பொள்ளாச்சி நசன். தமிழம் வலைத்தளத்தில் பல அரிய தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து வருகிறார். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசு கல்விக் கொள்கை வகுக்கும் அமைப்புகளில் பல பொறுப்புகள் வகித்து உள்ளார். இயல்பாகவே, புத்தக ஆர்வம் உள்ளவர் நூலகம் திட்ட கோபியின் தூண்டுதலால் தம்மிடம் இருந்த தமிழ் நூல்களை மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கினார். இவரின் முயற்சியைப் பார்த்து உலகின் பல பகுதிகளில் உள்ளோரும் தங்களிடம் உள்ள பழைய நூல்களை மின்னூலாக்கத் தருகிறார்கள்.
அவருடன் பேசியதில் இருந்து:
* 15,000 ரூபாய் மதிப்புள்ள வருடி (scanner) கொண்டு செயல்பட்ட போது மின்னூலாக்கம் அவ்வளவு தரமாக இல்லை. அல்லது, தேவையில்லாமல் கூடுதல் தரமாக இருக்கிறது 🙂 கோபியின் ஆலோசனைக்கு ஏற்ப 2,000 ரூபாய் மதிப்புள்ள வருடிகளில் செயல்படுவது இலகுவாக இருக்கிறது. இவற்றின் நுணுக்கம் குறைவாக இருப்பதால் பழைய நூல்களில் உள்ள தேவையற்ற அழுக்குகள், எழுத்துகள் அல்லா புள்ளிகளை மின்னுருவாக்குவதில்லை 🙂
* பொதுவாக மிகவும் பழைய நூல்களையே முன்னுரிமை கொடுத்து மின்னூலாக்குவதால் காப்புரிமை பிரச்சினை இல்லை. அண்மைக்கால எழுத்துகளுக்கு அவற்றின் ஆசிரியர்கள், அவர்களின் பிள்ளைகளிடம் ஒப்புதல் பெற்றே மின்னூலாக்குகிறார். நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களுக்குக் கூட ஒப்புதல் பெற்றே நூலாக்குவதே எழுத்தாளர்களுக்குத் தரும் மரியாதை என்கிறார். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய அரிய நூல்களையே முன்னுரிமை கொடுத்து மின்னூலாக்குகிறார். அச்சில் வராமல் நின்று போன பல சிற்றிதழ்களின் நிறுவனர்கள் மின்னூலாகக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
* ஒரு இடத்தில் கூட இந்த மின்னூலாக்கத் திட்டத்துக்குப் பணம் ஒரு தேவை என்பது போலவே சொல்லவில்லை. அவரவரிடம் இருக்கும் பழைய தமிழ் நூல்களை அனுப்பி வைத்தால் உதவும் என்றார். பணம் கொடுத்து பணிக்கு ஆள் அமர்த்தி இத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என நம்பவில்லை என்கிறார். உண்மையிலேயே ஆர்வத்துடன் யாராவது முன்வந்தால் அவர்களுக்கு மின்னூலாக்கம் பற்றிய பயிற்சி அளிப்பதோடு அவர்கள் வீட்டுக்கே நூல்களை அஞ்சல் வழியில் அனுப்பி வைத்துத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகச் சொன்னார்.
* பொதுவாக, தமிழ் / சமூக ஆர்வத் துறையில் இயங்கும் எவரையும் எளிதில் தொடர்பு கொள்ளலாம். ஆனால், இவரை மின்மடல் / தொலைப்பேசி மூலமோ நேரிலோ அவ்வளவு இலகுவாகத் தொடர்பு கொள்ள முடியாது என்று பல நண்பர்கள் கூறினார்கள். நானே, பேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் தந்த பழைய தமிழ் நூல்களை அவரிடம் ஒப்படைத்ததன் காரணமாகச் சந்திக்க முடிந்தது. இவ்வாறான தொடர்புகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் தான் ஒவ்வொரு நாளும் மின்னூலாக்கத்துக்குச் செலவிடும் நேரத்தைக் கூட்டலாம் என்கிறார்.
* ஒவ்வொரு நாளும் 8 மணி நேரத்துக்கு மேல் தனி ஆளாக, பக்கம் பக்கமாக மின்னூலாக்கி வலையில் ஏற்றிக் கொண்டிருக்கிறார். தன் காலம் முடிவதற்குள் எப்படியும் தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களை மின்னூலாக்கி விடுவேன் என்று வெறியுடன் சொன்ன போது, எனக்குப் பொறி கலங்கிப் போனது. இப்படியும் கூட ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்கள் இருப்பார்களா !! ஆனால், அதே வேளை பல உயரிய பொறுப்புகளில் இருந்து பலருக்கு வழிகாட்டக்கூடிய உழைப்பும் உடல்நலமும் இது போன்ற பணியில் வீணாகிறதே என்ற கவலையும் எழுந்தது. நூலகம் திட்டம் போல் முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால், அமைப்பாக அல்லாமல், யாரையும் எதிர்பார்க்காமல் தனித்து இயங்குவதன் மூலம் வேகமாகச் செயல்பட முடிகிறது என்கிறார்.
பார்க்க: பொள்ளாச்சி நசன் பற்றி லக்கிலுக்.
Comments
2 responses to “பொள்ளாச்சி நசன்”
இரவி, நெடுநாட்களாக இவரது பணியை மட்டும் பார்த்து வியந்திருக்கிறோம். முதன் முதலாக அந்த நபரையும், அவர் பணிபுரியும் முறையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. உண்மையாகவே பொறி கலங்கிவிடக்கூடிய பணி தான்.
[…] ரவி […]