நினைவில் நின்றவை 20 ஏப்ரல் 2012

ஏன் முன்பைப் போல் அடிக்கடி வலைப்பதிவதில்லை என்று சாய்ராம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.

* மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு வலைப்பதிவு மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இப்போது, டுவிட்டர், பேசுபுக்கில், கூகுள் பிளசில் ஒரே வரியில் செய்திகளைத் தெரிவிக்க முடிவதால் வழவழா கொழகொழா இடுகைகளை எழுத நேரமும் இல்லை. படிப்பதற்கு ஆளும் இல்லை.

* ஒரு காலத்தில் 1,000+ வலைப்பதிவுகளை கூகுள் ரீடரில் போட்டு வைத்து கொலைவெறியுடன் படித்து மாற்றில் சேர்த்துக் கொண்டிருந்தேன். இப்போது ஒரு வலைப்பதிவு கூட ரீடரில் இல்லை. நினைவு வரும் போது ஒரு சிலரின் வலைப்பதிவுகளுக்கு மட்டும் நேரடியாகச் சென்று எட்டிப் பார்க்கிறேன். ஒரு கால வட்டம் போல் இது வலைப்பதிவுகள் தோன்றத் தொடங்கிய காலத்து வாசிப்பு நிலை.

* வெளிநாட்டில் மாணவனாக இருந்த போது நிறைய நேரம் கிடைத்தது. இந்தியாவில் வந்து வேலை பார்த்து திருமணம் செய்து குடும்பம் நடத்தும் போது வலைப்பதிவதற்கான நேரம் கிடைப்பதில்லை.கிடைத்தாலும், ஒரு முறை அதில் இருந்து விலகிய பிறகு முன்பைப் போல் ஆர்வம் வரவில்லை. இதுவும் கடந்து போகுமோ? 🙂

முந்தைய சில இடுகைகளே சாய்ராம் கேட்டு எழுதியவை தான். தொடர்ந்து தூண்டுதலாக இருப்பதற்காக அவருக்கு ஒரு நன்றி. வெகு நாட்கள் ஆனாலும் மறக்காமல், திரும்பத் திரும்ப மனதில் தோன்றி மறையும் விசயங்களை “நினைவில் நின்றவை” என்ற பெயரில் தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறேன். என்ன செய்வது… ஆயிரக்கணக்கான வாசகர்கள் தொடர்ந்து அன்புத் தொல்லை கொடுத்து எழுத வைக்கிறார்கள் என்று புருடா விட முடியவில்லை 🙂

நினைவில் நின்றவை 20 ஏப்ரல் 2012

* டுவிட்டர், பேசுபுக்கு பித்து கூடி வேலையைக் கெடுத்துக் கொண்டே போனதால், மனைவியிடம் சொல்லி இந்தத் தளங்களின் கடவுச் சொல்லை மாற்றிவிட்டேன். ஓரிரு நாட்கள் அதன் பக்கம் போகாமல் இருந்தாலே பித்து தெளிந்து விடுகிறது. இன்றோடு அவற்றின் பக்கம் போகாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிறது. மீண்டும் ஒரு சில முறை எட்டிப் பார்க்கலாம் என்றாலும், பித்துக்கு வைத்தியம் தெரிந்து விட்டது 🙂 சொல்லப்போனால், அவற்றைப் பார்க்காததால் எதையும் இழந்ததாகத் தெரியவில்லை. எனக்கென்னவோ, நாம் தகவல் வெள்ளக் காலத்தில் வாழ்கிறோமோ என்று தோன்றுகிறது. ஒரே செய்தியை வெவ்வேறு ஊடகங்களில் அறிவது, அது குறித்து உரையாடுவது என்று போகும் பொழுது சரி தானா? ஊடகங்களில் இருந்து விலகி வாழ்வதே ஒரு இதமாக இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் தொழில், வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களைச் செய்யலாம். அட, பக்கத்தில் இருப்பவருடன் பேசவாவது செய்யலாம்.

* தஞ்சை சண்முகா கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து Bhojan Atews என்று ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு நடத்துகிறார்கள். பொதுவாக, படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்தே இது போல் ஏதாவது செய்வார்கள். படிக்கும் காலத்திலேயே எளிமையாகவும், அதே வேளை மிகத் தெளிவாகவும் திட்டமிட்டு நடத்துகிறார்கள்.

* கடன் அட்டை ஒன்றுக்குக் கட்ட வேண்டிய தொகை ஏறிக் கொண்டே போனது. “உடனே முழுத்தொகையையும் கட்டுகிறோம். தள்ளுபடி தாருங்கள்” என்று கேட்டோம். 2,500 ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி தந்தார்கள். இப்படி கூட பேரம் பேசலாம் என்று இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. பொதுவாக, கூச்சப்படாமல் கெத்தாகவும் கனிவாகவும் கேட்டால் பல இடங்களில் தள்ளுபடி தருகிறார்கள். குறிப்பாக, மருந்துக் கடைகளில். ஒரு முறை என் சித்தப்பா ஒருவர் உணவகத்திலேயே தள்ளுபடி கேட்டார். சாப்பிட்டுவிட்டு நன்றாக இருந்தால் காசு தாருங்கள் என்றார்கள்!

* ஒவ்வொரு முறை IRCTC சென்று முன்பதிவு செய்யும் போதும் மனித வாழ்நாளின் கணிசமான பங்கு குறைந்து விடுகிறது 🙁 சென்ற முறை, சீட்டு கிடைக்குமா கிடைக்காதா என்று நான்கு பேர் வெவ்வேறு கணினிகளில் ஏகப்பட்ட உலவிச் சாளரங்களைத் திறந்து வைத்துக் கொண்டு மல்லுக்கட்டியதில் எப்படியும் 4*1 = 4 மணி நேரம் வீண். கடைசியில் தத்கல் காத்திருப்புப் பட்டியலில் கிடைத்தது. வண்டி கிளம்பும் முன் ஒரு ஆளுக்கு மட்டும் சீட்டு உறுதியானது. இன்னொரு ஆளுக்கோ Waiting list 1 என்று வந்தது. இரயில் சீட்டுச் சோதனையாளரிடம் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி, ஒரு முன்பதியா சீட்டையும் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி விட்டோம். ஏறிய பிறகு தான் தெரிந்தது: ஒரே PNR கொண்ட சீட்டில் ஒருவருக்கோ சிலருக்கோ மட்டும் சீட்டு உறுதியாகி மற்றவர்களுக்கு உறுதியாகவில்லை என்றால், அவர்களும் வண்டியில் ஏறிக் கொள்ளலாம். RAC ஆட்களுக்குச் சீட்டு ஒதுக்கிய பிறகு சீட்டு எஞ்சினால் நமக்குத் தருவார்கள். எனவே, இதற்காக முன்பதியா சீட்டு வாங்கவோ வண்டியில் ஏறாமலோ இருக்கத் தேவை இல்லை.

* Just Books என்ற வாடகை நூலகத்தின் மூலம் மீண்டும் படிக்கும் வழக்கம் கூடி இருக்கிறது. என்ன நூல் கிடைக்கும், நமது கிளையில் இருக்கிறதா என்று இணையத்திலேயே பார்த்து வைத்துக் கொண்டு போகலாம்.


Comments

2 responses to “நினைவில் நின்றவை 20 ஏப்ரல் 2012”

  1. //சொல்லப்போனால், அவற்றைப் பார்க்காததால் எதையும் இழந்ததாகத் தெரியவில்லை.// தொடர்ந்து பார்த்து எதையும் தெரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை 🙂

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      🙂 தேவையில்லாத நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதே வேளை, வேர்டுப்பிரெசு தொடர்பான நிகழ்வுகள், செய்திகளை முழுக்க முழுக்க டுவிட்டரில் தான் தெரிந்து கொள்கிறேன். அதற்குத் தனிக் கணக்கு வைத்திருக்கிறேன். எந்த ஊடகமாக இருந்தாலும் எதைத் தெரிவு செய்து படிக்கிறோம் என்பதும் முக்கியம்.