தமிழ் சோறு போடும்

தமிழ் – இந்தி – ஆங்கிலம் தொடர்புடைய உரையாடல்கள் எங்கு வந்தாலும் எட்டிப்பார்க்கும் ஒரு கருத்து:

“தமிழ்நாட்டுக்கு இந்தி தேவை இல்லை. அதனால் நாங்கள் படிக்கத் தேவை இல்லை. வேலைவாய்ப்புகள் / பொருளீட்டலுக்கு ஆங்கிலம் தேவை. அதனால் படிப்போம். பண்பாடு பேண தாய்மொழி / தமிழ் தேவை”

“சோற்றுக்கு ஆங்கிலம், தனி மனித உணர்வுகளுக்கு, பண்பாட்டுக்குத் தாய் மொழி / தமிழ்” என்ற மயக்கம் தரும் கருத்தைக் கேள்வி இன்றி பலரும் சொல்லவும் ஏற்றும் வருகிறார்கள். இதனால் தான் “தமிழ் ஒரு உதவாக்கரை மொழி” போன்ற சொல்லாடல்களும், “தமிழ் படித்து என்ன பயன்” போன்ற கேள்விகளும் வருகின்றன.

உண்மையில், ஆங்கில அறிவால் மட்டுமே ஈழம், தமிழ்நாட்டில் சோறு உண்பவர் எத்தனை பேர்? அரசு, தனியார் பணிகளில் வெள்ளைச் சட்டை வேலை பார்ப்போர் ஒரு பகுதியினருக்கும் பிற மாநிலங்கள், நாடுகள் போவோருக்கும் ஆங்கிலம் தேவைப்படும். முழுக்க ஆங்கிலம் பேசா தென்னமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்குப் போவோருக்கு அந்த ஆங்கிலமும் தேவை இல்லை.

ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ உழவர்கள், சிறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள், பெரு வணிகர்கள், கலைஞர்கள் வாழவில்லையா? ஆங்கில மொழியறிவு கூடுதலாக சில பலன்களைப் பெற்று தரலாம். நடப்பு உலகில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் மறுக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தின் நன்மையை விளக்கும் பொருட்டு மற்ற மொழிகளின் பொருளாதார முக்கியத்துவத்தை குறைத்துச் சொல்வது தவறு.

பொருள் ஈட்டுவதற்கு எத்தனையோ வழிகளும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எத்தனையோ காரணங்களும் உள்ளன. அதற்கு தமிழே / தாய்மொழியே / ஒரு மொழியே போதும். பிற திறன்கள் உள்ள நிலையில், தேவைப்படும் மொழியறிவை ஒரு சில மாதங்களில் பெற்றுக் கொள்ள இயலும்.

தமிழும் சோறு போடும். தமிழ் சோறும் போடும்.


Comments

6 responses to “தமிழ் சோறு போடும்”

  1. :).

  2.  Avatar
    Anonymous

    எனக்குதெரிந்து வீட்டிலும் வெளியிலும் பீட்டர் விடும் கும்பல்களுக்கு மட்டும்தான் தமிழ் தவிர கூடுதல் மொழிகள் தேவைப்படுகிறன . . சில சமயங்களில் தொழில்நுட்பம்/அறிவியல்/மருத்துவம் போன்ற உலகளாவிய தொடர்பு தேவைப்படும் துறையினருக்கு ஆங்கில உபயோகப்படும் . .ஆனால் நம்மூரிலேயே வேலை/வியாபாரம் செய்வோருக்கு தமிழே போதும் . .

  3. நோர்வேயில் மருத்துவம் போன்ற மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டிய படிப்புக்கு கட்டாயமாக அவர்கள் தாய்மொழியில் கற்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. இது எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

  4. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    இளா – புன்னகையின் மர்மம் என்ன 🙂

    anonymous – முழுக்க உடன்படுகிறேன்.

    கலை – இங்கு ஆங்கிலம் தேவையில்லை என்பதை விட உதவாது எனலாமோ 🙂

  5. K.anbarasu Avatar
    K.anbarasu

    Dear Dr.Ravisankar,
    Brief account on myself : Name: K.Anbarasu; Occupation: Academician(Lecturer); Place of Work : Department of Geology, Periyar University, Salem.
    By chance, I could see your blog today and impressed by its content. Please mail your e-mail Id so that I can discuss some of the issues related to Thamizh Language and Thamizhan attitudes. I could see the brilliant thamizh young minds but they have to be properly organized and to be streamlined in a right right direction.

    Congrats for your right kind of attitude and right effort to enrich thamizh language by your contribution. Certainly I would like to extend my hands to strength your efforts by many ways. Let me discuss it through mail.

    Anbudan
    Anbarasu

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நன்றி, திரு. அன்பரசு. கண்டிப்பாக உங்களுக்கு மடல் எழுதுகிறேன். ஆர்வமும் திறமும் உள்ள இளைஞர்களை வழிப்படுத்துவதற்கான அனுபவமும் பக்குவமும் உள்ள மூத்தவர்களின் பங்கு முக்கியமானது.

    அப்புறம், நான் இன்னும் மாணவன் தான். எனவே, Dr. என்று அழைக்க வேண்டாம் 🙂