ஆனந்த விகடனும் தமிங்கிலமும்

செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில்,

தனித்துவமான மொத்த சொற்கள்: 346

தனித்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69

ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!)

கலந்துள்ள சொற்கள்:

Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema, serial, serious, second, treatment, dull, tanker, tragedy, damage, thrill, thriller, theory, theatre, plus, purse, photo, bomb, bottle, brother, buildup, BGM, balance, midnight, missing, mega, match, language, lorry, logic, like, licence, lighting, location, just, geaographical, jolly, score, scene, shot, share, humour

இவ்விழுக்காடு பெரும்பாலான வெகுமக்கள் ஊடகங்களுக்கும் பொருந்தலாம். ஆங்கிலம் + பிற மொழி + (உட்டாலக்கடி, டாலடிக்கிறார்) போன்ற சொற்களையும் நீக்கிப் பார்த்தால் எவ்வளவு விழுக்காடு தமிழ் மிஞ்சும்?

மக்கள் தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சிக்கும் பிற தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சில மேலே உள்ள படத்தில் புலப்படுகின்றன:

நிகழ்ச்சிக்கான பெயர்கள் போடும்போது

1. கிரந்த எழுத்துக்களைக் காணோம்.
2. இராசா என்று இலக்கணப்படி எழுதுகிறார்கள். ராசா என்று எழுதுவதில்லை.
3. அனைவரின் பெயர்களுக்கான தலை எழுத்துக்களும் தமிழிலேயே இருக்கின்றன. கா. குமார் என்று எழுதுகிறார்கள். K. குமார், கே. குமார் என்று எழுதுவதில்லை.
4. Post production போன்ற பொறுப்புகளைக் கூட பின் தயாரிப்பு என்றே எழுதுகிறார்கள். ஆங்கிலத்தை மருந்துக்கு கூட எங்கும் காண இயலவில்லை.

புத்தகம் இரவல் தருவது குற்றமா?

புத்தகம் என்பதை எழுத்தாளன் – வணிகம் – காசு என்ற எல்லைக்குள் அடக்க இயலாது. அதை ஒரு அறிவு மூலமாகப் பார்க்க வேண்டும். காப்புரிமை என்ற பெயரில் மிகையாகப் பயமுறுத்தி பகிர்தல் என்ற மனித இயல்புக்கும் அறிவு பெறல் என்ற மனித உரிமைக்கும் எதிராகவும் குற்ற உணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுகிறோமா என்று சிந்தித்திப் பார்க்கலாம். நாம் படிக்கும் ஒவ்வொரு நூலையும் காசு கொடுத்து வாங்கித் தான் படிக்க வேண்டும் என்றால் அறிவுப் பரவலுக்கும் பெருந்தடையாகவும் இல்லாதவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருக்கும்.

பாலாவின் நாட்டு நடப்பு நூல் குறித்த அறிமுகம் தந்த லக்கிலுக் அந்நூலை வாங்கிப் படிப்பவர்கள் அதை யாருக்கும் இரவல் தர வேண்டாம் என்றும் திரைப்படத் திருட்டு போல் இதுவும் ஒரு தார்மீகக் குற்றம் என்று சொல்லி அதிரச் செய்தார் !

தமிழ்நாட்டில் பலரும் தமிழ் நூல்களை இரவல் வாங்கியே படிப்பதால் புத்தக விற்பனை குறைவதால் தமிழ் எழுத்தாளர்களால் எழுத்தை ஒரு முழு நேரத் தொழிலாகக் கொள்ள இயல்வதில்லை என்பதே அவரது முக்கிய வாதமாக இருந்தது. எனினும், எந்த வகையிலும் இதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

என்னுள் எழுந்த சிந்தனைகள்:

– முதலில், திருட்டு என்பது என்ன? ஒரு படைப்பை முறையான உரிமம் இன்றி பெரும் அளவில் தயாரித்து குறைந்த விலையில் விற்பதன் மூலம் முறையான உரிமம் பெற்றவருக்கு நட்டத்தை ஏற்படுத்துவதாகும். இதையும் ஒருவர் தான் காசு கொடுத்து வாங்கிய நூலை இரவல் தருவதையும் எப்படி ஒப்பிட முடியும்?

– புத்தகம் மட்டுமல்ல, நாம் காசு கொடுத்து வாங்கும் மென்பொருள், புத்தகம், திரைப்பட, இசை வட்டுக்கள் எதையும் நம் நண்பர்களுக்குத் தாராளமாகத் தரலாம். அது நம் உரிமை மட்டுமல்ல, பகிர்ந்து கொள்வது தான் மனித இயல்பும் கூட.

– நான் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் பெரும்பாலான எழுத்தாளர்கள் முதன் முதலாக இன்னொரு நண்பரின் இரவல் புத்தகம் மூலம் அறிமுகமானவர்கள் தான். அப்படி அறிமுகமாகி இராவிட்டால் தொடர்ந்து அவர்களின் புத்தகங்களை வாங்கி இருக்கப் போவதில்லை. நல்ல எழுத்து நிலைக்கும். முதல் புத்தக இரவலால் இழப்பு என்று நினைப்பதை விட அடுத்தடுத்து வரும் அவருடைய எழுத்துகளுக்கு மேலதிக வாசகர்களைப் பெற்றுத் தரும் ஏன் நினைக்கக்கூடாது?

– புத்தகங்களை இரவல் தரலாமா கூடாதா என்பதை எழுத்தாளரின் நோக்கில் இருந்து மட்டும் பார்க்காமல் மெய்யியல் நோக்கில் இருந்து பார்க்கணும். ஒருவருக்கு ஒரு நூலைப் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், காசு இல்லை என்பதால் வாங்க இயலாத நிலை. அப்போதும் அவர் இரவல் வாங்குவது குற்றமா?

– எனக்கு காசு உண்டு. ஆனால், வாங்குவதற்கு முன் அது வாங்கத் தகுந்த புத்தகமா என்று அறிய ஆவல். இதற்காகவே பல முறை இரவல் வாங்கிப் படித்தது உண்டு. பிறகு, நன்றாக இருந்தால் திரும்ப அதை விலை கொடுத்து வாங்கி என் சேகரிப்பில் வைப்பதுடன் பல நணபர்களுக்கும் பரிசாக அளிப்பேன். புத்தகங்கள் மட்டும் அல்ல, இசை வட்டுக்கள், திரைப்பட வட்டுக்கள் போன்றவையும் இப்படியே. நன்கு தெரிந்த படைப்பாளி என்றால் நம்பி வாங்கலாம். தெரியாத எத்தனை படைப்பாளிகளை நம்பி செலவழிப்பது. Alchemist புத்தகம் இப்படி எனக்கு அறிமுகமாகி பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்குப் பரிசு அளித்திருக்கிறேன். அவர்களும் ரசித்து இன்னும் பலருக்குப் பரிசளித்தார்கள். இப்ப நான் முதலில் இரவல் வாங்கியது சரியா தவறா?

– பொது நூலகங்கள் இருப்பது கூட எழுத்தாளருக்கு இழப்பு தானே? அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கானோர் அல்லவா பயன் அடைகிறார்கள்?

– நாம் வாங்கும் புத்தகத்தை நம் குடும்பத்தினர் படிக்கும் போது ஏன் நம் நண்பர்கள் மட்டும் காசு கொடுத்து வாங்க வேண்டும்? நண்பர்களைக் குடும்பத்தில் இருந்து பிரித்துப் பார்க்கிறோமா? இல்லை, நண்பர்களுக்குத் தரலாம், நண்பர்கள் அல்லாத பிறருக்கு மட்டும் இரவல் வேண்டாமா? இல்லை, குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாரும் தனித்தனியாக ஒவ்வொரு பிரதியாக வாங்கித் தான் படிக்க வேண்டுமா? ஒரு பிரதியை எத்தனை பேர் படிக்கலாம் என்பதற்கு எல்லை என்ன?

எந்த எழுத்தாளர்களின் நன்மைக்காகப் பேசுகிறோமோ அவர்கள் பெற்றிருக்கும் அறிவில் பெரும்பகுதியே கூட இப்படி இரவல் புத்தகம் வாங்கிப் படித்து வந்ததாகத் தான் இருக்கும். இப்போது பிறருக்கு அப்படி இலவசமாக அவரது அறிவைத் தரும் முறை என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான் 😉

– பதிப்பகங்கள் ஏன் எழுத்தாளருக்குக் கூடுதல் உரிமைத் தொகை தரலாகாது? விற்கும் நூல்களுக்கு ஒழுங்காகக் கணக்கு காட்டி உரிமைத் தொகை தரும் பதிப்பகங்கள் எத்தனை?

– நூல் திருட்டு கூட சில சமயங்களில் நியாயப்படுத்தத்தக்கதே. பொறியியல் கல்லூரியில் நான் கற்ற 90% நூல்கள் வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய நூல்களைத் திருட்டுத் தனமாக படி எடுத்துப் படித்தே. வெளிநாட்டு ஆசிரியர்கள் ஏழை ஆகி விடுவார்கள் என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் கற்றிருக்க முடியுமா? இந்திய மாணவர்களின் வாங்கு திறனை உணராமல் ஆனை விலைக்கு அந்நூல்களை விற்றது ஒரு வகையில் சந்தைப்படுத்தல் பிழையே. xerox செய்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் ஒரு மடங்கு கூடுதல் விலைக்கு கூட அவர்களால் விற்றிருக்க இயலும். அப்படி விற்றிருந்தால் வாங்கி இருப்போம். ஒவ்வொருவரின் வாங்கு திறனைப் பொருத்து அவர்களால் தரக்கூடிய நியாயமான விலை மாறுகிறது. விற்பவர்கள் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

– திருட்டு வேறு பகிர்தல் வேறு. “ஒருவர் நன்றாக எழுதுகிறார். அவரை வாங்கிப் படியுங்கள்” என்று சொல்வது வேறு. “நீங்கள் வாங்கிய நூலை யாருக்கும் படிக்கத் தராதீர்கள்” என்பது வேறு.

– புத்தகம் என்பதை எழுத்தாளன் – வணிகம் – காசு என்ற எல்லைக்குள் அடக்க இயலாது. அதை ஒரு அறிவு மூலமாகப் பார்க்க வேண்டும். காப்புரிமை என்ற பெயரில் மிகையாகப் பயமுறுத்தி பகிர்தல் என்ற மனித இயல்புக்கும் அறிவு பெறல் என்ற மனித உரிமைக்கும் எதிராகவும் குற்ற உணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுகிறோமா என்று சிந்தித்திப் பார்க்கலாம். நாம் படிக்கும் ஒவ்வொரு நூலையும் காசு கொடுத்து வாங்கித் தான் படிக்க வேண்டும் என்றால் அறிவுப் பரவலுக்கும் பெருந்தடையாகவும் இல்லாதவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருக்கும்.

பட்டிமன்றம் நடத்துவது எப்படி?

பெண் பேச்சாளர்களுக்கு பட்டுப்புடவை, மினுக்கும் அணிகலன்கள் தேவை இல்லை. ஒத்திகை பார்த்த அசட்டுக் கும்மிச் சிரிப்புகள், குட்டிக் கதைகள் தேவை இல்லை. திரைப்படப் பாட்டு தேவை இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாட்சிக் கதைகள், அடித்தொண்டையில் கத்தும் பாசாங்குப் பேச்சு தேவை இல்லை.

இப்படியும் அமைதியாக, ஆரவாரம் இன்றி பட்டிமன்றம் நடத்தலாம். மக்களின் வாழ்க்கையைப் பேசலாம். சமூகச் சூழல் தான் எப்படி எல்லாம் ஊடகப் போக்கை மாற்றுகிறது?

பி.கு: சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, விசு கவனத்துக்கு.

ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?

இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

– பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

– சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும்.

பக்க எண் வாரியாகக் குறிப்புகள்:

1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும்.

2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம்

3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும்.

4. இங்கு தலையங்கம் எழுத வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. இறந்த யாருக்கும் ஒரு அஞ்சலி, ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வுக்குக் கண்டனம், யாருக்காவது அறிவுரை, எதற்காவது கவலை, பாராட்டு என்று வாரம் ஒன்றாக சுழற்சி முறையில் எழுதவும்.

5 – 8 . வெளியாக உள்ள புதுத் திரைப்படம் / பூசை போடப்பட்ட திரைப்படம் ஒன்றின் படங்கள், அதன் இயக்குனர் பேட்டியை வெளியிடவும்.

9. ஒரு பக்கச் சிறுகதை ஒன்று போடவும்.

10. பெண்கள் கல்லூரிப் பேட்டி ஒன்று போடவும். மாணவிகள் எல்லாம் கையைத் தூக்கியோ சைகைக் காட்டியோ எல்லாப் பல்லும் தெரிய pose தர வேண்டும். ஜீன்ஸ், சுரிதார் என்று வகைக்கு ஒன்றாக அணிந்திருக்க வேண்டும். இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் – அ) sms joke ஆ) பிடித்த நடிகர் இ) என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பெண்களின் படத்தை நன்றாக எடுத்து வருமாறு நிருபரை அறிவுறுத்தி அனுப்பவும்.

11 – 13. யாராவது ஒரு அறிவுஜீவியைக் கூப்பிட்டு எதையாவது எழுதச் சொல்லவும். இவர் ஏட்டிக்குப் போட்டியாக எழுதுதல் நலம். ஒரு உலக நடப்பை ஒப்பிடுவது, பிரபலத்தைச் சிலாகிப்பது ஆகியவை அவசியம்.

14 – 16 . ஒரு நையாண்டிக் கதை. இதில் அரசியல்வாதிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இடம்பெறுதல் நலம்.

17. ஒரு கேலிச் சித்திரம்.

18 – 20 . கேள்வி பதில் பகுதி.

இதில் வெளியிடப் பரிந்துரைக்கப்படும் கேள்விகள் – அ) முதலைக்கு மூக்கு இருக்கா? ஆ) மூன்றாம் மொகலாய மன்னனுக்கு எத்தனை மனைவிகள்? இ) xஐயும் yஐயும் ஒப்பிடவும் ஈ) அண்மையில் பார்த்த படம், படித்த புத்தகம் என்ன?

இங்கு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு பளப்பளா நடிகை படத்தை போடுங்கள். கேள்வி பதில்கள் அளவை விட படத்தின் அளவு பெரிதாக இருத்தல் நலம். தொப்புள் போன்ற பகுதிகளை சிறப்பாகக் காட்டினால் வாசகர் மகிழ்வார்.

21 – 23 . இலக்கியப் பகுதி.

இங்கு பிரபல இலக்கியவாதி தான் படித்த புத்தகம், போய்ப் பார்த்த ஊர்கள், கடந்து வந்த மனிதர்கள் குறித்து எழுத வேண்டும்.

24 – 27. திரை விமர்சனம்.

36ல் இருந்து 42க்குள் ஒரு மதிப்பெண் போடவும். camera பசுமையா இருக்கு, பாட்டு இன்னும் நல்லா போட்டிருக்கலாம், hero-heroine chemistry அருமை, இயக்குனருக்கு ஷொட்டு, ஹீரோயின் ஜிலீர் சோடா – போன்ற சில வரிகளை மாற்றி மாற்றி எழுதவும்.

28 – 32 . மன ஊக்கப் பகுதி.

ஒரு சாமியாரைக் கூப்பிட்டு package முறையில் தத்துவம் எழுத சொல்லவும். இவர் ஆண்டுக்கணக்கில் இதை எழுத வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது நன்று.

33 – 34. முழுப்பக்க வெளியாள் விளம்பரங்கள்.

35 – 37 புதுவரவான கேரள / மும்பை நடிகைகளின் பேட்டி. விகடனை நாம் கிண்டி முடிக்கப் போகும் நேரம் வந்து விட்டதால் படம் எப்படி போட வேண்டும் என்று இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இது வரையுள்ள குறிப்புகளை இன்னொரு முறை கிண்டிப் பழகவும்.

38 – 40 ஜல்லிப் பகுதி

வானம் ஏன் கீறல் விழுந்த மாதிரி தெரிகிறது, மொஹஞ்சதாரோ சிற்பங்களில் உள்ள அடவுகளை கணினிக்கு கொண்டு வர நிரல் எழுதுவது எப்படி, பழைய தமிழ் இலக்கியப் பாட்டுக்குப் பொருள் என்று கலந்து கட்டி ஜல்லி எழுத ஒரு நல்ல ஆளாகப் பிடிக்கவும்.

41 – 42 அரசியல்வாதி பேட்டி

வாரம் ஒரு முறை வைத்து, தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களையும் பேட்டி எடுத்துப் போடவும். கேட்க வேண்டிய கேள்விகள் – அ) அணி மாறப் போறீங்களாமே? ஆ) உங்க வாரிசு இப்படியாமே? இ) விடுதலைப்புலி பத்தி என்ன சொல்லுறீங்க?

43 – 45 ஆன்மிகம்

ஒரு கோயில் படம். பயணக் குறிப்பு, தல புராணம். மகிமை.

46 – 48 திரைப்படத் துறை ஆட்களின் தொடர்.

இவர் அண்மையில் வெற்றி பெற்ற இயக்குனராகவோ சோத்துக்குத் திண்டாடும் பழைய நடிகராகவோ இருக்கலாம்.

49. வெளியாள் விளம்பரம்.

50. அட்டைப் பட விளம்பரம்.

கிண்டிய பின்:

– இந்த இதழில் கூடுதலாக திரைச் செய்திகள் வந்து விட்டதால் , இதை சினிமா ஸ்பெஷல் என்று அறிவிக்கவும். எல்லா இதழ்களிலும் இதே அளவு திரைச் செய்திகள் இருக்கும். ஆனால், அவற்றை பொங்கல் சிறப்பிதழ், தீபாவளிச் சிறப்பிதழ் என்று பெயர் மாற்றிக் கொள்ளவும்.

– ஜிலீர், பளீர், குற்றால குல்ஃபி, இளமை carnival போன்ற சொற்களைத் தூவி விடவும்.

பொதுவான சமையல் உத்திகள்:

– ஆண்டுக்கு ஒரு முறை newsprint விலை ஏறிவிட்டது என்று புலம்பி விலையேற்றிக் கொள்ளவும். கூடுதல் பக்கங்கள் தருவதாகச் சொல்லி அவற்றில் விளம்பரம் போடவும்.

– ஆறு மாதத்துக்கு ஒரு முறை விகடன் தாத்தா புதுத் தோற்றத்தில் வருவதாகச் சொல்லி அறிவிப்பு விடவும்.

– தீபாவளி, பொங்கலுக்கு இரட்டைச் சிறப்பிதழ் வெளியிடுவதாகச் சொல்லி 25 பக்க அளவில் இரு புத்தகங்கள் தரவும்.

– நேரம் கிடைக்கும்போது முன்பு நன்றாக இருந்த விகடன் படைப்புகளைத் தொகுத்து வைத்தால் தீபாவளி மலரை ஒப்பேற்ற உதவியாக இருக்கும்.

– எத்தனைப் பக்கங்களில் விகடன் கிண்டினாலும் இந்த formulaவை மாற்ற வேண்டாம்.

– எல்லாரும் இதே முறையில் கிண்டினாலும் விகடன் என்ற பெயர் எண்ணியல் நம்பிக்கைப்படி ராசியான ஒன்று. எனவே, கவலைப்படாமல் எப்படி வேண்டுமானாலும் கிண்டவும்.