வலைப்பதிவர் சிந்தாநதி காலமாகியுள்ளார். நல்ல மனிதர்களும் இறப்பார்களோ 🙁
தமிழ் வலைப்பதிவர் உதவிப் பக்கம், சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007, தமிழ் 99 விழிப்புணர்வுத் தளம், சற்றுமுன் என்று பல கூட்டு முயற்சிகளில் அவருடன் இணைந்து பங்காற்றினேன். இந்த எல்லா முயற்சிகளிலும் இவருடைய ஈடுபாடு அளப்பரிது. தமிழ்99 தள வடிவமைப்பு, தமிழ்99 விசைப்பலகை ஒட்டி வடிவமைப்பு என்று பெரும் பங்களித்தார். தமிழ்க் கணிமை, வலைச்சரம், தமிழ்ப் புத்தகச் சந்தை, வலைமொழி என்று அவருடைய முனைப்புகள் பட்டியல் நீள்கிறது.
சிந்தாநதி மிகுந்த ஊக்கம், அடக்கம், முயற்சி, பண்பாடு மிக்கவர். என்றும் தன்னை முன்னிறுத்தாதவர். விமர்சனங்களைக் கூட மிக கனிவாகவே சொல்வார். தமிழ், இலக்கியம், சூழல், கணிமை, வலைத்தளங்கள், வரை கலையில் மெய்யான ஆர்வமும் திறமும் உடையவர். அவருடைய ஆவணமாக்கத் திறத்துக்கு கணிச்சுவடி ஒரு சான்று. ஒரே ஒரு முறை நான் அவரை மிகவும் வேண்டிக் கேட்ட பின் தொலைப்பேசியில் பேசினார். முகம் பார்த்ததில்லை. என்றாவது ஒரு நாள் கூடிய விரைவில் பார்த்து உரையாடி விட வேண்டும் என்றிருந்தேன். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வலையில் காணாமல் இருந்த போது, அவருக்கு என்ன ஆனதோ என்று கவலையாக இருந்தது. காசி அவரைத் தேடி பெரும் முயற்சி செய்தார். பிறகு, அவர் தானாகவே திரும்ப வந்தபோது மகிழ்ந்தேன். நிலைக்கவில்லை 🙁
அவரின் மறைவு தமிழ் இணையத்துக்கு, நல்ல உலகுக்கு இழப்பு 🙁 தேன்கூடு தள நிறுவனர் சாகரன் மறைந்ததோடு அவரது உழைப்பும் மறைந்தது. அப்படி இல்லாமல், சிந்தாநதியின் பல ஈடுபாடுகள் கூட்டு முயற்சிகளாக இருப்பதால், இம்முயற்சிகள் வடிவில் அவர் நிலைப்பார் என்பதே ஒரே ஆறுதல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். வலையுலக நண்பர்கள் எந்த வகையிலாவது அவரது குடும்பத்துக்குஆதரவளிக்க முன்வந்தால் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.