வெட்டிப் பேச்சு வேண்டாம்.
“என் Tiffin Boxல் தயிறும் ஊறுகாயும்;
உன்னிடம் என்ன?”
என்றதெல்லாம் போதும்!
வேண்டுமானால் கேள்.
கடைசியாக சாப்பிட்ட தேதி சொல்கிறேன்.
“உன் தங்கை அப்படியா,
என் தம்பி இப்படியதாக்கும்..”
என்றதெல்லாம் போதும்!
இப்பொழுது அவர்கள் கூட
இந்தப் பேச்சை தாண்டிவிட்டார்கள்.
“சும்மா, ஒன்னுமில்லை, ம்ஹூம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை என்னிடம் –
ஈரிதழால் பேச.
மேலே கொஞ்சம் கீழே கொஞ்சம்
பார்த்து மருகிப் பின் “அப்புறம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை உன்னிடம் –
பார்வையால் பருக.
கிளம்பிப் போய்த் திரும்ப வந்து
Hairpin இத்யாதிகள் எடுத்துக்கொண்டு
“மறந்தே போய்ட்டேண்டா”
என்றதெல்லாம் போதும்!
எத்தனை நாட்கள் சேகரிப்பது?
உன் நினைவுகளையும் வாசத்தையும் மட்டும்.
நீ எப்படி இங்கு வந்தாய்
நான் எப்படி இங்கு வந்தேன்
என்றதெல்லாம் போதும்!
ஒன்றாய் எங்கு போகலாம்?
“அடுத்து எப்போ பார்க்கலாம்?”
“தெரியலையே, Let’s see”
என்றதெல்லாம் போதும்!
இன்றிரவு இரண்டு மணிக்கு
கனவில் சந்திப்போம்.
உனக்கு என்ன பிடிக்கும்
எனக்கு இன்னின்ன பிடிக்கும்
என்றதெல்லாம் போதும்!
எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
அவ்வளவு தான்.