என் வலைப்பதிவுப் போக்குகள்

எச்சரிக்கை: நாட்குறிப்பு / சொந்தக் கதை 🙂

* 2005 சனவரியில் முதல் எழுத்து . அதற்கு ஆறு மாதம் முன்னரே தமிழில் எழுதக் கற்றிருந்தேன். ஆனால், அப்போது எங்கு, என்ன தமிழில் எழுதினேன் என்று நினைவில்லை. விக்கி அறிமுகம் மார்ச் 2005ல்,

* 2005 பிற்பகுதியில் ஜெர்மனிக்கு நகர்ந்த பிறகு தமிழ்மணம் அறிமுகமானது. இடுகைகள் எண்ணிக்கையும் கூடியது. பெரும்பாலும் செய்தி விமர்சனங்களே எழுதினேன்.

* 2006 தொடக்கம் பிற்பகுதி வரை அறவே வலைப்பதியவே இல்லை எனலாம். நெதர்லாந்துக்கு நகர்வு, வாழ்க்கைச் சூழல், விக்கி ஈடுபாடுகள் காரணம். பிற்பகுதியில் தமிழ் விக்கி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டி மீண்டும் வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். அன்று தொடங்கி செய்தி விமர்சனங்கள் எழுதுவதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன். (காரணம்) . தமிழ், கணினி, வலைப்பதிதல், கட்டற்ற மென்பொருள், தமிழ்99 என்று கொஞ்சம் கொள்கை பரப்பு வேலைகளில் தீவிரமடையத் தொடங்குகிறது.

* 2007 ஆம் ஆண்டை “வலைப்பதிதல் ஆண்டு” என்று நாட்குறிப்பில் எழுதத்தக்க அளவு வலைப்பதியும் வேகம் கூடுகிறது!! 2007 தொடக்கத்தில் துறை சார் பதிவுகள் என்று ப்ளாகரில் எண்ணற்ற புதுப் பதிவுகள் தொடங்கி, பராமரிப்பில் விழி பிதுங்கி, தொடக்க ஆர்வம் குன்றி நிறைய பதிவுகளை அழித்து விட்டேன். இனி புதிதாய் ஒரு வலைப்பதிவையும் எங்கும் திறக்கும் ஆர்வம் இல்லை. இருக்கிற வலைப்பதிவுகள் போதும் 🙂 தனித்தளத்துக்கு நகர்வது, திரட்டிகளில் இருந்து விலகுவது வலைப்பதியும் வேகத்தைக் குறைக்கும் என்று நினைப்பு பொய்த்துப் போனது 🙂 திரட்டிகளில் இருந்த போது இருந்ததை விட மறுமொழிகள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், அவற்றின் தரம் கூடியது. வருகையாளர் எண்ணிகையும் கூடியது.

ஆண்டின் நடுவில் படிப்புக் காரணங்களுக்காக வலைப்பதியும் வேகம் குறைந்தது. ஆனால், விடாமல், மாற்று!, வலைப்பதிவர் பட்டறை, வேர்ட்பிரெஸ் தமிழாக்கம், திறந்த OPML திட்டம் என்று என் வலைப்பதிவுகளுக்கு வெளியேயான வலைப்பதிவர் சமூகச் செயற்பாடுகள் கூடுகின்றன.

வேர்ட்பிரெஸ் தரும் சுதந்திரம் வலைப்பதிவு நுட்பம் குறித்து நிறைய நோண்டிப் பார்க்கத் தூண்டியது. மாற்று! பங்களிப்புகள் காரணமாக நாள் விடாமல் தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. இப்போது என் கூகுள் ரீடரில் 700ஐத் தொடும் தமிழ்ப் பதிவுகள். எல்லாவற்றையும் படிக்கிறேன் என்றில்லை. ஜெயமோகன் படிக்கத்தக்க வகையில் நாளும் நிறைய எழுதுகிறார் என்றாலும் ஒருவரிடம் இருந்தே நிறைய இடுகைகள், அதுவும் seriousஆன இடுகைகள் வந்தால் படிக்க அயர்ச்சியாய் இருக்கிறது. நானும் ஒரே நாளில் 4,5 இடுகைகளைப் போட்டுத் தாக்குகையில் இதை நினைத்துத் தயங்குவது உண்டு. ஆனால், எல்லா நாட்களும் எழுத மனநிலை வாய்க்குதில்லை. வாய்க்கையில் ஒன்றோடு நிறுத்த ஒப்புவதில்லை 🙂 வரும் நாட்களில் பதிப்பிக்குமாறு செய்யும் வசதி இருந்தாலும் எழுதிய உடனே பதிப்பித்துப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி 🙂

* சில சமயம் என் பதிவைப் பார்த்தால் எனக்கே கொள்கை பரப்பு வாடை தூக்கலா இருக்கு 🙁 ரொம்ப seriousஆ இருக்கோ? “ரொம்ப தமிழாராய்ச்சி பண்ணாம நானும் கருத்து சொல்வது போல் ஏதாவது எழுதேண்டா”ன்னு அக்கா சொன்னாங்க 🙁 அதுக்காக, எத்தனை தடவை தான் ஜட்டி, பனியன் காயப்போட முடியும் 🙂 வாசகர்களை மகிழ்விப்பதற்காக என்றே எழுதத் தொடங்கினால், அப்புறம் நாம எழுத விரும்புவதைக் கொஞ்சம் கொஞ்சமா விட்டுடுவோம்னு நினைக்கிறேன். ஆனால், பிற தளங்களில் என் இடுகைகளை மேற்கோள் காட்டி சிலர் எழுதும் போது, சில விசயங்களைக் கசப்பாக இருந்தாலும் சொல்லித் தான் ஆக வேண்டும் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

* திருக்குறள் உரை, உயிர்ப்பேணியலுகை தொடங்கியதோடு நிற்கின்றன. இனி வரும் காலத்தில் சிரமம் எடுத்து அவற்றை முடிக்க வேண்டும். தமிழ் இணையத்தில் அதிகம் தென்படுவது திருக்குறள் உரை தான். இருந்தாலும், என் தனிப்பட்ட புரிதலுக்காகவாவது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடிக்க வேண்டும். இது போன்ற இடுகைகள் தேடு பொறிகளில் மூலம் தொடர் வாசகர்களையும் தர வல்லன.

* இனி திரைப்பட, இசை, நூல் விமர்சனங்கள் எழுதும் எண்ணம் இல்லை. அவற்றைப் பார்க்கும் போது, படிக்கும் போது ரசித்துப் பார்க்க இயலாமல், “விமர்சனக் கண்ணோடே” பார்ப்பது கடுப்பளிக்கிறது. நல்லாயிருக்கு, நல்லா இல்லை என்று ஒரு வரியில் நண்பர்களுக்குச் சொல்ல தான் Twitter இருக்கே ! செய்தி விமர்சனம் முதல் பல விசயங்களில் ‘நானும் கருத்து சொல்கிறேன்” என்று எழுதுவதை விட யாரும் எழுதாத விசயங்களைப் பற்றி கொஞ்சமாவது எழுத நினைக்கிறேன்.

* விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற பட இடங்களிலும் பங்கு கொள்வது புதிய இடுகைகள் எழுதுவதற்கான கருப்பொருள்களைத் தருகிறது.

* பெரிது பெரிதாய் உள்ள விளம்பரத் தட்டிகளால் எவ்வளவு இலாபம் வரும் என்று தெரியவில்லை. தரமான தமிழ் கூகுள் adsense வந்தால் ஒழிய தொடர்பில்லாத விளம்பரங்களைப் போடுவதில் ஆர்வம் இல்லை. வலைப்பதிவுகள் மூலம் பணம் ஈட்டுவது என்பது பெரிய நோக்கமாய் இல்லை.

* 3 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதி உள்ளேன். இதற்காக விழா எடுக்க, வாழ்த்து மடல் பெறும் எண்ணம் ஏதும் இல்லை 😉

* எத்தனை widget, gadgetகளை நோண்டினாலும் ஒரு மாதத்துக்குள் அலுத்துத் தூக்கி விடுகிறேன் 🙂

* 2, 3 மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்த பயன்படுத்தத் தோன்றுபவையே நல்ல நீட்சிகள், வார்ப்புருக்கள்.

* வார்ப்புரு மாற்றுவது, மறுமொழிகள் வந்திருக்கிறதா என்று பார்ப்பது, வருகை எண்ணிக்கையைப் பார்ப்பது வலைப்பதிவர்களைத் தாக்கும் வழமையான நோய் 🙂 வார்ப்புரு மாற்றும் நோயில் இருந்து மட்டும் தப்பி இருக்கிறேன் 🙂 கணிமை, தமிழ்த் தென்றல் பதிவுகளில் இருந்த புள்ளி விவர நிரல்களை நீக்கி விட்டு பதிந்த போது ஏதோ ஒரு நிம்மதி தோன்றியது. ஏன்? எத்தனை பேர் வருகிறார்கள் என்று கவலைப்படாமல் விரும்பிய போது விரும்பிய அளவு பதிவதும் ஒரு சுகம் தான் ! வேர்ட்பிரெஸ் புள்ளி விவரங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தக்க விரிவான தகவல்களைத் தருவதால் அதை விட மனமில்லை.

* இப்போது என் வலைப்பதிவுகள் அனைத்திலும் மட்டுறுத்தல் இல்லாத மறுமொழிப் பெட்டிகள் இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளில் 2,3 ஆபாச மறுமொழிகளே வந்துள்ளன. மற்றபடி, எவ்வளவு மாற்றுக் கருத்தாக இருந்தாலும் அனுமதித்தே வருவதால் எதற்கு வீணாய் மட்டுறுத்தல் வேலை என்று விட்டு விட்டேன். எப்போதாவது haplog வகையறா எரிதங்கள் வந்தால் தற்காலிகமாக மட்டுறுத்தலாம். நான் சென்று மறுமொழி அளிக்கும் பதிவுகளில் மட்டுறுத்தல் இல்லாவிட்டால் எனக்குப் பிடித்திருக்கிறது. அதே போன்ற அனுபவத்தை என் வாசகர்களுக்கும் தர விரும்புகிறேன். மட்டுறுத்தல் இல்லா நேரத்தில் மறுமொழிகள் ஊடான உரையாடல்களும் வாசகர்களுக்கு இடையே விரைவாக நடைபெறும் தானே?

* திரட்டிகள் குறித்த விமர்சனத்தை கணிமையில் எழுதிய போது மாற்றுக் கருத்துக்கள் என்பதை விட விதண்டாவாதங்களே அதிகம் வந்தன. அப்போது மறுமொழிப் பெட்டியை மூடி வைத்த போது கொஞ்சம் நிம்மதி வந்தது. எவ்வளவு தான் கருத்துச் சுதந்திரம், இணைய ஊடகப் புரிதல் இருந்தாலும் விதிவிலக்கான நேரங்களும் இருக்கின்றன போலும், மிகவும் சர்ச்சைக்குரிய விசயங்களில் நம் கருத்தைப் பதிவது மட்டுமே நோக்கம் என்றால் மறுமொழிப் பெட்டியை மூடி வைப்பது சரியே. மறுமொழிகளை எதிர்ப்பார்க்காமல் சும்மா வலைப்பதிவது கூட பிடித்ததாகவே இருந்தது.

* நீட்டி முழக்கி எழுதும் வலைப்பதிவுகளை விட twitter குறும்பதிவுகள் பிடித்திருக்கிறது. அங்கு என்ன வேண்டுமானாலும் எழுத இயல்கிறது. பிம்பங்கள், மறுமொழிகள், புள்ளிவிவரங்கள், பராமரிப்பு என்று ஒன்றும் கிடையாது.

* என் கல்லூரி நண்பர்கள் சிலரும் என் பதிவுகளைப் படிக்கிறார்கள் போலும். அவர்கள் மறுமொழிகள் இடுவதில்லை என்பதால் அறியாமல் இருந்தேன். தொலைப்பேசியில் சொன்ன போது மகிழ்ந்தேன்.

* பல இடங்களில் ஒரே மறுமொழி அளிக்க வேண்டி வந்தால் அதைப் பற்றி ஒரு இடுகை எழுதி வைத்துக் கொண்டு தகுந்த இடங்களில் தொடுப்பாகவே கொடுத்து விடுவது உதவுகிறது.

* தமிழ் இணையம் முழுக்க கருத்துக்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இறைந்து கிடக்கின்றன. தகவலுக்குத் தான் பஞ்சம் ! இனி எழுதும் வலை ஆக்கங்களில் தகவல் முக்கியத்துவம் தந்து எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

* கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது போகிறது. ஆனால், இதனால் பெற்ற அறிவு, பயன் என்ன என்றால் ஏமாற்றமாக இருக்கிறது. பல சமயங்களில் தவறாமல் குமுதம், விகடன் படிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று புரியவில்லை. ஒரு வேளை இந்த நேரத்தை, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் செலவழித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்குமோ? 🙁 உலக இணையத்தில் தகவல் முக்கியத்துவம் உள்ள தளங்களைத் தெரிந்தெடுத்து வாசிக்க இயல்கிறது. தமிழில் இன்னும் அந்த அளவு தகவல் தளங்கள் பெருகவில்லை 🙁 தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்கச் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். திரட்டிகளுக்கு வெளியே பல நல்ல பதிவர்கள் இயங்குகிறார்கள். தேடிப் பிடிக்க கொஞ்சம் முயற்சி வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் பதிவுகள் பின்வருவனவற்றைக் குறித்து இருக்கின்றன: கவிதை (பெரும்பாலும் புலம்பல் 🙂 ), அரசியல், திரைப்படம், ஈழம், செய்தி விமர்சனம்.

* இது வரை எனக்குப் போலிகள் இல்லை. அதனால் இன்னும் மூத்த பதிவராகலைன்னு நினைக்கிறேன் 😉 ஆனால், யாரோ ஒரு சிலர் என்னைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று மட்டும் புரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எங்கோ இட்ட எனக்கே மறந்து போன மறுமொழிகளையும் குறிப்பெடுத்து எனக்கே நினைவூட்டுகிறார்கள். “அங்க அப்படி சொன்னீல்ல” என்று மிரட்டுகிறார்கள் 🙂 நல்ல நினைவாற்றல் உள்ள தரமான எதிராளிகள் 🙂 அடையாளம் காட்டாமல் ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களைச் சொல்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களை எரிச்சல்படுத்தி இருக்கிறேன். ஆனால், ஏன் என்று துல்லியமாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.

* Technology பிதாமகன் என்றொரு பட்டம் கிடைத்திருக்கிறது 🙂 ஆனா, சேது, நந்தா படங்கள் எனக்கு இன்னும் கூடப் பிடிக்கும் 🙂

* 99% சொந்தப் பெயரிலேயே பிற பதிவுகளில் கருத்து சொல்லி வருகிறேன். ஒரு சில இடங்களில் அடையாளம் காட்டாமல் மறுமொழி இட்டிருக்கிறேன்: அதற்கு முக்கிய காரணம் – சில சமயம் ஏனோ இணையம் முழுக்க என் பெயரை அள்ளி இறைப்பது போல் தோன்றுகிறது. இணையத்தில் என் படங்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதும் இதனாலே. “படிக்காம ஏன் நேரத்தை வீண்டிக்கிற”ன்னு அக்கா காதை திருகுவாங்க என்பதாலும் சில இடங்களில் பெயரைக் காட்டுவதில்லை 🙂 சிலர் என் பெயர் உள்ள மறுமொழிகளை அனுமதிப்பதில்லை 🙂 அங்கும் அடையாளமின்றி எழுத வேண்டி இருக்கிறது. சில இடங்களில் நான் சொல்கிறேன் என்பதை விட சொல்லவரும் கருத்து முக்கியம் என்று தோன்றினால், பெயர் இல்லாமல் கருத்து சொல்வதுண்டு.

* முடிவில்லாமல் நீளும் உரையாடல்கள் அயர்ச்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எல்லா இடங்களிலும் போய் நாம் வாதம் செய்வதில்லை. அது போல் இணையத்திலும் ஏற்பில்லாத கருத்தைக் கண்டாலும் புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கருத்தைப் பதிந்தோம் என்றால் தொடர்ந்து அதன் மறுமொழிகளைக் கவனிப்பதில் நிறைய நேரம் போகிறது. நம் மறுமொழிகளைத் தாமதப்படுத்தினால், எப்படியும் நம் கருத்தை யாராவது ஒருவர் சொல்லி இருப்பார்கள் என்பதால் நேரம் மிஞ்சும்.

* சில மூத்த (!?) பதிவர்கள் மாற்றுக் கருத்துக்களைப் பதிப்பிப்பதில்லை. பதிப்பித்தாலும் பதில் சொல்வதில்லை. அட, நான்கு, ஐந்து இடுகைகளில் நல்ல மாதிரி கருத்து சொன்னாலும் “மரியாதைக்கு கூட” ஒரு சொல் திரும்ப வருவதில்லை. இனி இத்தகைய பதிவுகளில் கருத்திடலைத் தவிர்க்க வேண்டும்.

* தமிழ் இணையத்தில் சில pyscho பதிவர்களும் இருக்கிறார்கள் ! அவர்கள் என்ன சொன்னாலும் கண், காது, வாய் பொத்திக் கொள்வது நல்லது.

* “எந்த ஊரில் இருந்து எந்தப் பேருந்து பிடித்து வந்தார்கள்” என்ற அளவுக்கு Feedjit போன்றவை போட்டு IP கண்காணித்து விளம்பரப்படுத்தும் பதிவுகளைக் கண்டாலே பிடிக்கவில்லை.

* தமிழ் வலைப்பதிவர்களிடம் இருந்து தமிழ் இணைய முன்னேற்றம், தமிழ்க் கணிமை பங்களிப்புகளைப் பெரிதாக எதிர்ப்பார்க்கலாகாது. பலர் வாய்ச்சொல் வீரர்கள், புகழ் விரும்பிகள், பொழுது போக்கு விரும்பிகள்.

* நுட்பம் சாரா அறிவுரை இடுகைகள் வீண். தேவையும் இல்லை. போன ஆண்டு நானே வலைப்பதிவர் சமூகத்தை விமர்சித்து சில இடுகைகள் போட்டிருக்கிறேன். இனி அந்தத் தவறைச் செய்யப் போவதில்லை.

* தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் வலைப்பதிவுகளில் ஏதும் விரும்பத்தகா போக்கு இருந்தால் அது சமூகத்தின் குறையே. சமூகத்தை மாற்றாமல் வலைப்பதிவு ஊடகத்தின் உள்ளடக்கம், செயற்பாடுகளை மாற்ற இயலாது. வலைப்பதிவு என்பது தனி மனித உணர்வுகள், சமூகத்தின் எதிரொளிப்பே. எனவே, தமிழ்ப்பதிவுகள் அதிர்ச்சி அளிப்பது போல் தோன்றினால் நிகழ் உலகச் சமூகமும் அவ்வளவு அதிர்ச்சிக்குரியது என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். சமூகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான பல கருவிகளில் ஒன்று தான் இணையம்.

* இது வரைக்கும் பொறுமையாகப் படித்து இந்த இடுகையில் எத்தனை smileyகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்பவர்கள் வலைப்பதிவுக்கு நிறைய மறுமொழிகள், வருகையாளர்கள் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன் !


Comments

9 responses to “என் வலைப்பதிவுப் போக்குகள்”

 1. 17 smileyகள், அதோட 4 சோக முகங்கள். 🙂

  உங்கள் வாழ்த்து பலிக்குதா ன்னு பார்க்கலாம். 🙂

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  கலை, நகைமுகங்கள் எண்ணிக்கை தப்பு. சோகமுகங்கள் எண்ணிக்கை சரி 🙂 அதனால் வாழ்த்து பாதி தான் பலிக்கும் 🙂 ஆனா, அதுக்கு முதல்ல நீங்க கொஞ்சம் புது இடுகைகள் எழுதணும். அப்புறம், நானே வேற வேற பேர்ல திரும்பத் திரும்ப வந்து மறுமொழி போடுறேன் 🙂

 3. —அதுவும் seriousஆன இடுகைகள் வந்தால் படிக்க அயர்ச்சியாய் இருக்கிறது. நானும் ஒரே நாளில் 4,5 இடுகைகளைப் போட்டுத் தாக்குகையில் இதை நினைத்துத் தயங்குவது உண்டு. ஆனால், எல்லா நாட்களும் எழுத மனநிலை வாய்க்குதில்லை. வாய்க்கையில் ஒன்றோடு நிறுத்த ஒப்புவதில்லை—

  ஆஹா! 🙂

  —திரைப்பட, இசை, நூல் விமர்சனங்கள் எழுதும் எண்ணம் இல்லை.—

  🙁

  இந்த ஒரு வரிகளைத் தொகுத்தாவது போட்டு வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
  ————
  ரொம்ப வெளிப்படையா பேசி இருக்கீங்க!

  —எத்தனை smileyகள் இருக்கின்றன—

  கண்ணடிப்பு – ரெண்டு (என்பதால் வ.வா.சங்கப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம் 😛

 4. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  பாலாஜி –
  //இந்த ஒரு வரிகளைத் தொகுத்தாவது போட்டு வைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்//
  எல்லாத்தையும் மையப்படுத்த வேண்டாம் என்று twitter போன்ற பல இடங்களில் சிதற விட்டு எழுதினால் திரும்ப மையப்படுத்தக் கேட்கிறீர்கள் 🙂 முயல்கிறேன்.

 5. சுயபுராணமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.

  கடைசி சில பத்திகளை தவிர்த்திருக்கலாம். உங்கள் மீது ஏற்கனவே இருக்கும் ‘கருத்து கந்தசாமி’ பிம்பத்தை அவை அதிகப்படுத்துகிறது 🙂

 6. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  முதல் முறையாக என் பதிவில் மறுமொழி இட்டிருக்கும் லக்கிலுக்கை வருக வருக என்று வரவேற்கிறேன் 🙂

  கொஞ்சம் கருத்து கூடத் தான்..ஆனா, அதை எழுதுறதுக்குத் தான நாம வலைப்பதிவே வைச்சிருக்கோம் 🙂

 7. சாய் ராம் Avatar
  சாய் ராம்

  /////கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது போகிறது. ஆனால், இதனால் பெற்ற அறிவு, பயன் என்ன என்றால் ஏமாற்றமாக இருக்கிறது. பல சமயங்களில் தவறாமல் குமுதம், விகடன் படிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று புரியவில்லை. ஒரு வேளை இந்த நேரத்தை, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் செலவழித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்குமோ?/////

  – இது முற்றிலும் உண்மையான கேள்வி. பத்திரிக்கைகளை தொடர்ந்து படிப்பதால் பத்திரிக்கை trend சார்ந்த நிகழ்வுகளை updatedயாக வைத்திருக்கலாமே ஒழிய, நமக்கு எவ்வளவு தூரம் தனிப்பட்ட வகையில் நன்மை என்பது எண்ணி பார்க்க வேண்டிய ஒன்று.

  தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது தான் இதற்கு தீர்வு. இணையத்தில் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது என லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தால் அந்த லிஸ்ட் எடுக்கும் பணியே வருடக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும். (?) அதனால் எல்லாவற்றிற்கும் நேரகெடு என நமது மணித்துளிகளை சிக்கனமாக செலவழித்து கொள்ள வேண்டியது தான்.

  நாம் எதற்கு எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது நமது வாழ்க்கை குறித்தான புரிதலில் உள்ளது. கிராமத்தில் வாழும் ஒருவர் தினமும் காட்டுப்பகுதியில் ஆற்றங்கரையோரமாய் மணிக்கணக்கில் தனியாய் அமர்ந்து இருப்பார். பள்ளிக்கூட காலகட்டத்தில் தொடங்கிய இப்பழக்கம் முதுமை வரை தொடர்ந்தது. ஒரு நாளும் அவர் அதற்காக வருத்தபட்டதில்லை.

  இணையத்தில் ஒரு சொல்லாக்கம் ஆங்கிலத்தில் படித்தேன். ஆங்கிலத்தில் உருவாக்கபட்டிருந்த அந்த சொல்லை மறந்து விட்டேன். அதாவது ஓர் ஆய்வின் முடிவில் இணையத்தில் உலா வருபவர்கள் முக்கால்வாசி பேர் குறிக்கோள் இல்லாமல் உள்ளே பக்கங்களுக்கு பக்கம் தாவி கொண்டிருக்கிறார்கள். பல பேரின் தினசரி வாழ்வின் சில மணி நேரங்களை காலி செய்யும் இந்த பழக்கத்திற்கு ஒரு பெயர் வைத்திருந்தார்கள் விஞ்ஞானிகள்.

  ஆக பழமொழியை தான் மேற்கோள் காட்டுவேன்.
  ‘களவும் கற்று மற.’
  ‘மிஞ்சினால் அமுதும் விஷம்.’

  ((ரவி சங்கர் உங்கள் தமிழ் மிக அழகாக இருக்கிறது. வலைப்பதிவு உலகத்தில் உங்கள் எழுத்துகளில் உள்ள தொழில்நுட்ப அறிவை விட இந்த மொழி செறிவு தான் உங்களுக்கு பெரிய பக்க பலம்.))

 8. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  //தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது தான் இதற்கு தீர்வு. இணையத்தில் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது என லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தால் அந்த லிஸ்ட் எடுக்கும் பணியே வருடக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும். (?) அதனால் எல்லாவற்றிற்கும் நேரகெடு என நமது மணித்துளிகளை சிக்கனமாக செலவழித்து கொள்ள வேண்டியது தான்.
  //

  4,5 ஆங்கில வலைப்பதிவுகளைத் தவிர பிறவற்றை நான் ரீடரில் படிப்பதில்லை. அவையும் தகவல் சார்ந்தவை. தற்போது, தமிழ் வலைப்பதிவுகள் வாசிப்பு பெரும்பாலும் தகவல் சார்ந்ததாய் இல்லை. தமிழ் அச்சு இதழ்களில் வரும் படைப்புளை ஒத்தே பெரும்பாலும் இருக்கிறது. தமிழ் இணையம் வளர்ந்து தகவல் சார்ந்ததாய் மாறி, நமக்கு வேண்டிய எந்த ஒன்றைப் பற்றியும் தேடித் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம் என்னும் நிலை வந்தால் தமிழில் கண்டதையும் படித்து நேரம் போக்குவது குறையும் என்று நினைக்கிறேன்.

  //இணையத்தில் ஒரு சொல்லாக்கம் ஆங்கிலத்தில் படித்தேன். //

  நானும் அந்த ஆய்வைப் படித்திருந்தேன். எனக்கும் பெயர் மறந்துவிட்டது. ஆனால், தமிழில் இதை “வெட்டி உலாவல்” குறிப்பிடும் வழக்கம் உண்டு 🙂

  //ரவி சங்கர் உங்கள் தமிழ் மிக அழகாக இருக்கிறது. வலைப்பதிவு உலகத்தில் உங்கள் எழுத்துகளில் உள்ள தொழில்நுட்ப அறிவை விட இந்த மொழி செறிவு தான் உங்களுக்கு பெரிய பக்க பலம்.//

  உங்களைப் போன்ற அனுபவமுள்ளோர் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இன்னும் உயிர்ப்புடனும் இயல்பாகவும் எழுத நிறைய முன்னேற வேண்டி இருப்பதாக உணர்கிறேன். தமிழ்நாட்டு வெளியே தொடர்ந்து 4 ஆண்டுகளாய் இருப்பதால் நல்ல தமிழ் உரைநடை வாசிப்பு குறைந்திருக்கிறது. சில சமயம் நான் எழுதியவற்றை திரும்ப எடுத்துப் பார்த்தால் ஆங்கிலச் சொற்றொடர் அமைப்புகளின் நேரடித் தமிழாக்கமாக இருக்கிறது
  🙁

  உண்மையிலேயே என்னுடைய நுட்ப அறிவு சுழியத்துக்கு அருகில் தான். ஆனால், அதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அதைத் தமிழிலும் எழுதி வைப்பதால், நிறைய பேர் என்னை நுட்பக் காரன் என்று நினைத்துக் கொள்கிறார்கள் 😉

  உங்களுடைய விரிவான மறுமொழிகள் ஊக்கம் அளிக்கின்றன. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

 9. //இணையத்தில் ஒரு சொல்லாக்கம் ஆங்கிலத்தில் படித்தேன். //
  Aimless surfing?