கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்

1. உலாவி – சிறந்த உலாவல் அனுபவம், பாதுகாப்பு, பயன்பாட்டு எளிமை ஆகியவற்றுக்கு Firefox உலாவி பயன்படுத்துங்கள்.

2. Office மென்பொருள் – Open Office பயன்படுத்திப் பார்த்தவர்கள் எதற்கு MS officeஐ போய் வாங்க / திருட வேண்டும் என்று நினைக்கலாம்.

3. ஊடக இயக்கி – VLC media player . குப்பை என்று ஒரு கோப்பு நீட்சி கொடுத்தாலும் வாசித்துக் காட்டி விடும் அற்புத ஊடக இயக்கி.

4. குரல் அரட்டை – skype . குரல் அரட்டைக்கு மிகச் சிறந்த மென்பொருள்.

5. அரட்டை – yahoo, msn, gtalk என்று பல அரட்டைகளங்களிலும் இருப்பவரா? எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்க gaim பயன்படுத்துங்கள். IRC உரையாடலையும் இதில் மேற்கொள்ளலாம்.

6. மின்னஞ்சல் – gmail தவிர வேறொன்றும் பரிந்துரைப்பதில்லை நான். இதில் சில சமயம் புதியவர்களின் மடல்கள் எரிதப்பெட்டிக்குள் (spam folder) போய் விடுகிறது என்பது மட்டும் குறை.

7. இயக்குதளம் – பழங்காலத்து திறன் குறைந்த கணினியை வைத்து windows உடன் போராடுகிறீர்களா? ubuntu லினக்ஸ் இயக்குதளம் பயன்படுத்துங்கள். 2 GB அளவு மட்டுமே இடம் இருந்தால் கூடப் போதும். பாதுகாப்பு, வேகம், பயனெளிமை அதிகம். தவிர, உபுண்டு தமிழிலும் உண்டு !

8. தேடல், தகவல் – தேடுவதற்கு சிறந்தது கூகுள். தேடாமல் சில அடிப்படைத் தகவல்களை அறிய சிறந்தது விக்கிபீடியா. (விக்கிபீடியா தமிழிலும் இருக்கிறது!). ஆங்கிலச் சொற்களுக்கு Dictionary.com

9. பொழுதுபோக்கு – தமிழ்ப் பாடல்கள் கேட்க – ராகா, Music india online, MusicPlug . திருட்டுப் படம் பார்க்க – tamiltorrents 😉

பொதுவாக windows என்ற சின்ன வட்டத்துக்குள் உட்கார்ந்து பார்க்கும்போது கணினி நம்மை கட்டிப் போடுவது போல் இருக்கிறது. ஆனால், திறவூற்று மென்பொருள்களை பயன்படுத்திப் பார்க்கும்போது தான் கணினிப் பயன்பாட்டின் அருமை தெரிய வருகிறது. மேற்கண்டவற்றில், gaim, ubuntu, open office, firefox, vlc எல்லாமே திறவூற்றுக் கட்டற்ற மென்பொருள்கள்.

பொது இடத்தில் முத்தமிடலாமா?

ஒழுங்கு மரியாதையாய்

– ஒரு முறை நான் கேட்ட –

உன் பத்தாம் வகுப்புப் புகைப்படத்தையே தந்திருக்கலாம்.

ஒரு நாளுக்கு ஒரு முறையோ பத்து முறையோ

கட்டிலுக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து பார்ப்பதில்

ஒரு கஷ்டமும் இருந்திருக்காது எனக்கு.

படிய வாரிய கூந்தலுடன்

ரயிலேறும் வரை நிதானித்த அழகிய மௌனமும்

ஆரத்தழுவிய முத்தத்தில் கலைந்திருக்காது.

குட்டிம்மா

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும்.

குட்டிம்மா பதுவிசாய்ப் போவாள்.

எட்டிப் பிடித்து,

இருக்கையில் அமர்ந்து கொள்வாள்.

அவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா”

இவள் சொல்வாள்:

‘ம், அப்படியே shavingம்’

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டுத்தான் போவார்.

குட்டிம்மா என்றால் குறும்பு.

“அண்ணா… Monkey அண்ணா”

கூவிக்கொண்டே வருவாள்

குட்டிம்மா.

பின், என் காதுக்கு மட்டும் சொல்வாள்

“Monkey ன்னா கொரங்கு !

ஒனக்குத் தெரியாதா?”

குட்டிம்மாவை கண்டா

அடிடா ராமா பல்டி !

குட்டிம்மா முன் யாரும்

‘Biscuit’ என்று சொல்லக்கூடாது.

‘Biscuit’ என்றால் அணுக்கரு !

அணுக்கருவை இரண்டாகப் பிளப்பாள் (அதாவது, உடைப்பாள்)

இப்பொழுது “சக்தி பிறக்கிறது” என்பாள்.

நான் “எப்படி?” என்பேன்.

இப்படி:

குட்டிம்மாவின்

வாயில் கொஞ்சமும்

வயிற்றில் கொஞ்சமும்

அணுக்கரு

பிளந்து கட்டிக் கொண்டு இருக்கும்.

குட்டிம்மா என்றால் ஆற்றல் !

என் வேதியியல் புத்தகம்

அவள் மயிலிறகு மெத்தை !

வேதி வினைகள் மறைக்கப் பட்டாலும்

மயிலிறகின் தூக்கம் கெடக்கூடாதாம் !

மகாராணி குட்டிம்மாவின் உத்தரவாம் !

தெரியாத அணுத்தொகையால்

சரியான வினையும் மூச்சுத் திணறும்

குட்டிம்மா வைத்தியம் சொல்வாள்

“அணுவைப் பெருக்கஞ் செய்”

குட்டிம்மா என்றால் ஞானம் !

அவள் நர்த்தனம் புரியும் போதும் புரிந்த பின்னும்

என்னை நான் சிலிர்த்துக் கொள்வேன்.

ஆரத் தழுவி அன்புடன் சொல்வேன்.

“குட்டிம்மா, உனக்குள் ஒளி இருக்கிறது.”

அவள் சிரித்துக் கொண்டே சொல்வாள்.

“ஒளிக்குள் தான் உயிர்கள் இருக்கின்றன.”

குட்டிம்மா என்றால் ஒளி.

குட்டிம்மா

குட்டி குட்டிம்மாவாக

இருந்த காலந் தொட்டே

அவளுக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதும்

எனக்கு இனிப்பு வகைகளும் விருப்பம்.

அவள் இனிப்பு வாங்கி வருவாள்.

எட்ட நின்று காட்டி “கிட்ட வா என்பாள்”

நெருங்குவேன்.

ஓடுவாள்.

“சரி, உன் ஆசை தீர்ந்தது. எங்கே எனக்கு இனிப்பு?”

“அஸ்கு, ஆச தோச அப்பள வடம்.”

குட்டிம்மா என்றால் குழந்தை !

பேரம் பேசும் சுவாரசியத்தில்

சந்தையில்

குட்டிமாவை தொலைத்து விட்டிருந்தேன்.

தூக்கி வளர்த்த தோளும்

தழுவிப் பழகிய மார்பும்

மலர்ந்து மகிழ்ந்த மனமும்

வேரறுந்து போயின.

சேர்ந்து திரிந்த நிஜங்களும்

சேரத் துடிக்கும் கனவுகளும்

சேர்ந்தே என்னைத் துன்புறுத்தும்

தொலைந்து போன குட்டிம்மாவுக்கு

ஒரு கடிதம் எழுதுவேன்.

அன்புள்ள குட்டிம்மாவுக்கு

பெரிய குட்டிம்மா

எழுதும் கடிதம்

………………………….

நீ எங்கு இருக்கிறாய்?


முதலில் http://ravikavithaigal.blogspot.com/2007/02/blog-post_17.html என்ற முகவரியில் பதிப்பிக்கப்பட்டது.

வலைப்பூவா வலைப்பதிவா ?

வலைப்பூ, வலைப்பதிவு – இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொற்களாகப் புழங்குகின்றன. எது நல்ல சொல்?

இந்த இரண்டு சொற்களின் இளகுத் தன்மையையும் பார்ப்போம்.

வலைப்பதிவு

weblog – வலைப்பதிவு

blogger – வலைப்பதிவர்

blogging – வலைப்பதிதல்

blog (வினை) – வலைப்பதி.

blogger circle – பதிவர் வட்டம்.

blog world / blogdom – பதிவுலகம்

videoblog – நிகழ்படப்பதிவு / ஒளிதப் பதிவு

audioblog – ஒலிதப்பதிவு.

வலைப்பூ

weblog – வலைப்பூ

blogger – வலைப்பூக்காரர் ?? 😉

blogging – வலைப்பூத்தல் ?? 😉

blog (வினை) – வலைப்பூ பூ?? 😉

blogger circle – பூ வட்டம்?? 😉

blog world / blogdom – பூவுலகம் ?? பூந்தோட்டம் ??

videoblog – படப்பூ ?? 😉

audioblog – ஒலிப்பூ ?? 😉

புதுச் சொற்களை உருவாக்கும்போது வேர்ச்சொற்களிலிருந்தும் வினை சார்ந்தும் ஒரு சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்து வருவது போலவும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாகவும் தனிச்சொல்லாக இல்லாமல் சொற் தொகுதியாகவும் (word ecosystem) இருக்க வேண்டும் என்று மொழி அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வலைப்பூ என்ற சொல்லில் உள்ள பெரிய குறை, வலை என்கிற முன்னொட்டை விட்டு விட்டு அதனால் செயல்பட முடியாது. தனித்து, பூ என்ற சொல்லை மட்டும் வைத்து சுருக்கமாக இந்த நுட்பம் குறித்து பேச முடியாது. வலைப்பூ என்பது தமிழ்மணம், தேன்கூடு என்று பூ சார்ந்த பெயர்களில் தளப்பெயர்கள் அமையத் தான் வழி வகுக்குமே தவிர வலைப்பதிவு நுட்பத்தை விவாதிக்க உதவாது.

வலைப்பதிவு என்பது வலுவான சொல்லாகத் தெரிகிறது.

இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)

ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில்.

அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி

அடைந்து கிடக்கும் என் அறையில்,

இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை.

சாப்பிட்டாயா என்று.



பட உதவி: LynGi
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0