தமிழ் மோதிரம்

சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.

பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.

முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.

“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?”

“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.

“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”

“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”

“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க? ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா?”

“இல்லீங்க.. வர்றதில்லீங்க..”

“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா? .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே?”

“…”

பக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

எனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.

“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”

“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”

“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.

“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறாங்க? மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க? பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”

“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”

“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.

“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா?”

“இல்லீங்க..”

“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ?”

சிரித்தார்.

அதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.

ஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”

அவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.

பெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.

“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா?”

அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.

“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு? இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா? நீங்க தமிழ் தான?”

அவருடைய முகம் இறுகத் தொடங்கியது.

“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”

“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க? தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்?”

“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”

வாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ?

உத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூபாயை நீக்கினார்.

விற்பனையாளரை நிமிர்ந்து பார்த்தேன்.

சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?

47 thoughts on “தமிழ் மோதிரம்”

 1. எல்லாம் காலக்கொடுமை.

  சட்டை எடுக்க போனப்ப அவங்க இங்கிலீசு தான் நான் முழுக்க தமிழில் பேசினதும் தான் தமிழுக்கு வந்தாங்க. ஆனா உங்க அனுபவம் எனக்கு இல்லை 🙂 இப்பவெல்லாம் ஊருக்கு போனா தமிழில் தான் பேசறது, குறிப்பா சொல்லனும்னா காசு அதிகம் வாங்கும் கடைகளில் நாம (நாமளாவது 🙁 ) தமிழ் தான்.

 2. குழந்தைகளின் விருப்பத்தை தட்ட முடியாமல் பிறந்த நாள் கேக் கடைக்கும் செல்லும் ஒவ்வொரு வருடமும் இறுதியில் மல்லுக்கட்டி விட்டு தான் வருகின்றேன். இதைப் போலவே தமிழிலில் எழுத மாட்டோம் என்பார்கள். காரணங்களும் இதில் வருவதைப் போலவே. கடைசியில் கடையை ரணகளப்படுத்திய பிறகே என்னை அனுப்ப வேண்டும் என்பதற்காக உடனடியாக தமிழில் எழுதித் தருகிறார்கள்.

  1. நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? கேக் கடையில் எனக்கு இந்த அளவு சிரமம் வந்தது இல்லை. ஐதராபாத்தில் கூட தமிழில் எழுதித் தருகிறார்கள் 🙂

  1. பாலபாரதி இங்க எங்க வந்தார் 🙂

 3. அம்மணமா இருக்குற ஊரில் கோவணத்தோடு ஒருவன் போனால் அவனை விநோதமாகத்தான் பார்ப்பார்கள்.

  நீங்கள் சொன்னது போல், கலைஞர் புதிய சட்டம் போட்டு, தமிழில் எழுதினால் மேலும் 1% தள்ளுபடி என்று சொன்னால் மக்களும் முண்டி அடிப்பார்கள்.. இவர்களும் வழிக்கு வருவார்கள்.

  1. சென்னையில் மற்ற கடைகளிலும் கேட்டுப் பார்க்க வேண்டும். இந்தக் கடையைப் பொறுத்தவரை, தமிழில் எழுதும் பொற்கொல்லர் யாரும் அவர்களிடம் இல்லை. புதிய பொற்கொல்லரைத் தேடச் சிரமப்பட்டு செய்யவே முடியாது என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். அது தமிழரின் கடையாக இருந்திருந்தால் இந்த அளவு நக்கல் வந்திருக்குமா என்று யோசிக்கிறேன். மற்றபடி, சிறு நகரங்களில், ஊர்ப்புறங்களில் தமிழில் நகை செய்யும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

   1. தமிழரின் கடை, தமிழர் அல்லாதவரின் கடை என்பதை விட இது இன்றைய சமூகத்தின் யதார்த்த முகத்தை காட்டுவதை தான் குறித்து கொள்ள முடிகிறது.

    கிராமத்தில் இருந்து மோசமான பொருளாதார பின்புலத்தில் இருந்து நகரத்திறகு தனது தனி திறமையால் வந்து ஒரு நல்ல வேலையில் சேரும் ஒரு பெண் தப்பும் தவறுமாக தேவையே இல்லாமல் ஆங்கிலத்தில் பேசி கொண்டிருக்கும் போது அந்த பெண் மீது கோபம் வருவதில்லை. இரக்கமே மிஞ்சுகிறது.

 4. நடுவில் நின்று ரூல் பேசும் விற்பனையாளர்கள் மற்றும் காவல்காரர்களைக் கண்டால் பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. ஞாநி ஒரு முறை ஆட்டோகாரர் ஒருவரை பெரிய இடத்தில் ஆட்டோ நிறுத்த அனுமதி கோரி சண்டையிட்டது நினைவிற்கு வருகிறது.

  திருமண வாழ்த்துகள் ரவி.

  1. அது என்ன ஆட்டோ கதை? இணைப்பு ஏதும் இருந்தால் கொடுங்கள்.

   வாழ்த்துகளுக்கு நன்றி 🙂

 5. >தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க< .. . அடப்பாவிகளா :-))))) @tamilravi இப்படி எல்லாமா கடைகாரர் கேட்டாரு .. வடஇந்தியரா ?

  1. தென்னிந்தியர் தான். ஆனால், இந்திய மொழி எதிலுமே பெரிய எழுத்துகள் இல்லையே 🙂 எல்லாரிடமும் ஆங்கிலத்தில் அப்படி எழுதித் தரக் கேட்கும் பழக்கத்தில் கேட்டிருப்பார்.

 6. நம்பவே முடியவில்லை. 🙁 இப்படியெல்லாம் கூடவா இருப்பார்கள்? எவ்வளவு அறியாமை இருந்தால் ஆங்கிலத்தை மட்டும் கல்வி என்று புரிந்துகொள்வார்கள்! இதற்கு அப்புறமும் நீங்கள் அவர்கள் கடைக்கு வருமானம் கொடுத்திருக்க வேண்டாம். 🙂

  1. //இதற்கு அப்புறமும் நீங்கள் அவர்கள் கடைக்கு வருமானம் கொடுத்திருக்க வேண்டாம்.//

   நானும் நினைத்தேன். நல்ல விசயத்துக்காகப் போய் திரும்ப வர வேண்டாம் என்ற sentiment (தமிழில் என்ன?), வழக்கமாக வாங்கும் கடை, தங்கம் தரமாக இருக்கும் என நிறைய காரணங்கள் 🙂

   1. Sentiment = மென்னுணர்வு? சரியாக இருந்து தொலைத்தாலும் நன்றாக இல்லை. புரிகிறது. சென்டிமென்ட்டை எதில் தவிர்த்தாலும் திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாது. 🙂

    1. parcelக்குப் பொட்டலாம் என்று சொன்னால் நல்லா இல்லையே என்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊர் சாப்பாட்டுக் கடையில், “சாப்பிடுறீங்களா கட்டிக் கொடுக்கவா” என்று கேட்ட போது பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. நாம் அதே சொல் வகையில் மொழிபெயர்ப்பைச் சிந்திக்கும் போது மொழிபெயர்ப்பு வறட்டுத் தனமாக வருகிறது. சிக்கலான பல சொற்களை ஊர்ப்புறங்களில் இலகுவாக தமிழில் சொல்கிறார்கள். sentimentக்கும் இப்படி ஏதாவது ஒரு சொல் சிக்கும்.

 7. நல்ல கருத்து

  இதே போல இன்னொரு சம்பவம்.

  என் நண்பர் கைபேசியில் இணையம் உபயோகிப்பதற்காக கைபேசி வாங்கினார். universal கடையில் சென்னையில். எல் ஜி கைபேசி வாங்கி விட்டார், வீட்டிற்க்கு வந்து chaarge ஏற்றி, சிம் போட்டு பார்க்கிறார், இணையம், மின்னஞ்சல் எல்லாம் வருகிறது. ஆனால் தமிழ் எழுத்துக்கள் வருவதில்லை, படிக்கவும் முடிவதில்லை, எழுதவும் முடிய வில்லை.

  உநிவேர்செல் மற்றும் எல் ஜி சேவை மையங்களில் கேட்டால், சார் தமிழ் எழுத்துக்கள் வராது. நோக்கியாவில் உள்ள சாதாரண அடிப்படை மாடல்களில் மட்டும் தான் தமிழ் எழுத்துக்கள் வசதி உண்டு என்கின்றனர்.

  சாம்சங், ப்லக்க்பெர்ரி , நோக்கிய , சோனி கைபேசிகளிலும் மூன்றாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கைபேசிகளில் தமிழ் எழுத்து வராதாம். இந்த கைபேசிகள் எல்லாம் படித்த நகர வாசிகள் பயன் படுத்துபவை.

  கிராம வாசிகள் பயன் படுத்தும் அடிப்படை மாடல்களில் தான் தமிழ் எழுத்துக்கள் வசதி உண்டாம்

  1. ramji, 4000, 5000 ரூபாய் நோக்கியா கைப்பேசிகளிலும் தமிழ் உண்டு. ஆனால், எல்லா மாதிரிகளிலும் வருவதில்லை. சிலதில் முன்கூட்டியே தமிழைப் போட்டுத் தர மாட்டார்கள். Nokia Careக்குப் போய் செயற்படுத்த வேண்டி இருக்கும். கடையில் வாங்கும் முன்னே இது குறித்து கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. தமிழ் ஆதரவு இருந்தால் தான் வாங்குவேன் என்று ஒவ்வொருவரும் கேட்டு வாங்கினால், நாளடைவில் உயர் விலை செல்பேசிகளிலும் தமிழ் வரும். மேலும் அறிய தமிழ் செல்பேசி பற்றிய இடுகையைப் பாருங்கள்.

  2. நான் சென்ற வாரம் பார்த்த ஒரு LG மாடலில் (ரூ. 3000) தமிழிசைவு இருந்தது.

   1. தகவலுக்கு நன்றி கிருபா சங்கர். உங்களை இங்கு காண்பதில் மிகவும் மகிழ்கிறேன். தமிழிசைவு செல்பேசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். (நீங்கள் பயன்படுத்திய தமிழிசைவு என்ற சொல் மிகவும் பிடித்திருக்கிறது)

 8. பெங்களூரில் கேக்கில் தமிழில் பெயர் எழுதி வாங்க முடிகிறது! தமிழ் நாட்டில் தலைநகரில் தமிழில் பெயர் போட்டு மோதிரம் வாங்க முடியவில்லை. முதலில் நம் வணிகர்களுக்கு வாடிக்கையாளர் சேவை என்பதே கிடையாது!

  என்ன ஒரு கொலைவெறி அந்த விற்பனையாளருக்கு! நல்ல வேளை அவர் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை 😉

  1. உண்மை தான் கார்த்திக். தமிழ் / தாய்மொழி பிரச்சினை என்பதை விட இது வாடிக்கையாளர் கவனிப்பு / வணிக அறம் குறித்த பிரச்சினையே. தங்கள் கடையில் தமிழில் எழுத ஆள் இல்லை என்று கனிவாக சொல்லி இருந்தால் நாமும் புரிந்து கொண்டு பிரச்சினை ஏதும் செய்யாமல் சென்றிருப்போமே?

   //நல்ல வேளை அவர் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை//

   நினைச்சுப் பார்க்கவே திகிலா இருக்கே !

 9. ரவி,
  காவல்துறை பதிவேடுகள் உங்களை தமிழ் வெறியர் எனப் பதியப்போகிறது. எச்சரிக்கை.

 10. “சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?”—>சரியான சவுக்கடி. அற்புதம்.!!! இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடந்து கொண்டே இருக்கிறது.

  தாய்மொழி அவ்வளவு இழிவானதா?

  “வெள்ளைக்காரனின் பூட்ஸை கிரீடம் என்று எண்ணி தலையில் வைத்து அழகு பார்க்கிறது நம் சமுதாயம்”

  1. சென்னையிலோ வேறு ஊர்களிலோ உங்களுக்கு இது போல் நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே? ஆவணப்படுத்தலாகவும் விழிப்புணர்வூட்டுவதாகவும் இருக்கும்.

 11. அருமையான அனுபவம் தான். ஒரு சமயம் தமிழ் மாதிரியான நீசபாஷையை எல்லாம் தங்கத்துல எழுதக் கூடாதுனு யாராவது கிளப்பி விட்டு இருப்பாங்களோ ??? 🙂

  பொதுவாக தங்கத்தில் அல்லது ஆபரணங்கள் எதுவும் அணியும் விருப்பம் பெரிதாக இருந்ததில்லை. வெளியே வந்த பொழுது அவசரம் எனில் விற்பனைக்கு உதவும் என சிலவற்றை கொண்டு வந்ததுடன் சரி !!! அடுத்த முறை ஊருக்குச் சென்றால், இதற்காகவே மோதிரம் வாங்குவது என முடிவெடுத்துள்ளேன் !! 🙂

  1. நீச பாசை பிரச்சினை எல்லாம் இல்லீங்க. அவங்க கிட்ட தமிழ்ல எழுத ஆள் இல்லை. அதைச் சொல்லாம பூசி மெழுகினாங்க. எனக்கும் நகை அணியும் விருப்பம் இல்லை. திருமணத்துக்காக 🙂 மோதிரம் வந்தவுடன் கண்டிப்பாக படத்தை இணைக்கிறேன்.

   //அடுத்த முறை ஊருக்குச் சென்றால், இதற்காகவே மோதிரம் வாங்குவது என முடிவெடுத்துள்ளேன் !!//

   அடிரா சக்கை ! வேணும்னா அதே கடைக்குப் போய் எல்லாரும் பிரச்சினை பண்ணலாம் 🙂

 12. ரவி, முடிந்தால் உங்கள் மோதிரம் வந்தவுடன் அதன் படத்தை இணைக்கவும் (விருப்பம் இருந்தால்).
  நன்றி.

 13. first of all begging sorry to type in english..
  ravi i wanna se ur ring..
  evn i wanna mak a ring for my engagment..
  bt it should hav to be done in GUJRAAT..
  is it posiblle???
  plz gv me details plz…

  1. பிரியா, குசராத்தில் செய்ய முடியுமான்னு தெரியல. நீங்கள் வழக்கமாக நகை வாங்கும் கடைக்காரரிடம் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை நாமே அழகாக தமிழ் எழுத்தை எழுதிக் கொடுத்தால் ( கணினி மூலமாக அச்சு எடுத்தும் கொடுக்கலாம்) அதைப் பார்த்துச் செய்வார்களோ என்னவோ? என்னுடைய மோதிரம் வந்த பிறகு அதன் படத்தையும் கடை விவரத்தையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

 14. //சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?
  //

  சூப்பர்

 15. அருமை. தமிழ்நாட்டில் தமிழைப் புகுத்துவது தான் சிரமம் போல,.. ஒருவழியா அம்மோதிரத்தை வாங்கி விட்டீர்களே.அதுதான் சிறப்பு.அம்மோதிரத்தை காணமுடியவில்லையே என்ற ஏக்கம் நிலைக்கிறது. இனி நானும் விடறமாதிரி இல்ல. அனுபவம் ஏற்படின் தெரிவிக்கிறேன்.

  1. மோதிரம் கைக்கு வந்தவுடன் படத்தைப் போடுகிறேன். ஏக்கம் வேண்டாம் 🙂

 16. ஊதுவத்தி சுத்த வைச்சீங்களே. இது போல ஒரு முறை வேலுரில் நகைக்கடையில் கேட்டதறகு செய்து தருவதாக சொன்னார்கள. இவ்வளவு மெனக்கெடவில்லை. சென்னையில் மட்டுமே இதுபோன்ற தொல்லைகள். mass production கோளாறுகள் உண்மையில். தமிழில் யாரம் கையெழுத்திடுவதில்லை அதன் நீட்சியே இது. வெறும் ‘பே’ என்றோ ‘கௌ’ என்றோ எழுத்தாக பெயர்களை பார்ப்பதில்லை. வெறும் ‘ச’ என்று எழுத்தில் கேட்டபோது ஒரு மாதிரி பார்த்தார்கள். “S” என்று ஆயிர்ம் மோதிரங்கள் இ்ருந்தன.

  1. அரசியல்வாதிகள் வாங்குவது எதிர்பார்க்கக்கூடியது. அது கூட இன்னும் 10, 15 ஆண்டுகளில் மாறி விடும் 🙁 முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதும் பழக்கம், ஓரெழுத்து மோதிரங்களை மொத்தமாக உற்பத்தி செய்வது புரிந்து கொள்ள முடிகிறது. புதிதாக செய்யச் சொல்லிக் கேட்கும் மோதிரத்தில் கூட தமிழில் எழுதுவதில் நுட்பச் சிக்கல் என்று பூ சுற்றியது, மற்ற நையாண்டிகள் தான் கடுப்பைக் கிளப்பியது.

 17. கடைக்காரர் சுவாரசியமான தகவலையும் சொன்னார். தமிழக அரசியல் வாதிகள் மட்டுமே தமிழில் மோதிரம், சங்கிலியில் பெயர்கள் பொறித்து வாங்குவதாகவும் சொன்னார்.

 18. மும்பை-ல் வீடு க்ரஹபிரவேஷம் மாடு பொம்மையுடன் நடந்தது. புரோஹிதர் ஆங்கிலம் மற்றும் குறைத்து தமிழிலும் பேசினார். பின்னர் நடந்த பகல் கொள்ளை தனி கதை!

  1. மாட்டுப் பொம்மை ! நகரத்தில் புதுமனைப் புகுவிழாவுக்கு விடுவதற்கென்று மாடு வளர்த்தால் நல்ல காசு பார்க்கலாமோ 🙂

 19. கடைசியில் “S” என்றே வாங்கினேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

 20. விக்கிபீடியா மூலம் இங்கே வந்தேன், அது என்ன தமிழ் மோதிரம் என்று வாசிச்சுப் பார்த்தால்…ஐயகோ…தமிழின் நிலையை என்று ஒரு பக்கம் ஏக்கமும், மறு பக்கம் கோபமும் தான் வருதுங்க..
  அங்கே கடைசியில மோதிரம் செய்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்..யாருக்காவது “தமிழ் மோதிரம்” வேணுமென்றால் இப்படியே ஒவ்வொரு “ஆங்கில மோதிர” கடைகளுக்கும் சென்று அவர்களை தமிழ் மோதிரம் உருவாக்கத் தூண்டலாம்..

  இரவி, தங்கள் அனுமதியுடன் இக்கட்டுரையை வேறொரு இணையத்தில் (உங்கள் பெயர், இணையம் உட்பட) பிரசுரிக்க அனுமதி தருவீர்களா?

  1. செந்தி, உங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. தமிழ் கணினி, தமிழ் செல்பேசி என்று பேசிப் பேசி தமிழ் மோதிரம் வரை வந்துவிட்டது 🙁

   முழுக் கட்டுரையையும் இடாமல், சில வரிகள் / சுருக்கம் தந்து இணைப்பு கொடுத்தால் மகிழ்வேன். நன்றி.

   1. முழுக்கட்டுரையும் தேவையில்லை, சுருக்கம் தந்து தொடுப்புக் கொடுத்தலே போதுமானது. நன்றி இரவி.

 21. wow… unggalin tamil patrinai parattugiren… nan Malaysia Prajai… aanal yen tirumanatin botu Singapore varai tedi, poradi yenggal parisa motirattaiyum yen kanavarin peyarai Elangonan yendra mukkappilum pattittu vanggi anintirukkirom… manamiruntal anaitume sattiyame… nam taimoli vaalum!!!

Comments are closed.