ஒ௫ என்கிற ஒ5

ஒரு கண் சோதனை 🙂

ரு

ரு – இது ர + உ = ரு (குறில்)

ரூ

ரூ – இது ர + ஊ = ரூ (நெடில்)

அப்படி என்றால் கீழே காண்பவை என்ன?

௫ – இது எண் 5 -ஐக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு (பார்க்க – தமிழ் எண்கள் ). இதனைக் குறில் ரு என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. ஒ௫ என்று எழுதினால் ஒ5 என்று தான் பொருள். அப்படித் தான் கணினியும் புரிந்து கொள்ளும். நீங்கள் ஒ௫ என்று எழுதிவிட்டு ஒரு என்று தேடினால் கணினிக்குத் தெரியாது.

௹ – உரூபாயைக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு. இதனை நெடில் ரூ என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. உயிரூட்டம் என்று எழுதுவதும் உயி௹ட்டம் என்று எழுதுவதும் வேறு வேறு. பார்க்க ஒரே மாதிரி தோற்றம் தானே, விரைவாக எழுதலாம் என்று எண்ணி இவ்வாறு எழுதாதீர்கள்.

ஏன் இவ்வளவும் சொல்கிறேன் என்றால்,

ஒ௫ என்று கூகுளில் தேடினால் 6800+ முடிவுகள் வருகின்றன. இது ஒரு சொல்லில் மட்டும் காணும் பிழை. இது போல் தமிழில் ரு வருகிற எத்தனை இடங்களை பிழையாக எழுதித் தள்ளி இருக்கிறோம் என்று தெரியவில்லை 🙁

பின்வரும் விசைப்பலகையைப் பாருங்கள்.

tamil-mobile-keyboard-1

ஃ தவிர்த்த மற்ற அனைத்து தமிழ் எழுத்துகளையும் இந்தப் பலகையில் இருந்தே எழுதலாம். எழுத வேண்டும்.

ஃ என்னும் ஆய்த எழுத்து, தமிழ் எண்கள், கிரந்த எழுத்துகள், பஞ்சாங்கம் / வணிகம் முதலியவற்றுக்கான சிறப்புக் குறியீடுகள் தேவைப்படும் போது மட்டும் SHIFT விசை அழுத்தி கீழே காணும் பலகையைப் பயன்படுத்துங்கள்.

tamil-mobile-keyboard-2

இதே போல், தமிழ் எண்கள் வரிசையில் வருகிற

௧ ௨ ௭ ௮ ௰

போன்ற தமிழ் எழுத்துகளை ஒத்த குறியீடுகளை எழுத்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தாதீர்கள். எழுத்து வேறு. குறியீடு வேறு. கணினிக்குப் புரியாது. தேடினால் கிடைக்காது.

குறிப்பாக, செல்லினம், அதனை ஒத்த மென்பொருள் தளக்கோலங்கள், ஆப்பிளின் iOS இயக்குதள கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் இதனைக் கவனிக்கவும். இது போல் வேறு சிறப்புக் குறியீடுகளைத் தவறுதலாக யாரேனும் பயன்படுத்தினால் இங்கு சுட்டிக் காட்டுங்கள். நன்றி.


Comments

6 responses to “ஒ௫ என்கிற ஒ5”

  1. ஜார்ஜ் Avatar
    ஜார்ஜ்

    நன்றி இரவி…

  2. ஒ/ஓகாரத்திலும் சில தட்டச்சு இடைமுகங்களில் தவறாகப் பயன்படுத்துகிறோம். க + ஒ என்பதற்குப் பதிலாக க + எ + அ என்று எழுதுகிறோம். கூகிளில் இவ்வாறு தேடும்போது சுயமாகத் திருத்தி சரியாகப் புரிந்துகொள்கிறது. ஆனால் இவ்வாறு எழுதியவற்றைப் புரிந்து கொள்வதில்லை உதா: கொள்கை கொள்கை

  3. நன்றி…

    தொடருங்கள்… இன்னும் அறிந்து கொள்கிறோம்…

  4. அடடே! ரொம்ப நாளாச்சு! இனி கணிப்பொறிக்குப் புரியும்படி தான் மொழிகளை வளர்க்க வேண்டும்.

  5. puthiya seythi…nandri……bloggers meet ku avasiyam varungal..

  6. தலைப்புக்கே இப்போதான் எனக்கு அர்த்தம் புரிகிறது!!! என் குருவி மூளைக்கு கனமான கருப்பொருளாகவும், ஆனால் புரிந்துகொள்ள எளிய நடையிலும் கூறியிருக்கிறீர்கள் ரவி சார்!! மிக்க நன்றி!!
    ** இது போல் வேறு சிறப்புக் குறியீடுகளைத் தவறுதலாக யாரேனும் பயன்படுத்தினால் இங்கு சுட்டிக் காட்டுங்கள்.** அந்த அளவுக்கு நான் அப்பாட்டக்கர் இல்லைங்க:)