தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு இரத்து சரியா?

எண்ணற்ற நுழைவுத் தேர்வுகள், அவற்றுக்காகத் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுக்க வேண்டியிருப்பது அனைத்து மாணவர்களுக்கும் உளைச்சலைத் தருவதும், கிராமப்புற மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பதும் உண்மைதான். எனவே நுழைவுத் தேர்வுகளை மொத்தமாக இரத்து செய்வது எளிமையான, நேரடியான, அனைவராலும் மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகத் தெரியலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இது பள்ளிக் கல்வித் தரத்தையும், தலைசிறந்த தொழிற்கல்விக்ககூடங்களில் நுழையும் மாணவர்களின் தரத்தையும் பாதிக்கும் என்பது உறுதி.

தற்பொழுது உள்ள மாநிலப் பள்ளி பாடத்திட்டமும் பொதுத் தேர்வு முறையும் தேர்வுத்தாள்கள் திருத்தப்படும் முறையும் எந்த விதத்திலும் மாணவர்களின் புரிந்துணர் திறனை வளர்ப்பதாக இல்லை. ஆகையால் நகரம், கிராம வேறுபாடின்றி அனைத்து பள்ளிகளிலும் பாடங்களை உருப்போட ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கூட சொல்லலாம். நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்தால், தன்னார்வம் இல்லாத பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மனனம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடும். சரியாகப் பாடம் சொல்லித் தரத் தெரியாத ஆசிரியர்களுக்கும் இது வசதியாகப் போய்விடும். கடைசியில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவதில் தான் போய் முடியும்.

கிராமப் புற மாணவர்களால் போட்டியிட முடியவில்லை என்று மேம்போக்காக இந்த நுழைவுத்தேர்வு விடயத்தை நோக்கக்கூடாது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாகவும் உண்மையாகக் கடமையாற்றுபவர்களாகவும் இருந்தால் அந்த மாணவர்களாலும் நுழைவுத் தேர்வுகளில் திறம்பட போட்டியிட முடியுமே! அப்படி திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதின் மூலமும் அவர்கள் OP அடிக்காமல் பணியாற்றுகிறார்களா என்று கண்காணிப்பதின் மூலமும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முடியுமே! அதை விடுத்து தேர்வுகளையே இரத்து செய்வது மீன் பிடிக்கக் கற்றுத் தராமல், தினமும் இலவசமாக மீன் தருவது போல் இருக்கிறது. இந்த மாணவர்களை மேலும் மந்தமடையச்செய்வதில் தான் போய் முடியும்.

நுழைவுத் தேர்வு பயிற்சிக்கூடங்கள் பெரும் பணம் கறக்கின்றன என்பதும் அவற்றில் பிள்ளைகளை சேர்த்துப் படிக்க வைப்பது பெற்றோருக்குப் பணச்சுமையைத் தருவதும் உண்மை தான். ஆனால் இம்மாதிரியான பயிற்சிக்கூடங்கள் திறன் வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படுவதும் அவர்கள் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லித் தராமல் நுழைத்தேர்வுப் பயிற்சிகளில் சேர மாணவர்களைத் தூண்டுவதும் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும் கவனிக்கத்தக்கது. இம்மாதிரி ஆசிரியர்களை வாங்கும் ஊதியத்திற்கு உண்மையாக உழைக்கச்செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது? நுழைவுத் தேர்வு இரத்து ஆனாலும் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி ஆசிரியர்கள் பணம் பண்ணுவதை தடுக்க அரசு முனையாதது ஏன்?

நுழைவுத் தேர்வு இரத்து மூலம் இன்னொரு முக்கியப் பிரச்சினை – எல்லாரும் மனனம் செய்து மதிப்பெண் வாங்கி விடுவதால் யார் உண்மையிலேயே தொழிற்கல்விகளுக்கான புரிந்துணர் திறனும் aptitudeம் கொண்டுள்ளார்கள் என்பது நிர்ணயிக்க இயலாமல் போய்விடும். இதனால், தலைசிறந்த தொழிற்கல்விக்கூடங்களில் தரம் குறைந்த மாணவர்கள் நுழைய வாய்ப்புண்டு.

தவிர, நுழைவுத் தேர்வு இரத்துடன் இணைந்து improvement தேர்வு முறை இரத்தும் ஏற்றுக்கொள்ள இயலாதது. நன்றாகப் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வுக் காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்காக அவரது careerஐயே தொலைத்து விட வேண்டியது தானா? அதே வேளையில் improvement மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டியதும் அவர்களுக்கான முன்னிரிமையை குறைப்பதும் அவசியம் தான். இல்லாவிட்டால் வழமையான முறையில் போட்டியிடும் மாணவர்கள் சற்று மனம் தளரக்கூடும். பெரும்பாலான மருத்துவக் கல்வி இடங்களை improvement மாணவர்களே அள்ளிக்கொண்டு போகும் போக்கை கருத்தில் கொண்டு improvement தேர்வு முறையை ஒழுங்குபடுத்துவது அவசியமே தவிர முழுமையாக இரத்து செய்ய அவசியமில்லை.

ஆக, நுழைவுத் தேர்வு முறையை இரத்து செய்யாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நீண்ட கால நோக்குடன் செயல்பட வேண்டியது தான் அரசும் அனைத்துக்கட்சிகளும் வருங்காலத் தலைமுறைக்கு செய்யும் உண்மையான உதவியாக இருக்கும்.

ரவி

தமிழ்நாட்டில் கவிதை ரசனை

இப்பொழுது எல்லாம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே தயக்கமாக இருக்கிறது. ஓ நீயுமா என்று அலட்சியப் பார்வை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நிலைக்கு நான்கு பேர் தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

1. மலிவு விலை வார இதழ்களில் வரும் கவிதைகள்
2. யாருமே வாங்காத இலக்கிய இதழ்களில் வரும் யாருக்குமே புரியாத கவிதைகள்
3. FM வானொலிகளில் ஏதாவது நகைச்சுவை, பாடல் அல்லது கவிதையாவது சொல்லத்தூண்டும் தொகுப்பாளர்கள்
4. T. ராஜேந்தர், விவேக் தேவர், பார்த்திபன், அப்துல் கலாம் (இவர் எழுதுவன பாடல்கள் தான், கவிதைகள் அல்ல) போல் எசகு பிசகாக எதையாவது எழுதி விட்டு அதை கவிதை என்று விளம்பரப்படுத்துபவர்கள்.

மலிவு விலை இதழ்கள் என்பதில் வாரமலர், குடும்பமலர், ராணி, பாக்யா வகையறாக்கள் எல்லாம் அடக்கம். குமுதம், விகடனில் தப்பித்தவறி அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் வந்து விடுகின்றன. அதனால் அவற்றை மன்னித்து விடுகிறேன். மேற்குறிப்பிட்டுள்ள வகையறா இதழ்களில் வருவன பெரும்பாலும் புலம்பல் அல்லது அறிவுரை கவிதைகள் தான். ஓ மானிடா என்று ஆரம்பித்து ஒரு பக்கத்துக்கு அறிவரை கூறி அறுக்கும் சமுக சீர்திருத்த பிதற்றல் காரர்களின் அறிவுரை கவிதைகள் (!) வாரமலரில் ரொம்ப பிரசித்தம். அல்லது, என் அன்பே என்று தொடங்கி புலம்புகிறார்கள். ஒரே வரியில் எழுதாமல் வரிக்கு ஒரு வார்த்தையாக பிய்த்து பிய்த்து எழுதினாலே கவிதை என்று கூறிக்கொள்ளுமளவுக்கு தான் சராசரி தமிழனின் கவிதை இலக்கியத்தின் ரசனை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது மாதிரி கவியரங்கத்தில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை மூன்று முறை படிக்கும் இம்சையான வழக்கத்தை எந்த கவி ராசன் தொடங்கி வைத்தார் எனத்தெரியவில்லை. ஒரு வேளை ஒலி பெருக்கி கோளாறினால் யாராவது இந்த வழக்கத்தை தொடங்கி வைத்து இருக்கலாம். இந்த மாதிரி இதழ்கள், கவியரங்கங்கள் மூலம் கவிதைக்கு அறிமுகமாவதனால் இப்படித்தான் கவிதை என்று புரிந்து கொண்டு அதே மாதிரி எழுதத் தொடங்கி விடுகிறார்கள். நல்ல தேடல் இருப்பவர்கள் மட்டும் நல்ல கவிதைகளை தேடிப் பிடித்துப் படித்து தங்களை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

எனக்கு பிடிக்காத இன்னொரு போக்கு தீபாவளி, பொங்கலுக்கு தவறாமல் அருளுரை வழங்கும் சாமியார்கள் போல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ready made கவிதைகள் எழுதும் பிரபலக் கவிஞர்கள் பற்றியது. சுனாமி நிகழ்வுக்கு ஒவ்வொரு கவிஞராக கவிதாஞ்சலி எழுதிய போது எனக்கு கடுப்பாக வந்தது. உண்மையான சோகம் உடையவன் எவனும் அந்த நேரத்தில் கவிதை எழுதவும் மாட்டான். அதை பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்கச் சொல்லவும் மாட்டான். அந்தக் கவிஞர்களின் குழந்தைகளும் சுனாமியில் செத்திருந்திருந்தால் இப்படித்தான் கவிதை எழுதிக் கொண்டிருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

ஆன்மத்திருப்திக்காக செய்யும் எந்த ஒரு கலை வடிவத்திலும் மட்டும் தான் உண்மையும் நேர்மையும் இருப்பதாக கருதுகிறேன். நடன அரங்கேற்றமாகட்டும் பாட்டுக்கச்சேரியாகட்டும் கைத்தட்டலை எதிர்பார்த்து அதை தொடங்கும்போதே அதில் உள்ள ஆன்ம அர்ப்பணிப்பு செத்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். ஒரு பாடகியின் மிகச்சிறந்த பாடல் அவள் குழந்தைக்கு பாடும் தாலாட்டாகத் தான் இருக்க முடியும். ஒரு நர்த்தகியின் மிகச்சிறந்த நடனம் அவள் காதலனுக்காக மட்டும் ஆடிக்காட்டுவதாகவோ இறைவன் சந்நிதியில் ஆடுவதாகத்தான் இருக்க முடியும். நல்ல கவிதையும் அப்படித்தான். இப்படி எழுதினால் பிரசுரிப்பார்கள், இப்படி எழுதினால் பாராட்டுவார்கள் என்று நினைக்கும் போதே கவிதையின் நேர்மை செத்து விடுகிறது. கலைஞனுக்கு ஊக்க மொழிகள் தேவை தான்..ஆனால், அதை மட்டும் கருத்தில் கொண்டு அவன் வெளியிடும் கலைப்படைப்பில் தரம், உண்மை இருக்காது என்று நம்புகிறேன். யாராவது எழுதச்சொல்லி கேட்டு சிறுகதை, கட்டுரை எழுதலாம். ஆனால், கவிதை எழுத முடியாது; கூடாது. ஏனெனில் கவிதையின் இலக்கணம் அதன் வடிவத்தில் இல்லை. அதன் உயிரில், உணர்வில் இருக்கிறது.

பாடல் வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்ற தெளிவு வரும்போது தான் நல்ல கவிதைகள் வெளி வரும். இனங்கண்டு ரசிக்கப்படும். நல்ல பாடலில், செய்யுளில் நல்ல கவிதையும் ஒளிந்திருக்கலாம். ஆனால், அவற்றின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நல்ல கவிதை பிறப்பதில்லை. எதுகை, மோனையோடு நான்கு வரி உளறினாலே அதை கவிதை என்று வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமல் பாராட்டும் FM வானொலி தொகுப்பாளர்கள் இன்னொரு வகை கொடுமைக்காரர்கள். இதைக் கேட்டு புல்லரித்துப் போய் பக்கத்துக் கடை தையல்காரர்கள், மளிகைக் கடை காரர்கள் எல்லாரும் நானும் கவிதை சொல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். பெரும்பாலும் இக்கவிதைகள் என் பேரு காசி, எனக்கில்லை ராசி என்பது போன்ற T.ராஜேந்தர் பாணியில் தான் இருக்கின்றன. தொகுப்பாளர்களும் நேரம் போகாவிட்டால் நகைச்சுவை துணுக்கு, கடி ஜோக், ஒரு பாட்டு அல்லது ஒரு கவிதையாவது சொல்லுங்களேன் என்கிற rangeக்கு கவிதை எழுதுவதைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஒருவன் எவ்வளவு பெரிய கவிஞன் ஆனாலும் பார்ப்பதை பற்றியெல்லாம் கவிதை எழுதி விட முடியாது. அப்படி எழுதினால் அது வார்த்தை விளையாட்டு தானே தவிர கவிதையாகாது. பா. விஜய் ஒரே நாளில் 12 கவிதை தொகுப்புகள் வெளியிட்ட பொழுது ஆடிப்போய் விட்டேன். அவர் கவிதை எழுதுகிறாரா இல்லை அச்சு நிறுவனம் நடத்துகிறாரா தெரியவில்லை.

இது ஒரு புறம் என்றால், புரியாத கவிதைகள் எழுதும் நவீன கவிஞர்கள் இன்னொரு புறம். பத்திரிக்கை ஆசிரியரையும் சேர்த்து தமிழ் நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய தமிழ் சொற்களை கொண்டு இவர்கள் எழுதும் கவிதைகளை என்னவென்று சொல்வது? ஒரு வேளை, பத்திரிக்கை ஆசிரியருக்கே புரியாவிட்டாலும், எழுதித் தந்தவர் பெரிய ஆள் என்பதால் பிரசுரித்து விடுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் எந்த சமரசமும் செய்யாமல் எனக்குப் புரிந்தால் போதும் என்ற ரீதியில் எழுதும் அக்கவிஞர்களை நிச்சயம் பாராட்டுகிறேன். இல்லை, இந்தப் பத்திரிக்கைகளில் கவிதை பிரசுரமாக இப்படி மேதாவித்தனமாக எழுதுவது தான் தர நிர்ணயமா? சில கவிதைகளை படிக்கும் போது நிச்சயமாக கடைசி வரை எதைப்பற்றி தான் எழுதி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை, என் இலக்கிய அறியாமை தான் இதற்கு காரணம் என்றால் தயவு செய்து அக்கவிஞர்களின் பேனா என்னை மன்னிக்குமாக..இது போன்ற எனக்கு மட்டுமே புரியும் கவிதைகளை நானும் எழுதி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது உண்டு என்றாலும், அவை என் ஆன்ம திருப்திக்காக எழுதியவை. யாருக்கும் புரிந்து என்னை பாராட்ட வேண்டும் என்று எழுதியதில்லை. இந்தக் கவிஞர்களும் அப்படி ஆன்ம திருப்திக்காக எழுதியிருந்தால் பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமலாவது இருக்கட்டும்.

குழந்தையின் சிரிப்பை போல் எந்த விளக்கமும் விளம்பரமும் தேவைப்படாமல் நேர்மையாக மனதை தொடுவது தான் நல்ல கவிதை என நினைக்கிறேன். நான் எழுதியவற்றில் நல்ல கவிதைகள் என்று கருதுவன எல்லாம் தானாக வந்து விழுந்தவை தான். யோசித்து, வார்த்தை திருகி எழுதப்படவை அல்ல. அதை எழுதி முடிக்கா விட்டால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற தவிப்பில் தான் எழுதியிருக்கிறேன்.

போன வாரம் பெர்லின் போயிருந்த போது ஒரு ரயில் நிலையத்தில் 20, 25 குழந்தைகள் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து சுவாரசியமாக ice cream சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உயிருள்ள பொம்மைகள் போல் இருந்த அவர்களின் அழகைப் பார்க்கவே கண்கொள்ளாமல் இருந்தது. அந்தக் காட்சியை புகைப்படம் எடுக்க நினைத்தேன். பின்னர், நான் அப்படி செய்வதால் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதால் ஒளிந்திருந்து அவர்களை பார்த்து விட்டு வந்தேன். அதுவும் இல்லாமல், அவ்வளவு அற்புதமான காட்சியை அனுபவிக்காமல் புகைப்படம் எடுத்தும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இது போன்று அன்றாட வாழ்வில் எத்தனையோ விடயங்கள் கவி எழுத உந்துகின்றன. ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் stereotypeஆக வெகுஜன இதழ்களில் வரும் கவிதைகள் தமிழ் மக்களின் கவி ரசனையை மழுங்கடிக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் மொழிக்குள் அடக்கி விட முடியம் என்று தோன்றவில்லை. புகைப்படமாகட்டும், திரைப்படமாகட்டும், இசையாகட்டும் எதிலும் கூட கவித்துவத்தை உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன். கவித்துவம் என்ற உணர்ச்சி மேலிடும் போது கவிதையின் வடிவம் அவசியம் இல்லாமல் போகிறது . கண்ணீரும் மௌனமும் புன்னகையும் உணர்த்தாத கவித்துவத் தருணங்களை எந்த கவிதை உணர்த்திவிட முடியும்? ஆக, என்னைப் பொறுத்த வரை கவிதையின் இலக்கணம் அதன் உயிரில், உணர்ச்சியில் இருக்கிறது. அப்படி இல்லாதவைகளை கவிதை என்று தப்பாக அடையாளப்படுத்தாதீர்கள்; அங்கீகரிக்காதீர்கள்.

காதலியின் முதல் முத்தம் போல், குழுந்தை அம்மா என்று அழைக்கும் முதல் முறை போல் எத்தனேயோ கவித்துவமான தருணங்கள் வாழ்வில் வருகின்றன. அவற்றை எல்லாம் கவிதை எழுதி ஆவணப்படுத்தாமல் அந்தத் தருணத்தை அப்படியே ரசிப்பது உசிதம் என்ற மனநிலை சில மாதங்களாக இருக்கிறது. அதனால் நான் கவிதை எழுதுவதே குறைந்து வருகிறது.

எந்த ஒரு கவிஞனும் அவனுடைய மிகச்சிறந்த கவிதையை எழுதிச்சென்றதாய் தோன்றவில்லை. நல்ல கவிதை இது வரை எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட வில்லை என்று தான் கருதுகிறேன். எத்தனையோ நல்ல கவிதைகள் கவிஞனுக்குள்ளேயே வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

சரி, இவ்வளவு சொல்கிறேனே..நல்ல கவிதை என்று நான் நினைப்பதில் இரண்டை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்..பாரதி எழுதிய காக்கைச் சிறகினிலே பாட்டும், தேடிச்சோறு நிதம் தின்று பாட்டும் எனக்குப் பிடித்தவை. உங்களுக்கு பிடித்த கவிதைகளையும் எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.

ரவி