ஒ௫ என்கிற ஒ5

ஒரு கண் சோதனை 🙂

ரு

ரு – இது ர + உ = ரு (குறில்)

ரூ

ரூ – இது ர + ஊ = ரூ (நெடில்)

அப்படி என்றால் கீழே காண்பவை என்ன?

௫ – இது எண் 5 -ஐக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு (பார்க்க – தமிழ் எண்கள் ). இதனைக் குறில் ரு என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. ஒ௫ என்று எழுதினால் ஒ5 என்று தான் பொருள். அப்படித் தான் கணினியும் புரிந்து கொள்ளும். நீங்கள் ஒ௫ என்று எழுதிவிட்டு ஒரு என்று தேடினால் கணினிக்குத் தெரியாது.

௹ – உரூபாயைக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு. இதனை நெடில் ரூ என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. உயிரூட்டம் என்று எழுதுவதும் உயி௹ட்டம் என்று எழுதுவதும் வேறு வேறு. பார்க்க ஒரே மாதிரி தோற்றம் தானே, விரைவாக எழுதலாம் என்று எண்ணி இவ்வாறு எழுதாதீர்கள்.

ஏன் இவ்வளவும் சொல்கிறேன் என்றால்,

ஒ௫ என்று கூகுளில் தேடினால் 6800+ முடிவுகள் வருகின்றன. இது ஒரு சொல்லில் மட்டும் காணும் பிழை. இது போல் தமிழில் ரு வருகிற எத்தனை இடங்களை பிழையாக எழுதித் தள்ளி இருக்கிறோம் என்று தெரியவில்லை 🙁

பின்வரும் விசைப்பலகையைப் பாருங்கள்.

tamil-mobile-keyboard-1

ஃ தவிர்த்த மற்ற அனைத்து தமிழ் எழுத்துகளையும் இந்தப் பலகையில் இருந்தே எழுதலாம். எழுத வேண்டும்.

ஃ என்னும் ஆய்த எழுத்து, தமிழ் எண்கள், கிரந்த எழுத்துகள், பஞ்சாங்கம் / வணிகம் முதலியவற்றுக்கான சிறப்புக் குறியீடுகள் தேவைப்படும் போது மட்டும் SHIFT விசை அழுத்தி கீழே காணும் பலகையைப் பயன்படுத்துங்கள்.

tamil-mobile-keyboard-2

இதே போல், தமிழ் எண்கள் வரிசையில் வருகிற

௧ ௨ ௭ ௮ ௰

போன்ற தமிழ் எழுத்துகளை ஒத்த குறியீடுகளை எழுத்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தாதீர்கள். எழுத்து வேறு. குறியீடு வேறு. கணினிக்குப் புரியாது. தேடினால் கிடைக்காது.

குறிப்பாக, செல்லினம், அதனை ஒத்த மென்பொருள் தளக்கோலங்கள், ஆப்பிளின் iOS இயக்குதள கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் இதனைக் கவனிக்கவும். இது போல் வேறு சிறப்புக் குறியீடுகளைத் தவறுதலாக யாரேனும் பயன்படுத்தினால் இங்கு சுட்டிக் காட்டுங்கள். நன்றி.

தமிழ் உரையாடல்

இற்றை:

இம்முயற்சி தொடர்பான தகவல் http://tamilirc.wordpress.com/ தளத்தில் தொடர்ந்து வெளிவரும்.

செப்டம்பர் மாத உரையாடலின் படி இங்கு உள்ளது.

தமிழ் மொழி வளர வேண்டும் என்று பலர் உழைக்கிறார்கள். இவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல், என்ன செய்கிறார்கள் என்று மற்றவர் அறியாமல் இருக்கிறார்கள். அதே வேளை, தமிழ் ஆர்வம் உடைய பலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக ஓர் உரையாடலை முன்னெடுக்க விரும்புகிறேன். இது தங்கள் எண்ணங்கள், செயற்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து தங்கள் முன்னேற்றங்களை அறியத் தரும் வளர்முகக் களமாக இருக்கும்.

இன்று இரவு (செப்டம்பர் 16, 2014) 9 மணிக்கு

http://webchat.freenode.net/

வாருங்கள்.

irc-demo

Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.

Channels என்பதில் tamilirc என்று தாருங்கள்.

படத்தில் காணும் எண்ணை அதன் கீழ் உள்ள புலத்தில் இட்ட பிறகு Connect பொத்தானை அழுத்துங்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.

சரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.

மற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.

நன்றி.

Test of Tamil as a foreign language

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக கன்னடத்தை அறிவித்தால் கன்னடர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? கன்னடர்களுக்குத் தான் நல்லது.

இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக வங்க மொழியை அறிவித்தால் வங்காளிகளுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா? வங்காளிகளுக்குத் தான் நல்லது.

இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக இந்தியை அறிவித்தால் இந்திக்காரர்களுக்கு நல்லதா மற்ற மொழிக்காரர்களுக்கு நல்லதா?

இந்திக்காரர்களுக்குத் தான் நல்லது.

எனவே, இந்தி தொடர்பு மொழி ஆனால் மட்டும் இந்தியா ஒன்றுபடும், வளரும், தமிழனுக்கு நல்லது, வேலை வாய்ப்பு கூடும் என்பது எல்லாம் இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கான திட்டமிட்ட கட்டுக் கதை.

என்னதான் பள்ளிக்கூடத்தில் இந்தி சொல்லித் தந்தாலும் இந்தி பிரச்சார சபைகளில் போய் படித்தாலும் தாய்மொழியாக இந்தியைக் கொண்டுள்ளவர்களோடு மற்ற மொழிக்காரர்களால் போட்டி போட முடியாது.

LKG முதற்கொண்டு ஆங்கில வழியத்தில் எல்லா பாடங்களையும் படித்த பின்னும், தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஆங்கிலம் நிறைந்திருந்தாலும், இன்னும் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்று விழிபிதுங்கும் இன்றைய தலைமுறையே இதற்கு சாட்சி.

ஆகவே, இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வாதத்தை விட்டு விடுவோம். இது 1960களில் வங்கிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் ஏதாவது குமாசுத்தா வேலையை இலட்சியமாக கொண்டு வளர்க்கப்பட்ட தலைமுறையின் மனநிலை. இன்று பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அடிமட்ட வேலை முதல் உயர்நுட்ப வேலைகள் வரை செய்வதற்காக குவியும் காலத்துக்குப் பொருந்தாது.

அனைவரும் இந்தியைப் படிக்க வைப்பது எதற்கு உதவும் என்றால் காலப்போக்கில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி இன்னும் வெகு தீவிரமாக இந்தித் திணிப்பை நியாயப்படுத்துவதற்கே உதவும்.

இந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்கள் 26% மட்டும் இருக்கும் போது அதனை 45% ஆக எப்படித் திருக்கிறார்கள் என்று இங்கு பாருங்கள்:

http://scroll.in/article/667570/read-the-fine-print-hindi-is-the-mother-tongue-of-only-26-of-indians.

நாடு முழுக்க இந்தி படிக்க வைத்து விட்டால், இரண்டாம் மொழியாக இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 100% என்று கணக்கு காட்டி மொத்தமாக “இந்தி”யாவாக மாற்றி விடலாம்.

சரி, இதே போல் இந்தியாவின் தேசிய மொழி / இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்வதால் ஆங்கிலம் பேசும் மேலை நாட்டவர்களுக்கு நல்லதா என்று கேட்டால்…

ஆம், நாம் ஆங்கிலம் பேசுவதால் மேலை நாட்டவர்களுக்கு நல்லது தான். அவர்கள் பொருட்களை இங்கு விற்கவும், குறைவான செலவில் நம்முடைய மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும். நாம் இதனை ஏற்றுமதி / இறக்குமதி, வணிகம், சேவைத் துறை, அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு / வேலை என்று நமக்கு வசதியான பெயர்களில் சொல்லிக் கொண்டாலும், இது தான் உண்மை.

சரி, அப்ப வெளிநாட்டுக்காரனுக்குப் பயன்படக்கூடிய ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் இந்தியை ஏற்றுக் கொள்ளக்கூடாது?

ஏன் என்றால்,

1. இன்று வெளிநாட்டுக்காரர்கள் சட்டம் போட்டா நம்மை அடிமை ஆட்சி செய்தோ நம் மீது ஆங்கிலத்தைத் திணிக்கவில்லை. எது உலகப் பொது மொழியாக இருக்கிறது என்பது காலத்துக்கு காலம் மாறி வருகிறது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு கோலோச்சியது. இப்பொழுது ஆங்கிலம். அடுத்து சீனம் வரலாம் என்றும், இல்லை, ஆங்கிலமும் செல்வாக்கை இழந்து, நுட்பத்தின் வசதியால் பல மொழிகள் ஊடாடுவது இலகுவாகும் என்றும் கூறுகிறார்கள். Nicholas Ostler எழுதிய The Last Lingua Franca: English Until the Return of Babel படியுங்கள்.

அதே போல் இந்தியும் தன் இயல்பான வலுவால் இந்தியாவின் தொடர்பு மொழியாக மாறினால் அது வேறு விசயம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டாட்சி முறையில் இயங்குகிற இந்திய அரசு மற்ற பல மொழிகளை இரண்டாந்தரமாக வைத்து இந்தியை மட்டும் வளர்ப்பதும் திணிப்பதும் தவறு.

2. இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை. ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு.

எனவே,

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று.
இது தான் நிலையான தீர்வாக இருக்கும்.

இன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான். வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை. அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான். அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்.

உள்ளூர் மொழிகளை வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்.

அப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சி தமிழை வளர்க்க போராடத் தேவையில்லை.

ஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுமையான தமிழ்ப் பெயர்கள் போட்டி

இற்றை:போட்டிக் காலம் முடிந்தது. சூன் 7 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்தும் புதிய பெயர்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அவை peyar.in தளத்தில் தொகுத்து வைக்கப்படும். நன்றி.

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது குறைந்து வருகிறது. யாரும் தமிழில் பெயர் வைக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டுவது இல்லை என்றாலும், தமிழ்ப் பெயர்கள் என்றாலே பழமையானவை, பாமரத்தனமானவை என்ற பிழையான பொதுக் கருத்து நிலவுகிறது. தமிழில் பெயர் வைக்கிறோம் என்று நினைப்பவர்கள் கூட பிறமொழி மூலம் உள்ள பெயர்களை வைத்து விடுகிறார்கள். எனவே, தமிழ்ப் பெயர்களைச் சூட்டும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் போட்டியை அறிவிக்கிறோம்.

குழந்தைகளுக்குச் சூட்டுவதற்கு புதுமையான தமிழ்ப் பெயர்கள் தேவை.

மொத்தப் பரிசு: இந்திய ரூபாய் 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்.

போட்டி நடைபெறும் காலம்: ஏப்ரல் 20, 2013 முதல் மே 20, 2013 வரை.

பெயர்களை எப்படித் தெரிவிப்பது?: கீழே உள்ள மறுமொழிப் பெட்டியில் தெரிவியுங்கள்.

விதிகள்:

* பெயர்கள் / பெயரின் மூலச் சொற்கள் தூய தமிழாக இருக்க வேண்டும். இலக்கியங்கள் / அகரமுதலிகளில் இருந்து மேற்கோள் தர முடிந்தால் கூடுதல் புள்ளிகள்.

* பெயர்கள் புதுமையாக இருக்க வேண்டும்.

* கிரந்த எழுத்துகள் உள்ள பெயர்கள், வட மொழியா பிற மொழியா தமிழ் மொழியா என்று குழப்பும் மூலச் சொற்களை உடைய பெயர்களைப் போட்டியில் சேர்க்க இயலாது.

* ஒருவர் எத்தனைப் பெயர்களை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்டவர் பரிந்துரைத்திருந்தால், முதலில் பரிந்துரைத்தவர் மட்டுமே போட்டிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்.

* சிறந்த பெயர்கள் நடுவர் குழு மூலமாகவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.

* விதிகளுக்குப் பொருந்தாத பெயர்கள் உடனுக்குடன் நீக்கப்படும். போட்டி விதிகளுக்கு உட்பட்டு வரும் அனைத்துப் பெயர்களும் peyar.in தளத்தில் சேர்க்கப்படும்.

பி. கு. – பரிசுத் தொகை / புத்தகங்களை அளிக்க புரவலர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 🙂

தமிழ் ஆவண மாநாடு, கொழும்பு – ஏப்ரல் 27, 28

வரும் ஏப்ரல் 27, 28 தேதிகளில் கொழும்பில் தமிழ் ஆவண மாநாடு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ல் கொழும்பிலும், ஏப்ரல் 29ல் வவுனியாவிலும் ஒரு விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு ஏப்ரல் இறுதி வாரம் இலங்கைக்குச் செல்கிறேன். தமிழ், விக்கிப்பீடியா ஆகியவற்றில் ஆர்வம் உள்ள நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து இலங்கை சென்று வருவது எளிது. இலங்கையில் இறங்கிய பிறகு விசா பெற்றுக் கொள்ளலாம். முயன்று பாருங்களேன் !