சொல்லாமல் ஊருக்குப் போன நீ
சொல்லிக் கொண்டு
செத்தாவது போயிருக்கலாம்.
—
உகாண்டாவில் வெயில் அதிகம்.
கவுண்டம்பாளையத்தில் வழிப்பறி.
மூன்றாம் உலக நாடுகளில் வறுமை.
எதன் பொருட்டு பார்க்க வந்தேன் என வினவும் உன் அம்மாவிடம்
வேறு என்ன சொல்லச் சொல்கிறாய்?
மனசு வலிக்குதுன்னா?
—
விரட்ட விரட்டத் திரும்ப வரும்
உன் நாய்க்குட்டியை விட
வெட்கங் கெட்டதாயும்
உண்மையானதாகவும்..
உன் நினைவுகள் !
—
தாமதமாய் வரும் மழைக்கும் கூட
வலிக்குமோ என பச்சை காக்கும் புல்வெளி
என் நேசம்.
—
கதீஜா சுஜாதா எல்லாம்
__தா என்றே வாசிக்கிறேன்..
என்ன நினைவு இருக்கக்கூடும் உனக்கு?
ரவிசங்கர் ஓர் இசை மேதை
என்பது தவிர.
—
காதல் தோல்வியென்றால்
தாடி வளர்ப்பதில் எல்லாம்
உடன்பாடில்லை எனக்கு.
வேண்டுமானால் வளர்க்கலாம்,
மூளையை.
—
இன்றோ நாளையோ
“அவளோட உன்ன பார்த்தேன்..தொலைச்சுப்புடுவேன் (நாயே)!”
என்றுன்னப்பன் குரைக்கக்கூடும்.
தயாராய்த் தான் இருக்கிறேன்.
நீ
மான்குட்டிக்கும் முயல்குட்டிக்கும் பிறந்தவள்
என்றொருமுறை பிதற்றியதை
நினைத்துச் சிரிக்க.
—
யாரும் வரும் வரை
தனித்திருப்போம்
நானும் கடற்கரையும்.
—
உயிரோடு புதைப்பது பெருங்குற்றம்.
தண்டனை மட்டும் கிடையாது.
எந்த நாட்டுப் பெண்களுக்கும்.
—
கண்ணீர் கட்டி வைக்க
கடல் வெட்டி வைத்தேன்.
கப்பல் விட்டு
வேடிக்கை பார்க்கிறாய் நீ!
—
பசி தூக்கம் மறந்து
காதல் வளர்க்கிறேன்.
எதை வளர்க்க என்னை மறந்தாய்?
—
உன்னை குற்றம் சொல்லவும் கூடாது தான்.
ஒரு முறை நீ நினைத்ததற்கே
என் தூக்கம் போனது..
எத்தனை முறை உன்னை நினைத்து இருப்பேன்..
நீ செத்தும் போயிருக்கலாம் !
—
முதல் சந்தோஷமோ கடைசி துக்கமோ
முதலில் சொல்வேன் உன்னிடம்.
புதிதாய் பிறந்த பட்டாம்பூச்சியோ
மகனை இழந்த கண்ணீரோ
உனக்காய் வைத்திருப்பேன்..
எப்பொழுது வருவாய் நீ?