ஏப்ரல் 2007ல் இணையத்தமிழ் உள்ளடக்க உருவாக்கத்துக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது 🙂 நேற்று கூட இதன் தேவை குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடினோம். நேற்று இரவே, தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் pdf வடிவில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கி இருப்பதை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் 1 முதல் 12 வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் தமிழ், ஆங்கிலம் இரு வழியிலும் கிடைக்கின்றன. இது ஒரு நல்ல தொடக்கம். அடுத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களையும் இது போல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
இன்னும் செய்ய வேண்டியவை:
1. சில பாடநூல்கள் scan செய்து போட்டவை போல் தோன்றுகிறது. அப்படி இல்லாம முழுக்க மின்-நூலாகவே தந்தால் pdf கோப்புகளுக்குள் உரையைத் தேடிப் பார்க்க உதவும்.
2. ஒரே பாட நூலைச் சின்னச் சின்னப் பகுதிகளாகத் தந்திருப்பது வேகம் குறைவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு உதவும். அதே வேளை ஒவ்வொரு பாடநூலையும் ஒரே கோப்பாகவும், ஒரு வகுப்பின் பாடநூல்கள் அனைத்தையும் zip கோப்பாகவும் தந்தால் பதிவிறக்கி வினியோகிக்க உதவும்.
3. HTML பக்கங்களில் utf-8 குறியாக்கத்தில் தந்தால் தேடு பொறிகளில் இந்நூல்களின் உள்ளடக்கம் சிக்கும். இந்தத் திட்டத்தின் முழு வீச்சு, பலன் அப்போது தான் கிடைக்கும்.
சிவபாலனின் பதிவில் இதனால் என்ன பயன் என்று சர்வேசன் கேட்டிருந்தது வியப்பளித்தது. பலன்களாக நான் கருதுவன:
1. பாடப்புத்தகம் தாமதமாகும் போது இதில் பெற்றுக் கொள்ளலாம்.
2. பாடத்திட்டத்தில் திருத்தங்களை இங்கு உடனுக்குடன் வெளியிடலாம்.
3. cbse, matric முறையில் இருப்போர் தங்கள் பாடத்திட்டம் தவிர, பிற பாடத்திட்டங்களைக் கலந்தாலோசிக்க விரும்புவோர் அதற்காக காசு கொடுத்து புத்தகம் வாங்காமல் இணையத்தில் பார்க்கலாம். மாநிலப் பாடத்திட்டத்தில் முதல் பிரிவில் படிப்போர் கூட அடுத்த பிரிவின் முழுமையான தாவரவியல், விலங்கியல் பாடங்களைப் புரட்டிப் பார்க்கலாம்.
4. சென்ற ஆண்டுப் பாடங்களைப் பார்க்க விரும்புவோருக்கு உதவும்.
5. பிற மாநிலப் பாடத்திட்டக் குழுவுக்கு நம் பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். குறிப்பாகப், பிற மாநிலங்களில் தமிழ்ப் பாடம் நடத்துவோர் நம் பாடங்களைப் பார்த்துக் கொள்ள முடியும்.
6. இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முழுக்கத் தமிழ் வழியக் கல்வி பயில்வோர் நம்மோடு ஒப்பு நோக்கியும் ஒருங்கிணைந்தும் செயல்பட உதவும். கலைச்சொல்லாக்கத்தில் ஒத்திசைவு, பாடத்திட்ட இற்றைப்படுத்தத்துக்கு உதவும்.
7. புலம்பெயர்ந்த தமிழர், இந்தியாவில் பிற மாநிலத்தில் உள்ள தமிழர் தங்கள் பள்ளிப் பாடங்களைத் திருப்பிப் பார்க்கவும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழில் கற்பிக்கவும் உதவும்.
8. இணையத்தில் இது குறிப்பிடத்தக்க தமிழ் உள்ளடக்கம். பொழுதுபோக்கு, செய்திகள் தவிர தமிழில் தகவலுக்காகவும் இணையத்தை அணுகுவார்கள். பயனுள்ள உள்ளடக்கம் இல்லாமல் இணையத்தில் பயன் குறைவானதே.
9. என்னைப் போல் ஆங்கில வழியத்தில் பயின்ற பலருக்குத் தமிழில் கலைச்சொற்களைக் கற்க உதவும். விக்கிபீடியா போன்ற தளங்களில் கட்டுரை எழுதுவோருக்கு பெரிதும் உதவும்.
10. முக்கியமாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் மக்கள் சொத்து. அது உலகில் உள்ள எந்த ஒரு தமிழனுக்கும் இலவசமாகக் கிடைப்பதாக இருப்பது மிகப் பொருத்தம்.
பி.கு – இத்திட்டத்துக்கு 50 இலட்சம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிந்து அதிர்ச்சியாக இருக்கிறது 🙁 scan செய்யாமல் இருந்தால் கூட ஏற்கனவே இந்தக் கோப்புகள் எல்லாம் நூலாக அச்சிடும் காரணங்களுக்காக இருந்திருக்கக்கூடியவை தானே? இணையத்தில் பதிவேற்றுவது மட்டும் தானே செய்யப்பட வேண்டி இருந்திருக்கும்…ஹ்ம்ம்..இலங்கையில் இருந்து இயங்கும் தன்னார்வல முயற்சியான நூலகம் திட்டம் மூலம் சுமார் இந்திய ரூபாய் ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவில் ஏறக்குறைய 1000 நூல்களை இணையத்தில் ஏற்றி இருக்கிறார்கள் !! செலவுக் கணக்கையும் பொதுவில் வைத்திருக்கிறார்கள் !!
—————————————
இந்தப் பதிவின் Feedburner ஓடையில் இருந்த வழு காரணமாக, பழைய இயல்பிருப்பு ஓடை முகவரியான http://blog.ravidreams.net/feed என்ற முகவரிக்கு ஓடை நகர்த்தப்பட்டுள்ளது. கூகுள் ரீடர் முதலிய திரட்டிகள் மூலம் இந்தப் பதிவைப் படித்து வருபவர்கள் ஓடை முகவரியைத் தயவு செய்து திருத்திக் கொள்ளவும். நன்றி.