கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி?

கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது எப்படி?
* கிரந்தம் தேவைப்படும் பிற மொழிச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இருந்தால் ஆளலாம்.

இஷ்டம் -> விருப்பம்.

சந்தோஷம் – > மகிழ்ச்சி

ஹேபிட் – > பழக்கம்

கஷ்டம் – > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல்

ஸ்மைல் – > புன்னகை

* ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றுக்குப் பதிலாகத் தமிழில் வழமையாக ஈடு கொடுக்கப்படும் எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.

வருஷம் – > வருடம்; வருசம். (ஆண்டு)

விஷயம் – > விசயம்; விதயம்; விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி (“சேதி”,) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும்)

விசேஷம் – > விசேசம்; விசேடம். (சிறப்பு, கொண்டாட்டம்)

விஷம் – > விசம், விடம் (நஞ்சு என்று தமிழில் சொல்லாம். விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி 🙂 )

ஷாந்தி -> சாந்தி

ஷங்கர் – > சங்கர்

ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் – > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்)

ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி – > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி.  (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே)

மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.

எழுத்துக்களை விடுத்து எழுதுவதற்குப் பின்வரும் விதிகளைப் பின்பற்றலாம்.

ஸ் – சு
ஸ – ச; ஸா – சா …

(விதிவிலக்காக சில இடங்களில் ஸ் – > சி ஆகும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்நேகா – > சிநேகா)

ஷ் – சு
ஷ – ச; ஷா – சா ..

ஜ் – சு
ஜ – ச; ஜா – சா ..

ஸ்ரீ – சிறி (அல்லது) சிரி

க்ஷ் – க்சு
க்ஷ – க்ச; க்ஷா – க்சா ..

ஹ் – சொல் முதலில் வந்தால் இகரம் கொண்டு எழுதவும்.

ஹ்ருதயம் – > இருதயம்

ஹ் – சொல்லின் இடையில், கடைசியில் வந்தால் புறக்கணிக்கவும்.

தேஹ்ராதூன் – > தேராதூன்
ஹ – சொல் முதலில் வந்தால் – > அ ( ஹ் புறக்கணித்து அதை ஒட்டிய உயிரொலியைக் கொள்ளவும்); ஹா – ஆ; ஹி – இ ..

ஹிந்து – இந்து; ஹனுமன் – அனுமன்; ஹோட்டல் – ஒட்டல்

ஹ் – சொல் இடையில் வந்தால் – >  க; ஹா – கா ..

மோஹன் – மோகன்; மஹாத்மா – மகாத்மா.

* பொருளுள்ள பெயர்ச்சொற்களுக்கு சீனம், சப்பானிய மொழி போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் முற்காட்டு இருந்தால், நாமும் சொற்களை மொழிபெயர்த்து பொருள் விளங்குமாறு வழங்கத் தயங்கக்கூடாது.

* இடுகுறிப் பெயர்ச்சொற்களை இயன்ற வரை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி அடைப்புக்குறிகளில் ஆங்கிலம், மூல மொழியின் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் காட்டலாம். ஒலிக்கோப்புகள் தரலாம்.



Comments

11 responses to “கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுவது எப்படி?”

  1. கதிர்.சயந்தன் Avatar
    கதிர்.சயந்தன்

    ஹேபிட் – //
    ஸ்மைல் //
    இதில கிரகந்தம் இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி – இதையெல்லாம் பயன்படுத்தாமல் இருக்கிறதுதான் சரி.

    அப்படி பார்த்தா இன் அவுட் இதெல்லாம் பயன்படுத்தலாம் போல ஆகிடுமே..

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    சயந்தன் – அது கிரகந்தம் இல்ல கிரந்தம் 🙂

    காரணத்தோட தான் ஆங்கிலச் சொற்களையும் தந்தது;

    நான் தனியே வட சொற்களை மட்டும் தந்தால், எனக்கு வட மொழி வெறுப்பு என்பார்கள்.

    கிரந்த ஆதரவாளர்கள் வைக்கும் முக்கிய வாதம் என்னவென்றால் ஆங்கிலச் சொற்களை எழுதவும் அவை உதவுகின்றன என்பது தான்.

    தமிழுக்குள் ஆங்கிலத்தைக் கலக்க வேண்டாம் என்று ஒதுக்குவோர், பிறகு வட மொழி மட்டும் எதற்கு என்று சிந்தித்துப் பார்க்கலாமே?

  3. நிறைய தெரிந்து கொண்டேன். இனிமேல் கிரந்தம் முழுமையாக தவிர்த்து எழுத முயற்சிப்பேன். ஏற்கனவே அப்படி எழுதவே முன்று கொண்டிருக்கிறேன் என்பது குறிப்பிட வேண்டும் :). அது ஒன்றும் அத்தனை கடினமல்ல (கஷ்டம் = கடினம் உம் சரிதானே?)என நினைக்கிறேன் :).

  4. இது ஒளவையார் காலத்திலிருந்தே பழக்கத்தில் இருக்கிறது ரவி. விநாயகர் அகவலில் “மூடிகவாகனனே” என்று பிள்ளையாரை ஒளவையார் அழைக்கிறார்.

    இது ஒரு புறம் இருக்கட்டும். எந்த மொழியானாலும் காலத்திற்கேற்ப அதை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா? உதாரணமாக, ஐஸ் க்ரீம், காபி போன்ற சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை நாம் உபயாக படுத்தினால் யாருக்குமே ஒன்றும் புரியாது. அதே போல, க்ரந்த எழுத்துக்களை “தமிழ்மய”மாக்க முயற்சி செய்வது இலக்கணத்துக்கு வேண்டுமானலும் நல்லதே தவிர, நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பது எனது கருத்து.

    முதலில் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் எத்தனை பேருக்கு “தமிழ்” என்ற சொல்லை சரியாக கூற முடியும் சொல்லுங்கள் (10ல் 8 பேர் “தமில்” என்று தானே கூறுகிறார்கள்!) முதலில் ழ, ள, போன்ற சொற்களை சரியாக நாம் உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    ஔவையார் எந்தக் காலத்தில் இருந்தாரோ 🙂 ஆனால், தொல்காப்பியக் காலத்திலேயே பிற மொழிச் சொற்களைத் தன்வயப்படுத்துவது பற்றிய குறிப்புகள் உள்ளன.

    ஏன் தமிழ் ஒலிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது விரிவாக எழுத வேண்டிய ஒன்று. விரைவில் அதைப் பற்றி எழுதுகிறேன். நன்றி.

  6. பாலாஜி Avatar
    பாலாஜி

    ரவி,

    இது குறித்து ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம். ஆனால் இந்த இடுகையை படிப்பவர்கள் தவறான கருத்துகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்பதற்காக இதை எழுதுகிறேன்.

    1. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மாதிரிதான் தமிழ் எப்போதுமே இருக்கவேண்டும் என்பது எந்த மாதிரியான விவாதம் என்று தெரியவில்லை. கிரந்த எழுத்துகள் மூலம் புதிய மெய்யெழுத்துகள் தமிழில் சேர்க்கப்பட்டதில் என்ன தவறு? ‘ர்’ கண்டுபிடித்த தமிழன் ‘ற்’ எதற்காக கண்டுபிடித்தானோ?!

    2. வடமொழியை தமிழ் எழுத்துகளில் (247) எழுதமுடியாததால் சேர்க்கப்பட்டவை கிரந்த எழுத்துகள் என்பது உண்மையே. ஆனால் அதில் கவனிக்கவேண்டியது தமிழில் சில ஒலிகளை எழுதமுடியாது என்பதுதான்.

    அவர் ஹாஹா என்று சிரித்தார். (அவர் ஆகாரமிட்டு சிரித்தார்.)
    பூச்சட்டி (புஸ்வானம்) புஸ் என்று ஒலி எழுப்பி பூத்தது. (புசு?)
    பாம்பு இஸ், இஸ் (Hissing) என்று ஒலி எழுப்பும். (இசு?)

    3. வடமொழியை எழுதக் கண்டுபிடிக்கப்படாமல், அரபு மொழி சொற்களை எழுத முஸ்லீம்களாலோ, விவிலியம் உள்ளிட்ட ஆங்கில, ஹீப்ரு மொழி சொற்களை எழுத கிறிஸ்தவர்களாலோ புதிய தமிழ் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் இத்தகைய எதிர்ப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. 1, 2, 3 … என்னும் அரபு எழுத்துகளை இவர்கள் ஏற்றுக்கொண்டது சிந்திக்கத்தக்கது.

    4. பிற மொழி சொற்கள், பெயர்களை எல்லாம் தமிழ் படுத்தியும் தமிழின் அகராதியை வளர்க்கமுடியும்தான். (ஜீசஸ் -> இயேசு). ஆனால் ஒரு நாலைந்து எழுத்துகளை (ஸ்,ஷ்,ஹ்,ஜ்,..) மட்டுமே சேர்த்து மிக எளிதாக பிறமொழி சொற்களை தமிழில் எழுதமுடியுமென்றால் அதை ஏற்றுக்கொள்வதில், அப்படி என்ன பிரச்சனையோ.

    6. பல ஆயிரம் ஆண்டுகளாய் தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு வருவதற்கு மிக முக்கியகாரணங்களில், நாம் எழுதுவதயே படிக்கிறோம் (ஒலிக்கிறோம்) என்பதும் ஒன்று. புசுவானம் என்று எழுதிவிட்டு புஸ்வானம் என்று ஒலிப்பதில் உள்ள ஆபத்து கிரந்த எதிர்ப்பாளர்களுக்குப் புரிிவதில்லை. (இல்லை புசுவானம் என்றே ஒலிக்கலாம், அல்லது பூச்சட்டி என்று சொல்லலாம் என்பதெல்லாம் விதண்டா வாதமே. புஸ்வானம் வேற்றுமொழி சொல் அல்ல. புஸ் என்று ஒலி எழுப்புவதால் புஸ்வானம்.)

    6. மொழிக்கும் எழுத்துக்கும் நடக்கும் போராட்டத்திற்கு மூன்று விதமான உபாயங்கள் ->
    1. ஆங்கிலம் போன்று எதையாவது எழுதிவிட்டு, எப்படியோ ஒலிப்பது.
    2. வடமொழி போன்று தேவையான ஒலிகளுக்கு எழுத்துகளை சேர்த்துக்கொண்டே போவது.
    3. எங்கள் எழுத்துக்களை வைத்து வேற்று மொழிகளையோ, தமிழனுக்கு தெரிந்தே இருக்கும் சில ஒலிகளையுமேகூட எழுது முடியாவிட்டலும் பரவாயில்லை, நாங்கள் புதிய எழுத்துகளை சேர்த்துக்கொள்ளமாட்டோம்.

    மற்றபடி அவரவர் விருப்பம் போல் செய்துகொள்ளட்டடும்!

  7. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    balaji – பல இடங்களில் நீங்கள் வலியுறுத்திய கருத்துகளையே இங்கும் இட்டிருக்கிறீர்கள். இவற்றுக்கு முறையான பதில் அளிக்க எண்ணி ஒரு இடுகை draftலேயே உறங்கிக் கொண்டிருக்கிறது. முழுமையாக்கிப் பதிப்பிக்க முனைகிறேன். நன்றி.

    1. கிரந்தம் வேண்டுமா Avatar
      கிரந்தம் வேண்டுமா

      பலாஜீ – பல இடங்களில் நீங்கள் வலியுறுத்திய கருத்துகளையே இங்கும் தெருவித்துருக்றீர்கள். இவற்றுக்கு முறையான பதில் அளிக்க எண்ணி ஒரு கட்டுரை கைகுறிப்பு நிலையிலேயே உறங்கிக் கொண்டிருக்கிறது. முழுமையாக்கிப் வெளியிட முனைகிறேன். நன்றி.

      என்றெல்லோ முதலில் எழுத வேண்டும் !! பின்பு பார்கலாம் கிரந்தம் வேண்டுமா வேண்டாமா என்று ?

      ஜ ஹ ஸ ஷ கஷ மட்டுமல்ல ഫ(fa) ബ(ba) கூட வேண்டும் …. நாங்கள் உச்சரிக்கும் சத்தங்களை எழுத எழுத்துக்கள் இல்லை என்பதால் நாக்கை முடக்கிக் கொள்ளவேண்டும் என்பது மொழிவளர்சிக்கு முட்டக்கட்டை இடும் விபரீதமான பிற்போக்குச் செயலே !!

  8. kavithasan Avatar
    kavithasan

    I cant speak english

  9. தமிழ் எழுத்துக்களை குறைவாக வைத்துக்கொண்டால், அது தட்டச்சு செய்ய எளிதாக இருக்கும். ஆனால், வடிவு – ஒலி இவற்றின் தொடர்பினை சிதைக்காமல் அது நிறைவேறாது.

    காலமே இதற்கு பதில் சொல்லும். ஆனால், நல்லதோ, கெட்டதோ, மொழி காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். மாறாவிட்டால் தான் சிக்கல்.
    சட்டிஸ்கர்.
    காஷ்மீர்.
    ஜம்மு.
    ஜூன்.
    ஜுலை
    இவற்றை மாற்றினால், எனக்கு அனாச்சாரமாக தோன்றும். ஆனால், தற்போது தமிழ் கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு அது நன்றாக அமையலாம்.

    அ, ஆ கூட எழுத கடினமாக உள்ளது. அவற்றை கொஞ்சம் எளிதாக்கினால், தமிழ் கற்கும் ஆர்வம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். (today, we have to fight it out with english, which is quite easier to write with just 26 alpabets, most of them comprising simple strokes. A LKG student can write in english, where as a I std student finds it hard in Tamil. May be someone should look into making tamil letters a bit more easier, atleast அ ஆ இ ஈ. infact ஈ is a lot better compared to other three.)

  10. நாம் பலசொற்களைச்சமக்கிருதச்சொற்களாக எண்ணுகின்றோம் பூடு பூண்டு கூடு கூண்டு ஆவதுபோல்ஆடு ஆண்டுஆகும்.ஆட்டுக்கு வருடைஎன்றபெயர் உண்டு. வருடை–வருடம் ஆகும்.வருடமே வருஷம்