சற்றுமுன்

சற்றுமுன்… செய்திச் சேவை வரும் பிப்ரவரி 15 அன்று முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வாழ்த்துகள் !

சற்றுமுன்… செய்திச் சேவை வரும் பிப்ரவரி 15 அன்று முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வாழ்த்துகள் !

சற்றுமுன்னின் சிறப்புகளாக நான் கருதுவன:

– 24 மணி நேரமும் இற்றைப்படுத்தப்படும் உலகளாவிய தமிழ் இணையச் செய்திச் சேவை.
– இயன்ற அளவு இனிய தமிழில் செய்தி, தள வடிவமைப்பு.
– வாசிப்பவர்களாலேயே எழுதப்படுகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் மிகப்பெரிய கூட்டுப் பதிவு இது தான் என நினைக்கிறேன்.
– வெகு மக்கள் ஊடகங்கள் ஆர்வம் காட்டாத செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது. முக்கியமாக, இணையப் பயனர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய செய்திகளைத் தருவது. எடுத்துக்காட்டுக்கு, கூகுள் knol குறித்த செய்தி.
– தமிழகம், ஈழம் தவிர்த்து பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வது.
– செய்திகளில் வில்லைக்காட்சிகள், நிகழ்படங்கள் தருவது.
– அறிவியல் இன்று போன்ற முயற்சிகள்.
– யாகூ, எம்எஸ்என், ஏஓஎல் எல்லாமே தமிழுக்கு வந்தாலும் ராசிபலன், அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள்.. என்ற அலுக்க வைக்கும் வணிக மந்திரத்தை விட மாட்டேன் என்கிறார்கள். அவற்றுக்கு இடையே சற்றுமுன் வேறுபட்டு நிற்கிறது.
– முழுமையான செய்தி ஓடை தருவது.
– விளம்பரங்கள் இல்லாமல் / குறைவாக இருப்பது.
– தினத்தந்தி வகையறா இதழ்கள் ஒருங்குறிக்கு மாறாமல் இருக்கையில், அவற்றில் உள்ள முக்கியமான செய்திகளை ஒருங்குறியில் பெற்றுத் தருவது.
– வெகுமக்கள் செய்தி ஊடகங்கள் போல் அரசியல் / வணிக உந்துதல் இல்லாமல் இருப்பது.
– ஒரே செய்திகளுக்கான பல்வேறு இதழ்களின் தொடுப்புகளையும் ஓரிடத்தில் பார்க்கத் தருவது. இதை வேறு எந்த வணிகத் தமிழ்த் தளமும் செய்யும் என்று தோன்றவில்லை.
– இன்னும் சில செய்திப் பதிவுகள், கூட்டுப் பதிவுகள், இதழ்கள் போல் இல்லாமல் செய்தியோடு, அரசியல், சொந்தக்கருத்தைக் கலக்காமல் செய்தியைச் செய்தியாக மட்டும் தருவது.
– தமிழில் வெளிவராத செய்திகளையும் மொழிபெயர்த்துத்தருவது.

சற்றுமுன்னுக்கான வேண்டுகோள்கள்:

– பிற தளங்களில் இருந்து படியெடுத்துப் போடும் செய்திகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அல்லது, செய்தியின் நீளத்தைச் சுருக்கி முழுச் செய்தியைப் படிக்கத் தொடுப்பு கொடுக்கலாம்.
– எந்தத் தமிழ்த் தளத்திலும் வெளிவந்திராத முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை பிற தளங்களில் இருந்து மொழிபெயர்த்துத் தருவதை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செய்யலாம்.
– சற்றுமுன் வளர வளர வருகை எண்ணிக்கைகளுக்கு மயங்கி, “ரஜினி பேரனுக்கு மொட்டை அடித்தனர்” போன்ற செய்திகளைத் தராமல் இருப்பது.
– அரசியல் கலந்த கேலிச்சித்திரங்களைத் தவிர்ப்பது. தொடர்ந்தும் தளத்திலும் செய்திகளிலும் அரசியல் கலக்காமல் இருப்புத.

நான் சற்றுமுன் தளத்தில் செய்திகள் எழுதுவது இல்லை என்றாலும் தள பராமரிப்பில் பங்களித்து வருகிறேன். அந்த வகையில் வேர்ட்ப்ரெஸ் குறித்து நிறைய கற்றுக் கொள்ளவும் தூண்டுதலாக இருக்கிறது.

தொடர்ந்து சற்றுமுன்… வளர வாழ்த்துகள்.

தொடுப்புகள் – 8 பெப்ரவரி 2008

பல ஆங்கிலப் பதிவுகளில் Links for this week, Links for today என்று தொடுப்பு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். தொடுப்புப் பதிவுகள் என்று பதிவு வகையே இருக்கிறது. நாளைக்குப் பல பக்கங்களை பயர்பாக்ஸ் உலாவியில் சேர்த்து வைக்கிறேன். எல்லாவற்றையும் Del.icio.us போன்ற தளங்களில் ஏற்றிப் பகிர பொறுமையும் தேவையும் இருப்பதில்லை. எனவே, எனக்குப் பயன்பட்ட சுவையான, பயனுள்ள தகவல்களைத் தரும் தொடுப்புகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

* விண்டோஸ் எக்ஸ்ப்பி கணினியை வேகமாக்குவது எப்படி? – இதில் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி இப்ப என் கணினி 40% மடங்கு வேகமாகிடுச்சு !

* Matt cuts வழங்கும் ஜிமெயில் உதவிக் குறிப்புகள்

* புகழ்பெற்ற வலைப்பதிவராக ஆவது எப்படி?

cartoon from www.weblogcartoons.com

Cartoon by Dave Walker. Find more cartoons you can freely re-use on your blog at We Blog Cartoons.

* ReadBurner – பல மொழி கூகுள் பகிர்வுகளைத் திரட்டிக் காட்டும் தளம். இதைத் தான் ஓராண்டு முன்னரே மாற்று! என்ற பெயரில் தமிழுக்குச் செய்தோம். 

* Uncylopedia – கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா படித்து மண்டை காய்ந்து இருப்பவர்கள் இந்த கொலைவெறிக் களஞ்சியத்தைப் படித்து வாய் விட்டுச் சிரிக்கலாம்.

* Freerice.com – GRE காலத்துக்குப் பிறகு ஆங்கிலச் சொற்தொகையைச் சோதித்துப் பார்த்து விளையாட உதவிய தளம்.

* FileHippo – இந்தத் தளத்தில் உள்ள சூடான பதிவிறக்கங்களைத் துழாவினால் சில உருப்படியான மென்பொருள்கள் கிடைக்கின்றன.

* Poverty – இந்தத் தள முகப்பில் நொடிக்கொரு முகம் தோன்றித் தோன்றி மறையும். முகங்கள் அழகா இருக்கே என்று யோசிக்கும் முன் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். அம்முகங்கள் அண்மையில் பட்டினிக் கொடுமையால் இறந்தவர் முகங்கள் 🙁

* Pen Drive Linux – போகும் இடம் எல்லாம் லினக்ஸ் பென்குயினைக் கொண்டு செல்ல.

* உருப்படியான வலைப்பதிவு நுட்பக் குறிப்புகள் வழங்கும் ProBlogger

* Google Webmaster central – உங்கள் இணையத்தளத்தைக் கூகுள் பார்வையில் அறிய.

* NHM Converter – பல MB கோப்பையும் அசராமல் வழுவில்லாமல் குறியாக்கம் மாற்றித் தருகிறது. தமிழுக்கு ஒரு அருமையான இலவச மென்பொருள். முன்பு சுரதாவின் பொங்கு தமிழ் செயலியைச் சார்ந்து இருந்தேன்.

* µTorrent – ரொம்ப நாளா பிட்டொரன்ட் செயலி தான் பயன்படுத்தினேன். ஆனா, மியூடொரன்ட் சிறந்ததுங்கிறாங்க.

* கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளை கண்டுகொள்வது எப்படி 

சரி, இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி..

இணைப்பு, சுட்டி, தொடுப்பு – இந்த மூன்றில் link என்பதற்கு ஈடாக உங்களுக்குப் பிடித்த சொல் என்ன? முதலில் இணைப்பு, சுட்டி என்று சொல்லிக் கொண்டிருந்து இப்ப தொடுப்பு என்ற சொல் எனக்குப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. காரணம்: தொடுப்பு என்ற சொல் link என்பதற்கு ஈடாக இணையம், கணினி துறைகளுக்கு வெளியேயும் பயன்படுத்தலாம். பயன்படுகிறது. எனக்கும் அவனுக்கும் ஒரு தொடுப்பும் இல்லை என்று எங்கள் ஊரில் சொல்வதுண்டு.

தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன

ஏப்ரல் 2007ல் இணையத்தமிழ் உள்ளடக்க உருவாக்கத்துக்கு தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது 🙂 நேற்று கூட இதன் தேவை குறித்து தமிழ் விக்கிபீடியாவில் உரையாடினோம். நேற்று இரவே, தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் pdf வடிவில் இணையத்தில் கிடைக்கத் தொடங்கி இருப்பதை கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

http://www.textbooksonline.tn.nic.in/ என்ற முகவரியில் 1 முதல் 12 வகுப்பு வரைக்குமான பாடநூல்கள் தமிழ், ஆங்கிலம் இரு வழியிலும் கிடைக்கின்றன. இது ஒரு நல்ல தொடக்கம். அடுத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களையும் இது போல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

இன்னும் செய்ய வேண்டியவை:

1. சில பாடநூல்கள் scan செய்து போட்டவை போல் தோன்றுகிறது. அப்படி இல்லாம முழுக்க மின்-நூலாகவே தந்தால் pdf கோப்புகளுக்குள் உரையைத் தேடிப் பார்க்க உதவும்.
2. ஒரே பாட நூலைச் சின்னச் சின்னப் பகுதிகளாகத் தந்திருப்பது வேகம் குறைவான இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு உதவும். அதே வேளை ஒவ்வொரு பாடநூலையும் ஒரே கோப்பாகவும், ஒரு வகுப்பின் பாடநூல்கள் அனைத்தையும் zip கோப்பாகவும் தந்தால் பதிவிறக்கி வினியோகிக்க உதவும்.
3. HTML பக்கங்களில் utf-8 குறியாக்கத்தில் தந்தால் தேடு பொறிகளில் இந்நூல்களின் உள்ளடக்கம் சிக்கும். இந்தத் திட்டத்தின் முழு வீச்சு, பலன் அப்போது தான் கிடைக்கும்.

சிவபாலனின் பதிவில் இதனால் என்ன பயன் என்று சர்வேசன் கேட்டிருந்தது வியப்பளித்தது. பலன்களாக நான் கருதுவன:

1. பாடப்புத்தகம் தாமதமாகும் போது இதில் பெற்றுக் கொள்ளலாம்.
2. பாடத்திட்டத்தில் திருத்தங்களை இங்கு உடனுக்குடன் வெளியிடலாம்.
3. cbse, matric முறையில் இருப்போர் தங்கள் பாடத்திட்டம் தவிர, பிற பாடத்திட்டங்களைக் கலந்தாலோசிக்க விரும்புவோர் அதற்காக காசு கொடுத்து புத்தகம் வாங்காமல் இணையத்தில் பார்க்கலாம். மாநிலப் பாடத்திட்டத்தில் முதல் பிரிவில் படிப்போர் கூட அடுத்த பிரிவின் முழுமையான தாவரவியல், விலங்கியல் பாடங்களைப் புரட்டிப் பார்க்கலாம்.
4. சென்ற ஆண்டுப் பாடங்களைப் பார்க்க விரும்புவோருக்கு உதவும்.
5. பிற மாநிலப் பாடத்திட்டக் குழுவுக்கு நம் பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். குறிப்பாகப், பிற மாநிலங்களில் தமிழ்ப் பாடம் நடத்துவோர் நம் பாடங்களைப் பார்த்துக் கொள்ள முடியும்.
6. இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முழுக்கத் தமிழ் வழியக் கல்வி பயில்வோர் நம்மோடு ஒப்பு நோக்கியும் ஒருங்கிணைந்தும் செயல்பட உதவும். கலைச்சொல்லாக்கத்தில் ஒத்திசைவு, பாடத்திட்ட இற்றைப்படுத்தத்துக்கு உதவும்.
7. புலம்பெயர்ந்த தமிழர், இந்தியாவில் பிற மாநிலத்தில் உள்ள தமிழர் தங்கள் பள்ளிப் பாடங்களைத் திருப்பிப் பார்க்கவும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழில் கற்பிக்கவும் உதவும்.
8. இணையத்தில் இது குறிப்பிடத்தக்க தமிழ் உள்ளடக்கம். பொழுதுபோக்கு, செய்திகள் தவிர தமிழில் தகவலுக்காகவும் இணையத்தை அணுகுவார்கள். பயனுள்ள உள்ளடக்கம் இல்லாமல் இணையத்தில் பயன் குறைவானதே.
9. என்னைப் போல் ஆங்கில வழியத்தில் பயின்ற பலருக்குத் தமிழில் கலைச்சொற்களைக் கற்க உதவும். விக்கிபீடியா போன்ற தளங்களில் கட்டுரை எழுதுவோருக்கு பெரிதும் உதவும்.
10. முக்கியமாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் மக்கள் சொத்து. அது உலகில் உள்ள எந்த ஒரு தமிழனுக்கும் இலவசமாகக் கிடைப்பதாக இருப்பது மிகப் பொருத்தம்.

பி.கு – இத்திட்டத்துக்கு 50 இலட்சம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிந்து அதிர்ச்சியாக இருக்கிறது 🙁 scan செய்யாமல் இருந்தால் கூட ஏற்கனவே இந்தக் கோப்புகள் எல்லாம் நூலாக அச்சிடும் காரணங்களுக்காக இருந்திருக்கக்கூடியவை தானே? இணையத்தில் பதிவேற்றுவது மட்டும் தானே செய்யப்பட வேண்டி இருந்திருக்கும்…ஹ்ம்ம்..இலங்கையில் இருந்து இயங்கும் தன்னார்வல முயற்சியான நூலகம் திட்டம் மூலம் சுமார் இந்திய ரூபாய் ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவில் ஏறக்குறைய 1000 நூல்களை இணையத்தில் ஏற்றி இருக்கிறார்கள் !! செலவுக் கணக்கையும் பொதுவில் வைத்திருக்கிறார்கள் !!

—————————————
இந்தப் பதிவின் Feedburner ஓடையில் இருந்த வழு காரணமாக, பழைய இயல்பிருப்பு ஓடை முகவரியான http://blog.ravidreams.net/feed என்ற முகவரிக்கு ஓடை நகர்த்தப்பட்டுள்ளது. கூகுள் ரீடர் முதலிய திரட்டிகள் மூலம் இந்தப் பதிவைப் படித்து வருபவர்கள் ஓடை முகவரியைத் தயவு செய்து திருத்திக் கொள்ளவும். நன்றி.

தமிழ் செய்தித் தளங்கள்

கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும்.

தற்போது MSN தமிழ், Yahoo தமிழ், Thatstamil ஆகிய செய்தித்தளங்களே செய்தியோடைகளை வழங்குகிறது. அதிலும் thatstamilன் செய்தியோடை உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் சிஃபி, வெப் உலகம் போன்று இணையத்தில் மட்டும் இயங்கும் செய்தித் தளங்கள் விரைவில் இந்த வசதிகளை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கலாம். Yahoo தமிழ், MSN தமிழ் போன்றவை தனித்துவமான செய்திகளைத் தராமல் செய்தி நிறுவனங்கள் சார்ந்து செயல்படுவது ஒரே செய்திக் கட்டுரை இரண்டிலும் வெளி வருவதற்கான குழறுபடிகளுக்கும் வாய்ப்பாகப் போய் விடக்கூடும். தவிர, இவ்விரு தளங்களும் அவற்றின் பன்னாட்டுத் தரத்திற்கு இல்லாமல் வழக்கமான தமிழ் மசாலா தளம் போலவே இருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிபிசி தமிழ் தமிழகச் செய்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் அதன் இணையப்பதிப்பிலாவது இதைச் செய்யலாம். சீனத் தமிழ் வானொலியும் சீனச் செய்திகளிலேயே மூழ்கிக் கிடப்பதால் அதிகம் தமிழக செய்தி சார் பயனற்றதாக இருக்கிறது. தரம் வாய்ந்த இவ்விரு பன்னாட்டு வானொலிகளும் இணையப் பரப்பில் ஒரு முன்னணி செய்தித் தளமாக செயல்பட வாய்ப்பு உண்டு.

தினமலர், தினகரன், தினமணி போன்ற அச்சு ஊடக செய்தித் தளங்கள் இணையத்தின் சாத்தியத்தை துளியளவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எளிதில் செய்யக்கூடியன, செய்ய வேண்டியன –

1. ஒருங்குறி எழுத்துருக்களுக்கு மாறுதல்.
2. அச்சில் வந்த செய்திகளை மட்டும் படி எடுத்து இணையத்தில் போடாமல் இணையத்துக்கு என்று தனித்துவமான 24 நேரமும் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும் செய்தி அறிக்கைகளைத் தருவது.
3. செய்திப் பக்கங்களில் மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டு அளிக்கும் வசதி.
4. வாசகர்களே செய்தி சார் நிழற்படங்கள், நிகழ்படங்கள், கட்டுரைகளை பதிவேற்றும் வசதி. அவற்றின் தரத்தைக் கண்காணித்து இத்தளங்கள் உடனுக்குடன் வெளியிட்டால் உள்ளூர் செய்திகள், பரபரப்புச் செய்திகளை இற்றைப்படுத்த சரியான வாய்ப்பாக இருக்கும்.

வழக்கமான நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்தித் தளங்கள் போக சற்றுமுன் போன்ற பதிவுலகில் வெளி வரும் கூட்டு முயற்சி செய்தித் தளங்களும் குறிப்பிட்டத்தக்க பணியாற்றக்கூடும். வெறுமனே வெட்டி ஒட்டும் பதிவுகளாக இல்லாமல், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ் அச்சு ஊடகங்களில் வணிகக் கட்டாயங்களால் வெளி வராது இருக்கின்ற, பல செய்திகளை இவை வெளிக்கொணர்வது சிறப்பு.

இணையத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுபவைகளில் செய்தித் தளங்கள் முதன்மையானவை. இதைத் தமிழ் இணையப்பரப்பில் இயங்கும் செய்தித் தளங்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வது நலம்.