வலை 2.0

வலை 2. 0 (Web 2.0) என்பதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம்.

வலை 2.0 என்னவென்று எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு வலை 1.0 என்னவென்பதை புரிந்து கொள்வது நல்லது. தினமலர் போன்ற தளங்களில் நீங்கள் பார்வையிட மட்டுமே முடியும். அத்தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை மாற்றவோ, பக்கம் காட்சிப்படுத்தப்படும் வரிசையையோ நீங்கள் மாற்ற முடியாது. இப்படி, நாம் பார்க்கும் இணையத்தளங்களின் மீது நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் passive readerஆக இருப்பது போன தலைமுறையான வலை 1.0 இணையத்தளங்களின் குணமாகும்.

ஆனால், வலை 2. 0 இணையத்தளங்கள் என்பவை கட்டற்றவை; மக்களை இணைப்பவை; கூட்டு முயற்சியை ஊக்குவிப்பவை; விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுபவை; உள்ளடக்கத்தை மாற்றவும் காட்சிப்படுத்தலை தன்விருப்பமாக்கவும் அனுமதிப்பவை; வாசகர்களுக்கு தளத்தின் மீது கூடிய கட்டுப்பாட்டைத் தருபவை; பொதுமக்களின் அறிவைக் கொண்டு கட்டெழுப்பப் படுவதால், அதிகாரப் பரவல், அறிவுப் பரவல் ஆகியவற்றுக்கு வழி வகுக்கிறது. இணையத்தில் ஒரு மெய்நிகர் ஜனநாயக அமைப்பைக் கொண்டு வரவும் உதவுகிறது.

இதை எளிமையாக விளக்கும் அருமையான ஒரு நிகழ்படம் கண்ணில் பட்டது.

Flickr, Delicious, Wikipedia போன்றவை பிரபலமான உலக வலை 2.0 தளங்களாகும்.

தமிழ் வலைச்சூழலில் உள்ள வலை 2.0 இணையத்தளங்கள் எனப் பின்வருவனற்றைக் கருதலாம்:

1. தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்சனரி முதலிய தமிழ் விக்கிமீடியா திட்டங்கள். – இவற்றில் மீடியாவிக்கி நிரலாக்கம் முதல் உள்ளடக்க உருவாக்கம் வரை கட்டற்ற கூட்டு முயற்சியே.
2. பெட்டகம் – விருப்ப இணைப்புகளின் வகைப்படுத்தப்பட்டத் தொகுப்பு.
3. மாற்று! – நிரலாக்கத்தில் கூட்டு முயற்சி, விருப்பப் பகிர்வுகளின் தொகுப்பான உள்ளடக்கம்.

தமிழ் செய்தித் தளங்கள்

கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும்.

தற்போது MSN தமிழ், Yahoo தமிழ், Thatstamil ஆகிய செய்தித்தளங்களே செய்தியோடைகளை வழங்குகிறது. அதிலும் thatstamilன் செய்தியோடை உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் சிஃபி, வெப் உலகம் போன்று இணையத்தில் மட்டும் இயங்கும் செய்தித் தளங்கள் விரைவில் இந்த வசதிகளை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கலாம். Yahoo தமிழ், MSN தமிழ் போன்றவை தனித்துவமான செய்திகளைத் தராமல் செய்தி நிறுவனங்கள் சார்ந்து செயல்படுவது ஒரே செய்திக் கட்டுரை இரண்டிலும் வெளி வருவதற்கான குழறுபடிகளுக்கும் வாய்ப்பாகப் போய் விடக்கூடும். தவிர, இவ்விரு தளங்களும் அவற்றின் பன்னாட்டுத் தரத்திற்கு இல்லாமல் வழக்கமான தமிழ் மசாலா தளம் போலவே இருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிபிசி தமிழ் தமிழகச் செய்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் அதன் இணையப்பதிப்பிலாவது இதைச் செய்யலாம். சீனத் தமிழ் வானொலியும் சீனச் செய்திகளிலேயே மூழ்கிக் கிடப்பதால் அதிகம் தமிழக செய்தி சார் பயனற்றதாக இருக்கிறது. தரம் வாய்ந்த இவ்விரு பன்னாட்டு வானொலிகளும் இணையப் பரப்பில் ஒரு முன்னணி செய்தித் தளமாக செயல்பட வாய்ப்பு உண்டு.

தினமலர், தினகரன், தினமணி போன்ற அச்சு ஊடக செய்தித் தளங்கள் இணையத்தின் சாத்தியத்தை துளியளவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எளிதில் செய்யக்கூடியன, செய்ய வேண்டியன –

1. ஒருங்குறி எழுத்துருக்களுக்கு மாறுதல்.
2. அச்சில் வந்த செய்திகளை மட்டும் படி எடுத்து இணையத்தில் போடாமல் இணையத்துக்கு என்று தனித்துவமான 24 நேரமும் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும் செய்தி அறிக்கைகளைத் தருவது.
3. செய்திப் பக்கங்களில் மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டு அளிக்கும் வசதி.
4. வாசகர்களே செய்தி சார் நிழற்படங்கள், நிகழ்படங்கள், கட்டுரைகளை பதிவேற்றும் வசதி. அவற்றின் தரத்தைக் கண்காணித்து இத்தளங்கள் உடனுக்குடன் வெளியிட்டால் உள்ளூர் செய்திகள், பரபரப்புச் செய்திகளை இற்றைப்படுத்த சரியான வாய்ப்பாக இருக்கும்.

வழக்கமான நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்தித் தளங்கள் போக சற்றுமுன் போன்ற பதிவுலகில் வெளி வரும் கூட்டு முயற்சி செய்தித் தளங்களும் குறிப்பிட்டத்தக்க பணியாற்றக்கூடும். வெறுமனே வெட்டி ஒட்டும் பதிவுகளாக இல்லாமல், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ் அச்சு ஊடகங்களில் வணிகக் கட்டாயங்களால் வெளி வராது இருக்கின்ற, பல செய்திகளை இவை வெளிக்கொணர்வது சிறப்பு.

இணையத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுபவைகளில் செய்தித் தளங்கள் முதன்மையானவை. இதைத் தமிழ் இணையப்பரப்பில் இயங்கும் செய்தித் தளங்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வது நலம்.

உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?

நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேலே உள்ள பாடல் பட்டியல் – உன்னைக் கண்டேனே (பாரிஜாதம்), உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே), காற்றின் மொழியே (மொழி).

இது போல் நீங்களும் பாடல்களை ஒலிபரப்ப,

1. http://www.musicplug.in செல்லுங்கள்.
2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள்.
3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள + குறியை அழுத்தி, ஒரு albumல் சேருங்கள்.
4. இப்பொழுது அந்த albumஐத் திறந்து பாட விடுங்கள்.
5. கீழ் வருவது போல் உங்கள் இயக்கியில் உள்ள embed code அருகில் உள்ள copy to clipboard என்ற பொத்தானை அழுத்தி, நிரலை பிளாக்கரில் ஒட்டி விடுங்கள்.

அவ்வளவு தான்..உங்கள் சொந்த juke box, radio mirchy, சூரியன் FM எல்லாம் தயார் 🙂

இந்த Musicplug.in தளத்தை அண்மையில் தான் கண்டுபிடித்தேன். இதன் சிறப்பியல்புகள்:

1. Raaga.comக்கு இணையான பாடல்களின் ஒலிப்புத் தரம்.
2. Raaga.comஐ மிஞ்சும் கவர்ச்சியான தள வடிவமைப்பு.
3. நண்பர்களுக்கு மின்மடலில் பாடல் அனுப்ப, இணைப்புகளை பகிர, இப்படி உங்கள் தளத்தில் இருந்து ஒலிபரப்ப என்று ஏகப்பட்ட வசதிகள்.
4. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, பஞ்சாபி பாடல்கள்.
5. முக்கியமாக உயிரை வாங்கும் விளம்பரங்கள் இல்லை. Raagaவில் “ஊட்டுக்கு பணம் அனுப்புறியா, அனுப்புறியா”-னு ஒரு மேரி அக்கா கூவிக்கிட்டே இருக்கும் 🙂
6. பாடல்கள், பாடல் பட்டியல் தானாக திரும்பத் திரும்ப பாடும் வசதி.
7. புதிய, பழைய பாடல்கள் என்று நிறைய குவிந்திருக்கின்றன.
8. Realplayer தேவை இல்லை. Raagaவில் இது முக்கியத் தொல்லை.
9. லினக்ஸ், Firefox எல்லாவற்றிலும் பாடுகிறது. Raaga லினக்சில் மக்கர் செய்யும். Realplayer plugin போடு என்று அழும் !

தளத்துக்கு போய் பாட்டு கேட்டுப் பார்த்து சொல்லுங்களேன்..யார் கண்டார்? தமிழ்ப் பதிவுலகில் இதைத் தொடர்ந்து வானொலிப் பதிவுகள் வந்தாலும் வரலாம். வந்தாலும் நல்லா இருக்கும் தான்.

Raaga, 5 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ இப்பொழுதும் அப்படியே இருக்கிறது. நுட்ப அளவில் ஒரு மாற்றமும் இல்லை. Youtube போன்ற தளங்கள் நிகழ்படப் பகிர்வுகளை பரவலாக்கியது போல் இந்த தளமும் இந்தியப் பாடல் பகிர்வுகளை பரவலாக்கக் கூடும். கூடிய சீக்கிரம் இந்த தளம் Raagaவை ஏறக் கட்டி விடும் என்பது என் கணிப்பு. பார்க்கலாம்.


பி.கு.
1. இந்த இடுகையை நீங்கள் திறக்கும்போது தானாகவே பாடத் தொடங்கி விடும். இது போல் அல்லாமல் பயனர் விரும்பி பாட வைக்க musicplug நிரலில் autoplay=true என்பதை false என மாற்றிக் கொள்ளுங்கள்.
2. தமிழ்த் திரைப்பாடல்களை துல்லியமாக, எளிதாகத் தேட ஆன்ந்த் ஒரு நிரல் உருவாக்கி உள்ளார். தகவலுக்கு நன்றி, மு.கார்த்திகேயன்.

தொடர்புடைய இடுகை:

வலைப்பதிவில் ஒலிப்பதிவு இடுவது எப்படி?

கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்

1. உலாவி – சிறந்த உலாவல் அனுபவம், பாதுகாப்பு, பயன்பாட்டு எளிமை ஆகியவற்றுக்கு Firefox உலாவி பயன்படுத்துங்கள்.

2. Office மென்பொருள் – Open Office பயன்படுத்திப் பார்த்தவர்கள் எதற்கு MS officeஐ போய் வாங்க / திருட வேண்டும் என்று நினைக்கலாம்.

3. ஊடக இயக்கி – VLC media player . குப்பை என்று ஒரு கோப்பு நீட்சி கொடுத்தாலும் வாசித்துக் காட்டி விடும் அற்புத ஊடக இயக்கி.

4. குரல் அரட்டை – skype . குரல் அரட்டைக்கு மிகச் சிறந்த மென்பொருள்.

5. அரட்டை – yahoo, msn, gtalk என்று பல அரட்டைகளங்களிலும் இருப்பவரா? எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்க gaim பயன்படுத்துங்கள். IRC உரையாடலையும் இதில் மேற்கொள்ளலாம்.

6. மின்னஞ்சல் – gmail தவிர வேறொன்றும் பரிந்துரைப்பதில்லை நான். இதில் சில சமயம் புதியவர்களின் மடல்கள் எரிதப்பெட்டிக்குள் (spam folder) போய் விடுகிறது என்பது மட்டும் குறை.

7. இயக்குதளம் – பழங்காலத்து திறன் குறைந்த கணினியை வைத்து windows உடன் போராடுகிறீர்களா? ubuntu லினக்ஸ் இயக்குதளம் பயன்படுத்துங்கள். 2 GB அளவு மட்டுமே இடம் இருந்தால் கூடப் போதும். பாதுகாப்பு, வேகம், பயனெளிமை அதிகம். தவிர, உபுண்டு தமிழிலும் உண்டு !

8. தேடல், தகவல் – தேடுவதற்கு சிறந்தது கூகுள். தேடாமல் சில அடிப்படைத் தகவல்களை அறிய சிறந்தது விக்கிபீடியா. (விக்கிபீடியா தமிழிலும் இருக்கிறது!). ஆங்கிலச் சொற்களுக்கு Dictionary.com

9. பொழுதுபோக்கு – தமிழ்ப் பாடல்கள் கேட்க – ராகா, Music india online, MusicPlug . திருட்டுப் படம் பார்க்க – tamiltorrents 😉

பொதுவாக windows என்ற சின்ன வட்டத்துக்குள் உட்கார்ந்து பார்க்கும்போது கணினி நம்மை கட்டிப் போடுவது போல் இருக்கிறது. ஆனால், திறவூற்று மென்பொருள்களை பயன்படுத்திப் பார்க்கும்போது தான் கணினிப் பயன்பாட்டின் அருமை தெரிய வருகிறது. மேற்கண்டவற்றில், gaim, ubuntu, open office, firefox, vlc எல்லாமே திறவூற்றுக் கட்டற்ற மென்பொருள்கள்.