பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?

“பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் இட்ட பெயரே தர வேண்டும். அதுவே அவர்களுக்குத் தரும் மதிப்பு. தமிழில் பெயர் தருவது அவர்கள் அறிவைத் திருடுவது போல. கண்டுபிடிக்க வக்கில்லாத நாம் ஏன் பெயரை மட்டும் தமிழில் வைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகளைச் சில இடங்களில் கண்டேன்.

இச்சிந்தனை தவறு.

* கண்டுபிடிப்பின் பெயரில் கண்டுபிடித்தவர் பெயர், வணிக உரிமை பெற்ற பெயர் இருந்தால் மட்டுமே தமிழாக்கக்கூடாது. எடுத்துக்காட்டுக்கு, Diesel எல்லா மொழிகளிலும் Diesel தான். ஏனெனில், Diesel என்பது கண்டுபிடிப்பாளர் பெயர்.

* Computer is a thing that computes என்று ஆங்கிலம் அறிந்தவனுக்குப் புரியும். அது போல் கணினி என்றால் கணிப்பது / கணக்குப் போடுவது என்று தமிழனுக்கும் புரிவது முக்கியம்.

கண்டுபிடிப்புகளின் பெயர் காரணப்பெயராக இருந்தால் கண்டிப்பாகத் தமிழாக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, Petroleum = Petro (கல் / பாறை) + Oleum (நெய் / எண்ணெய்) என்பதைத் தாராளமாக கல்நெய் என்பது போல் தமிழாக்கலாம்.

* தமிழில் எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்பது இலக்கணம். எனவே, Bus போன்ற இடுகுறிப்பெயர்களையும், வாயில் நுழையாத பெயர்களையும் தமிழாக்கலாம்.

* அறிவியற் சிந்தனைகள், கோட்பாடுகள் எல்லா நாடுகள், மொழிகளுக்கும் பொதுவானவை. இவற்றுக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருப்பது உலக வழமையே.

21 thoughts on “பிற மொழியாளர் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர் தரலாமா?”

 1. தமிழிற்கினிய இரவி அவர்கள், நன்றாக சிந்தித்து பதிந்துள்ளார்.

  தமிழர் ஒவ்வொரும் பார்க்க வேண்டிய சிந்திக்க வேண்டிய ஒன்று.

  பதிந்த இரவி அவர்களுக்கு நன்றி.
  தங்களின் தொடுப்பை என் வலைப்பக்கத்தில் இணைத்துள்ளேன்.
  http://www.thamizhthottam.blogspot.com

 2. புருனோ, கலை – மகிழ்ச்சி.

  யுவராசன் – தொடுப்பு தந்ததற்கு நன்றி.

 3. மேற்கத்திய நாடுகளின் எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் சீனாக்காரன், கொரியாக்காரன், சப்பான்காரன் அனைவரும் அவரவர் மொழியிலேயே பெயர்வைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருப்பது உலக வளமையே! மேலும், அவ்வாறு சொல்லைப் படைக்கும் திறம் அந்தந்த மொழிகளுக்கு இருக்கின்ற தனிச் சிறப்பாகும்! அவ்வகையில், செம்மொழித் தகுதிகளான 11 தகுதிகளையும் ஒட்டுமொத்தமாகப் பெற்ற உலகின் ஒரே ஒரு மொழியாகிய நம் தமிழுக்கு இருக்கின்ற வளத்தையும், நுட்பத்தையும் கொண்டு எவ்வளவு சொற்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

  அருமையான இடுகை! நன்றி.

 4. கல்நெய் அல்லது கல் எண்ணை என்பதை விட பயனுக்கு வந்துவிட்ட பெட்ரோல் என்ற சொல் அனைவருக்கும் புரியும்.பல மொழிகளில் பெட்ரோல் என்ற் சொல்
  உள்ளது.தமிழின் பெருமையை நிலைநாட்டுகிறோம் என்று உருப்படாத
  யோசனைகளைக் கூற வேண்டாம்.
  சிலவற்றிற்கு அவை அறிமுகமாகும்
  போது உரிய தமிழ்ச் சொற்களைப்
  பயன்படுத்தலாம்.ஆனால் scanner என்பதை தடவி என்பது குழப்பத்தையே
  தரும்.

 5. periyar critic,

  bus வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே பேருந்து என்று சொல் வந்தது. இன்று ஒரு குழப்பமும் இல்லை.

  scanner = தடவி என்பது பொருத்தமான பெயராகத் தெரியவில்லை. வேடிக்கையான பெயர்களைச் சொல்லி தமிழாக்கத்தை நகைப்புக்குள்ளாவது விமர்சகர்களின் வழமையான வேலை தான்.

 6. ‘bus வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே பேருந்து என்று சொல் வந்தது. இன்று ஒரு குழப்பமும் இல்லை’

  தமிழ்நாட்டில் எத்தனை பேர் பேருந்து என்பதை பேச்சு வழக்கில்
  பயன்படுத்துகின்றனர்.பேருந்தில்
  பெரியார் மையப் பேருந்து
  நிலையம் என்று எழுதியிருந்தாலும்
  பெரியார் பஸ் ஸ்டாண்ட் என்றுதான்
  பொதுமக்கள் கேட்கிறார்கள்.ஸ்கூல்
  பஸ் என்பதுதான் புழக்கத்தில் உள்ளது,
  பள்ளிப் பேருந்து அல்ல.நான் கவனித்த
  அளவில் ஆந்திராவிலும்,கேரளாவிலும்,
  தில்லியிலும் பொதுமக்கள் பஸ் என்ற
  வார்த்தையைப் அதிகமாகவே பயன்படுத்துகின்றனர். ஒருவேளை ஹாலந்தில் பேருந்து என்ற சொல்
  அதிகமாக புழக்கத்தில் இருக்கலாம் :).

 7. periyar critic, தமிழ்ச் சொற்கள் குழப்பும் என்பது தான் நீங்கள் முன்வைத்த வாதம். பேருந்து நிலையம், அரசுப் பேருந்துகள் போன்ற சொற்கள் தாராளமாகவே தமிழ் ஊடகங்களில் புழங்குகின்றன. பேருந்து என்றால் என்னவென்று தமிழ்நாட்டில் எல்லாருக்கும் புரியும். இதில் ஒரு குழப்பமும் இல்லை. குழப்பம் வேறு. பேச்சுப் புழக்கம் வேறு.

  இன்னும் எத்தனையோ நல்ல தமிழ்ச் சொற்கள் ஈழத்தில், சிங்கை, மலேசியாவில் புழக்கத்தில் உள்ளன. அந்நாட்டு வானொலிகளைக் கேட்டுப் பாருங்கள். தமிழ்நாட்டில் இல்லை என்பதற்காக ஒதுக்கத் தேவை இல்லை.

 8. பேச்சு வழக்கிலும், ப்துவாக வண்டி என்று சொல்வது பெருவழக்கு. வண்டிலே ஏறுங்க. வண்டி புறப்படப் போகுது. இந்தி மொழியாரும் வண்டிக்கு நேர் ஒப்பான ‘காடி என்னும் சொல்லைத்தான் பயன்படுத்துகின்றனர். அது பேருந்தாக இருந்தாலும், தொடருந்தாக இருந்தாலும் தானுந்தாக இருந்தாலும். இங்கே கனடா அமெரிக்காவிலும் யாரும் automobile என்னும் சொல்லை பேச்சு வழக்கில் சொல்வதில்லை. Car என்னும் சொல் carriage என்பதன் சுருக்கம்,. நம் வண்டி போல் பொதுச்சொல். தொடர்வண்டி (தொடருந்து, ரயில்) “பெட்டி”களைக் கூட carriage, car என்று சொல்வார்கள். பேச்சு வழக்கு என்பது சற்று வேறாக இருப்பது எல்லா மொழிகளுக்கும் இயல்பு.

  செல்வா

 9. //தமிழ்நாட்டில் எத்தனை பேர் பேருந்து என்பதை பேச்சு வழக்கில்
  பயன்படுத்துகின்றனர்.//

  சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

  ஆனால் அதை அதிகரிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை

 10. தமிழாக்கலாம் என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் அந்த சொற்கள் அகராதிகளில் மட்டும் தங்குவாதாக இருப்பின் அந்த மொழியாக்கத்தின் நேர விரையத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  {{Petroleum = Petro (கல் / பாறை) + Oleum (நெய் / எண்ணெய்) என்பதைத் தாராளமாக கல்நெய் என்பது போல் தமிழாக்கலாம்.}} இங்கு தான் இடிக்கிறது. ‘Oleum’ என்ற சொல்லிற்கு அர்த்தம் எண்ணெய் அல்ல. பார்க்க:

  http://www.answers.com/oleum

  அது மட்டுமல்ல ஏன் பாறை எண்ணெய் என்று வைக்கக் கூடாது?
  சு.ப. வி. ஐயா சொன்னது Petrol = கல்நெய்.சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் = கல்நெய் (?)

  Tubelight என்ற சொல்லுக்கு வாழைத்தண்டு விளக்கு என்றாறே அதற்கு குழாய் விளக்கு என கூறலாமா?

  Soap என்ற சொல்லுக்கு வழவி என்றும் Shampoo என்ற சொல்லுக்கு கழுவி [உங்கள் கருத்துப்படி அது washer]என்றும் பேசப்பட்டதே விஜய் டி.வி. யில்?[தமிழ் எங்கள் மூச்சு]

  மொழி பெய்ர்த்தல் சரி ஆனால் எந்த சொல்லை பயன்படுத்துவது என்ற நடைமுறைச் சிக்கல் தான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

 11. முரளி, தமிழாக்கம் சரியா தவறா என்பதே உரையாடல். கொள்கை சரி என்ற தெளிவு இருந்தால் வழிமுறைகளையும் சரியாகத் தேர்ந்தெடுக்கலாம். தவறான தமிழாக்கங்கள், எடுத்துக்காட்டுகள் இருப்பதை எல்லாரும் அறிவோம். இயன்றவரை திருத்திப் பயன்படுத்துவோம். தவறுகள் வருகின்றன என்பதற்காக முயலாமல் இருக்க முடியாது.

  போன நூற்றாண்டில் ஊடகங்கள் ஒரு சிலரின் கையில் இருந்தன. அதனால், சொற்கள் அகரமுதலிகளில் உறங்கின. இன்று இணையத்தின் வரவால், எல்லா துறை பற்றியும் ஒவ்வொருவரும் தமிழில் எழுதும், பேசும் நிலை வந்திருக்கிறது. சொற்களின் தேவையாலேயே இதுவரை தமிழில் எழுதப்படாத விசயங்கள் எவ்வளவோ உள்ளன.

 12. //மொழி பெய்ர்த்தல் சரி ஆனால் எந்த சொல்லை பயன்படுத்துவது என்ற நடைமுறைச் சிக்கல் தான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.//

  எதை வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். – தமிழ் சொல் பயன்படுத்துவது தான் முக்கியம்

  பெட்ரோல், கேஸ் என்று இரு பதங்கள் பயன்படுத்தும் நடைமுறைச் ஏன் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தவில்லை என்று சிந்தித்து பார்த்தீர்களா

 13. கொழுப்பு பற்றி சில விஷயங்கள்

  ஐரோப்பியர்கள் பெறும்பாலும் விலங்கிலிரிந்து பெறப்படும் கொழுப்பையே பயன்படுத்தினார்கள்

  அவை wax என்றே அழைக்கப்பட்டன. (அந்த குளிருக்கு அவை திட பதத்தில் இருந்தன – டெல்லியில் டிசம்பரில் தேங்காய் எண்ணை கூட திடமாகத்தான் இருக்கும்)

  அதே நேரம் இந்தியர்கள் தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட ”கொழுப்பை” உபயோகித்தனர்.

  அவை எண்ணை என்று அழைக்கப்பட்டன

  Oleic acid, linoleic acid, linolenic acid ஆகியவை சொற்களின் மூலத்தை பாருங்கள்

  எண்ணெய், நெய், கொழுப்பு, wax, ஆகியவற்றின் அடிப்படை அவை combustible என்பதே.

  அதற்கு காரணம் அவற்றில் இருக்கும் Double Bond 🙂 🙂

  கல்நெய் ஆகட்டும், பாறை எண்ணெய் ஆகட்டும் அர்த்தம் ஒன்றே …

  cere என்றால் wax என்று அர்த்தம்

  அந்த காலத்தில் உங்களின் கையெழுத்தை (அல்லது கைநாட்டை) உடன்பாடுகளில் waxல் பதிக்க வேண்டும். (இது தான் பின்னர் அரக்கு சீல் ஆக மாறியது)

  ஆனால் நீங்கள் நம்பிக்கை ஆனாவர் என்றால் இப்படி செய்ய வேண்டாம்

  எனவே நம்பிக்கை ஆனாவர்களை without wax – sin – cere என்று அழைத்தார்கள்.

  yours sincerely என்று எழுதுவதன் அர்த்தம் – உங்கள் நம்பிக்கையுள்ள என்பது என்று தெரியும் தானே

 14. //அது மட்டுமல்ல ஏன் பாறை எண்ணெய் என்று வைக்கக் கூடாது?
  சு.ப. வி. ஐயா சொன்னது Petrol = கல்நெய்.சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் = கல்நெய் (?)//

  கல்நெய் என்பது உச்சரிக்க எளிது. (தேமா தானே)

  பாறை எண்ணெய் என்று உச்சரிக்கும் நேரத்தில் கல்நெய் கல்நெய் என்று இருமுறை உச்சரிக்கலாம். அல்லது எழுதலாம்

 15. //Tubelight என்ற சொல்லுக்கு வாழைத்தண்டு விளக்கு என்றாறே அதற்கு குழாய் விளக்கு என கூறலாமா?//

  கூறலாம்.

  நீங்கள் குழல் விளக்கை பார்த்திருக்கீர்களா

  வாழைத்தண்டை பார்த்திருக்கிறீர்களா

  அதன் பின்னரும் ஏன் சந்தேகம்

 16. //Soap என்ற சொல்லுக்கு வழவி என்றும் Shampoo என்ற சொல்லுக்கு கழுவி [உங்கள் கருத்துப்படி அது washer]என்றும் பேசப்பட்டதே விஜய் டி.வி. யில்?[தமிழ் எங்கள் மூச்சு]

  மொழி பெய்ர்த்தல் சரி ஆனால் எந்த சொல்லை பயன்படுத்துவது என்ற நடைமுறைச் சிக்கல் தான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.//

  இதில் என்ன சிக்கல்.

  நீங்கள் உங்களுக்கு பிடித்த சொல்லை பயன்படுத்துங்கள்

  comment என்று ஒரு சொல்லும் feedback என்று ஒரு சொல்லும் இருக்கிறதே. இதில் உள்ள நடைமுறைச்சிக்கலால் நீங்கள் இந்த இரு சொற்களையும் பயன்படுத்தாமல் opinion என்றா கூறுகிறீர்கள்

 17. எனது பெயர் Jawahar என வைத்து கொள்வோம். இதை எப்படி தமிழ் மொழியில் எழுவது.. ஒலிக்கு வரி வடிவம் கொடுப்பதே மொழி. Ja என்ற ஒலிக்கு தமிழில் வரி வடிவம் இல்லையே.. இது எனது நீண்ட நாள் ஐயம்.. நான் நினைப்பது என்ன என்றால் தமிழ் எழுத்துகளில், எல்லா ஒலி வடிவத்திற்கும் வரி வடிவம் கொடுக்குமாறு மாற்றம் கொண்டு வர வேண்டும். . நாம் ஒரு பெயரை தமிழில் எழுதும் போது அதன் ஒலி மாறாமல் இருக்க வேண்டும். .

Comments are closed.