திரை கடலோடியும் துயரம் தேடு

திரு எழுதிய திரை கடலோடியும் துயரம் தேடு படித்தேன்.திரை கடலோடியும் துயரம் தேடு “இங்க வேலையே இல்லையா என்ன, எதுக்கு வெளிநாட்டுக்குப் போறாங்க?”, “அவங்களா விரும்பித் தானே போனாங்க.. அப்புறம் போயிட்டு சிரமமா இருக்குன்னா அதுக்கு என்ன பண்ணுறது?” என்று கேட்கும் பொது மக்களும் “இப்படி தெரியாம வந்து மாட்டிக்கிட்டனே, இதில இருந்து எப்படி மீளுறது?” என்று மயங்கும் தொழிலாளர்களும் “அவுகளுக்கு என்ன, வெளிநாட்டு மவுசுல இருக்காங்க” என்று புகையும் சுற்றத்தாரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். நிறைகள்: * திரு, பன்னாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நேரடியாக களப்பணியாற்றிய அனுபவம் உடையவர். தொழிலாளர்கள் பற்றிய ஆர்வம், அக்கறை, அனுபவத்தால் எழுதப்பட்ட இந்நூல் மிகுந்த மதிப்பும் நம்பகத்தன்மையும் பெறுகிறது. * கவிதையான தலைப்பும் அட்டைப்படப் புகைப்படமும் * ஒரு ஆய்வு நூலுக்கு உரிய நேர்த்தியான மொழி நடையும், கருத்தாழமும் அதை அனுமதித்த ஆழி பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவும் பாராட்டுக்குரியது. இன்னும் பல துறை வல்லுனர்களை அடையாளம் கண்டு இது போன்ற நூல்களைப் பதிப்பகங்கள் கொண்டு வர வேண்டும். மேம்பாட்டு ஆலோசனைகள்: * அடிக்கடி வரும் எழுத்துப் பிழைகள், ஒரே கருத்துக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தந்ததை, சொன்ன கருத்தே திரும்பத் திரும்பச் சொல்லுவது போல் உள்ளதை ஆசிரியர் குழு தவிர்த்திருக்கலாம். *  உயர் கல்வி, திறன் பெற்று வெளிநாட்டில் பணி புரிவோரின் பணியிட, உளவியல், குடும்பச் சிக்கல்கள் குறித்தும் எழுதி இருக்கலாம். * அரபு நாடுகளில் எப்படி பணியாளர்கள் குறுகிய இடங்களில் வாழ்கிறார்கள் என்பது போன்ற பொருத்தமான இடங்களில் படங்கள் சேர்த்திருக்கலாம். வலைப்பதிவுகளில் இருந்து பதிப்புலகுக்குச் சென்றிருக்கும் திரு, மென்மேலும் பல நூல்களை எழுதவும் வாழ்வில் சிறக்கவும் வாழ்த்துகிறேன். *** திரை கடலோடியும் துயரம் தேடு, 152 பக்கங்கள். இந்திய ரூபாய் 90. ஆழி பதிப்பகம், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24. தொலைபேசி – 044 4358 7585

திரை கடலோடியும் துயரம் தேடு

9 thoughts on “திரை கடலோடியும் துயரம் தேடு”

    1. மகிழ்ச்சி பிரேம்குமார். இதை அலசல் என்பதை விட அறிமுகம் எனலாம்.

  1. புத்தகம் கையில் இருக்கிறது. ஆனால் இரண்டு அத்தியாயம் படித்தபடி இருக்கிறது. வாசித்து முடிக்க வேண்டும்.

  2. அறிமுகத்திற்கும், விமர்சனத்திற்கும் நன்றி ரவி!

    உடலுழைப்பு தொழிலாளர்களின் புலம்பெயர்வை மையமாக கொண்டு எழுதியதால் இந்நூலில் உயர்கல்வி பெற்று புலம்பெயரும் வல்லுநர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. நிச்சயமாக அவர்களின் பிரச்சனைகளும், வாழ்க்கைமுறையும் வேறொரு தளத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

    நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள மற்ற குறைகளை கவனத்தில் எடுக்கிறேன். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் விழிப்புணர்வை தர இந்நூல் பயன்பட்டால் மகிழ்ச்சி.

    இந்நூலுக்கான முதல் எழுத்து வடிவிலான அறிமுகம் உங்களிடமிருந்து. புத்தகத்தின் முதல் பிரதியை வாங்கியதும் நீங்கள் 🙂

    நன்றி!

    1. உங்கள் மறுமொழியைக் கண்டு மகிழ்கிறேன், திரு. நன்றி.

  3. இந்த தலைப்பு ரொம்பவும் பாதித்துவிட்டது. எனக்கும் பொருந்தும் என்பதாலா. அட்டைப்படத்தைப் போன்ற காட்சிகளை இங்கே (சவூதிஅரேபியா) தெருவில் காணும் போது நண்பர் திரு”வின் நினைவும் வருகிறது. இன்னும் நூலை வாசிக்கவில்லை. இனிமேல்தான் வாங்க வேண்டும். பாராட்டுகள் நண்பர் திரு.

    நன்றி ரவி.

    1. //இந்த தலைப்பு ரொம்பவும் பாதித்துவிட்டது. எனக்கும் பொருந்தும் என்பதாலா.//

      🙁 விரைவில் உங்கள் விருப்பம் போல பணி, இடம் அமைய வாழ்த்துகிறேன்.

      //அட்டைப்படத்தைப் போன்ற காட்சிகளை இங்கே (சவூதிஅரேபியா) தெருவில் காணும் போது நண்பர் திரு”வின் நினைவும் வருகிறது.//

      இதை விட ஒரு நூலாசிரியருக்கு மகிழ்வளிக்கும் பாராட்டு என்ன இருக்க முடியும்!!

Comments are closed.