நாடு நல்ல நாடு – நெதர்லாந்து

1. Netherlands என்றால் தாழ்வான நிலம் என்று பொருள். எனவே நெதர்லாந்தை தாழ்நாடு என்றும் தமிழில் சொல்லலாம். உலக வெப்பமாதல் காரணமாக கடல் நிலைகள் உயர்ந்தால் உடனடியாக மூழ்கும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. அடிக்கடி கடல் குறித்த பிரச்சினைகள், கடற்பயணங்கள் என்று இருந்ததால் டச்சு நட்டவர் கப்பல் நுட்பம், பாலம் கட்டும் நுட்பம் ஆகியவற்றில் பழங்காலம் தொட்டே சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

2. The Netherlands என்பதே முழுமையான சரியான பெயர். மொத்த நாட்டையும் ஹாலந்து என்று குறிப்பிடுவது பிழையானது. தெற்கு ஹாலந்து, வட ஹாலந்து என்று இரு மாகாணங்கள் இருக்கின்றன. தற்போதைய நெதர்லாந்து உருவாவதற்கு முந்தைய வரலாற்றுக் காலத்தில் இவ்விரு மாகாணங்கள் வல்லமை பெற்று இருந்ததால் இந்தப் பெயர்களால் தொடர்ந்து குறிப்பிடப்படும் வழக்கம் வந்தது.

3. நெதர்லாந்தின் மொழி Nederlands (நீடர்லான்ட்ஸ்). ஆங்கிலத்தில் Dutch (டச்சு). பெல்ஜியம், சூரினாம் ஆகிய நாடுகளிலும் டச்சு பேசப்படுகிறது. மொழியைத் தொட்டு டச்சு மக்கள், டச்சுப் பண்பாடு என்று குறிக்கும் வழக்கம் இருக்கிறது. தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்று சொல்வது போல். தமிழில் இருக்கிறாயா என்று கேட்பது எப்படிப் பிழையோ அது போல் டச்சில் இருக்கிறாயா என்று கேட்பதும் பிழை.

4. இங்கு பெரும்பாலான மக்களுக்கு, கடைகளில், அலுவலகங்களில், கல்லூரியில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச இயலும். அதனால், டச்சு தெரியாமல் கூட வாழ இயலும். இது பிற ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றின் நிலையிலிருந்து பெரிதும் மாறுபட்டது.

5. நெதர்லாந்து, பாராளுமன்ற மக்களாட்சியும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட முடியாட்சியும் உள்ள நாடு. ஒரு இராணியும் அவருக்கு நல்ல மக்கள் செல்வாக்கும் உள்ளது. ஆனால், நேரடி அரசியலில் அவ்வளவு செல்வாக்கு இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சார்பாளர்களே (representatives) அரசியல் முடிவுகளை எடுக்கிறார்கள்.

6. இந்தோனேசியா, சூரினாம் ஆகிய நாடுகளை தம் குடியிருப்புக்களாக நெதர்லாந்துக்காரர்கள் கொண்டிருந்தனர். சூரினாம் நாட்டில் பணி செய்வதற்காகப் பல ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவின் நடுநிலப் பகுதிகளில் (பீகார், உத்தர பிரதேசம்) இருந்து கொண்டு செல்லப்பட்டனர். முதல் ஓரிரு தலைமுறைகள் கூலிகளாக இருந்தவர்கள் பிறகு நன்கு படிக்கத் தொடங்கியதுடன் வணிகத்திலும் முதன்மை பெற்றார்கள். அங்கிருந்து குடியிருப்புக் காலத் தொடர்பைப் பின்பற்றி, நெதர்லாந்தில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான சூரினாம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் இந்தியத் தொடர்பு இந்திப் படங்கள், இந்து வழிபாட்டு முறை என்ற அளவில் இருக்கிறது. மூத்தவர்கள் இந்திய நிகழ்வுகளில் ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள். மற்றபடி, நன்றாக டச்சு பேச அறிந்திருப்பதுடன், சிந்தனை, வாழ்க்கை முறை, ஆகியவை டச்சுப் பண்பாட்டுடன் இசைந்து இருக்கிறது.

7. Shell, Unilever, DSM, Philips போன்று நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள் டச்சு நிறுவனங்களே. பால், வேளாண் பொருள், மலர் உற்பத்தி/ஏற்றுமதியில் இந்நாடு முன்னணி வகிக்கிறது.

8. காற்றாலைகள், துலிப் மலர்த்தோட்டங்கள், மரக் காலணிகள் ஆகியவை நெதர்லாந்தின் மிகப் பரவலாக அறியப்பட்ட சின்னங்களாக இருக்கின்றன. அந்நியன் திரைப்படத்தில் வரும் ”குமாரி..” பாடல்காட்சி நெதர்லாந்து மலர்த்தோட்டங்கள், காற்றாலைகள் பின்னணியில் படமாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க பாடல்.

9. மிகவும் முற்போக்குக் கொள்கை உடைய நாடு. பாலியல் தொழில், மித போதை பொருட்கள் விற்பனை, கருணைக் கொலை, ஓரினத் திருமணங்கள் ஆகியவை இங்கு சட்டப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளன. சிகப்பு விளக்குப் பகுதிக்கு எந்த போதைப் பொருள் கடை வழியாகப் போகலாம் என்று காவல் துறையினரே வழி காட்டுவார்கள் 😉

10. பல புகழ்பெற்ற கலைஞர்கள் இங்கு பிறந்துள்ளனர். குறிப்பிடத்தக்க ஓவியர்கள் சிலர் – Rembrandt, Vincent Van Gogh.

11. உலகிலேயே உயரமானவர்கள் டச்சுக்காரர்கள் தான் ! ஆண்களின் சராசரி உயரம் – 1.85 மீட்டர். பெண்களின் சராசரி உயரம் – 1.70 மீட்டர்.

12. நெதர்லாந்து வந்தால் முதலில் கவனிக்கக்கூடியது – எங்கும் மிதிவண்டி எதற்கும் மிதிவண்டி – என்பதே. சீமான் முதல் சோமன் வரை, பேராசிரியர் முதல் மாணவர் வரை எந்த ஏற்றத்தாழ்வும் இன்றி அன்றாடப் பயணங்களுக்கு மிதிவண்டிகள் பயன்படுத்துகிறார்கள். நாடு முழுக்கவுமே மிதிவண்டியில் சுற்றி வரலாம். தனியாக மிதிவண்டிப் பாதைகளும் உண்டு. இதே போல் நாடு முழுக்க நீர்வழியாகவும் சுற்றி வர முடியும் என்பது தனிச்சிறப்பு.


இணையத் தமிழில் அறிவு சார் உள்ளடக்கம் குறைவு. அந்தந்த நாடுகளில் உள்ளவர்கள் அந்தந்த நாடுகளைப் பற்றிய சுவையான, முக்கியமான குறிப்புகளைத் தரும்போது அது ஒரு முக்கியமான தகவல் ஆதாரமாக குவிக்கப்பட முடியும்.

தமிழ்ப் பதிவுலகில் எது எதுக்கோ தொடர்வினைகள் (meme) வருகின்றன. உருப்படியாய் ஒன்று செய்து பார்க்கலாமே என்ற நப்பாசை / பேராசையில் அவரவர் இருக்கும் – நாடு நல்ல நாடு – குறித்து எழுத இவர்களை அழைக்கிறேன். Formalஆக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் நாட்டில் நீங்கள் ரசித்தவை, அறிந்தவை, நொந்தவை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

1. சயந்தன் (சுவிட்சர்லாந்து. ஒலிப்பதிவாய்ப் போட்டாலும் சரி :))
2. கலை (நோர்வே 1, நோர்வே 2, நோர்வே 3, நோர்வே 4, நோர்வே 5, நோர்வே 6)
3. திரு (பெல்ஜியம்)
4. மலைநாடான் (சுவிட்சர்லாந்து – அல்ப்ஸ் மலைச் சாரல்களில்)
5. மயூரேசன் (இலங்கை)
6. நற்கீரன் (கனடா)
7. சாரு (ஐக்கிய இராச்சியம்)
8. பாலாஜி (ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்)

உங்கள் பதிவுக்கான இணைப்புகளை விக்கிபீடியாவில் சேர்க்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்பதை கோடைக்காலச் சலுகையாக அறிவிக்கிறேன் 😉

11 thoughts on “நாடு நல்ல நாடு – நெதர்லாந்து”

 1. ஓரினத் –> தற்பால் ?

  Anglo-Dutchக்கும் வெறும் டட்சுக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

 2. home sex, same sex – தற்பால்னும் சொல்லலாம். ஆனால் ஓரினம்னு சொல்றது கூடுதலா வழக்குல இருக்குன்னு நினைக்கிறேன்.

  anglo-dutch குறித்து எனக்கு இதுவரைக்கும் தனிப்பட்ட அளவில தெரில. விக்கிபீடியாவுல anglo-dutch போர் குறித்து தான் இருக்கு. ஆனா, டச்சு மொழி, டச்சு மக்கள் இரண்டுமே ஆங்கிலக் கலப்பற்ற தனித்துவமான இனம், மொழின்னு சொல்ல முடியும்.

 3. ரவி,
  நல்லதொரு சங்கிலிப் பதிவு… ஏற்கனவே துளசி அக்கா நியூஸி பற்றி எழுதியது, ஆஸ்திரேலியா பற்றிய கூட்டுப் பதிவு, மலேசியா பற்றிய கூட்டுப் பதிவு – இதெல்லாம் தெரியும் தானே. இவற்றிலிருந்தும் விக்கிக்கு குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாமே!

  ஆஸ்திரேலியா, மலேசியா போல, நிறைய தமிழ்ப் பதிவர்கள் இருக்கும் நாடுகளான துபாய், சிங்கை, அமெரிக்கா வாழ் பதிவர்களும் கூட்டுப் பதிவு தொடங்கினால் இன்னும் நல்லா இருக்கும்..

  விட்டுப்போனவர்களில் சிலர்:
  1. நாகை சிவா – சூடான்
  2. பெருசு – பெரு
  3. கப்பிபய – உருகுவே
  4. யோகன் பாரிஸ் – பிரான்ஸ்
  எல்லா நாடும் பற்றி தெரிந்து கொள்ள நல்லா இருக்கும்..

 4. பொன்ஸ்,
  மலேசியா கூட்டுப் பதிவு மட்டும் தான் தெரியும். பிறவற்றையும் பார்த்து விக்கியில் இருந்து வெளி இணைப்பாகத் தருகிறேன்.

  எனக்கு கொஞ்சமாவது தெரிந்தவர்களைத் தான் அழைத்து இருக்கிறேன். ஒருவர் தொட்டு ஒருவராக இன்னும் சில நாட்டைச் சேர்ந்தவர்களாவது எழுதுவார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்.

  நீங்க சொன்ன நாடுகளுக்கு நிச்சயம் கூட்டுப் பதிவு அவசியம்.

 5. ரவி!
  மிகவும் நல்ல ஒரு சங்கிலிப் பதிவு. எனக்கு இதை எழுத சரியான நேரமும், மனநிலையும் அமையாததால் எழுத முடியாமல் போனது
  🙁 . விரைவில் நோர்வே நாடுபற்றி கொஞ்சமாவது (சிறு குறிப்பு) எழுத முயற்சிக்கிறேன். நோர்வேயில் ஒரு முக்கிய நாளான மே 17 அன்றாவது எனது பதிவை போட விருப்பம் உள்ளது. பார்க்கலாம். நம்மை வாழ வைக்கும் நாட்டுக்கு ஒரு மரியாதையாகவாவது இருக்கட்டுமே 🙂 .

 6. ரவி, இந்தியாவைப் பத்தி பலரும் அறிஞ்சிருக்கிறதால இது வரை யாரும் யாரையும் இந்தியா பத்தி எழுத அழைக்கல..இந்தியா பத்தி சுவையான தகவல்களைத் தொகுத்து நீங்களே எழுதிடுறீங்களா 🙂

 7. ravi,
  alai kadalukku appal irundhu arpudhangerivarum ivvalaithala muyarchi arpudham. thodaravum….. vaalthugal….
  kurinjivendan

 8. நன்றி குறிஞ்சிவேந்தன்.

Comments are closed.