தொலைக்காததால் அனாதையாகி,
எனக்குள் அழும் குழந்தைக்கு,
யார் அம்மா.
|
![]() |
—
பட உதவி: MiikaS
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – By attribution Share Alike – 2.0
—
தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு
தொலைக்காததால் அனாதையாகி,
எனக்குள் அழும் குழந்தைக்கு,
யார் அம்மா.
|
![]() |
—
பட உதவி: MiikaS
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – By attribution Share Alike – 2.0
—
தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.
மேலே இருப்பது தான் அந்த விசைப்பலகை !
இதில் என்ன சிறப்பா?
1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு. இது தான் முதன்மையான பயன். அடுத்து வரும் சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் தேவையைக் குறைக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
சொல் | romanised | தமிழ்99 | keystrokes saved |
தொழிலாளி | thozilaa+SHIFT+li | த ஒ ழ இ ல ஆ ள இ | 3 |
வெற்றி | ve+SHIFT+r+SHIFT+ri | வ எ ற ற இ | 2 |
கணையாழி | ka+SHIFT+naiyaazi | க ண ஐ ய ஆ ழ இ | 4 |
தந்தம் | thantham | த ந த ம f | 3 |
உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உள்ளிடுவதென்று விசைப்பலகையைப் பார்த்தாலே புரியும். இனி, பிற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் ஒரு சுருக்கமான வழிகாட்டி.
எழுத்து | விசை வரிசை |
த் | த f |
த | த |
தா | த ஆ |
தி | த இ |
தீ | த ஈ |
து | த உ |
தூ | த ஊ |
தெ | த எ |
தே | த ஏ |
தை | த ஐ |
தொ | த ஒ |
தோ | த ஓ |
தௌ | த ஔ |
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு,
சொல் | விசைகள் |
புள்ளி | பு ள ள இ |
கன்று | க ன ற உ |
தங்கம் | த ங க ம f |
தந்தம் | த ந த ம f |
வெற்றி | வ எ ற ற இ |
3. பழகுவது எளிது. எழுத்துக்கள் இருக்கிற இடங்களை நினைவில் கொள்வதும் எளிது. உயிரெழுத்துக்கள் ஒரு பக்கமாகவும் அகர உயிரெழுத்துக்கள் இன்னொரு பக்கமாகவும் ஒழுங்காக ஒரு வரிசையில் அமைந்துள்ளன. அகர உயிர்மெய்யெழுத்துக்கள் அமைப்பிலும் நெருக்கமான எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறு ஒரு ஒழுங்கு இருக்கிறது. அடிக்கடி அடுத்து வரும் எழுத்துக்கள் அருகருகே உள்ளன.
எடுத்துக்காட்டுக்கு,
ந – த; ங – க; ண – ட; ன – ற; ஞ – ச
ஆகிய எழுத்துக்கள் அருகருகில் இருக்கும்.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும் விதமும் அமைந்திருக்கிறது. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமாக தட்டச்சு செய்யலாம். விரல்களை அயர வைக்காது. கடந்த ஒரு ஆண்டாகத் தான் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துகிறேன். ஆனால், ஏழு ஆண்டுகள் பழக்கமான ஆங்கிலத்தை விட வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது. பழகிய பிறகு விசைப்பலகைய பார்க்காமயே தட்டச்சு செய்ய எளிது. ஆங்கில விசைப்பலகைக்கு கூட எனக்கு இன்னும் இந்த நம்பிக்கை வரவில்லை. தட்டச்சுப் பயிற்சி நிலலயத்துக்கு செல்லாமல் நீங்களே இதைக் கற்றுக் கொள்வது எளிது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி கலந்து பேசி உருவாக்கி, சோதித்துப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விசைப்பலகை. பிற விசைப்பலகைகள் எல்லாம் இந்த மாதிரி இல்லாமல் தனி முயற்சியில் உருவானவை. எனவே அதில் உள்ள நுட்பத் திறமும் குறைவாக இருக்கலாம்.
7. 247 தமிழ் எழுத்துக்களை 31 விசைகளில் அடக்குகிறது இந்த விசைப்பலகை வடிவமைப்பு. இதன் எளிமை பிற மொழி விசைப்பலகைகளில் காணக்கிடைக்காதது. இதன் வடிவமைப்பே புத்திசாலித்தனமானது. நாம் உள்ளிடாமலயே மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப செயல்பட்டு நம் வேலையைக் குறைக்கிறது. இது தொடர்பாக உள்ள 12 புத்திசாலித்தனமான விதிகளைப் பாருங்கள். இதைப் பழகப் பழகத் தான் தமிழ் எவ்வளவு கட்டமைப்பும் ஒழுங்கும் உடைய எளிமையான மொழி என்று வியக்க வேண்டி இருக்கிறது.
8. அனைத்தையும் விட முக்கியமான விசயம், இதைப் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. romanised / அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை மட்டும் பயன்படுத்த வேண்டாம். முதலில் கொஞ்ச நாள் தமிங்கிலத்தில் எழுதிப் பழகி விட்டு அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனதில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது. தமிங்கில குறுஞ்செய்தி அனுப்புவதாலும் இதே பாதிப்பு வருகிறது. அடுத்த தலைமுறை, தமிழுக்கான சொற்களை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக உள்வாங்கிக் கொண்டால் அதை விட அவமானம் உண்டோ? அதனால் இன்றே தமிங்கில தட்டச்சை விடவும். இதனை ஒப்பிட பிற தட்டச்சு முறைகளான பாமினி, typewriting layout எவ்வளவோ பரவாயில்லை. அவற்றைப் பழகியவர்களுக்கு அதை விட்டு தமிழ்99க்கு வர கடினமாக இருக்கும். ஆனால், தமிங்கிலக்காரர்கள் இலகுவாக மாறிக் கொள்ளலாம். தமிங்கிலத் தட்டச்சை விட்டொழிப்பதற்கான இன்னும் வலுவான காரணங்களை அறிய ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும் என்ற கட்டுரையைப் பாருங்கள்.
கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கு அறிமுகமாகும்போது ஏறக்குறைய எல்லாரும் தமிங்கிலப் பலகை மூலம் தான் அறிமுகமாகிறோம். ஆனால், விரைவில் அடுத்த கட்டமாக தமிழ்99 கற்றுக் கொள்வது நலம். சொந்தக் கணினி வைத்திருப்பவர்கள் தமிழ்99க்கான எ-கலப்பை அல்லது NHM writer பயன்படுத்தலாம். பயர்பாக்சு உலாவி பயன்படுத்துபவர்கள் வைத்திருப்பவர்கள் எ-கலப்பைக்கு ஒத்த தமிழ் விசைநீட்சியைப் பயன்படுத்தலாம்.
ஒருமுறை தமிழ்99 பயன்படுத்திப் பழகிவிட்டால் பிறகு கனவிலும் பிற முறைகளில் தட்டச்ச மனம் வராது.
இறுதியாக, மேல்விவரங்களுக்கு:
1999ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டின் பகுதியாக அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் முன்முயற்சியில் இவ்விசைப்பலகை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் அறிய, பிற வலைப்பதிவர்கள் தமிழ்99 விசைப்பலகை அருமை பெருமைகள் பற்றி கூறுவதை படிக்க பின் வரும் தளங்களை பாருங்கள்:
2. கணினியில் தமிழ் தட்டச்சு எப்படி?
3. அனுராக்
5. Voice on Wings.
6. Shortcuts / Syntax that Tamil99 users should know.
7. தமிழ்99 பயனர் வாக்குமூலங்கள் 🙂.
9. தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி ஏடு 1, 2. (pdf)
10. கணிச்சுவடி – எ-கலப்பை நிறுவல், பயன்பாடு, தமிழ்99 பழகுமுறை குறித்து படங்களுடன் கூடிய விரிவான விளக்கம் உள்ள .pdf கோப்பு. ஆக்கம் – சிந்தாநதி.
11. கணினித்திரையில் பார்த்தவாறே தட்டச்சு செய்வதற்கான தமிழ்99 விசைப்பலகை Yahoo widget.
உறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி.
ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம்.
—
பெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு..
”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா.
“எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான்.
—
சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம்.
பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது.
சாதனையா என்ன?
பிழைப்பு !
—
பார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.
அக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.
—
மீந்த பருக்கைகள் தின்ன வரும் குருவிகளுக்கு என் மொழி தெரியாது.
வாரக் கடைசி நண்பர்களுக்கு என் வலி புரியாது.
மது விற்கும் இரவுக்கடைக்காரனுக்கு சிரிக்கத் தெரியாது.
—
என் கண்ணாடி சன்னலின் வழி
காற்றும் மாசும் இரைச்சலும் எப்போதும் வந்தாலும்
ஒருபோதும் வருவதில்லை ஒரு பறவையும்..
—
திருமணம் செய்யலாமா, புது நண்பர் பிடிக்கலாமா – அக்கறையோடு கேட்கும் அக்கா.
ஒரு container நிறைய என்னோடு மனிதர்களை போட்டு அடைத்தால் சரியாகி விடுமா என்ன?
இது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்.
—
வருகிறார்கள். நுழைகிறார்கள். திரை மூடுகிறது. திரை விலகுகிறது. செல்கிறார்கள்.
20 நிமிடங்கள் – 50 ஐரோ மட்டுமே.
”என்ன செய்யலாம்?”
”என்ன வேண்டுமானாலும்..Su** and F***, two positions..”
…
…
ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?
நகர்கிறேன்.
குளிர் நாட்டில் நடுநிசி நாய்களைக் காணோம்.
மனிதர்கள், வண்டிகள், கடைகள் மட்டுமே.
—
இன்னொரு சன்னல். இன்னொரு பெண்.
அதே உரையாடல்.
நகரப் பார்த்தபோது கேட்டாள்:
”யாரும் வருகிற பாட்டை காணோம்… விடியல் வரை கண் முழிக்கணும்…
சும்மானாச்சும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் பேசேன்”?
…
…
என்ன பேசி விட முடியும்?
—
போதை, புகை, மாது, கேளிக்கை, கொண்டாட்டம் நிறைய கிடைக்கிறது.
வாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை.
—
அலைந்த களைப்பில் உறக்கம் வரலாம்.
அப்போதும் யாரும் வரப்போவதில்லை பேசித் தீர்க்க –
எனக்கும் அவளுக்கும் அனைவருக்கும்.
ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அறிய, உருவாக்க ஒரு கலைச்சொல்லாக்கக் குழுமம் உருவாக்கி இருக்கிறோம்.
குழும முகவரி: http://groups.google.com/group/tamil_wiktionary
இக்குழுமத்தின் நோக்கம்: ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களை அறிவது, தேவைப்பட்டால் மேம்படுத்துவது, புதிய கலைச்சொற்களை உருவாக்குவது.
இக்குழுமம் கட்டற்ற தமிழ் அகரமுதலியான விக்சனரிக்குத் துணையாகவும் இயங்குகிறது. இக்குழுமத்தில் அலசி ஆராயப்பட்டு ஓரளவு கருத்தொத்ததாக வரும் சொற்கள் தமிழ் விக்சனரியில் பரிந்துரைகளாகச் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் இவை பொதுப் பயன்பாட்டு வர ஏதுவாகிறது.
இந்தக் குழுமம் மூலம் சொற்களை ஆக்குபவர்கள் – சொற்களைப் பயன்படுத்துபவர்கள் – சொற்களைத் தேடுபவர்களை ஒரே புள்ளியில் இணைத்து, உலகம் முழுமைக்குமான ஒரு தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுமமாக வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.
கட்டற்ற பன்மொழி – தமிழ் – பன்மொழி அகரமுதலி ஒன்றை உருவாக்கும் முயற்சியாக 2004 முதல் தமிழ் விக்சனரி தளம் செயல்படுகிறது. டிசம்பர் 2008 நிலவரப்படி ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான சொற்களுக்கு பொருள் சேர்த்துள்ளோம்.
ஒரு சொல் பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்பது முதலிய குறிப்புகள், ஒரு சொல்லை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள், பலுக்கல் ஒலிக்கோப்புகள், பொருத்தமான படங்கள், அச்சொல்லுக்கான பிற மொழி விக்சனரி இணைப்புகள் ஆகியவை தரப்படுகின்றன.
நீங்கள் அறிய விரும்பும் சொல்லை Googleல் இருந்தே தேடலாம். எடுத்துக்காட்டாக, mosquito ஆங்கிலம் என்று தேடினால் கூகுளில் முதல் பக்கத்திலேயே விக்சனரிக்கான தொடுப்பு இருக்கும். தேடிய சொல் கிடைக்காவிட்டால், அதைச் சேர்க்குமாறு தளத்தில் தெரிவிக்கலாம்.
ஏற்கனவே உள்ள பக்கங்களில் திருத்தங்கள் செய்யலாம். புதிதாக சொற்களைச் சேர்க்கலாம். ஒரு சொல்லின் பொருள் குறித்த ஐயம், ஆலோசனை இருந்தால் கலந்துரையாடலாம். பல பங்களிப்பாளர்களும் தொடர்ந்து தளத்தைக் கவனித்து வருவதால் பிழையான பங்களிப்புகள் உடனடியாக சரி செய்யப்படுவது உறுதி. எவரும் அவர் விரும்பிய வண்ணம் கட்டுப்பாடின்றி பங்களித்துப் பயன்படுத்துவதே விக்சனரியின் சிறப்பு.
சொற்களுக்கான பொருளை நல்ல தமிழில் விளக்குவதால், தமிழில் கலந்துள்ள பிற மொழிச்சொற்களை இனங்காணலாம். கலைச்சொல்லாக்க முயற்சிகளுக்கான களமாகவும் விக்சனரி திகழும். தற்பொழுது ஆங்கிலம் – தமிழ் அகரமுதலியையே கவனிக்கிறோம் என்றாலும், பங்களிப்பாளர் திறன், அறிவைப் பொருத்து தமிழ் உள்ளிட்ட எம்மொழிச் சொல்லுக்கும் தமிழில் பொருள் தரலாம்.
இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் தளத்தின் ஒரத்தில் இட்டு, விக்சனரி பற்றி விளம்ப வேண்டுகிறேன்.