டெங்கு சிகிச்சை

டெங்குக்கு மருந்தே இல்லை என்கிறார்கள். பிறகு மருத்துவமனைக்கு அழைத்து என்ன தான் சிகிச்சை அளிப்பார்கள்?

1. காய்ச்சல் என்று வருபவர்களுக்கு முதலில் இரத்தப் பரிசோதனை செய்வார்கள். நோய் தாக்கிய ஒருவருக்கு டெங்கு இருக்கிறதா என்று தெரிய மூன்று நாட்கள் ஆகும். அது வரை உடல்வலி போக்க paracetamol தருவார்கள். தக்க நீராதாரம் உண்ண அறிவுறுத்துவார்கள். தீவிர டெங்கு தாக்குதல் வந்தால் என்னனென்ன அறிகுறிகள் இருக்கும் என்று எடுத்துச் சொல்லி, இந்த நிலை தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று எடுத்துச் சொல்வார்கள்.

இந்த அறிகுறிகளாவன:

* கடும் தலைவலி, எலும்பு/மூட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி, வாந்தி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் முதலியன.

2. இரத்தப்பரிசோதனையின் அடிப்படையில் உங்களுக்கு வந்திருப்பது ஆபத்தற்ற முதல் நிலை டெங்குவா (90% பேருக்கு) ஆபத்தான இரண்டாம் நிலை டெங்குவா (10% பேருக்கு) என்று அறிவார்கள். முதல் நிலை என்று கண்டறிந்தால் மீண்டும் மேலே உள்ள வலி நீக்க மருந்து, அறிவுரைகளைச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இரண்டாம் நிலை டெங்கு என்றால் உடனே உள்நோயாளியாக அனுமதிப்பார்கள்.

* உங்கள் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு முதலிய முக்கிய செயற்பாடுகளைக் கவனிப்பார்கள்.

* வலி நீக்க மருந்துகள் தருவார்கள்.

* தட்டணுக்கள் (platelets) எண்ணிக்கை 50,000க் கீழ் குறைந்தால் மாற்று இரத்தம் அளிப்பார்கள்.

* உடல் உறுப்புகளில் இரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்காணிப்பார்கள்.

* தொடர்ந்து saline ஏற்றுவதன் மூலம் உங்கள் உடலில் நீர்ச்சத்தைப் பாதுகாப்பார்கள்.

டெங்குவைக் குணப்படுத்தும் மாயமருந்து தான் இல்லையே தவிர, நிச்சயம் உங்கள் உயிர் காக்கும் இந்த ஆதரவுச் சிகிச்சை (supportive care) உண்டு. காய்ச்சல் வந்த உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வாருங்கள். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து இச்சிகிச்சையைப் பெற்றால் உயிர் இழப்பில் இருந்து தப்பிக்கலாம். டெங்குக்கு மருந்து இல்லை என்று எண்ணி வீட்டிலேயே கசாயம் குடித்தோ ஏமாற்று மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டோ சாகாதீர்கள்!

காண்க – முகநூல் உரையாடல்