுங்காகக் கணக்கு காட்டி உரிமைத் தொகை தரும் பதிப்பகங்கள் எத்தனை?

– நூல் திருட்டு கூட சில சமயங்களில் நியாயப்படுத்தத்தக்கதே. பொறியியல் கல்லூரியில் நான் கற்ற 90% நூல்கள் வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய நூல்களைத் திருட்டுத் தனமாக படி எடுத்துப் படித்தே. வெளிநாட்டு ஆசிரியர்கள் ஏழை ஆகி விடுவார்கள் என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் கற்றிருக்க முடியுமா? இந்திய மாணவர்களின் வாங்கு திறனை உணராமல் ஆனை விலைக்கு அந்நூல்களை விற்றது ஒரு வகையில் சந்தைப்படுத்தல் பிழையே. xerox செய்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் ஒரு மடங்கு கூடுதல் விலைக்கு கூட அவர்களால் விற்றிருக்க இயலும். அப்படி விற்றிருந்தால் வாங்கி இருப்போம். ஒவ்வொருவரின் வாங்கு திறனைப் பொருத்து அவர்களால் தரக்கூடிய நியாயமான விலை மாறுகிறது. விற்பவர்கள் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

– திருட்டு வேறு பகிர்தல் வேறு. “ஒருவர் நன்றாக எழுதுகிறார். அவரை வாங்கிப் படியுங்கள்” என்று சொல்வது வேறு. “நீங்கள் வாங்கிய நூலை யாருக்கும் படிக்கத் தராதீர்கள்” என்பது வேறு.

– புத்தகம் என்பதை எழுத்தாளன் – வணிகம் – காசு என்ற எல்லைக்குள் அடக்க இயலாது. அதை ஒரு அறிவு மூலமாகப் பார்க்க வேண்டும். காப்புரிமை என்ற பெயரில் மிகையாகப் பயமுறுத்தி பகிர்தல் என்ற மனித இயல்புக்கும் அறிவு பெறல் என்ற மனித உரிமைக்கும் எதிராகவும் குற்ற உணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுகிறோமா என்று சிந்தித்திப் பார்க்கலாம். நாம் படிக்கும் ஒவ்வொரு நூலையும் காசு கொடுத்து வாங்கித் தான் படிக்க வேண்டும் என்றால் அறிவுப் பரவலுக்கும் பெருந்தடையாகவும் இல்லாதவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருக்கும்.