..என்றதெல்லாம் போதும்!

வெட்டிப் பேச்சு வேண்டாம்.

“என் Tiffin Boxல் தயிறும் ஊறுகாயும்;
உன்னிடம் என்ன?”
என்றதெல்லாம் போதும்!
வேண்டுமானால் கேள்.
கடைசியாக சாப்பிட்ட தேதி சொல்கிறேன்.

“உன் தங்கை அப்படியா,
என் தம்பி இப்படியதாக்கும்..”
என்றதெல்லாம் போதும்!
இப்பொழுது அவர்கள் கூட
இந்தப் பேச்சை தாண்டிவிட்டார்கள்.

“சும்மா, ஒன்னுமில்லை, ம்ஹூம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை என்னிடம் –
ஈரிதழால் பேச.

மேலே கொஞ்சம் கீழே கொஞ்சம்
பார்த்து மருகிப் பின் “அப்புறம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை உன்னிடம் –
பார்வையால் பருக.

கிளம்பிப் போய்த் திரும்ப வந்து
Hairpin இத்யாதிகள் எடுத்துக்கொண்டு
“மறந்தே போய்ட்டேண்டா”
என்றதெல்லாம் போதும்!
எத்தனை நாட்கள் சேகரிப்பது?
உன் நினைவுகளையும் வாசத்தையும் மட்டும்.

நீ எப்படி இங்கு வந்தாய்
நான் எப்படி இங்கு வந்தேன்
என்றதெல்லாம் போதும்!
ஒன்றாய் எங்கு போகலாம்?

“அடுத்து எப்போ பார்க்கலாம்?”
“தெரியலையே, Let’s see”
என்றதெல்லாம் போதும்!
இன்றிரவு இரண்டு மணிக்கு
கனவில் சந்திப்போம்.

உனக்கு என்ன பிடிக்கும்
எனக்கு இன்னின்ன பிடிக்கும்
என்றதெல்லாம் போதும்!
எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
அவ்வளவு தான்.


Comments

13 responses to “..என்றதெல்லாம் போதும்!”

  1. அருட்பெருங்கோ Avatar
    அருட்பெருங்கோ

    /உனக்கு என்ன பிடிக்கும்
    எனக்கு இன்னின்ன பிடிக்கும்
    என்றதெல்லாம் போதும்!
    எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
    அவ்வளவு தான்./

    நச்!!!

    கவிதைகள் ரசிக்க வைத்தன ரவி!!!

  2. கவிதை எழுதுவதற்கு இரண்டு காரணங்களாக அமையும். ஒன்று கற்பனை. இன்னொன்று அனுபவம். கற்பனையும் அனுபவமும் சேர்வதும் உண்டு. உங்களது இரண்டாவது வகையை சேர்ந்ததோ என்று தோன்றுகிறது ரவி. சரிதானே…
    சு.நாகரத்தினம்

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    அருட்பெருங்கோ – வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. என்னடா, கவிதைய மக்கள் படிக்கிறாங்களா, புரியுதா, புடிக்குதான்னு ஒரு clueவும் இல்லாம இருந்தேன். ஆனா, இதெல்லாம் கவிதையான்னு யாரும் திட்டாத வரை சரி 🙂

    நாகா – என் பிற கவிதைத் தலைப்பு – பழைய Paper கவிதைகள்-னு இருக்குறத பார்த்தா உங்களுக்குப் புரியும் 🙂 கவிதை, நிகழ்வுகள் – கற்பனை. ஆனா, அத inspire பண்ண ஆள் நிஜம் 🙂

  4. நற்கீரன் Avatar
    நற்கீரன்

    ரவி, கவிதை மிக்க நன்று.

  5. Thamizhmaagani Avatar
    Thamizhmaagani

    ரவி, நல்லா எழுதுறீங்க.. கவிதைகள் என்றால், ஒரு யதார்த்தம் வேணும். அது ரொம்ப அழகாவே வந்துருக்கு உங்க கவிதைகளில்.. ரொம்ப ரசிச்சு படிச்சேன். வாழ்த்துகள்! தொடரட்டும் உங்க கவிபயணம்!

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நற்கீரன், தமிழ்மாகனி – பாராட்டுக்கு நன்றி.

  7. நான் படித்து முழ்கிப்போன கவிதைகளிள் இதுவும் ஒன்று.

  8. /உனக்கு என்ன பிடிக்கும்
    எனக்கு இன்னின்ன பிடிக்கும்
    என்றதெல்லாம் போதும்!
    எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
    அவ்வளவு தான்./

    இந்த நாலு வரிகள் போதும். உங்கள் கவிதை திறமையை சொல்லி விட.

    /படிக்கிறாங்களா, புரியுதா, புடிக்குதான்னு ஒரு clueவும் இல்லாம இருந்தேன். ஆனா, இதெல்லாம் கவிதையான்னு யாரும் திட்டாத வரை சரி :)/

    இதை கூட யாராவது கவிதை இல்லைன்னு சொன்னா தப்பு உங்க மேல இல்லீங்க ரவி. உங்களிடமிருந்து இன்னும் பல கவிதைகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  9. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    raga – 🙂

    nandha – தொடர்ந்து எழுத முயல்வேன். ஆனா, காதல் கவிதை எல்லாம் பழைய paper சரக்கு தான்
    ;( வேறு தலைப்புகளில் தோன்றும் போது எழுதுகிறேன்..

  10. ஆஹா அருமையான கவிதை. 🙂

  11. mahatmamani Avatar
    mahatmamani

    வார்தைகள் வசியம் செய்கின்றன் நண்பா

  12. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கலை, mahatmamani – உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

  13. \\உனக்கு என்ன பிடிக்கும்
    எனக்கு இன்னின்ன பிடிக்கும்
    என்றதெல்லாம் போதும்!
    எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
    அவ்வளவு தான்.//

    Thambi intha line ah annan aatya pottukitan da……. so nee enna panra antha line ah remove pannidu… Ok!!!!