எங்க ஊர் அம்மாபட்டில உள்ள அபத்தா, அப்பச்சிகளுக்கும் புரியிற மாதிரி நான் மேற்படிப்பு படிக்கணும்னா, பல் doctor, மனுச doctor, மாட்டு doctor, வீடு கட்டுற engineer, current விடுற engineerனு ஒரு சில படிப்புகள் தான் இருக்கு 😉 ஆனா, நான் எடுத்த படிப்புக்கள் எல்லாம் Industrial Biotechnology, Industrial Ecology, Sustainability-னு படிச்சவங்களுக்கே விளக்க வேண்டியதா இருக்கு.
நான் என்ன படிக்கிறேன்னு பிறருக்கு சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள விரும்பும் அக்கா, தங்கைக்காகவும் bore அடித்தால் “What’s ur research abt buddy?”னு 108வது முறையாக கேட்டுக் கடுப்பேற்றும் உயிர்த் தோழர்களுக்காகவும் (!) என் ஆய்வு எதைக் குறித்துன்னு விளக்கக் கடமைப்பட்டிருக்கேன்.
தொழில்சார் உயிரித் தொழில்நுட்ப விளைபொருட்களின் பேணியலுகை ஆய்வு (Sustainability analysis of Industrial Biotechnology Products)
– இது தான் என் ஆய்வுப் படிப்புக்காக நான் எடுத்திருக்கிற தலைப்பு !
(கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன் 😉 )
மனித வரலாறு நெடுகிலும் ஆடை, தளபாடங்கள், வீடு போன்ற நம் தேவைகளை நிறைவு செய்ய மரம், செடி, கொடிகளையும் அவற்றின் விளைபொருட்களையும் சார்ந்திருந்தோம். எடுத்துக்காட்டுக்கு, ஆடை நெய்ய பருத்தியைச் சார்ந்து இருந்தோம்.
19ஆம் நூற்றாண்டில் தான் தொல் நெய் வளத்தைக் கண்டறிந்தோம். அதற்குப் பிறகு எரிமம் தொடங்கி ஆடை, தளபாடங்கள், வேதிகள் என்று பல பொருட்களையும் தொல் நெய்யை மூலப்பொருளாகக் கொண்டு உருவாக்கத் தொடங்கினோம். எடுத்துக்காட்டுக்கு, பருத்திக்குப் பதில் Polyester கொண்டு ஆடைகள் உருவாக்கினோம். தொல் நெய் வழி உருவான பொருட்களின் விலை குறைவு, பயன், நீடித்த தரம், உருவாக்கு எளிமை, விளைபொருட் பல்வகைமை ஆகியவற்றின் காரணமாக தொல் நெய் வழிப் பொருட்களின் மீதான சார்பு நிலை கூடிக் கொண்டே வருகிறது.
எனினும் தொல் நெய் வளங்கள் நீடித்திருப்பவை அல்ல. 2050 வாக்கில் இவற்றின் கிடைப்பு அருகி விடும். கிடைப்பு குறையக் குறைய இவற்றுக்கான விலை உயரும். மூலப் பொருள் விலை உயர்வால், இதன் வழி உருவாக்கப்படும் பிற பொருட்களின் விற்பனை விலை கட்டுபடியாகாது. எனவே, தொல் நெய்க்கு மாற்றாக ஒரு மூலப் பொருள் தேவைப்படுகிறது. எரிமம், ஆற்றல் போன்ற துறைகளில் இந்த மாற்று மூலப்பொருளுக்கான தேவை மிகக் கூடுதலாகவும் உடனடியாகவும் உணரப்படுகிறது. சூரிய ஆற்றல், காற்றாற்றல், நீராற்றல், எரிமக் கலங்கள், ஹைட்ரஜன் என்று மாற்று ஆற்றல் மூலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யக்கூடும் என்றாலும், தொல் நெய் தரும் எண்ணற்ற வேதிகளை உருவாக்குவதற்கு ஒரு மாற்று மூலப் பொருள் தேவை.
இந்த இடத்தில் நுட்ப வரலாறு ஒரு வட்டம் அடிக்கிறது !
தொல் நெய்யின் கண்டுபிடிப்புக்கு முன் நம் தேவைகளை மரம், செடிகளை கொண்டு தானே நிறைவு செய்தோம்! அதே போல் இப்பொழுதும் பெரும்பாலான நம் நவீன உலகத் தேவைகளை உயிர் மூலப் பொருட்களைக் கொண்டே நிறைவு செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு, சோளத்தில் இருந்து நெகிழி உருவாக்க முடியும். கரும்பில் இருந்து உயிர் எத்தனால் என்ற எரிம நெய்யை உருவாக்க முடியும். இவற்றை செய்து முடிப்பதற்குத் தோதாக, உயிரித் தொழில்நுட்பமும் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.
ஆக, தொல் நெய்க்கு மாற்றாக உயிர் மூலப் பொருட்களும் அவற்றை செய்து முடிக்க உயிரித் தொழில்நுட்பமும் இருக்கிறது. தொல் நெய் வழிப் பொருட்களுடன் போட்டியிடும் அளவுக்கோ அதை விட மேம்பட்ட தரத்திலோ கூட இவ்வுயிர்வழிப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில், சில சமயம், விலை கட்டுபடியாகாவிட்டாலும் கூட இவற்றை சந்தைப்படுத்த பெரும்பாலான அரசுகள் மானியங்கள் தருகின்றன.
ஏன்?
தொல் நெய்யை நிலத்தில் இருந்து எடுத்தல், அவற்றைப் பகுத்தல், தொல் நெய் வழிப் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு என்று வழி நெடுகிலும் ஏராளமான காரணிகள் சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, கல்நெய்ப் பயன்பாட்டால் வாகனப் புகை வருகிறது. புகையால் உடல் நலம் கெடுகிறது. உலகளாவிய எரிம நெய் எரிப்பால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு உயர்கிறது. இதனால் உலக வெப்பநிலை அதிகரிக்கிறது. உலக வெப்பநிலை அதிகரித்தால் கடல் நிலை உயரும். கடல் நிலை உயர்ந்தால் நாடுகள் மூழ்கும்.
நாடுகள் மூழ்கினால் யாரும் வலைப்பதிய முடியாது என்ற அபாயத்தை உணர்ந்த உலக நாடுகள் அனைத்தும் கூடி, தொல் நெய் மீதான சார்பு நிலையையும், அதன் வழியாக உலக வெப்பமாதலையும் குறைப்பது என்று உறுதி பூண்டார்கள். அதற்கு உதவியாக உயிர் மூலப் பொருட்கள் வழி உற்பத்தி, அவற்றின் மீதான ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு மானியங்கள், நிதி ஒதுக்குகிறார்கள்.
சரி, உயிர் மூலப் பொருட்களும், உயிரித் தொழில் நுட்பமும் இருக்கிறது. அரசு, நிறுவன ஆதரவும் இருக்கிறது. இனி எல்லாம் சுகம் தானே !
– என்று மகிழ முடியாது.
ஏனெனில், உயிர்மூலப் பொருட்கள் வழி உற்பத்தியிலும் 1007 பிரச்சினைகள் இருக்கின்றன!
என்றாலும், பிரச்சினைகள் இருப்பது நல்லதே!
இல்லாவிட்டால் எனக்கு இந்த PhD படிப்புக்கான வாய்ப்பு கிடைத்திருக்காது 😉
(தொடரும்..)
—
அருஞ்சொற்பொருள்:
1. தளபாடம் – Furniture
2. தொல் நெய் – Fossil Oil
3. எரிமம் – Fuel
4. வேதி – Chemical.
5. எரிமக் கலம் – Fuel Cell
6. நெகிழி – Plastic
7. உயிர் எத்தனால் – BioEthanol
8. உயிர்வழிப் பொருட்கள் – Bio Products
9. கல் நெய் – Petrol