ஸ்ரீ X சிறீ X சிரீ

தமிழ் விக்கிப்பீடியாவில் மஞ்சுஸ்ரீ என்ற கட்டுரை இயற்றப்பட்ட போது அதை ஏன் மஞ்சுசிறீ என்றோ மஞ்சுசிரீ என்றோ எழுதக் கூடாது என்றொரு சுவையான உரையாடல் வந்தது. முழு உரையாடலுக்கு பேச்சு:மஞ்சுஸ்ரீ பார்க்கவும்.

ஸ்ரீ கட்டுரையில் இருந்து முக்கியமான தகவல்:

தமிழுடன் கலந்து எழுதப்படும் பிற கிரந்த எழுத்து வடிவங்களைப் போலன்றி, ஸ்ரீ என்பது ஒரே பொருள் குறித்து மட்டுமே அனைத்து இடங்களிலும் பயன்படுவதும் பிற உயிர், மெய் ஒலிகளுடன் சேராது எப்போதும் தனி எழுத்தாகவே பயன்படுவதும் குறிப்பிடத்தக்கது. தெளிவாகச் சொல்வதானால், ஒரே ஒரு சொல்லுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கூடுதல் எழுத்து. தமிழில் பிற மொழிச் சொற் கலப்பை தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்னும் சொல்லுக்கு இணையான திரு, திருமிகு, அருள்மிகு போன்ற சொற்களை இடத்துக்குத் தகுந்தவாறு பயன்படுத்துகின்றனர். எனினும், திரு என்னும் சொல்லை ஸ்ரீ என்னும் சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மட்டுமே அனைத்து இடங்களிலும் கருதி விட இயலாது. ஸ்ரீ என்னும் சொல் மற்றும் எழுத்துப் பயன்பாடு தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை அறியலாம். தற்காலத்தில் ஸ்ரீரங்கம் என்று குறிப்பிடப்படும் ஊர் முற்கால வைணவ இலக்கியங்களிலேயே திருவரங்கம் என்று குறிக்கப்பட்டு இருப்பதும், திரு + அரங்கம் என்னும் சொற்கூட்டு தரும் பொருளும் ஸ்ரீ + ரங்கம் என்னும் சொற்கூட்டுத் தரும் பொருளும் முற்றிலும் வேறாக இருப்பதையும் காணலாம். எனவே, முற்காலத்தில் தமிழில் ஏற்கனவே திரு என்னும் சொல் இருந்த இடங்கள் தவறுதலாக ஸ்ரீ என்ற மொழிமாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாகவும் கருதலாம்.

கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதுவோர் ஸ்ரீ என்ற எழுத்துக்கு மாறாக அதற்கு நெருங்கிய ஒலிப்பு தரும் சிறீ, சிரீ என்ற எழுத்துக்களைப் பயன்படுத்துவது உண்டு. தமிழ் இலக்கியத்தில் சிரீ என்று எழுதும் வழக்கம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, திருவாய்மொழி இரண்டாம் பகுதியில் (பாடல் 2858ல்)

தூமனத் தனனாய்ப் பிறவித்
துழதி நீங்க என்னைத்
தீமனங் கெடுத்தா யுனக்கென்
செய்கேனென் சிரீதரனே!

என்று வருவதைக் கவனிக்கலாம்.

இலங்கையில், ஸ்ரீ என்பதற்கு மாறாக சிறீ என்று எழுதும் வழக்கம் இருக்கிறது. எனினும், இந்த மாற்றத்துக்கு அந்நாட்டு அரசியல் சூழலும், வரலாற்று நிகழ்வுகளும் ஒரு காரணமாகும்.


Comments

10 responses to “ஸ்ரீ X சிறீ X சிரீ”

  1. எங்கட ஊர் திருகோணமலை…. வட ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தால்..

    ஸ்ரீகோணமலை என்றாகியிருக்கும்!!!!

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      நல்லவேளை திருவள்ளுவர் இன்னும் ஸ்ரீவள்ளுவர் ஆகவில்லை 😉

  2. ஸ்ரீஸ்ரீ Avatar
    ஸ்ரீஸ்ரீ

    ஸ்ரீ என்பது பிற இந்திய மொழிகளில் உள்ள எழுத்துதானே.சிரீ,சிறீ போன்றவற்றை விட ஸ்ரீ என்பதை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தலாம்.ஸ்ரீநகர் என்பதை சிரீநகர் என்று எழுதுவது
    பொருந்தவில்லையே.ஸ்ரீ = திரு/திருமிகு என்று எல்லா இடங்களிலும்
    பயன்படுத்தமுடியாது.ஸ்ரீ என்பதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு

  3. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    //ஸ்ரீ என்பது பிற இந்திய மொழிகளில் உள்ள எழுத்துதானே.//

    இந்தியாவில் உள்ள மொழிகள் பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. ஒன்றில் இருப்பது இன்னொன்றில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

    //ஸ்ரீநகர் என்பதை சிரீநகர் என்று எழுதுவது
    பொருந்தவில்லையே//

    சிரீநகர் என்று எழுதிப் பார்த்துப் பழக்கம் இல்லாததே காரணம். ஸ்ரீலங்கா என்று எழுதுபவர்களை விட சிறிலங்கா, சிறீலங்கா என்று எழுதுவோர் கூட. அந்த நாட்டு மக்களுக்குப் பொருத்தமாகவே உள்ளது.

    //ஸ்ரீ = திரு/திருமிகு என்று எல்லா இடங்களிலும்
    பயன்படுத்தமுடியாது.ஸ்ரீ என்பதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு//

    ஆம். அதனால் தான் தேவைப்படும் இடங்களில் சிரீ, சிறீ என்றே எழுதுவது சரியாக இருக்கும்.

  4. ganesan.m Avatar
    ganesan.m

    அன்பு இரவி,
    வேற்றுமொழியாகிய ஸ்ரீக்கு பொருள் என்ன? எனக்குத் தெரியாது. ஸ்ரீக்கு
    ஒலிவரிவடிவம் சிறீ (அ)சிரீ என ஏன் இரு வழக்கு வேண்டும்?. மெல்லோசையுடைய ஸ்ரீக்கு சரியான ஒலிவரிவடிவம் மெல்லோசையுடைய சிரீயே சரியென என்பது என் கருத்து.சொல்லோசையோடு பொருளும் சேர்ந்தால் பூ மணம் பெறுமே!
    தமிழ்ப்பூ மணம் பெற ஸ்ரீக்குப் பொருள் தேடித் தர வேண்டுகிறேன். அதன்பின் நல்ல தமிழ் படைப்போமே!
    அன்புடன், மீ.க.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      வணக்கம் கணேசன்.

      ஸ்ரீ என்பதன் பொருள், பயன்பாடு குறித்து

      http://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ

      http://en.wikipedia.org/wiki/Sri

      கட்டுரைகளில் காணலாம்.

      சிறீ என்று எழுதுவது இலங்கை வழக்காக இருக்கிறது. சிரீ என்ற வழக்கைத் தமிழ் இலக்கியத்தில் காண இயல்கிறது. எதைப் பயன்படுத்தினாலும் எனக்கு உவப்பே.

  5. ganesan.m Avatar
    ganesan.m

    அன்பு இரவி,
    ஸ்ரீக்கு என்ன பொருள் என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சிரீ என(மெல்லோசை) கொள்ளத்தக்கது என் கருத்து. இலங்கை (அ)தமிழ் வழக்கு என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சமைப்பதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். வேற்றுமொழிச் சொல்லுக்கு இரட்டை வரிவடிவம் குழப்பம் தரும்.தேவையா?
    அன்புடன், மீ.க.

    பி.கு: ஸ்ரீயின் பொருளை கண்டேன்.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      //இலங்கை (அ)தமிழ் வழக்கு என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சமைப்பதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.//

      கொள்கையளவில் இது தான் என் கருத்தும். ஆனால், தமிழின் பன்னாட்டுப் பரவல் காரணமாக நடைமுறையில் எந்த அளவு செயல்படுத்த இயலும் என்று தெரியவில்லை. சரியோ தவறோ இருநாட்டு வழக்குகளையும் அறிந்திருப்பது இரு நாட்டுத் தமிழர்கள் உறவாட உதவுகிறது.

  6. homeonesan Avatar
    homeonesan

    அன்பு இரவி
    வழக்கு ஒழிக்கவேண்டிய சொல்லுக்கு வீணே நேரத்தை செலவு செய்வ்து ஏன்?.வேறு எந்த மொழியாவது தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை அந்த மொழியில் இல்லை என்பதற்க்காக ‘ழ்’கரத்தை எடுத்தாண்டதா? இல்லையே.அவரவர் மொழியில் உள்ள எழுத்து வடிவத்தையே கையாளுகிறது. இந்த ஓர்மை தமிழனுக்கு மட்டும் இல்லாது போனது ஏன்?. தலைவிதியா? முட்டாள்தனமா? அடிமைத்தனமா? பரத்தையர் பாங்கா?
    களை பயிரை மூடி மேய்வதுபோல் களைத்தமிழ் மண்டிக்கிடக்கிறது.
    அம்மாவிற்கு மாதா,மம்மி ஓர் களை
    ஆணைக்கு ஆக்ஞா ஓர் களை
    இன்பத்திற்கு ஆனந்த்ம் ஓர் களை
    உயிர்க்கு சீவன் ஓர் களை
    ஊணுக்கு போசனம் ஓர் களை
    எத்தனுக்கு எம்ட்டன் ஓர் களை
    ஏற்ப்பாளுக்கு ஏசண்ட் ஓர் களை
    ஐயாவிற்கு சார் ஓர் களை
    ஒளிக்கு லைட் ஓர் களை
    ஓசைக்கு சப்தம் ஓர் களை
    ஒளவைக்கு அவ்வை ஓர் களை
    ஃக்கிற்கு ஏது களை?
    இளங்கதிரே! களைத்தமிழைக் கண்டுகொள்ள தனித்தமிழ் அகராதியைக் காலம் நம்முன் நிற்குமுன் தொகுத்தல் கடனல்லவா!
    அன்புடன்
    மீ.க.