குட்டிம்மா

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும்.

குட்டிம்மா பதுவிசாய்ப் போவாள்.

எட்டிப் பிடித்து,

இருக்கையில் அமர்ந்து கொள்வாள்.

அவர் கேட்பார் “ஷாலினி cutting வெட்டட்டா”

இவள் சொல்வாள்:

‘ம், அப்படியே shavingம்’

முடிதிருத்தும் அண்ணன்

ஆச்சரியப்பட்டுத்தான் போவார்.

குட்டிம்மா என்றால் குறும்பு.

“அண்ணா… Monkey அண்ணா”

கூவிக்கொண்டே வருவாள்

குட்டிம்மா.

பின், என் காதுக்கு மட்டும் சொல்வாள்

“Monkey ன்னா கொரங்கு !

ஒனக்குத் தெரியாதா?”

குட்டிம்மாவை கண்டா

அடிடா ராமா பல்டி !

குட்டிம்மா முன் யாரும்

‘Biscuit’ என்று சொல்லக்கூடாது.

‘Biscuit’ என்றால் அணுக்கரு !

அணுக்கருவை இரண்டாகப் பிளப்பாள் (அதாவது, உடைப்பாள்)

இப்பொழுது “சக்தி பிறக்கிறது” என்பாள்.

நான் “எப்படி?” என்பேன்.

இப்படி:

குட்டிம்மாவின்

வாயில் கொஞ்சமும்

வயிற்றில் கொஞ்சமும்

அணுக்கரு

பிளந்து கட்டிக் கொண்டு இருக்கும்.

குட்டிம்மா என்றால் ஆற்றல் !

என் வேதியியல் புத்தகம்

அவள் மயிலிறகு மெத்தை !

வேதி வினைகள் மறைக்கப் பட்டாலும்

மயிலிறகின் தூக்கம் கெடக்கூடாதாம் !

மகாராணி குட்டிம்மாவின் உத்தரவாம் !

தெரியாத அணுத்தொகையால்

சரியான வினையும் மூச்சுத் திணறும்

குட்டிம்மா வைத்தியம் சொல்வாள்

“அணுவைப் பெருக்கஞ் செய்”

குட்டிம்மா என்றால் ஞானம் !

அவள் நர்த்தனம் புரியும் போதும் புரிந்த பின்னும்

என்னை நான் சிலிர்த்துக் கொள்வேன்.

ஆரத் தழுவி அன்புடன் சொல்வேன்.

“குட்டிம்மா, உனக்குள் ஒளி இருக்கிறது.”

அவள் சிரித்துக் கொண்டே சொல்வாள்.

“ஒளிக்குள் தான் உயிர்கள் இருக்கின்றன.”

குட்டிம்மா என்றால் ஒளி.

குட்டிம்மா

குட்டி குட்டிம்மாவாக

இருந்த காலந் தொட்டே

அவளுக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதும்

எனக்கு இனிப்பு வகைகளும் விருப்பம்.

அவள் இனிப்பு வாங்கி வருவாள்.

எட்ட நின்று காட்டி “கிட்ட வா என்பாள்”

நெருங்குவேன்.

ஓடுவாள்.

“சரி, உன் ஆசை தீர்ந்தது. எங்கே எனக்கு இனிப்பு?”

“அஸ்கு, ஆச தோச அப்பள வடம்.”

குட்டிம்மா என்றால் குழந்தை !

பேரம் பேசும் சுவாரசியத்தில்

சந்தையில்

குட்டிமாவை தொலைத்து விட்டிருந்தேன்.

தூக்கி வளர்த்த தோளும்

தழுவிப் பழகிய மார்பும்

மலர்ந்து மகிழ்ந்த மனமும்

வேரறுந்து போயின.

சேர்ந்து திரிந்த நிஜங்களும்

சேரத் துடிக்கும் கனவுகளும்

சேர்ந்தே என்னைத் துன்புறுத்தும்

தொலைந்து போன குட்டிம்மாவுக்கு

ஒரு கடிதம் எழுதுவேன்.

அன்புள்ள குட்டிம்மாவுக்கு

பெரிய குட்டிம்மா

எழுதும் கடிதம்

………………………….

நீ எங்கு இருக்கிறாய்?


முதலில் http://ravikavithaigal.blogspot.com/2007/02/blog-post_17.html என்ற முகவரியில் பதிப்பிக்கப்பட்டது.

இதை வாசிக்கவாவது நீங்கள் இருக்கிறீர்கள்… (கவிதை)

ஒரு மேசை, ஒரு நாற்காலி, ஒரு கட்டில்.

அப்புறம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி

அடைந்து கிடக்கும் என் அறையில்,

இன்னும் எதை வாங்கி வைத்தாலும் கேட்கப் போவதில்லை.

சாப்பிட்டாயா என்று.பட உதவி: LynGi
பட உரிமம்: கிரியேட்டிவ் காமன்ஸ் – வணிகமல்லா, மேற்படிப் பயன்பாடு – 2.0

தனிமையின் பெயர்

உறக்கம் வரா ஆம்சுடர்டாம் இரவு 11.30 மணி.
ஏதோ பேசித்தீர்க்க விழையும் மனம்.

பெல்சியம், செருமனி, லக்சம்பர்க், பிரான்சு..

”இத எல்லாம் நாங்க TVல தான் பார்க்கணும்..நீ நேர்லயே பார்க்கிற..” – அப்பா.
“எந்த TVயும் உங்கள காட்டுதில்லையே..” – நான்.

சின்ன வயசுல உலகம் பார்ப்பது சாதனையாம்.
பறவை கூட தான் நாடு விட்டு நாடு போகிறது.

சாதனையா என்ன?

பிழைப்பு !

பார்க்க, பேச வலைப்படக் கருவியும் தொலைபேசியும் உண்டு.
அக்கா மகனை தூக்கிக் கொஞ்சத் தான் தொழில்நுட்பம் இல்லை.

மீந்த பருக்கைகள் தின்ன வரும் குருவிகளுக்கு என் மொழி தெரியாது.
வாரக் கடைசி நண்பர்களுக்கு என் வலி புரியாது.
மது விற்கும் இரவுக்கடைக்காரனுக்கு சிரிக்கத் தெரியாது.

என் கண்ணாடி சன்னலின் வழி
காற்றும் மாசும் இரைச்சலும் எப்போதும் வந்தாலும்
ஒருபோதும் வருவதில்லை ஒரு பறவையும்..

திருமணம் செய்யலாமா, புது நண்பர் பிடிக்கலாமா – அக்கறையோடு கேட்கும் அக்கா.
ஒரு container நிறைய என்னோடு மனிதர்களை போட்டு அடைத்தால் சரியாகி விடுமா என்ன?
இது வெட்ட வெளியில் ஒரு மூச்சுத் திணறல்.

வருகிறார்கள். நுழைகிறார்கள். திரை மூடுகிறது. திரை விலகுகிறது. செல்கிறார்கள்.
20 நிமிடங்கள் – 50 ஐரோ மட்டுமே.
”என்ன செய்யலாம்?”
”என்ன வேண்டுமானாலும்..Su** and F***, two positions..”


ஏதாவது பேசுவாயா என்றா கேட்க முடியும்?
நகர்கிறேன்.

குளிர் நாட்டில் நடுநிசி நாய்களைக் காணோம்.
மனிதர்கள், வண்டிகள், கடைகள் மட்டுமே.

இன்னொரு சன்னல். இன்னொரு பெண்.
அதே உரையாடல்.
நகரப் பார்த்தபோது கேட்டாள்:

”யாரும் வருகிற பாட்டை காணோம்… விடியல் வரை கண் முழிக்கணும்…
சும்மானாச்சும் கொஞ்ச நேரம் ஏதாச்சும் பேசேன்”?


என்ன பேசி விட முடியும்?

போதை, புகை, மாது, கேளிக்கை, கொண்டாட்டம் நிறைய கிடைக்கிறது.
வாழ்க்கை மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதில்லை.

அலைந்த களைப்பில் உறக்கம் வரலாம்.
அப்போதும் யாரும் வரப்போவதில்லை பேசித் தீர்க்க –
எனக்கும் அவளுக்கும் அனைவருக்கும்.