தமிங்கில ஊர்கள்

தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு?

ஏன் இந்தப் போக்கு?

இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவது போலவே ஊர்ப் பெயர்ச்சுருக்கங்களுக்கும் ஆங்கிலம் வந்துவிடுகிறது. எல்லாமே வேகமாகிப் போன காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என்று சொல்வதை விட ECR, OMR என்பது வசதியாக இருக்கிறது.

என்ன பிரச்சினை?

தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்ப்பெயர்கள் அழகான தமிழ்ச் சொற்கள். பெயர்க்காரணத்துடன் உள்ளவை. பண்டைய வரலாற்றை அறிய உதவுபவை. ஆனால், இப்போது Special தோசையும் SP தோசை தான். சிங்கப்பெருமாள் கோயிலும் SP கோயில் தான். போன தலைமுறை சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொருளே இல்லாமல் திருச்சி என்பதைப் பிய்த்து எடுத்துக் கொண்டது. இந்தத் தலைமுறை அதே ஊரில் உள்ள திருவானைக்கோயிலை TV கோயில் ஆகிவிட்டது. அடுத்த தலைமுறை என்ன செய்யும்?

நியூயார்க்கைப் புதுயார்க் என்று ஒத்துக் கொள்ளாத நம் மக்கள், செங்குன்றத்தை Red Hills என்று எழுதினால் ஒத்துக் கொள்வார்கள். ஆங்கிலேயர் சிதைத்தது போதாது என்று நாமும் இருக்கிற ஊர்ப்பெயரை எல்லாம் ஆங்கிலமயமாக்கி வருகிறோம். ஊர்ப்பெயர்களைச் சிதைப்பதினால் தமிழக வரலாறும் தொடர்ச்சியும் தொலைகிறது. இனியாவது இதனைக் கருத்தில் கொள்வோமா?

ஞ்ஜ

ஞ்ஜ என்று எழுதுவது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல. உச்சரிக்கவே முடியாத எழுத்துப் பிழையும் கூட.

அருட்பெருஞ்ஜோதி என்று எழுதுவதில் தொடங்கி இருக்க வேண்டும். ரஞ்ஜனி, ஆஞ்ஜநேயர் என்று ஞ்ச வரும் இடங்களில் ஞ்ஜ கொண்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. இது தேவையற்ற கிரந்தச் சேர்ப்பு மட்டுமல்ல; உச்சரிக்கவே முடியாத ஒரு எழுத்துப் பிழையும் கூட.

ரஞ்சித் என்பதற்கு ரன்ஜித் என்பது நெருக்கமான ஒலியாக வரும். ஆனால், விஞ்ஞானி, அஞ்ஞாயிறு, அஞ்ஞானவாசம் போன்ற சொற்களின் ஒலிப்பைப் பார்த்தால் ரஞ்ஜனி என்ற சொல்லை என்னால் உச்சரிக்கவே முடியவில்லை. நெஞ்ஜு, மஞ்ஜம், தஞ்ஜாவூர் என்று எழுதிப் பார்த்தால் இதில் உள்ள அபத்தம் தெரியும். தயவு செய்து, ஞ்ஜ என்று எழுதாதீர்கள்.

பொள்ளாச்சி நசன்

பொள்ளாச்சி நசன் பொள்ளாச்சி நசன். தமிழம் வலைத்தளத்தில் பல அரிய தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து வருகிறார். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசு கல்விக் கொள்கை வகுக்கும் அமைப்புகளில் பல பொறுப்புகள் வகித்து உள்ளார். இயல்பாகவே, புத்தக ஆர்வம் உள்ளவர் நூலகம் திட்ட கோபியின் தூண்டுதலால் தம்மிடம் இருந்த தமிழ் நூல்களை மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கினார். இவரின் முயற்சியைப் பார்த்து உலகின் பல பகுதிகளில் உள்ளோரும் தங்களிடம் உள்ள பழைய நூல்களை மின்னூலாக்கத் தருகிறார்கள்.

அவருடன் பேசியதில் இருந்து:

* 15,000 ரூபாய் மதிப்புள்ள வருடி (scanner) கொண்டு செயல்பட்ட போது மின்னூலாக்கம் அவ்வளவு தரமாக இல்லை. அல்லது, தேவையில்லாமல் கூடுதல் தரமாக இருக்கிறது 🙂 கோபியின் ஆலோசனைக்கு ஏற்ப 2,000 ரூபாய் மதிப்புள்ள வருடிகளில் செயல்படுவது இலகுவாக இருக்கிறது. இவற்றின் நுணுக்கம் குறைவாக இருப்பதால் பழைய நூல்களில் உள்ள தேவையற்ற அழுக்குகள், எழுத்துகள் அல்லா புள்ளிகளை மின்னுருவாக்குவதில்லை 🙂

* பொதுவாக மிகவும் பழைய நூல்களையே முன்னுரிமை கொடுத்து மின்னூலாக்குவதால் காப்புரிமை பிரச்சினை இல்லை. அண்மைக்கால எழுத்துகளுக்கு அவற்றின் ஆசிரியர்கள், அவர்களின் பிள்ளைகளிடம் ஒப்புதல் பெற்றே மின்னூலாக்குகிறார். நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களுக்குக் கூட ஒப்புதல் பெற்றே நூலாக்குவதே எழுத்தாளர்களுக்குத் தரும் மரியாதை என்கிறார். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய அரிய நூல்களையே முன்னுரிமை கொடுத்து மின்னூலாக்குகிறார். அச்சில் வராமல் நின்று போன பல சிற்றிதழ்களின் நிறுவனர்கள் மின்னூலாகக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

* ஒரு இடத்தில் கூட இந்த மின்னூலாக்கத் திட்டத்துக்குப் பணம் ஒரு தேவை என்பது போலவே சொல்லவில்லை. அவரவரிடம் இருக்கும் பழைய தமிழ் நூல்களை அனுப்பி வைத்தால் உதவும் என்றார். பணம் கொடுத்து பணிக்கு ஆள் அமர்த்தி இத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என நம்பவில்லை என்கிறார். உண்மையிலேயே ஆர்வத்துடன் யாராவது முன்வந்தால் அவர்களுக்கு மின்னூலாக்கம் பற்றிய பயிற்சி அளிப்பதோடு அவர்கள் வீட்டுக்கே நூல்களை அஞ்சல் வழியில் அனுப்பி வைத்துத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

* பொதுவாக, தமிழ் / சமூக ஆர்வத் துறையில் இயங்கும் எவரையும் எளிதில் தொடர்பு கொள்ளலாம். ஆனால், இவரை மின்மடல் / தொலைப்பேசி மூலமோ நேரிலோ அவ்வளவு இலகுவாகத் தொடர்பு கொள்ள முடியாது என்று பல நண்பர்கள் கூறினார்கள். நானே, பேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் தந்த பழைய தமிழ் நூல்களை அவரிடம் ஒப்படைத்ததன் காரணமாகச் சந்திக்க முடிந்தது. இவ்வாறான தொடர்புகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் தான் ஒவ்வொரு நாளும் மின்னூலாக்கத்துக்குச் செலவிடும் நேரத்தைக் கூட்டலாம் என்கிறார்.

* ஒவ்வொரு நாளும் 8 மணி நேரத்துக்கு மேல் தனி ஆளாக, பக்கம் பக்கமாக மின்னூலாக்கி வலையில் ஏற்றிக் கொண்டிருக்கிறார். தன் காலம் முடிவதற்குள் எப்படியும் தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களை மின்னூலாக்கி விடுவேன் என்று வெறியுடன் சொன்ன போது, எனக்குப் பொறி கலங்கிப் போனது. இப்படியும் கூட ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்கள் இருப்பார்களா !! ஆனால், அதே வேளை பல உயரிய பொறுப்புகளில் இருந்து பலருக்கு வழிகாட்டக்கூடிய உழைப்பும் உடல்நலமும் இது போன்ற பணியில் வீணாகிறதே என்ற கவலையும் எழுந்தது. நூலகம் திட்டம் போல் முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால், அமைப்பாக அல்லாமல், யாரையும் எதிர்பார்க்காமல் தனித்து இயங்குவதன் மூலம் வேகமாகச் செயல்பட முடிகிறது என்கிறார்.

பார்க்க: பொள்ளாச்சி நசன் பற்றி லக்கிலுக்.

தமிழ் மோதிரம்

சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.

பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.

முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.

“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?”

“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.

“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”

“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”

“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க? ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா?”

“இல்லீங்க.. வர்றதில்லீங்க..”

“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா? .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே?”

“…”

பக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

எனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.

“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”

“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”

“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.

“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறாங்க? மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க? பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”

“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”

“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.

“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா?”

“இல்லீங்க..”

“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ?”

சிரித்தார்.

அதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.

ஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”

அவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.

பெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.

“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா?”

அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.

“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு? இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா? நீங்க தமிழ் தான?”

அவருடைய முகம் இறுகத் தொடங்கியது.

“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”

“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க? தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்?”

“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”

வாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ?

உத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூபாயை நீக்கினார்.

விற்பனையாளரை நிமிர்ந்து பார்த்தேன்.

சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?

எழுத்துப் பிழை

விக்கியில் உழன்று உழன்று உலகமே ஒரு விக்கி உருண்டையாகி விட்டது. எழுத்துப் பிழைகள் எங்கு கண்ணில் பட்டாலும் திருத்தக் கை துடிக்கிறது 🙂

f -ஆய்த எழுத்து

ஷ ஸ வேறுபாடு

எழுத்துச் சீர்மையும் எழுத்துப் பிறழ்ச்சியும்

இந்த எழுத்துப் பிழைகள் சொல்லும் செய்தி என்ன? 🙂