ஞ்ஜ

ஞ்ஜ என்று எழுதுவது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல. உச்சரிக்கவே முடியாத எழுத்துப் பிழையும் கூட.

அருட்பெருஞ்ஜோதி என்று எழுதுவதில் தொடங்கி இருக்க வேண்டும். ரஞ்ஜனி, ஆஞ்ஜநேயர் என்று ஞ்ச வரும் இடங்களில் ஞ்ஜ கொண்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. இது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல; உச்சரிக்கவே முடியாத ஒரு எழுத்துப் பிழையும் கூட.

ரஞ்சித் என்பதற்கு ரன்ஜித் என்பது நெருக்கமான ஒலியாக வரும். ஆனால், விஞ்ஞானி, அஞ்ஞாயிறு, அஞ்ஞானவாசம் போன்ற சொற்களின் ஒலிப்பைப் பார்த்தால் ரஞ்ஜனி என்ற சொல்லை என்னால் உச்சரிக்கவே முடியவில்லை. நெஞ்ஜு, மஞ்ஜம், தஞ்ஜாவூர் என்று எழுதிப் பார்த்தால் இதில் உள்ள அபத்தம் தெரியும். தயவு செய்து, ஞ்ஜ என்று எழுதாதீர்கள்.

எழுத்துப் பிழை

விக்கியில் உழன்று உழன்று உலகமே ஒரு விக்கி உருண்டையாகி விட்டது. எழுத்துப் பிழைகள் எங்கு கண்ணில் பட்டாலும் திருத்தக் கை துடிக்கிறது 🙂

f -ஆய்த எழுத்து

ஷ ஸ வேறுபாடு

எழுத்துச் சீர்மையும் எழுத்துப் பிறழ்ச்சியும்

இந்த எழுத்துப் பிழைகள் சொல்லும் செய்தி என்ன? 🙂

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்

1. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் கொண்டு எழுதலாமா கூடாதா?

எழுதலாம். கிரந்தம் தவிர்த்து தான் எழுத வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

2. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் பயன்பாட்டில் உள்ளதா?

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் பட்டியலைக் கீழே காணலாம். இவை தவிர, கட்டுரை உரைகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்த எழுத்துகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் நீக்கி தமிழ் எழுத்துகளுக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. அதற்குத் தேவையும் இல்லை. சாத்தியமும் இல்லை.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஸ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஷ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஹ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஜ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஸ்ரீ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

3. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த கொள்கை என்ன?

இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த உறுதியான வழிகாட்டல் ஏதும் இல்லை. விரைவில் இது குறித்த வழிகாட்டுக் கொள்கை ஒன்றைப் பொதுவில் முன்வைத்து உரையாடி, தேவையான மாற்றங்களைச் செய்வோம். இக்கொள்கை கிரந்தத்தை முற்றிலும் நீக்காது. குறிப்பாக, தமிழர் பெயர்கள், கலைப்படைப்புகள், ஊர்ப்பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துகளை ஏற்று எழுதுவதற்கான பொதுவான புரிந்துணர்வு உண்டு.

4. விக்கிப்பீடியாவில் ஏன் கிரந்தத்தை எல்லா இடங்களிலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது?

கிரந்தம் விடுத்து எழுதுவது தமிழ் விக்கிப்பீடியர்களின் கண்டுபிடிப்போ திணிப்போ இல்லை. ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன், பாரதி முதற்கொண்டு பல நூற்றாண்டுகளாக கிரந்தம் விடுத்து எழுதும் வழக்கம் இருக்கிறது. ஓட்டல், இந்தி, இமயம் என்பது போன்று பரவலான மக்கள் புழக்கத்தில் உள்ள சொற்கள் கிரந்தம் விடுத்து எழுதப்பட்டவையே. இந்த வரலாற்று, மக்கள் வழக்கத்தைப் பின்பற்றியும் தகுந்த காரணங்களைச் சுட்டியும் கிரந்தம் விடுத்து எழுதலாமே என்று மற்ற பங்களிப்பாளர்கள் கோரலாம்.

எடுத்துக்காட்டு 1: கிரந்த எழுத்து துல்லியமான ஒலிப்பு தராத போது.

எடுத்துக்காட்டு 2: பயன்பாடு அருகி வரும் க்ஷ போன்ற எழுத்துகளைப் பயன்படுத்தினால்.  இலக்ஷம் என்பதற்குப் பதில் இலட்சம் என்று எழுதலாமே என்று ஒருவர் கேட்கலாம்.

எடுத்துக்காட்டு 3: கிரந்தம் விடுத்து எழுதும் வழக்கு கூடுதலாக இருந்தால். ஹிந்தி, ஹிந்து என்பதை விட இந்தி, இந்து ஆகியவை கூடுதலாகப் புழக்கத்தில் உள்ளன.

5. ஏன் தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தத்தை முன்னிட்டு சர்ச்சைகள் எழுகின்றன?

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் வலைப்பதிவில் எழுதலாம். யாரும் உங்களைக் கேள்வி கேட்டு மாற்ற முடியாது. நீங்கள் ஒரு வார இதழுக்கு எழுதும் கட்டுரையை, இதழாசிரியர் எப்படி வேண்டுமானாலும் மாற்றி வெளியிடலாம். நீங்கள் அவரைக் கேள்வி கேட்க முடியாது 🙂 ஆனால், விக்கி ஒரு கூட்டாக்கம். நீங்கள் எழுதுவதை எல்லாரும் கேள்வி கேட்கலாம். எல்லாரும் மாற்றலாம். விக்கியின் மொழி நடை உட்பட்ட அனைத்துக் கூறுகளும் கலந்துரையாடி எடுக்கும் பொது முடிவுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டவையே. இந்தக் கூட்டுச் செயற்பாடுகளும் கூட்டு எழுத்தாக்கமும் தமிழுக்குப் புதிது.

எப்படி கிரந்த எழுத்தை விடுத்து எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாதோ அதே போல் கிரந்தம் சேர்த்து தான் எழுத வேண்டும் என்றும் கட்டாயப்படுத்த இயலாது. இரு வேறு கருத்து நிலைகள் உள்ளோர் கூடிச் செயலாற்றும் போது கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. ஒரே வகையான கருத்து முரண்பாடுகள் வந்தால், அவை பற்றி பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறோம். ஒரு கருத்து உரையாடலில் இருக்கும் போது, அதே வகை மாற்றங்களைத் தொடர்வதைத் தவிர்க்கிறோம். ஆனால், கிரந்தம் கலந்து எப்படி எழுதினாலும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கத் தொடங்கும் போது சர்ச்சைகள் வருகின்றன. சோவியத் யூனியை சோவியத் ஒன்றியம் என்று மாற்றினால் கூட தனித்தமிழ் வெறி என்கிறார்கள். இவர்களிடம் என்னவென்று உரையாட?

F

தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.

தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும் போது, தமிழர்கள் அனைவரும் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். தற்காலத்திலும், குடித்து விட்டு சாலையில் வருகையில் காவலர்கள் மறித்து ஊதிக் காட்டச் சொன்னால் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். இதில் இருந்து F ஒலி தமிழர்களுக்கு அறிமுகமானதே என்று அறியலாம்.

தமிழர்களுக்கு அறிமுகமான இந்த F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட முடியவில்லை என்றால், வரும் தலைமுறை தமிழைப் புறக்கணித்து தமிழ் அழியும் நிலைக்குச் செல்லும். எனவே, நமக்குத் தேவையான F ஒலியை ஆங்கிலத்திடம் இருந்து பெற்று தமிழில் சேர்த்துக் கொள்ளத் தயங்கக்கூடாது. புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வது எம்மொழிக்கும் அழகு. இதுவே மொழி வளர்ச்சியாகும். இது வல்லினமா, மெல்லினமா, இடையினமா, அகர வரிசையில் எங்கு சேர்ப்பது, எவ்வளவு மாத்திரை, புணர்ச்சி விதி என்ன என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.

இனி, fரான்சு, fரெட்ரிக், fரெஞ்சு என்றே எழுத வேண்டும். முன்னர் பல காலமாக பிரான்சு, பிரெட்ரிக், பிரெஞ்சு என்றெல்லாம் எழுதி வந்திருந்தாலும் அனைவரும் இனி கட்டாயம் F எழுத்து கொண்டே எழுத வேண்டும். அப்படி எழுதியும் F உச்சரிக்க வராதவர்கள் நாட்டுப்புறத்தான்கள், பாமரர்கள், படிப்பறிவற்றவர்கள், நாகரிகம் தெரியாதவர்கள், காட்டான்கள். F எழுத மறுப்பவர்கள் தனித்தமிழ் வெறியர்கள், முட்டாள்கள், தமிழரை அறியாமையில் மூழ்கடிப்பவர்கள், பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள், Fல் தொடங்கும் பெயருடையவர்களை அவமதிப்பவர்கள், Fஆசிசுட்டுகள், நார்சியவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஆங்கில-வெளிநாட்டு-கிறித்தவ-fரெஞ்சு வெறுப்பாளர்கள்.

இனிமேல் F தமிழ் எழுத்து.

முற்றும்.

கிரந்தம்

பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:

* thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது; கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?

* இடாயிட்சு, நெதர்லாந்து மொழிகளில் ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?  thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா? கிரந்தம் கலந்து ஒலிப்பு பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.

* இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே? அவர்களுக்கு அருள் கிடைக்காதா? கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா? பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது? மொழியின் இயல்பு, கவனக் குறைவு, இயலாமை காரணமாக ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள்? ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா? கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே? எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் கடவுள் தங்கி இருக்கிறாரா? ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

* கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.

* “தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தம் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்” என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.

* தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?

* பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத்தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியினருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனைக் காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்த தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன?

* புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்? கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.

* கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அன்று. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்படவில்லை.

* அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோப்புகள் மூலம் ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.

* “ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருக்கிறது.  தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருக்கிறது. அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்று சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த ஒலிகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?

* பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.