சொல்லலாம் தான்!

நான் உன்னை பார்க்கிறேன்.
நீ என்னை பார்க்கிறாய்.
நம்மை யாருமோ யாரையும் நாமோ
பார்த்ததாக நினைவில்லை.
சொல்லலாம் தான்..
“ஏதாச்சும் பேசே” என்று..
என்றாலும், எத்தனை முறை தான் இதையே சொல்வது?

“கோயிலுக்குப் போ” – பாட்டி;
“கடைக்குப் போ” – அம்மா;
“collegeக்குப் போ” – அப்பா;
சொல்லலாம் தான்..
என்றாலும், யாருமே சொல்லாமல்
யாருன்னை என் முன்னால் போகச் சொன்னது?

மீன் போல் துள்ளுகிறாய்.
மான் போல் ஓடுகிறாய்.
குயில் போல் கதைக்கிறாய்.
அன்னம் போல் நடக்கிறாய்.
சொல்லலாம் தான்..
நேற்றுவரை நானும்
விலங்கு தானே!

நிலா – மலர் – புறா
அழகென்று
சொல்லலாம் தான்..
அப்பொழுது தானே நன்றாக இருக்கும் –
அதைவிட அழகு நீ எனச் சொல்ல!

எதையுமே காதலிக்காத தமிழாசான்
சொல்லலாம் தான்..
கீழ்வரும் சொற்றொடர்கள் தவறென்று:
“நீ இன்று என்னை பார்த்தேன்.”
“நீ இன்று மகிழ்ச்சியாக இருந்தேன்.”

சொல்லலாம் தான்..
“உடைந்து போன கண்ணாடி என் இதயம்.”
என்றாலும்,
தெளிவாகத் தெரிகிறது
உன் முகம் மட்டும்!

நெருப்பு சுடும் – நெருஞ்சி குத்தும் – மழை நனைக்கும்
என்பது கூட உனக்குத் தெரியாவிட்டால்,
சஹா,
சொல்ல வேண்டியது தான்..
நானும் உன்னை விரும்புகிறேன்!


Comments

One response to “சொல்லலாம் தான்!”

  1. mahatmamani Avatar
    mahatmamani

    தலைவா இந்த வார்தை எப்படி வருது எங்க ஊர் அல்வா மாதிரி