நினைவில் நின்றவை – ஏப்ரல் 20, 2013

* தமிழில் வலைப்பதிந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் ஆகி விட்டது ! இனி அடிக்கடி வலைப்பதியும் அளவுக்கு வாழ்ந்து பார்க்க வேண்டும் 🙂

* போன ஆண்டு சனவரி முதல் சூன் வரை பேசுபுக்கு, துவிட்டர் விடுப்பு எடுத்தது போலவே இந்த ஆண்டும் மூன்று மாதங்களைக் கடந்து விட்டேன். தகவல் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பேசுபுக்கு நண்பர்கள் எண்ணிக்கையை 50க்கு கீழே கொண்டு வந்துள்ளேன். துவிட்டரில் பின்தொடர்பவர்களையும் 100க்குள் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேன்.ஒரு like, retweet போடவாவது மனம் துடித்தாலும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். நிம்மதியாக இருக்கிறது.

* வேலை நேரத்தில் கவனம் சிதறாமல் இருக்க, முக்கியமான பக்கங்களை Pocket செயலியில் சேர்த்து வைத்து பிறகு படிக்கலாம். ஒரே பிரச்சினை என்னவென்றால், புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்காமல் விடுவது போல், இதிலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் தேங்கிக் கிடக்கின்றன 🙁

* iPad mini வாங்கி இருக்கிறேன். வெகுமக்கள் இதழ்களையும், நூல்களையும் இதன் மூலம் படிக்கத் தொடங்கியிருப்பதால் வீட்டில் காகிதக் குவியல் குறைகிறது. அதே நேரம், தொடர்ந்து வாங்கவே தோன்றியிருக்காத பல படைப்புகளையும் செயலிகளையும் வாங்கத் தூண்டுகிறது ! இதனைக் கொண்டு அக்கா மகனுக்குக் கணிதம் கற்பிக்க முடிகிறது. பெரும்பாலான நேரம் குழந்தையுடன் இருக்கும் மனைவிக்கும் வாசிப்புக்கு உகந்த கருவியாக இருக்கிறது. கையடக்கக் கணினி வாங்குவதாக இருந்தால் தயங்காமல் iPad mini வாங்குங்கள். திற மூலத்துக்கு மட்டுமே ஆதரவு என்பவர்கள் Google Nexus 7 வாங்கலாம். அதற்கும் பெரிதாக வாங்கினால், கையில் வைத்துக் கொண்டு செயல்பட இடையூறாக இருக்கும். உங்களிடம் ஏற்கனவே உயர் வகை கைப்பேசி இருந்தால், wifi மட்டும் உள்ள iPad போதுமானது. இணைய இணைப்பு தேவைப்படும் நேரங்களில் கைப்பேசியில் wifi hotspot போட்டுக் கொள்ளலாம்.

* நேரம் கிடைக்கும் போது Google Mapsல் நேரம் செலவிடுகிறேன். இந்திய மாநிலங்களாவது பாதி எங்கிருக்கிறது என்று தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு தமிழக மாவட்டங்கள் எவற்றின் அருகே எவை உள்ளன என்று தெரியும்? வெவ்வேறு ஊர்களுக்குப் போக நினைக்கும் போது சரியான, விரைவான வழிகளை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தின் காட்டு வளம், ஊர்களின் பிரச்சினைகள் என்று பலவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. புவியியலும் ரொம்ப முக்கியம், அமைச்சரே !

* பிராய்லர் கோழி உண்பது அவ்வளவு நல்லதல்ல என்று பரவலான கருத்து இருப்பதால், நாட்டுக் கோழி வாங்கி வந்தேன். அதையும் பண்ணையில் வைத்து தீவனம் போட்டே வளர்க்கிறார்கள் என்கிறார்கள். பழங்கள் சத்தானவை என்று ஆசைப்பட்டு வாங்கினால், என்ன மருந்து போட்டு வளர்த்தார்களோ என்றே யோசிக்க வேண்டி இருக்கிறது. எதைச் சாப்பிட, எதை விட? ஊர் பக்கம் போய், நாமளே முழுக்க முழுக்க இயற்கை முறை வேளாண்மை பார்த்துச் சாப்பிடுவது தான் ஒரே வழி போல !

* கூகுள் ரீடர் மூடுவிழா காண இருக்கிறது. எனவே, இந்தப் பதிவில் புதிய இடுகைகள் வந்தால் தெரிந்து கொள்வதற்கு, இத்தளத்தின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் உங்கள் மின்மடல் விவரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். கூகுள் ரீடருக்கு மாற்றாக Feedly பயன்படுத்தலாம்.

நினைவில் நின்றவை 20 ஏப்ரல் 2012

ஏன் முன்பைப் போல் அடிக்கடி வலைப்பதிவதில்லை என்று சாய்ராம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.

* மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு வலைப்பதிவு மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இப்போது, டுவிட்டர், பேசுபுக்கில், கூகுள் பிளசில் ஒரே வரியில் செய்திகளைத் தெரிவிக்க முடிவதால் வழவழா கொழகொழா இடுகைகளை எழுத நேரமும் இல்லை. படிப்பதற்கு ஆளும் இல்லை.

* ஒரு காலத்தில் 1,000+ வலைப்பதிவுகளை கூகுள் ரீடரில் போட்டு வைத்து கொலைவெறியுடன் படித்து மாற்றில் சேர்த்துக் கொண்டிருந்தேன். இப்போது ஒரு வலைப்பதிவு கூட ரீடரில் இல்லை. நினைவு வரும் போது ஒரு சிலரின் வலைப்பதிவுகளுக்கு மட்டும் நேரடியாகச் சென்று எட்டிப் பார்க்கிறேன். ஒரு கால வட்டம் போல் இது வலைப்பதிவுகள் தோன்றத் தொடங்கிய காலத்து வாசிப்பு நிலை.

* வெளிநாட்டில் மாணவனாக இருந்த போது நிறைய நேரம் கிடைத்தது. இந்தியாவில் வந்து வேலை பார்த்து திருமணம் செய்து குடும்பம் நடத்தும் போது வலைப்பதிவதற்கான நேரம் கிடைப்பதில்லை.கிடைத்தாலும், ஒரு முறை அதில் இருந்து விலகிய பிறகு முன்பைப் போல் ஆர்வம் வரவில்லை. இதுவும் கடந்து போகுமோ? 🙂

முந்தைய சில இடுகைகளே சாய்ராம் கேட்டு எழுதியவை தான். தொடர்ந்து தூண்டுதலாக இருப்பதற்காக அவருக்கு ஒரு நன்றி. வெகு நாட்கள் ஆனாலும் மறக்காமல், திரும்பத் திரும்ப மனதில் தோன்றி மறையும் விசயங்களை “நினைவில் நின்றவை” என்ற பெயரில் தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறேன். என்ன செய்வது… ஆயிரக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து அன்புத் தொல்லை கொடுத்து எழுத வைக்கிறார்கள் என்று புருடா விட முடியவில்லை 🙂

நினைவில் நின்றவை 20 ஏப்ரல் 2012

* டுவிட்டர், பேசுபுக்கு பித்து கூடி வேலையைக் கெடுத்துக் கொண்டே போனதால், மனைவியிடம் சொல்லி இந்தத் தளங்களின் கடவுச் சொல்லை மாற்றிவிட்டேன். ஓரிரு நாட்கள் அதன் பக்கம் போகாமல் இருந்தாலே பித்து தெளிந்து விடுகிறது. இன்றோடு அவற்றின் பக்கம் போகாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிறது. மீண்டும் ஒரு சில முறை எட்டிப் பார்க்கலாம் என்றாலும், பித்துக்கு வைத்தியம் தெரிந்து விட்டது 🙂 சொல்லப்போனால், அவற்றைப் பார்க்காததால் எதையும் இழந்ததாகத் தெரியவில்லை. எனக்கென்னவோ, நாம் தகவல் வெள்ளக் காலத்தில் வாழ்கிறோமோ என்று தோன்றுகிறது. ஒரே செய்தியை வெவ்வேறு ஊடகங்களில் அறிவது, அது குறித்து உரையாடுவது என்று போகும் பொழுது சரி தானா? ஊடகங்களில் இருந்து விலகி வாழ்வதே ஒரு இதமாக இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் தொழில், வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களைச் செய்யலாம். அட, பக்கத்தில் இருப்பவருடன் பேசவாவது செய்யலாம்.

* தஞ்சை சண்முகா கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து Bhojan Atews என்று ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு நடத்துகிறார்கள். பொதுவாக, படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்தே இது போல் ஏதாவது செய்வார்கள். படிக்கும் காலத்திலேயே எளிமையாகவும், அதே வேளை மிகத் தெளிவாகவும் திட்டமிட்டு நடத்துகிறார்கள்.

* கடன் அட்டை ஒன்றுக்குக் கட்ட வேண்டிய தொகை ஏறிக் கொண்டே போனது. “உடனே முழுத்தொகையையும் கட்டுகிறோம். தள்ளுபடி தாருங்கள்” என்று கேட்டோம். 2,500 ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி தந்தார்கள். இப்படி கூட பேரம் பேசலாம் என்று இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. பொதுவாக, கூச்சப்படாமல் கெத்தாகவும் கனிவாகவும் கேட்டால் பல இடங்களில் தள்ளுபடி தருகிறார்கள். குறிப்பாக, மருந்துக் கடைகளில். ஒரு முறை என் சித்தப்பா ஒருவர் உணவகத்திலேயே தள்ளுபடி கேட்டார். சாப்பிட்டுவிட்டு நன்றாக இருந்தால் காசு தாருங்கள் என்றார்கள்!

* ஒவ்வொரு முறை IRCTC சென்று முன்பதிவு செய்யும் போதும் மனித வாழ்நாளின் கணிசமான பங்கு குறைந்து விடுகிறது 🙁 சென்ற முறை, சீட்டு கிடைக்குமா கிடைக்காதா என்று நான்கு பேர் வெவ்வேறு கணினிகளில் ஏகப்பட்ட உலவிச் சாளரங்களைத் திறந்து வைத்துக் கொண்டு மல்லுக்கட்டியதில் எப்படியும் 4*1 = 4 மணி நேரம் வீண். கடைசியில் தத்கல் காத்திருப்புப் பட்டியலில் கிடைத்தது. வண்டி கிளம்பும் முன் ஒரு ஆளுக்கு மட்டும் சீட்டு உறுதியானது. இன்னொரு ஆளுக்கோ Waiting list 1 என்று வந்தது. இரயில் சீட்டுச் சோதனையாளரிடம் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி, ஒரு முன்பதியா சீட்டையும் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி விட்டோம். ஏறிய பிறகு தான் தெரிந்தது: ஒரே PNR கொண்ட சீட்டில் ஒருவருக்கோ சிலருக்கோ மட்டும் சீட்டு உறுதியாகி மற்றவர்களுக்கு உறுதியாகவில்லை என்றால், அவர்களும் வண்டியில் ஏறிக் கொள்ளலாம். RAC ஆட்களுக்குச் சீட்டு ஒதுக்கிய பிறகு சீட்டு எஞ்சினால் நமக்குத் தருவார்கள். எனவே, இதற்காக முன்பதியா சீட்டு வாங்கவோ வண்டியில் ஏறாமலோ இருக்கத் தேவை இல்லை.

* Just Books என்ற வாடகை நூலகத்தின் மூலம் மீண்டும் படிக்கும் வழக்கம் கூடி இருக்கிறது. என்ன நூல் கிடைக்கும், நமது கிளையில் இருக்கிறதா என்று இணையத்திலேயே பார்த்து வைத்துக் கொண்டு போகலாம்.

சிந்தாநதி

வலைப்பதிவர் சிந்தாநதி காலமாகியுள்ளார். நல்ல மனிதர்களும் இறப்பார்களோ 🙁

தமிழ் வலைப்பதிவர் உதவிப் பக்கம், சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007, தமிழ் 99 விழிப்புணர்வுத் தளம், சற்றுமுன் என்று பல கூட்டு முயற்சிகளில் அவருடன் இணைந்து பங்காற்றினேன். இந்த எல்லா முயற்சிகளிலும் இவருடைய ஈடுபாடு அளப்பரிது.  தமிழ்99 தள வடிவமைப்பு, தமிழ்99 விசைப்பலகை ஒட்டி வடிவமைப்பு என்று பெரும் பங்களித்தார். தமிழ்க் கணிமை, வலைச்சரம், தமிழ்ப் புத்தகச் சந்தை, வலைமொழி என்று அவருடைய முனைப்புகள் பட்டியல் நீள்கிறது.

சிந்தாநதி மிகுந்த ஊக்கம், அடக்கம், முயற்சி, பண்பாடு மிக்கவர். என்றும் தன்னை முன்னிறுத்தாதவர். விமர்சனங்களைக் கூட மிக கனிவாகவே சொல்வார். தமிழ், இலக்கியம், சூழல், கணிமை, வலைத்தளங்கள், வரை கலையில் மெய்யான ஆர்வமும் திறமும் உடையவர். அவருடைய ஆவணமாக்கத் திறத்துக்கு கணிச்சுவடி ஒரு சான்று. ஒரே ஒரு முறை நான் அவரை மிகவும் வேண்டிக் கேட்ட பின் தொலைப்பேசியில் பேசினார். முகம் பார்த்ததில்லை. என்றாவது ஒரு நாள் கூடிய விரைவில் பார்த்து உரையாடி விட வேண்டும் என்றிருந்தேன். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வலையில் காணாமல் இருந்த போது, அவருக்கு என்ன ஆனதோ என்று கவலையாக இருந்தது. காசி அவரைத் தேடி பெரும் முயற்சி செய்தார். பிறகு, அவர் தானாகவே திரும்ப வந்தபோது மகிழ்ந்தேன். நிலைக்கவில்லை 🙁

அவரின் மறைவு தமிழ் இணையத்துக்கு, நல்ல உலகுக்கு இழப்பு 🙁 தேன்கூடு தள நிறுவனர் சாகரன் மறைந்ததோடு அவரது உழைப்பும் மறைந்தது. அப்படி இல்லாமல், சிந்தாநதியின் பல ஈடுபாடுகள் கூட்டு முயற்சிகளாக இருப்பதால், இம்முயற்சிகள் வடிவில் அவர் நிலைப்பார் என்பதே ஒரே ஆறுதல்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். வலையுலக நண்பர்கள் எந்த வகையிலாவது அவரது குடும்பத்துக்குஆதரவளிக்க முன்வந்தால் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.

புதிர்: நான் எந்த கட்சிக்கு வாக்களித்தேன்?

நேற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல். சிவகங்கை தொகுதி. நான் எந்த கட்சிக்கு வாக்களித்தேன் ? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் !

உதவிக் குறிப்புகள்:

* போட்டியிட்ட வேட்பாளர்கள் பட்டியல்

* காங்கிரசு கூட்டணிக்கோ, தேர்தல் வெற்றிக்குப் பின் அதனுடன் சேரக்கூடிய கட்சிக்கோ வாக்களிக்கக்கூடாது.

* நான் வாக்களித்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. வாக்களிப்பதற்கு ஒரு நாள் முன்பு கூட நினைக்கவிலை. இனி, வாழ்நாள் முழுதும் அந்தக் கட்சிக்குத் திரும்ப வாக்களிக்கும் எண்ணமும் இல்லை.

அது என்ன கட்சி?

துணுக்குகள்:

* மாமா ஊரில் உள்ள பெண்கள் அ.தி.மு.க விடம் மட்டும் காசு வாங்கிக் கொண்டார்களாம். தி.மு.க-வும் கொடுத்தது. ஆனால், இரண்டு கட்சிகளிடம் பெற்றுக் கொண்டு ஒருவருக்கு மட்டும் வாக்களிப்பது சரி இல்லை என்பதால் மறுத்து விட்டார்களாம் !!

* தலைக்கு 200 ரூபாய். ஏமாந்த தலை என்றால் 50 ரூபாய். மற்றவர்களுக்கு அதுவும் இல்லை. நிறைய இடங்களில் உள்ளூர் கட்சித் தலைவர்கள் ஒன்றுமே கொடுக்காமல் சுருட்டி இருக்கிறார்கள்.

* நகரத்தை விட ஊர்ப்புறத்தில் வாக்குப்பதிவு கூடுதலாகத் தென்பட்டது. அப்பா சொன்னார்: “வாக்கு போடாட்டி செத்துப் போயிட்டதா நினைச்சிடுவாங்கன்னு தான் கிழவன் கிழவி எல்லாம் மெனக்கெட்டு வந்து வாக்களிக்கிறாங்க” !

* பத்துக்கு ஒன்பது நண்பர்கள் “49-O” போடச்சொன்னார்கள். கடைசியில் அதைப் போடவும் அவர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை 🙁 49O பற்றிச் சொல்வது ஒரு புதுப் போக்கு மாதிரி ஆகிவிட்டது.

* அம்மா விசயகாந்துக்கு போட்டார்களாம். “படத்தில் எல்லாம் நல்லா நடிக்கிறான். ஏதாச்சும் நல்லது பண்ணுவான்” என்கிறார்கள் !!

தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?

என் விருப்ப வலைப்பதிவரும் குட்டித் தோழியுமான அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன்:

Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

வாழ்த்துக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் கேட்ட முதல் கேள்வி:

குட்டி என்பது தமிழ்ச் சொல். அதை எப்படி நீங்கள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம்?

அஞ்சலிக்கு வயது 9. பிறந்தது முதல் வளர்வது நோர்வேயில்.

எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பாராத நேரத்தில் வந்த கேள்வி திகைக்க வைத்தது. ஒரு சிறு பிள்ளைக்குப் புரியும் அபத்தம் ஆறு கோடித் தமிழருக்கு உறுத்தாமல் போனதே என்று நினைக்க வைக்கிறது.

நோர்வே மொழி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழர் என்றால் தமிழில் கதைக்கத் தான் அஞ்சலிக்கு விருப்பம் என்று அவர்கள் அம்மா சொன்னார்கள்.

இனி முதற்கொண்டு Busபஸ் என்று எழுதாமல் Bus என்று எழுதவும் “எப்படி இருக்க” என்பதை “eppadi irukka” என்று எழுதாமல் “எப்படி இருக்க” என்றே மறக்காமல் எழுதவும் உறுதி பூண்டிருக்கிறேன். இப்படி எழுதும் போது தேவையில்லாமல் ஆங்கில எழுத்தகளில் எழுதப்பட்ட ஆங்கிலச் சொற்கள் கட்டுரை முழுக்க கண்ணை உறுத்தும் என்பதால், இயன்ற அளவு தமிழில் எழுத முனைவோம். ஸ்கூல், ரைஸ், டீவீ, ஹேப்பி பர்த்டே என்று தமிழில் எழுதப்படும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று எண்ணி வளரும் ஒரு கவலைக்குரிய தலைமுறை வந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம், இது ஆங்கிலச் சொல் என்பதையாவது வாசிப்பவருக்கு நினைவூட்டும். இதே போல் பல வேற்று மொழிச் சொற்கள், ஒலிகளையும் தமிழில் எழுதிக் காட்டுவதற்காக கிரந்த எழுத்துகளை அதிகமாகப் பயன்படுத்தித் தமிழைக் கொல்லாமல் தமிழ் ஒலிப்புக்கு ஏற்பவே எழுதி விட்டு, தேவைப்பட்டால் அடைப்புக்குறிகளுக்குள் அந்தந்த மொழி எழுத்துக்களாலேயே எழுதிக் காட்டவும் நினைத்து இருக்கிறேன். (கிரந்த எழுத்துக்களை ஏன் இயன்ற அளவு தவிர்க்க நினைக்கிறேன் என்பது இன்னொரு பெரிய தனிக்கதை. அது தனி இடுகையாக வரும்.)

இன்று முதல் இந்த கொள்கை முடிவு நடப்புக்கு வருகிறது 🙂

தொடர்புடைய இடுகை:

English words in spoken Tamil