சிந்தாநதி

வலைப்பதிவர் சிந்தாநதி காலமாகியுள்ளார். நல்ல மனிதர்களும் இறப்பார்களோ 🙁

தமிழ் வலைப்பதிவர் உதவிப் பக்கம், சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007, தமிழ் 99 விழிப்புணர்வுத் தளம், சற்றுமுன் என்று பல கூட்டு முயற்சிகளில் அவருடன் இணைந்து பங்காற்றினேன். இந்த எல்லா முயற்சிகளிலும் இவருடைய ஈடுபாடு அளப்பரிது.  தமிழ்99 தள வடிவமைப்பு, தமிழ்99 விசைப்பலகை ஒட்டி வடிவமைப்பு என்று பெரும் பங்களித்தார். தமிழ்க் கணிமை, வலைச்சரம், தமிழ்ப் புத்தகச் சந்தை, வலைமொழி என்று அவருடைய முனைப்புகள் பட்டியல் நீள்கிறது.

சிந்தாநதி மிகுந்த ஊக்கம், அடக்கம், முயற்சி, பண்பாடு மிக்கவர். என்றும் தன்னை முன்னிறுத்தாதவர். விமர்சனங்களைக் கூட மிக கனிவாகவே சொல்வார். தமிழ், இலக்கியம், சூழல், கணிமை, வலைத்தளங்கள், வரை கலையில் மெய்யான ஆர்வமும் திறமும் உடையவர். அவருடைய ஆவணமாக்கத் திறத்துக்கு கணிச்சுவடி ஒரு சான்று. ஒரே ஒரு முறை நான் அவரை மிகவும் வேண்டிக் கேட்ட பின் தொலைப்பேசியில் பேசினார். முகம் பார்த்ததில்லை. என்றாவது ஒரு நாள் கூடிய விரைவில் பார்த்து உரையாடி விட வேண்டும் என்றிருந்தேன். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வலையில் காணாமல் இருந்த போது, அவருக்கு என்ன ஆனதோ என்று கவலையாக இருந்தது. காசி அவரைத் தேடி பெரும் முயற்சி செய்தார். பிறகு, அவர் தானாகவே திரும்ப வந்தபோது மகிழ்ந்தேன். நிலைக்கவில்லை 🙁

அவரின் மறைவு தமிழ் இணையத்துக்கு, நல்ல உலகுக்கு இழப்பு 🙁 தேன்கூடு தள நிறுவனர் சாகரன் மறைந்ததோடு அவரது உழைப்பும் மறைந்தது. அப்படி இல்லாமல், சிந்தாநதியின் பல ஈடுபாடுகள் கூட்டு முயற்சிகளாக இருப்பதால், இம்முயற்சிகள் வடிவில் அவர் நிலைப்பார் என்பதே ஒரே ஆறுதல்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். வலையுலக நண்பர்கள் எந்த வகையிலாவது அவரது குடும்பத்துக்குஆதரவளிக்க முன்வந்தால் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.


Comments

12 responses to “சிந்தாநதி”

  1. தென்றல் Avatar
    தென்றல்

    நம்ப முடியவில்லைதான்! ஆழ்ந்த அனுதாபங்கள்..

    அவருக்கு என்ன வயசு..? குழந்தைகள்..?

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    45+ இருக்கும். ஒரு குழந்தை இருப்பதாகத் தெரிகிறது. தன்னுடைய தனிப்பட்ட விவரங்களை என்றுமே அவர் பெரிதாகப் பகிர்ந்து கொள்ள விரும்பியதில்லை 🙁

    1. கா. சேது Avatar
      கா. சேது

      சிந்தாநதி அவர்களது வயது உருவம் மற்றும் வாழுமிடம் போன்ற தனிப்பட்ட விவரங்களை அறிந்திருக்கவில்லை. அவர்களுடன் தமிழ்99 மடலாற்ற குழுமத்தில் சென்ற வருடம் ஒரு சில மடல்களூடாக மட்டுமே கருத்துப் பரிமாற்றங்கள் செய்திருந்தேன். ஆனாலும் ஒரு நன்கு தெரிந்த நண்பரை இழந்த சோகவுணர்வே ஏற்பட்டுள்ளது என் இதயத்தில்.

      சிந்தாநிதி அவர்கள் ஒரு சிறந்த வலைப்பதிவாளர். அத்துடன் தமிழ்99 போன்ற கணிமை தொடர்பான தொழினுட்ப கருத்துப் பரிமற்றங்களில் அவர்கள் முன் வைக்கப்படும் வினாக்களுக்கு மிக பொறுப்பாகவும் பொறுமையாகவும் விளக்க மறுமொழிகளை அளிப்பார். அவை அரைகுறைப் பதில்கள் அல்லாமல் முற்றாகவே இருக்கும். அவர்களது மறைவு நமக்கொல்லாம் பேரிழப்பே.

      கா. சேது

  3. ரவிசங்கர்,

    இலங்கையில் இருந்து வெளிவரும் 2007 மார்ச் மல்லிகை இதழில் சிந்தாநதி வலைப்பதிவு பற்றிய ஒரு குறிப்பு வெளியாகியிருந்தது. இதனை அவரிடம் நான் தெரிவித்திருந்தேன், முன்னரே அவரது வலைப்பதிவு எனக்கு அறிமுகமாயிருந்த போதிலும், அவருடனான தனிப்பட்ட மின்-அஞ்சல் தொடர்பு என்பது அதுதான்.

    பின்னர் 2008 தை மாதத்தில் தமிழ்ப் புத்தகச் சந்தை தளம் பற்றிய தகவல்கள் google alerts மூலம் எனக்குக் கிடைத்தபோது, அதன் domain உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டதன் தொடர்ச்சியாக சிந்தாநதி ஒரு நாள் என்னை கைத்தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அச்சந்தர்ப்பத்தில் தனது பெயரை குறிப்பிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்தனால் அவருடைய பெயரைக் குறிப்பிடாமலே
    http://viruba.blogspot.com/2008/01/blog-post.html பதிவினை இட்டிருந்தேன்.

    அதன் பின்னர் அவர் தமிழ்ப்புத்தகச் சந்தை இணைய தளத்தில் விருபா தளத்திற்கும், வலைப்பதிவிற்கும் இணைப்புக் கொடுத்து இருந்தார்.

    பின்னர் சில தடவைகள் தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

    சிந்தாநதி அவர்களுடைய நடுநிலையையும், விளம்பரத்திற்கு ஆசைப்படாத தன்மையையும், உண்மையான செயற்பாடுகளையும் நான் வேறு எந்த வலைப்பதிவரிடமும் காணவில்லை.

    தமிழ் இணையம் தொடர்பில் ஆர்வம் கொண்டு உண்மையாக உழைத்த அவருடைய இழப்பு, ஒரு பேரிழப்பாகவே இருக்கும். சிந்தாநதி தொடர்பிலான உங்கள் முயற்சிகளில் விருபாவையும் இணைத்துக்கொள்ளவும்.

    சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  4. பாலாஜி Avatar
    பாலாஜி

    அஞ்சலி 🙁

  5. சிந்தாநதி அவர்கள் பற்றி மிக சிறந்த முறையில் பதிந்திருக்கிறீர்கள்.. அவருடைய தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத பாங்கு மிக ஆச்சரியமான விசயம்…

    பகிர்ந்துகொண்டதறுக்கு நன்றி..

  6. சிந்தாநதி மறைவு அறிந்து வருந்துகிறேன்.
    கணிச்சுவடி உள்ளவரை அவர் நம்முடன் வாழ்வார்.
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

  7. சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 க்கான சின்னம் மற்றும் கையேடுகளை வடிவமைத்தவர் சிந்தாநதி என்று நினைவு.

    தமிழ்க் கணிமைக்கு தன்னலமின்றி அயராது பாடுபடுவோரை நாம் இழப்பது மூன்றாவது முறை. 🙁

    சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  8. ஒரு கவலைக்குறிய செய்தியாக உள்ளது. இனிய நண்பர் .

    இவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  9. தமிழநம்பி Avatar
    தமிழநம்பி

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  10. க.தமிழமல்லன் Avatar
    க.தமிழமல்லன்

    சிந்தாநதி வலைப்பதிவுக்கு ஆற்றிய பணிகள் என்றும் வாழும்.ஆழ்ந்த இரங்கல்.
    க.தமிழமல்லன்

  11. […] சிந்தாநதி – பல தமிழ் இணைய முயற்சிகளில் […]