பெண் பார்க்கப் போவது எப்படி?

திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி?

1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு செய்யலாம்.

2. கூட்டமாகச் செல்ல வேண்டாம். நம் பக்கத்தில் இருந்து முடிவெடுக்கக்கூடிய முக்கியமான உறவினர்கள் 4, 5 பேர் செல்லலாம். கண்டிப்பாக ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும். பல திருமணங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர் இருந்தால் நன்று. நிறைய பேர் சென்றால் பெண் வீட்டாருக்கும் ஏற்பாடு செய்வது சிரமம். அந்தப் பெண்ணுக்கு இதற்கு முன்னரே நிறைய வரன்கள் வந்து சென்றிருந்தால், நாம் படை சூழப் போவது அவர்களுக்குத் தர்ம சங்கடமான நிலையைத் தரும். பெண் நிச்சயமானால், அடுத்த முறை இன்னும் நிறைய பேரை அழைத்துச் சென்று முறைப்படி பேசும் சூழல் வரும். குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களை வைத்துச் சற்று கலகலப்பாக பேச்சை வளர்க்கலாம். வாயாடிப் பிள்ளைகள் விளையாட்டுத் தனமாகப் பேசி நமது மானத்தை வாங்கலாம் என்பதால் இதில் சற்று கவனம் தேவை 🙂

3. பை நிறைய பூ, பழம், இனிப்புகள் வாங்கிச் செல்லலாம். நாம் எவ்வளவு வாங்கிச் செல்கிறோம் என்பதை வைத்து நமது தாராள குணத்தை அளக்கக்கூடும்.

4. கோயில், உணவகம் போன்ற இடங்களிலும் பெற்றோர்கள் உடன் மட்டும் சென்று பார்க்கலாம். இதில் சற்று இறுக்கம் குறைவாக இருக்கும். எனினும், எல்லா குடும்பங்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வீட்டுக்கே சென்று பார்ப்பதால், நாமும் அவர்களின் பழக்க வழக்கங்கள், உறவு முறைகளை அறிந்து கொள்ள முடியும்.

5. பெண் பார்க்கப் போகும் அன்று நன்கு தூங்கி எழுந்து, சவரம் செய்து, நன்றாகத் துவைத்துத் தேய்த்த ஆடையை அணிந்து செல்லுங்கள். விரல் நகங்களை வெட்டிச் சென்றால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்று எனக்கு ஒரு தோழி சொன்னாள் 🙂 தேவைப்பட்டால், வாடகைக்காவது ஒரு வண்டி எடுத்து அலைச்சல், உளைச்சல் இல்லாமல் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள்.

6. தனியாக இல்லாவிட்டாலும், மற்றவர்கள் முன்னிலையிலாவது பெண்ணிடம் ஏதாவது பேச்சு கொடுக்க முயலுங்கள். எல்லா கேள்விகளுக்கும் பெற்றவர்கள் முந்திக் கொண்டு பதில் சொன்னாலும், விடாமல் பெண்ணிடமே பேச்சு கொடுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து நேராகப் பார்த்துப் பேசுங்கள். வள வள என்று பேசாமல் சுருக்கமாக, தெளிவாக பேசுவது நன்று. ஒரு சில நிமிடங்கள் பேசினாலும், பெண்ணைப் பற்றிய ஏதாவது ஒரு புரிதல் கிட்டும். பெண் பிடித்திருந்தால், அவர்களின் தொலைப்பேசி எண் கேட்டு வாங்கி மேலும் பேசிப் புரிந்து கொண்டு முடிவைச் சொல்லலாம்.

7. பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், ஆமாம் / இல்லை என்று பட்டெனச் சொல்லி விடாதீர்கள். உங்கள் பெற்றோர், பெரியவர்களிடம் பேசி விட்டுச் சொல்வதாகச் சொல்லுங்கள். வாக்கு கொடுத்து மீறுவது போல் ஆனால் சிக்கலாகும். நமக்குப் பிடிக்கும் பெண் ஊகிக்கவே முடியாத காரணங்களுக்காக நமது பெற்றோருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

8. தரகர் மூலம் ஏற்பாடு ஆன பெண் என்றால், இயன்ற அளவு தரகரை கழற்றி விட்டு விட்டுச் செல்லவும். இரண்டு பக்கமும் மாற்றி மாற்றிப் பேசி குழப்புவதில் தரகர்கள் வல்லவர்கள். எந்த அளவுக்கு நேரடியாகப் பெண் வீட்டாரிடம் பேசுகிறோமோ அந்த அளவு நல்லது.

9. பணம், வரதட்சணை முதலிய தீவிரமான கேள்விகளைத் தவிருங்கள். இது ஒரு அறிமுக சந்திப்பே.

10. ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்காதீர்கள். தேநீர், இனிப்புகள் மட்டும் சாப்பிடுங்கள். பெண் நிச்சயமான பிறகே விருந்து சாப்பிடுவது பல ஊர்களிலும் உள்ள முறை.

17 thoughts on “பெண் பார்க்கப் போவது எப்படி?”

  1. //ஒரு சில நிமிடங்கள் பேசினாலும், பெண்ணைப் பற்றிய ஏதாவது ஒரு புரிதல் கிட்டும். //

    Oh ! Good to know.

    1. good to knowவா? இதில ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே 🙂 ஏதாச்சும்னு தான் சொன்னேன். ஒன்னுமே தெரியாததுக்கு இது பரவால இல்லியா 🙂

    1. நிமல் இந்த வீடியோ முதலும் பார்த்தேன். வீடியோவில் அந்தப் பெண் பயங்கர சுயநலவாதி. அந்த மொட்ட பாஸூக்கு ஆப்புத்தேன். 😀

  2. Boss,

    Except 6th point I followed all others, but at last the girl rejected, though her parents were impressed by my family 🙁

    1. நண்பா, சோக முகம் எதுக்கு? அந்தப் பொண்ணுக்குக் கொடுத்து வைக்கலைன்னு போயிட்டே இருக்க வேண்டியது தான் 🙂

    1. ஒரு கல்யாணம் பண்ண அனுபவம் தானே இருக்கு 🙂

  3. இலங்கையில் இந்த வீடு சென்று பெண் பார்க்கும் படலம் எல்லாம் கிடையாது. பெண்ணைப் பார்க்கவேண்டும் என்று அடம் பிடித்தால் எங்காவது கோயிலிலோ அல்லது ஒரு உடுப்புக் கடையிலோ தூரத்தில் நின்று பார்க்கலாம்.

    பெண் வீட்டார் கொஞ்சம் முற்போக்கானவர்கள் என்றால் கொஞ்சம் அருகில் போய்ப் பேச அனுமதி கிடைக்கும். அம்புட்டுத்தேன் 😉

Comments are closed.