நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன்.
(எந்த வரிசையிலும் இல்லை)
1. முகுந்த் – தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது.
2. மாகிர் – தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில் தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள தேடு கருவிகள், வழிகாட்டுக் கருவிகள் உருவாக்கி உள்ளார்.
3. கோபி – இந்திய மொழிகள் பலவற்றுக்குமான ஒருங்குறி எழுது கருவிகள் செய்திருக்கிறார். இது தவிர, பல பயனுள்ள தமிழ் சார் Firefox நீட்சிகள் செய்து தந்திருக்கிறார்.
4. ஜெகத் – இனியன் என்ற பெயரில் இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப் பெயர்ப்புக் கருவியைத் தனி உழைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
5. Voice on Wings – முகுந்த், கோபியுடன் இணைந்து Firefox தமிழ்விசை நீட்சியின் உருவாக்கத்தில் பங்கு வகித்தவர். விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள் தொடர்பான Firefox நீட்சிகளையும் உருவாக்கி இருக்கிறார். இவரது அண்மைய உழைப்பு – மாற்று!.
6. மயூரன் – தமிழில் கட்டற்ற முயற்சிகள் எங்கிருந்தாலும் அங்கு மயூரனும் இருப்பார்! தமிழ் லினக்சு, தமிழ் உபுண்டு, தமிழ்க் கணிமை குழுக்களில் இவரது ஈடுபாடு பலரும் அறிந்தது.
7. காசி – தமிழ் வலைப்பதிவுகள் பெருகத் தொடங்கிய போது அவற்றைக் காட்சிப்படுத்தி, கூடிய வாசக வெளிச்சம் கிடைக்க உதவியாகத் தமிழ்மணம் திரட்டியை உருவாக்கினார்.
8. சுரதா – தமிழிணையக் கருவிகளுக்கு இவர் உருவாக்கிய சுரதா தளம் ஒரு களஞ்சியம் போல். இவருடைய சுரதா ஒருங்குறி எழுதி, பொங்குதமிழ் கருவிகளைப் பயன்படுத்தி இராதவர்கள் மிகக் குறைவே.
9. மறைந்த உமர் தம்பி அவர்கள் – இவரது உழைப்பும் உணர்வும் கோபி, மாஹிர் போன்ற பலரையும் தூண்டி விட்டது பெரும் சிறப்பாகும்.
10. மறைந்த சாகரன் என்னும் கல்யாண் – தேன்கூடு, பெட்டகம் என பல நல்ல இணையத்தளங்களை உருவாக்கினார். ஆனால், இவரது மறைவுக்குப் பிறகு இம்முயற்சிகளும் மறைந்தது சோகம்.
11. சிந்தாநதி – பல தமிழ் இணைய முயற்சிகளில் பின்னணியில் இருந்து செயல்பட்டு ஊக்குவித்தவர். இவரது அகால மறைவு பெரும் இழப்பு.
12. முனைவர் A. G. Ramakrishnan – இவரது குழுவினர் தமிழில் எழுதிய உரையைப் பேச்சுக்கு மாற்றும் செயலியைக் கண்டுபிடித்துள்ளனர்.
13. K. S. Nagarajan – NHM writer, NHM converter என்ற இரண்டு அருமையான மென்பொருள்களை உருவாக்கியவர். தமிழில் தற்போது கிடைக்கும் எழுதிகளில் NHM writer மிக அருமையானது. முழு நேரமாகவே தமிழ்க் கணிமைகளில் ஈடுபட்டிருக்கும் இவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.
14. சுந்தர் – தமிழ் இலக்கண கணிமை, விக்கி நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தானியங்கியாக தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்த்தது சுந்தரின் மிக முக்கியமான பங்களிப்பு.