அண்மையில் தமிழ் விக்சனரி குழுமத்தில் RSS Feedக்குத் தமிழில் என்ன என்று சங்கர் கணேஷ் கேட்டிருந்தார். Feedக்குத் தமிழில் ஓடை என்ற சொல்லை வெகு நாட்களாகப் பயன்படுத்தி வருகிறோம்.
News feed = செய்தியோடை; web feed = இணைய / வலையோடை; blog feed = பதிவோடை.
இது இடுகுறிப்பெயரோ என்று மயூரன் சொன்னார். ஆனால், எனக்கு இடுகுறிப் பெயராகத் தோன்றவில்லை. Feedஐ நேரடியாக மொழிபெயர்க்காமல் தமிழ் மரபுக்கு ஏற்ப இட்ட பெயராக நினைக்கிறேன். தவிர, feed என்ற சொல் வருவதற்கு முன் stream (ஓடை) என்ற சொல் புழக்கத்தில் இருந்திருக்கலாம். இங்கு stream என்று சொன்னாலும் பொருள் மாறாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.
பொதுவாக, அப்படியே ஆங்கிலத்தை தமிழாக்காமல் நம் புரிதலுக்கு இலகுவான சொற்களால் தமிழாக்குவது நல்லது. எடுத்துக்காட்டுக்கு, comments என்பதற்கு பின்னூட்டு (feedback என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு – இது போல் சொல், concept தமிழ்ச் சிந்தனையில் இல்லை ) என்று தமிழ் வலைப்பதிவுகளில் சொல்கிறோம். ஆனால், வலைப்பதிவுகளுக்கு வெளியே இந்த சொல் எவ்வளவு புரிந்து கொள்ளப்படும் என்பது ஐயமே. அதுவே மறுமொழி என்னும் போது எவரும் புரிந்து கொள்ளலாம். comments / feedback / reply என்பதெல்லாம் வெவ்வேறு பொருளில் வெவ்வேறு இடங்களில் தமிழ்ச் சொற்களால் விளக்கக்கூடியன. கருத்து, ஆலோசனை, மறுமொழி என்று இடத்துக்குத் தகுந்த மாதிரி சொல்லலாம். பின்னூட்டு என்பது போன்ற செயற்கையான தேவையில்லாத சொற்களை புகுத்தத் தேவை இல்லை.
இந்த வகையில் feedஐ ஊட்டு என்று நேரடியாக மொழிபெயர்ப்பதை விட ஓடை என்று சொல்வது பொருந்தும். ஓடி வருவது, ஓடுவது ஓடை எனக் கொள்ளலாம். இணையத்தளங்களின் இற்றைப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் இதன் ஊடாக ஓடுவதால் ஓடை என்பது பொருந்தும். குளத்திலோ பெரிய ஆற்றிலோ மழையாலோ நீர் பெருகினால் ஓடையிலும் நீர் பெருகும். தவிர, ஓடை என்னும் போதே எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருப்பது என்ற தொனி வருகிறது. நீர்ப்பெருக்குக்கு ஏற்ப ஓடையின் செயல்பாடு மாறுவது போல செய்தியோடைகளின் செயற்பாடும் மாறிக் கொண்டும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டும் இருக்கிறது. தவிர, குளம் குளமாய் நாம் போய் நீர் எடுக்காமல் நம்மை நோக்கி நீரைக்கொண்டு வருகிறது ஓடை. இதைப் போன்று தானே நாமளும் தளம் தளமாகச் செல்லாமல் எல்லா செய்திகளையும் ஓடைகள் மூலமாக நம்மை நோக்கிக் கொண்டு வரச் செய்கிறோம்.
எனவே, இதைக் காரணப் பெயராகவே கருதலாம். இதே பெயர் தொலைக்காட்சி channelகளுக்கும் பொருந்துவதைக் காணலாம். அவற்றையும் ஓடைகள் என்றே அழைக்க இயலும். தனியாக, வாய்க்கால், கால்வாய் என்று மொழிபெயர்க்கவோ வேறு புது சொல் என்ற என்று தயங்கவோ தேவை இல்லை.
இது தான் ஓடை என்ற சொல் குறித்த என் புரிதல். பிழையாகவும் இருக்கலாம். சரி எனில், இந்த சொல்லை முதலில் பயன்படுத்தியவர் எவரும் மிகந்த பாராட்டுக்குரியவர். செயற்கையாக சொல்லாமல் தமிழுக்கு நன்கு அறிமுகமான பொருத்தமான சொல்லை ஆண்டிருக்கிறார்.
இந்த இடத்தில் Google reader ஐ பலரும் கூகுள் வாசிப்பான், கூகுள் படிப்பான் என்று பலவாறாக சொல்கிறார்கள். ஏனோ இப்படிச் சொல்வது ஒப்பவில்லை. முதலில், ஆன் என்ற ஆண்பால் விகுதியை நுட்பச் சொற்களில் தவிர்ப்பது நன்று. பிறகு, வாசிப்பான், படிப்பான் என்ற concept எல்லாம் தமிழில் கிடையாது. ஆங்கிலத்தில் read – reader என்பது போல் தமிழிலும் அன், அர் விகுதி சேர்த்து எல்லா இடங்களிலும் செயற்கையான சொற்களை கொண்டு வருவது பொருத்தமாகத் தோன்றவில்லை.
நிரல் இருக்கும் இடம் நிரலகம், நூல் இருக்கும் இடம் நூலகம் என்பது ஓடைகள் இருக்கும் google reader போன்ற இடங்களை ஓடையகம் என்று சொன்னால் என்ன?
ஆங்கிலத்தில் feed reader, feed aggregator எல்லாம் ஒரே பொருளில் தான் பயன்படுத்தப்படுகிறது. aggregator என்பதற்குத் தமிழில் திரட்டி என்ற சொல் ஏற்கனவே இருப்பதால் அதையே readerக்கும் பயன்படுத்தலாம். எனவே Google Readerஐ கூகுள் திரட்டி என்று சொல்ல இயலும்.
இதே போல் inboxஐ மடலகம் என்று சொல்லலாமா என்று தோன்றுகிறது. inboxக்குத் தமிழில் என்ன என்பது ரொம்ப நாளாக மண்டையைக் குடையும் விசயம்..
அன்புடன்
ரவி