தற்குறிப்பு எழுதுவது எப்படி?

தற்குறிப்பு (Resume / CV / Bio-data ) எழுதுவது எப்படி?

* 2 பக்கங்களுக்கு மேல் வேண்டாம். குறிப்பிடுவதற்கு நிறைய இருந்தால் பின்னிண்ணைப்புப் பட்டியலாகத் தாருங்கள்.

* பக்கத்தின் தொடக்கத்தில் உங்கள் பெயர், தொலைப்பேசி, மின்மடல் விவரத்தைத் தாருங்கள்.

* அடுத்து உங்களைப் பரிந்துரைக்கும் முக்கியமான இருவரின் தொடர்பு விவரங்களைத் தாருங்கள்.

* கடைசி 5 ஆண்டுகள், அவற்றில் நீங்கள் முக்கியமாகச் சாதித்தவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதும். பால்வாடியில் வாங்கிய பரிசு முதற்கொண்டு வளவள என்று எழுத வேண்டாம்.

* ஒரே தற்குறிப்பை எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பாதீர்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன? அதற்கு இந்த நிறுவனம் எப்படி பொருத்தமாக இருக்கும்? நிறுவனத்தின் பணிகளுக்கு நீங்கள் எப்படி சிறப்பாகப் பங்களிக்க முடியும்? எனக் குறிப்பிடுங்கள்.

* எல்லாரும் எழுதுவது போன்ற வழமையான தற்குறிப்புப் பாணிகளை மறந்து விடுங்கள். உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்ட என்ன எழுதலாம், எப்படி எழுதலாம் என்று சிந்தியுங்கள். இதே போன்ற ஒரு தற்குறிப்பு உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் வேலைக்கு எடுப்பீர்களா?

* உண்மையை மட்டும் எழுதுங்கள். பொய் சொன்னால், நேர்முகத் தேர்வின் போதோ வேலையில் சேர்ந்த பிறகோ மிக இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

* நட்பான, நேர்த்தியான தோற்றம் உள்ள உங்கள் ஒளிப்படம் ஒன்றைச் சேர்க்கலாம்.

* “MS Office தெரியும், English தெரியும், நடக்கத் தெரியும்.. ” போன்ற அடிப்படைத் திறன்களைக் குறிப்பிடாதீர்கள். உங்கள் முந்தைய வேலைகளை வைத்தே உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று நல்ல நிறுவனங்கள் கண்டு கொள்ளும். நீங்கள் சரியான அணுகுமுறை உள்ள ஆளாக இருந்தால், தேவையான திறன்களைப் பயிற்றுவிக்கவும் தயங்க மாட்டார்கள்.

* அடிப்படையான தற்குறிப்பை எழுதிய பிறகு உங்கள் நண்பர்களிடம் கருத்து கேளுங்கள். எழுத்து, இலக்கணம், தகவலில் பிழை என்பதை உறுதி செய்யுங்கள்.

தற்குறிப்புகளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு, வேலை உங்களைத் தேடி வரும் என்று கனவு காணாதீர்கள். மிகவும் நல்ல வேலைகள் விளம்பரப்படுத்தப்படாமலேயே நிரப்பப்படுகின்றன. மிகவும் திறமையானவர்கள் எந்தத் தற்குறிப்பும் தராமலேயே புதிய பணிகளில் சேர்கிறார்கள். உங்கள் துறை சார் அறிவையும் தொடர்புகளையும் பெருக்கி ஏதாவது சாதிக்க முனையுங்கள். நிறைய வேலைகள் தேடி வரும்.

வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி?

உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலை இற்றைப்படுத்துவது எப்படி?

WordPress 2.7:

Tools–>Upgrade

WordPress 2.7க்கு முந்திய பதிப்புகள்:

எச்சரிக்கை: இது சோம்பேறிகளுக்கான குறுக்கு வழி 😉 . என் எல்லா பதிவுகளையும் இப்படியே இற்றைப்படுத்தினேன். ஒரு பிரச்சினையுமில்லை. தயங்குவோர் வேர்ட்பிரெஸ் வழிகாட்டியில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றலாம்.

1.  http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள்.

2. உங்கள் கணினியில் உள்ள wordpress அடைவுக்குள் உள்ள wp-contents அடைவை நீக்கி விடுங்கள். இது மிகவும் முக்கியம். கவனிக்க – நீங்கள் தரவிறக்கிக் கணினியில் வைத்திருக்கும் அடைவில் உள்ள wp-contentsஐ நீக்க வேண்டும். வழங்கியில் உள்ள wp-contentsஐ அல்ல.

3.  இப்போது wordpress அடைவுக்குள் மீதம் உள்ள கோப்புகள், அடைவுகளை மொத்தமாகத் தெரிவு செய்து  Filezilla கொண்டு உங்கள் வழங்கியில் வலைப்பதிவு வைத்திருக்கும் அடைவுக்குள் பதிவேற்றுங்கள். கவனிக்க – wordpress அடைவுக்குள் இருக்கும் கோப்புகளை select all செய்து வழங்கியுள் உள்ள அடைவுக்குள் போகுமாறு பதிவேற்றுங்கள். மொத்த அடைவையே அப்படியே பதிவேற்றினால் வழங்கியில் உள்ள wp-content கோப்புகளை அழித்து விடும்.

4. /wp-admin/upgrade.php செல்லுங்கள். உங்கள் தரவுத்தளத்தைப் புதுப்பிக்கச் சொல்லி கேட்கும். அதற்கு ஒப்புதல் தந்தவுடன் உங்கள் வேர்ட்பிரெஸ் இற்றைப்படுத்தப்பட்டிருக்கும்.

***

புதிய பயனர்களுக்கான குறிப்புகள்:

வேர்ட்பிரெஸ் நிறுவுவது எப்படி?

பார்க்க – இது குறித்த விரிவான என் ஆங்கில வலைப்பதிவு இடுகை – How to install a self-hosted WordPress blog?

சுருக்கமான குறிப்புகள்:

* உங்கள் தளத்தில் /cpanel என்ற முகவரியில் control panel வசதி இருக்கிறதா? ஆம் என்றால், உங்களுக்கான குறிப்புகள்:

Control Panelன் கடைசியில் Fantastico deluxe என்று இருக்கும். அதைச் சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் இடப்பக்கப்பட்டையில் blogs என்பதன் கீழ் WordPress இருக்கும். அதைச் சொடுக்கி New installation என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்படும் சிறு விவரங்களை நிரப்பி ஒரு நிமிடத்தில் வேர்ட்பிரெஸ் நிறுவிக்கொள்ளலாம்.

* Control Panel இல்லாதவர்களுக்காக குறிப்புகள்:

– உங்கள் வழங்கிக் கணக்கில் புதிய MySQL தரவுத்தளங்களை உருவாக்குவதற்கான பக்கத்தில் புதிய தரவுத் தளம் ஒன்றை உருவாக்குங்கள். தரவுத் தளப் பெயர், பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.

– http://wordpress.org/latest.zip இல் இருந்து வேர்ட்பிரெஸ் மென்பொருளைத் தரவிறக்கி wordpress அடைவைப் பிரித்தெடுங்கள்.

– wp-config-sample.php என்ற கோப்பைத் திறந்து அங்கு உங்கள் தரவுத் தள விவரங்களை நிரப்பி அந்தக் கோப்பை wp-config.php என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள்.

– wordpress அடைவுக்குள் உள்ள கோப்புகள், அடைவுகளை மொத்தமாகத் தெரிவு செய்து Filezilla கொண்டு உங்கள் வழங்கியில் வலைப்பதிவு வைத்திருக்கும் அடைவுக்குள் பதிவேற்றுங்கள்.

– /wp-admin/install.php சென்று அங்கு கேட்கப்படும் சிறு விவரங்களை நிரப்பி 5 நிமிடத்துக்கள் உங்கள் பதிவை நிறுவிக் கொள்ளலாம்.

தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி?

தேடுபொறிகளில் முதல் சில முடிவுகளில் எப்படி வருவது?

இவை அனைத்தும் 100% நான் முயன்று பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட அடிப்படையான விசயங்கள்:

தேடுபொறிகளில் முதல் சில முடிவுகளில் எப்படி வருவது?

இவை அனைத்தும் 100% நான் முயன்று பார்த்து நல் விளைவுகளை உறுதிப்படுத்திக் கொண்ட சில அடிப்படையான விசயங்கள்:

0. முதலில், உங்கள் தளத்தை தேடுபொறிகளால் அணுக இயல்கிறதா, அவை உங்கள் தளத்தை எப்படிப் பார்க்கின்றன என்று அறிய search engine spider simulator பயன்படுத்துங்கள். தளத்தின் தொடக்கத்திலேயே ஏகப்பட்ட ஜாவா நிரல்கள், flash பயன்பாடுகள் இருந்தால் தேடுபொறிகள் உங்கள் தளத்தைப் பார்ப்பதில் சிரமம் இருக்கும். தேடுபொறிகளுக்கு எழுத்துக்கள் மட்டும் தான் புரியும் என்பதால் அவை முழுக்கவும் முதலிலும் இலகுவாகத் தென்படுமாறு தளத்தை வடிவமையுங்கள். frames பயன்படுத்தாதீர்கள்.

1. பிறருக்குப் பயனுள்ள, ஆர்வமூட்டக்கூடிய, தரமான, உருப்படியான ஆக்கங்களைத் தாருங்கள். இத்தகைய ஆக்கங்களுக்குப் பிற வலைத்தளங்கள் தொடுப்புகள் தருவது வழமை. பிற தளங்களில் இருந்து கூடுதல் தொடுப்புகளைப் பெறப் பெற தேடுபொறிகளில் உங்கள் தளத்தின் முக்கியத்துவம் உயரும். உங்கள் தளத்துக்கு எத்தனை தொடுப்புகள் இருக்கின்றன என்பதை விட அத்தொடுப்புகளைத் தருபவர்களின் முக்கியத்துவம் தான் முக்கியமானது. எனவே, தேடுபொறிகளை ஏமாற்றும் முகமாக வெற்றுத் தொடுப்புகளைப் பெற முயல வேண்டாம்.

2. ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் பொருத்தமான குறிச்சொற்கள் இடுங்கள்.

3. பக்க முகவரிகளை அர்த்தமுள்ளதாக வையுங்கள்.

பார்க்க :

– தனித்தளத்தில் வேர்ட்பிரெஸ் வைத்திருப்பவர்கள் இதைச் செய்வதற்கான மயூரேசனின் குறிப்பு.

– பிளாகரில் இதைச் செய்வதற்கான இளாவின் குறிப்பு.

3.5 Dynamic முகவரிகளைத் தவிருங்கள்.

http://example.com/author?=ravi&date?=010101&num?=30&view?=normal என்பது போன்ற ஏகப்பட்ட ??? கேள்விக்குறிகளை அடுக்கும் dynamic முகவரிகள் தேடுபொறிகளுக்கு ஆகாது. இவற்றை பட்டியலிடாமலே போக வாய்ப்புண்டு. கேள்விக்குறிகளை குறைவாக வைத்திருந்தாலும் அவற்றை அடிக்கடி ஊர்ந்து பார்த்து இற்றைப்படுத்தும் வேகம் குறையும். இத்தகைய முகவரிகளைத் தவிர்ப்பது நலம்.

மேற்கண்ட முகவரியையே http://example.com/author/ravi/date/010101/num/30/view/normal என்று மாற்ற இயலும். இதற்கு உங்கள் .htaccess கோப்பில் சில வழிமாற்று விதிகளை எழுத வேண்டும். இந்த வேலையைச் செய்து தர இணையத்தில் பல இலவசக் கருவிகள் கிடைக்கின்றன. “mod rewrite tool” என்று தேடிப் பாருங்கள்.

4. இடப்பக்கம் பக்கப்பட்டை வைப்பதைத் தவிருங்கள்.

தேடுபொறிகள் உங்கள் இடுகைகளைப் பார்க்கையில் தென்படும் முதல் சில வரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இடப்பக்கப் பக்கப்பட்டைகள் உங்கள் இடுகைகளின் உள்ளடக்கத்தை மறைத்துக் கொண்டு நிற்கக்கூடும்.

5. bold HTML tagக்குப் பதில் strong பயன்படுத்துங்கள்.

bold விளைவு மனிதக் கண்களுக்கு மட்டுமே புலப்படும். strong விளைவு மட்டுமே தேடுபொறிகளுக்குப் புரியும்.

6. பத்தி பிரித்து துணைத்தலைப்புகள் வைத்து எழுதுங்கள்.

துணைத்தலைப்புகளுக்குப் பொருத்தமான  h2, h3 HTML tagகள் தாருங்கள்.

7. உங்களின் முந்தைய இடுகைகளில் பொருத்தமானவற்றுக்குத் தொடுப்பு கொடுத்து எழுதுங்கள்.

தேடுபொறிகள் கொண்டிருக்கும் பக்கப்பட்டியல்களில் உங்கள் இடுகைகளைச் சேர்த்துக் கொள்ள, முக்கியத்துவத்தை உயர்த்திக் கொள்ள இது உதவும். உங்கள் பக்கங்களின் கூகுள் Pagerankஐப் பிற பக்கங்களுக்குப் பகிர்ந்து தரவும் உதவும். தொடுப்பு கொடுக்கும்போது அவ்விடுகைகளின் உள்ளடக்கத்தை விவரிக்கும் சொற்களைத் தொடுப்புச் சொற்களாகப் பயன்படுத்துங்கள்.

8. அடிக்கடி உங்கள் வலைப்பதிவில் எழுதி தொடர்ந்து இற்றைப்படுத்தி வாருங்கள்.

உங்கள் வலைப்பதிவின் முக்கியத்துவத்தைப் பொருத்து தேடுபொறிகள் உங்களை எவ்வளவு நாளைக்கு ஒரு முறை வந்து பார்க்கின்றன என்பது அமையும். மாதக்கணக்கில் எழுதாமல் இருந்தால் உங்கள் புது இடுகைகள் உடனுக்குடன் கூகுள் முடிவுகளில் தோன்றுவது தாமதமாகலாம்.

9. கூகுள், யாகூ, MSN லைவ் ஆகிய முதல் மூன்று முக்கியமான தேடுபொறிகள் உங்கள் தளத்தை ஊர்வது குறித்த தகவல்கள், கூடிய கட்டுப்பாடுகளைப் பெற Google Webmaster central, Live Webmaster central, Yahoo Site Explorerல் உங்கள் தளத்தைப் பதிந்து கொள்ளுங்கள்.

10. உங்கள் தளத்தின் உள்ளடக்கங்களைப் படி எடுத்து வேறு இடங்களில் ஒட்டாதீர்கள்.

தளப் பாதுகாப்பு காரணங்களுக்காக இடுகைகளைச் சேமிக்க விரும்பினால், தரவிறக்கி உங்கள் கணினியில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடுகைகளை மறுபதிப்பு செய்ய அனுமதி கோருபவர்களிடமும் ஒரு சில வரிகள் மட்டும் மேற்கோள் காட்டச் சொல்லி முழு இடுகையையும் படிப்பதற்கு உங்கள் தளத்துக்குத் தொடுப்பு கொடுக்க கோருங்கள். உங்கள் உள்ளடக்கங்கள் வலையில் பல இடங்களிலும் சிதறினால் அவற்றுக்குக் கிடைக்கும் தொடுப்புகளும் சிதறி, உங்கள் பக்கங்களின் முக்கியத்துவமும் குறைய வழி வகுக்கலாம்.

11. முக்கியமான சொல்லைப் பக்கத்தலைப்பின் தொடக்கத்தில் வருமாறு எழுதுங்கள்.

பக்கத்தலைப்புகளைச் சுருக்கமாக வையுங்கள். பக்கத்தலைப்பில் உள்ள முக்கிய சொற்கள் முதல் பத்தியின் தொடக்கத்திலும் குறிச்சொற்களிலும் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  பக்கத் தலைப்புகளில் உங்கள் தளப்பெயர் தோன்றுவதைத் தவிருங்கள். குறிப்பாக, தலைப்பின் தொடக்கத்தில் தளப்பெயர் தோன்றுவதை அறவே தவிருங்கள். தேடல் முடிவுகளில் பக்கத்தலைப்பின் முதல் ஒரு சிலச் சொற்கள் மட்டுமே தென்படும் என்பதால் மேற்கண்ட நடவடிக்கைகள் அவசியம்.

12. தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்:

– பின்வரும் நீட்சிகளைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்: All in one SEO pack, Google (XML) sitemaps generator, Robots Meta, Simple Tags .

– ஒவ்வொரு இடுகைக்கும் உள்ள excerpt வசதியைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் குறிச்சொல், பகுப்பு, தேதி வாரித் தொகுப்புப் பக்கங்கள் அனைத்திலும் ஒரே உள்ளடக்கம் தோன்றுவதைத் தவிர்க்கலாம்.

– தேதி வாரி, ஆசிரியர் வாரி தொகுப்புகள் தேவையின்றி பல பக்கங்களில் திரும்பத் திரும்ப ஒரே உள்ளடக்கத்தைக் காட்டுவதால் Robots Meta கொண்டு இவற்றை நீக்கலாம்.

– All in one SEO pack பயன்படுத்தி ஒவ்வொரு இடுகைக்கும் Meta description தாருங்கள். Settings – All in one SEO போய் Page titleஐ %post_title% என்று தாருங்கள்.

– Page slugஐ வேண்டிய அளவு தொகுத்து முழுமையான, முக்கியமான குறிச்சொற்கள் இடம்பெறுவது போல் செய்யுங்கள்.