ஒரு நதி போல…

அன்புன்னா என்ன?

இந்தக் கேள்வி தோன்றின முதல் முறையே அன்பைத் தவற விட்டு ரொம்ப நேரமாயிடுச்சோன்னு தோணுது..

இந்தக் கேள்வி எனக்கு எப்ப முதன் முதல தோணுச்சுன்னு சரியா நினைவில்லை. ஆனா, அடிக்கடி வந்து போகும் கேள்வி இது. இதுக்கான பதில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. புரிஞ்சும் ஏத்துக்க முடியாத மாதிரியும் இருக்கு. புரியாட்டியும் தேடல் மட்டும் ஓயாம இருக்கு.

ஒரு நாள். பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்தேன். யாரோ யாருக்கோ “நாங்க அத செஞ்சோம், இத செஞ்சோம், இப்படி வளர்த்தோம், அப்படி பார்த்துக்கிட்டோம், எங்கள மறந்துட்டாங்க”-ன்னு புலம்பிக்கிட்டிருந்தாங்க. அப்ப செல்வி அக்கா சொன்னாங்க – ” செஞ்சு என்ன புண்ணியம். அது தான் சொல்லிக் காமிச்சிட்டீங்கள்ள”-ன்னு. அன்னைக்கு சுள்ளுன்னு ஒன்னு உறைச்சு மாதிரி இருந்துச்சு. நம்ம எத்தனை நாள் இப்படி எத்தனை பேரை சொல்லிக் காமிக்கிறோம்னு.

பாரதிராசா படத்துல வர்ற அழகான ஊரும் வெள்ளந்தி மனுசங்களும் எங்க இருக்காங்கன்னு தெரில. எங்க ஊருல வீட்டைச் சுத்தி முறைப்பாட்டுக்காரங்க தான். அம்புட்டுப் பேரும் பங்காளிங்க. தளை வெட்டுறதுல இருந்து மனுசன வெட்டுறது வரைக்கும் முறைப்பாட்டுக்கு ஆயிரம் காரணங்கள். கேப்பை ரொட்டி சுட்டாலும் கொண்டாந்து கொடுப்பாங்க. முறைப்பாடு வந்தா மண்ணை வாரித் தூத்தி காது கூசும் வார்த்தைகளை சொல்லவும் தயங்க மாட்டாங்க. அப்புறம் யாரும் அப்பச்சி கிப்பச்சி செத்தா கைத்தொட ஒன்னு சேர திருநீறு பூசி ராசியாகிக்குவாங்க. மனசுல வஞ்சத்த வச்சுக்கிட்டு அடுத்த சண்டைக்கு காத்திருப்பாங்க சில பேர். அப்பா எதையும் மனசுல வைச்சுக்காம எல்லாருக்கும் முடிஞ்ச அளவு நல்லது பண்ணுவார். அப்பா அளவுக்கு மனப்பக்குவம், பெருந்தன்மை வர்றது கடினம்.  “ஏன்ப்பா இப்படி பண்ணுறீங்க”ன்னு கேட்டா, “அப்புறம் நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம்”பார். ரொம்ப நல்லவரு தான்.

புதுகை பள்ளி வாழ்க்கை, சென்னை கல்லூரி வாழ்க்கை எல்லாம் பரவால தான். நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. ஆனா, கல்லூரி வாழ்க்கைய விட்டு வெளிய வந்தப்புறம், வேலைக்குப் போக ஆரம்பிச்ச நாட்கள்ல தான் சென்னை மனிதர்கள புரிஞ்சுக்க முடிஞ்சு மண்டை காஞ்சிடுச்சு. ஒரு முறை வேலை பார்த்த இடத்துல ஒரு பொண்ணு சொன்னா – “சென்னைக்கு கீழ இருந்து வர்ற பசங்க எல்லாம் நல்லா helpingஆ இருக்கீங்க”-ன்னு. அவள் உட்பட தொடர்பு வட்டத்த விட்டு விலகிக்கிட்ட உடனே, நம்ம தேவை இல்லை அப்படின்ன உடன, டக்குன்னு தொடர்ப வெட்டிக்கிற இன்னும் இரண்டு மூணு பொண்ணுங்களயாவது சந்திச்சிருப்பேன்.

பள்ளிக் காலம் தொடங்கி எட்டாண்டு காலம் பிரியாத தோழி ஒருத்தி. உயிர்த்தோழி என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மறக்க முடியாத மாசில்லா மதி மாதிரி ஒரு நட்பு. அவளுக்கு மாப்பிளை பார்க்கத் தொடங்கினப்ப கொஞ்சம் கொஞ்சமா விலகத் தொடங்கினா. “என் மேல இவ்வளவு பாசம் வைக்காத. நாளைக்கு வர்ற புருஷன் எப்படியோ, நாம தொடர்புல இல்லாட்டி, நீ கஷ்டப்படக்கூடாது, நானும் கஷ்டப்படுவேன். இப்பவே பழகிக்கோ. நான் ஒன்னும் specialஆ பழகல. நீ என் மேல பாசம் வைச்ச மாதிரி யார் மேல வைச்சிருந்தாலும் இப்படித் தான் பழகி இருப்பாங்க”-ன்னு சொல்லுவா. சொல்லி வைச்ச மாதிரி வந்தான் ஒருத்தன். எந்தப் பொண்ணு கூடயும் அவன் பேசுனதில்லையாம். தன் பொண்டாட்டியும் எந்த ஆண் கிட்டயும் பேசியிருக்கக் கூடாதுன்னா எதிர்ப்பார்க்கிறானாம். என்ன சொல்லி விளக்க முடியும் தோழியால்? அவள் விலகிச் சென்றாளா, இல்லை நிலைமை தெரிஞ்சிருந்தா நானே விலகி இருப்பேனா? இப்ப, எங்க இருக்கான்னு தெரியாது. இன்னும் சில நாளில் அவளுக்குப் பிறந்த நாள். முதலும் கடைசியுமான பிரிவு. ஆனால், முதலாவதும் கடைசியுமாய் இல்லாமல் என்றும் இருக்கும் வலி.

ஆனா, ஒன்னு புரியல. அன்பு, நட்பு, காதல், துணை – இதில் எதைத் தேடுறோம் நாம? எதுக்காக எதை விட்டுக் கொடுக்கிறோம்? இல்ல, எதுக்கு முன்ன எது வேண்டாததாகிப் போகுது? எது விட்டுக்கொடுக்க முடியாததா இருக்குது? பிரச்சினை வந்தா எத விலக்க வேண்டியதா இருக்குது? எல்லாமும் ஒன்னா ஒன்னுக்குள்ள எல்லாமும் இருக்க முடியாதா?

“நான் ஒன்னும் specialஆ பழகல. நீ என் மேல பாசம் வைச்ச மாதிரி யார் மேல வைச்சிருந்தாலும் இப்படித் தான் பழகி இருப்பாங்க”

தோழி சொன்ன சொற்கள் மனசுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. உண்மை தான்.

ஒரு திரைப்படத்தில் காதல் தோல்வியால் துவண்டிருக்கும் நாயகனிடம் அவனோட நலம்விரும்பி சொல்றார் –

“நேற்று இங்க காற்றாலை இருந்துச்சு. இன்னிக்கு இல்ல. ஆனா, காற்று என்னிக்கும் இருக்கும்”.

காதல், நட்பு, பாசம் எல்லாம் அன்பின் வெவ்வேறு வடிவங்கள் தான? காற்று மாதிரியா அன்பு? காற்றாலை போல் ஆட்கள் இருக்கப்ப அன்பின் வெளிப்பாடு கண்ணுக்கு மகிழ்ச்சியா தெரியுது. ஆனா, ஆட்கள் இல்லாதப்பயும் அன்பு என்னைக்கும் இருந்துக்கிட்டே தான் இருக்குது. இன்னொரு நாள், காற்றாலையோ காற்றாடியோடு ஓடுற சிறுவனோ தென்படலாம். காற்றில்லாதப்ப காற்றாலை நிற்கலாம். ஆனால், காற்றாலை இல்லை என்பற்காக காற்று நின்று விடுவதில்லை. அன்பு அதன் போக்கில் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மையான அன்புன்னு சொல்லலாம். ஆனா, அது என்ன உண்மையான அன்பு? உண்மை இல்லாம அன்பு ஏது?

அம்மா, அப்பா, உடன்பிறந்தவர், கணவன் / மனைவி-ன்னு பாசம் காட்ட பலர் இருந்தாலும் எல்லாம் ஒரு விலையோட இருக்கு. விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கு. அன்புக்காக விட்டுக் கொடுக்கிறோமா? இல்லை, விட்டுக் கொடுக்கிறதால அன்பு தொடருதா? எது சரி?

ஆனா, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம, மழை மாதிரி பொழியுற அன்புக்கு எல்லாருமே ஏங்குறோம்ங்கிறது உண்மை. ஆனா, அப்படி அன்பு தென்படும்போது கூட, அத ஏத்துக்க கூடத் தயங்குறோம். ஒரு வேளை பின்னாடி அது இல்லாமப் போயிடுச்சுன்னா? பிறவியிலேயே குருடா இருந்துடுற மாதிரி உண்மையான அன்பையே சுவைக்காம, உரிமையாக்கிக் கொள்ள நினைச்சுக்கத் துணியாம இருக்கப் பார்க்கிறோம்.

சின்ன வயசுல தங்கச்சி மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் சொன்னா – “அண்ணா, love me little but for longer.” எவ்வளவு வளர்ந்தாலும் நான் மறக்காத சொற்களும் என் தங்கச்சி சொன்னதுலயே ரொம்பப் பிடிச்சதும் இது தான். அப்ப அவளுக்கு 13 வயசு தான் இருந்திருக்கும். ஆனா, இதில உள்ள உண்மை ரொம்பப் பெரிசு. இந்த முறை ஊருக்குப் போனப்ப ஒரு பேருந்துப் பயணத்துல இரவு முழுக்க தோள்ல மடியில சாச்சு, தலை கோதி விட்டுப் படுக்க வைச்சிருந்தேன். எல்லா தோழிங்க கிட்டயும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருப்பா போல். நல்ல அதிசய அண்ணன் தங்கச்சி தான்னு சொன்னாங்களாம் ! மடில படுக்கிறது, தோள்ல சாயுறதுன்னு காதலன்-காதலி தாண்டி எல்லா உறவிலயும் எதிர்ப்பார்ப்பு இருக்கு. நாம உடல் வளர்ந்தவுடன மனசையும் வளரச்சொல்லிடுறோம். ஆயிரம் சொற்கள், சொல்லாதத ஒரு தொடுதல் புரிய வைச்சிடும்னு தான் நம்புறேன்.

“வளர்ந்தா, வெளிநாடு போனா உன் தம்பி மாறிடுவான் பாரு”-ன்னு சொல்றவங்க கிட்ட “என் தம்பி அப்படி இல்லை”-ன்னு பல ஆண்டா பெருமையா சொல்லிக்கிட்டே இருக்காங்க அக்கா. “கலியாணம் ஆனா மாறிடுவான்”-ன்னு இன்னும் சில பேர். அவங்க அவங்க அனுபவங்கள். அவங்க அவங்க அனுமானங்கள். சில பேருக்கு தான கொடுத்து வைச்சிருக்கு.

நேற்று இருந்த அன்பு போல் இன்னிக்கு இருக்குதா, நாளைக்கு இருக்குமான்னு யோசிச்சு தான் பல பேர் வாழ்க்கை ஓடுது. இவன் இன்னிக்கு இருப்பான்/ள், நாளைக்குப் போப் போறவன்/ள் தானேன்னு கணக்குப் பார்த்து ஓடுற உலகத்துல அன்புன்னா என்ன-ங்கிற கேள்வி தவிர்க்க முடியாதது.

“The Alchemist” புதினத்துல பிடிச்ச மாதிரி ஒரு வரி வரும். தலைவன், தலைவி கிட்ட தான் ஏன் காதலிக்கிறேன்னு விளக்க முற்படுவான். அப்ப தலைவி சொல்வா – “Don’t say anything. One is loved because one is loved. No reason is needed for loving”

ஒரு காரணத்துக்காக ஒருத்தர அன்பு செஞ்சா அந்த காரணத்தைத் தான் விரும்புறோம், இல்லையா? அந்தக் காரணம் இல்லாமப் போகும்போது அன்பும் இல்லாமப் போகுது.

ஒரு நாள் அப்பா கிட்ட ஏதோ ஒரு விசயமா பேசும் போது, இயற்கை படத்தில் வர்ற ஒரு பேச்சைக் குறிப்பிட்டார் – ”அன்புக்கு அன்பு தான் காரணம்”.

இது மாதிரி ஒரு சில நல்ல பேச்சுகள் அப்பப்ப தமிழ்ப் படங்கள்ளயும் வந்து போகுது. மொழி படமுன்னோட்டத்துல வர்ற வாசகம் – “அன்புக்கு மொழி முக்கியம் இல்ல. அன்பு தான் முக்கியம்.”

இது போல மனசுல நிக்கிற இன்னும் சில பொன்மொழிகள் –

– where there is self, there is no love. where there is love, there is no self.

தீயில கருகுற பிள்ளைக் காக்கப் போய் தானும் கருகின தாய்கள் எத்தனை எத்தனை பேர்? egoவால் அன்பான வாழ்க்கையை கெடுத்துக்கிறவங்க எத்தனை பேர்? அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையோர் என்பும் உரியது பிறர்க்குங்கிற குறள் வரில இந்த no self கருத்து வருது தான?

ஒரு கல்லூரித் தோழி ஒரு முறை சொன்னது –

– if you love a bird, let it free. if it comes back to you, it is yours. if it doesn’t come back, it never was yours.

உண்மை தான். ஆனா, நம்மதுன்னு நினைச்ச அன்பை, சுதந்திரமா விட்டுத் திரும்ப நம்ம கிட்ட வராதப்ப அன்பு பொய்னு நினைக்கிறதா இல்ல அன்பா இருந்தவங்க செத்துட்டாங்கன்னு நினைக்கிறதா? இல்லை, அன்பு பொய்னு உறுதி ஆனாலும், சரி தப்பிச்சோம்னு நினைக்கிறதா இல்லை செலவழித்த காலத்தை, அன்பை நினைத்து வருந்துவதா? திரும்பத் தன்னிடம் வருமா என்று தெரியாததாலேயே, பயப்படுவதாலேயே அன்புக்குரியவர்களை ஒரு கூண்டுக்குள் அடைச்சு வச்சிருக்கவங்க எத்தனை எத்தனை பேர்? ஒவ்வொருவரோட அப்பா, கணவன், காதலி, காதலன்னு எத்தனை பேர்? உன் வானத்தைக் கண்டு வா-ன்னு கூண்டைத் திறந்து விடுற தெளிவு, தூய்மை, பக்குவம், துணிவைத் தர்றது எது?

“Zahir” புதினத்துல எனக்குப் பிடிச்ச ஒரு கருத்து வரும். அதாவது, வெற்றிக்கு முன்படில இருக்க சில பேர் எங்க அந்த வெற்றியை நோக்கிய பயணமே அன்புக்குரியவங்கள தன் கிட்ட இருந்து பிரிச்சுடுமோன்னு பயப்படுறாங்களாம். ஆனா, நாம் நாமாக இருக்கும்போது நம்மள நேசிக்க முடியாதவங்க உண்மையில் நம்மள நேசிக்கிறது இல்லை தான? அவங்களுக்கு விருப்பமான ஒரு பிம்பத்த நம்ம மேல சாற்றி விரும்புறாங்க. அது இருந்தா என்ன? போனா என்ன? அப்புறம், அன்பில வர்ற பிரச்சினையே நாம எதிர்ப்பார்த்த மாதிரி யாரும் நம்மள விரும்புறது இல்லைங்கிற ஏமாற்றம், வருத்தம் தான். அன்பை அதன் போக்குலயே ஏத்துக்கிற பக்குவம் வரும்போது தான் உண்மையான சந்தோஷம் கிடைக்குது.

தன் காதலன் தான் விரும்புற மாதிரி romanticஆ நேசிக்கிறதில்லை, கேட்டா- சொன்னாத் தான் தெரியுமா அன்பு-ன்னு சொல்றதா சொல்லி வருத்தப்படுவா என் தங்கச்சி. அவன் கிட்ட பேசாம இருந்து சண்டைப் போடப் போறதா சொல்லிட்டு அப்புறம் மனசு கேக்காம இவளே பேசிடுவா. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆனா, உசுரோட நல்லா மகிழ்ச்சியா இருக்கும்போது அன்பை வெளிப்படையா காமிக்காம செத்த பிறகு அழுவுற ஆட்கள் நிறைய நம்ம ஊர்ல. அன்பை வெளிப்படையா காட்டாம மறைமுகமா காட்டுறதும் நம்ம பண்பாட்டுல இருக்கு. ஆனா, இங்க வெளிநாடு வந்து பல பண்பாடு பார்த்தபிறகு வெளிப்படையா அன்பைக் காட்டுறது கூட நல்லாத் தான் இருக்கும்போலன்னு தோணுது. ஒரு நாள், இங்க ஒரு பையன் தன் காதலியைத் தோள் மேல வைச்சுத் தூக்கிட்டுப் போனான். அந்தப் பொண்ணு முகத்துல அவ்வளவு மகிழ்ச்சி. இன்னும் நம்ம ஊர்ல பொண்டாட்டி கையப் பிடிச்சு நடந்தா பொண்டுவ சட்டியோ-ன்னு வீராப்பு பார்க்குறவங்க நிறைய பேர். வசூல் ராசா mbbs படத்துல வந்த மாதிரி கட்டிப்பிடிப் பண்பாடு வந்தாலும் நல்லாத் தான் இருக்கும். ஒரு முத்தம், ஒரு தொடுதல் நிறைய விசயங்களைச் சொல்ல முடியும். அநியாயமா அத குழந்தைகளுக்கும் மறைவில் மனைவிக்குமானதா மட்டும் ஒதுக்கி வைச்சிருக்கோம்.

இரயில் வண்டியில் ஏற்றி விட வந்து வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைப்பது போல் அம்மா, அப்பா, அக்கா, தங்கை என்று தொடங்கி ஓடுகிறது வாழ்க்கை. ஒவ்வொருவரின் பயணமும் ஒவ்வொரு திசையில் வெவ்வேறு வண்டிகளில். நம் வண்டியில் நண்பர்கள், சில பெயர் தெரியா உறவுகள், பாசங்கள் என்று ஓடுகிறது. இறங்கும் இடத்தில் வரவேற்க, கூட வாழ என்று எதிர்காலத்தில் இன்னும் சில புது உறவுகள் வரும். தொடங்குவதற்கும் முடிவதற்கும் இடையிலான நீண்ட பயணங்களில் ஆளில்லா காலங்களில் பழசை நினைத்தும் புதுசை எதிர்ப்பார்த்தும் அசை போடுவதும் ஆசைப் படுவதுமாய் கழியும் சில இரவுகள்.

அன்பை ஈரம்னும் சொல்றதுண்டு. இந்த ஈரம் தான் மனசை நனைச்சு உசிரை வாழ வைக்குது. அன்புன்னா என்னன்னு புரிஞ்சுக்கிட்டிருக்கனோ இல்லையோ, அத உணர்ந்திருக்கிற வேளைகள் நிறையவே உண்டு. அது தான முக்கியம்னு நினைக்கிறேன். நம்மள நேசிக்க ஒருத்தரா இல்ல நாம நேசிக்க ஒருவரா-ங்கிற எதிர்ப்பார்ப்புத் தெளிவும் இல்லை. சில புறக்கணிப்புகள், சில ஏமாற்றங்கள், சில பிரிவுகள், சில என்றும் இருக்கும் உறவுகள்னு காயமும் ஈரமுமா இருக்குது. வறண்டு போகாத மனசில் காயாத ஈரத்தால் தான் ஆறாத காயங்களும் இருக்குதோன்னு தோணுது.

போகும் வழி எல்லாம் நதியாப் பெருகி கரை புரண்டோடனும் அன்பு. ஈரம் வேணுங்கிற மண்ணு உறிஞ்சிக்கட்டும். ஆத்து மண்ணு உறிஞ்சி ஆத்துத் தண்ணி வத்தப் போறது இல்ல. உறிஞ்சாலும் ஊத்தா இன்னும் சுவையா ஊறத் தான் போகுது. ஏற்கனவே ஈரம் உள்ள மண்ணுக்குத் தேவைப்படாமப் போலாம். தேங்கித் தேம்பி அழாம என்றும் போல நதி ஓடிக்கிட்டிருக்கணும். ஈரம் கொடுத்த ஒவ்வொரு செடியையும் திரும்ப வந்து பார்க்கப் போறதில்லை நதி. ஆனா, நதி வந்தத் தடம் எல்லாம் இருக்க பச்சை தான் சாட்சி. இது என் இடம், இது என் உரிமைன்னு ஒரு நாளும் தேங்கி நிற்கிறதில்லை நதி. தேங்கி நிற்கும் நதி, குளமாவோ குட்டையாவோ சின்னதாகி அழகு குறைந்து ஆழம் குறைந்து ஒரு நிலையில் வற்றியே போய் விடுகிறது.

நிற்காமல் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருப்பது முக்கியம் போல் இருக்கிறது. பசுஞ்சோலை வரலாம். பாலைவனம் வரலாம். கடல் காணும் வரை ஓடிக் கொண்டே இருக்கணும் போல..

நதி கடலாகும், கடல் மழையாகும், மழை நதியாகும்…

நதியை நனைக்கவும் ஒரு நாள் வரும்…

பெரு மழையோ பனியோ சாரலோ !

அதுவரை,

பெருகி ஓடிக்கிட்டே இருக்கணும்..

இப்படியே அன்பா என்னைக்கும்…

ஒரு நதி போல..