இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.
இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?
இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயேர்கள் வேளைக்கு ஏற்ப வாழ்த்து சொல்வதைப் பார்த்து நாமும் சூடு போடத் தொடங்கிய தமிழ்ப்’படுத்தல்’, எல்லாவற்றுக்கும் ‘வாழ்த்து’ சொல்கிறேன் பேர்வழி என்று போய் முடிகிறது.
எடுத்துக்காட்டுக்கு,
Happy Pongal – ஆங்கில வழக்கம்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – ஆங்கில வழக்கத்தின் ‘தமிழ்ப்படுத்தல்’?
பொங்கலோ பொங்கல் – தொல் தமிழர் வழக்கம்?
**
வேற என்னவெல்லாம் வருங்காலத்தில் தமிழ்ப்படுத்தலாம்?
Have a nice weekend – இனிய வாரக்கடைசி வாழ்த்துக்கள் / உங்கள் வாரக்கடைசி இனிதே அமைக !
Bon appetite – இனிதே சாப்பிட வாழ்த்துக்கள் !
😉
**
நீடுழி வாழ்க, நல்லா இருப்பா, மகராசனா இருப்பா போன்ற தமிழ் வாழ்த்துக்கள் எல்லாம் வினைச்சொற்களாக இருப்பதைக் கவனிக்க இயல்கிறது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள், மண நாள் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ‘வாழ்த்துக்கள்’ என்ற பெயர்ச்சொல் கூடி வருவன எல்லாம் ஆங்கில வாழ்த்துச் சொற்றொடர்களின் ‘தமிழ்ப்படுத்தலாகவே’ தோன்றுகின்றன.
**
வாழ்த்து சொல்வது, நன்றி சொல்வது முதலியவை நல்ல பழக்கங்கள் என்று நம் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம். ஆனால், நம் ஊர்களில் ஏன் இந்தப் பழக்கம் குறைவாக இருக்கிறது? குறிப்பாக, கடைகளில் நமக்கு சேவை ஆற்றுவோருக்கு நாம் ஏன் நன்றி சொல்வதில்லை? அவர்களும் ஏன் ஒரு சிறு புன்னகையும் சிந்தாமல் வேலை செய்கிறார்கள்?
கூட்ட நெரிசல் ஒரு முக்கிய காரணம். இன்னொரு முக்கிய காரணமாக என்ன தோன்றுகிறது என்றால், நம் பண்பாட்டில் சொல்லப்படுவதை விட உணரப்படுவது முக்கியமானதாக இருக்கலாம். குறிப்பாக, நன்றி நவிலல். நன்றி சொல்வதை விட நன்றி உடையவனாக வாழ்வதையே நம் பண்பாடு சிறப்பித்துக் கூறுகிறதோ?
முற்காலங்களில் சிற்றூர்களில் குழுமி வாழ்ந்த போது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்களோ உறவுகளாகவோ இருந்திருக்கலாம். அந்த ஊரின் பணிகளை ஆளாளுக்குப் பகிர்ந்து செய்திருக்கலாம். எனவே, ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லும் அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாமோ?
Comments
18 responses to “வாழ்த்துகள்”
அப்புறம் Bon Voyage – கவனமா போட்டு வா மேனே என்று சொல்ல வேண்டியதை இப்ப இனிய பயன வாழ்த்துக்கள் என்கிறோம்!!! 😉
எனக்கென்னவோ பழந்தமிழ் எல்லாம் இனி வழக்கொழிந்து போய்விடும் என்றுதான் நினைக்கிறன்.
மயூரேசன் – bon voyage எடுத்துக்காட்டு பத்தி நானும் நினைச்சேன். ஆனால், இது போன்ற சில இடங்களுக்கு வணிக, அறிவியல் வளர்ச்சி, நிறுவன மயமாக்கலும் காரணம். “நல்லா போய்ட்டு வாப்பா”ன்னு அம்மா மகனுக்குச் சொல்லலாம். அதே இந்திய ரயில்வே கோடிக்கணக்கான பயணிகளுக்கு அறிவிக்க / தெரிவிக்க வேண்டி வருகையில் formalityயும் (இதுக்குத் தமிழ்ல என்ன?) கூடவே தமிங்கிலச் சிந்தனையும் வருகிறது.
நன்றி?
மிக்க நன்றி?
நன்றிகள் பல 🙂
பாலாஜி – ஐரோப்பியர் வருகைக்கு முன் நன்றி சொல்லும் வழக்கம் இருந்ததா என்று யாராவது ஆய்வு செய்து சொன்னால் நன்றாக இருக்கும்.
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்” நன்றி என்பது அறமாகவும் அச்சொல்லை பெற நடத்தல் அதனினும் அறமாகவுமே தமிழ்ச்சூழலில் இருந்து வந்துள்ளது
//அதே இந்திய ரயில்வே கோடிக்கணக்கான பயணிகளுக்கு அறிவிக்க / தெரிவிக்க வேண்டி வருகையில் formalityயும்
formality = மரபு ?
//அதே இந்திய ரயில்வே கோடிக்கணக்கான பயணிகளுக்கு அறிவிக்க / தெரிவிக்க வேண்டி வருகையில் formalityயும்
formality = மரபு ?//
formality = சடங்கு
Uma, இல்லீங்க இந்த இடத்தில் formality = சடங்கு பொருந்தாது. formal dress, formal invitation போன்றவற்றில் வரும் formal இது. “முறையான” என்று சொல்லலாமா? “எதுக்கும் ஒரு முறை இருக்குல்ல” என்று சொல்வோம் தானே..
அன்பு இரவி,
வாழ்த்துக்கள் மடலில் “பொங்கலோ!பொங்கல்” தித்திக்கிறது. காலை வணக்கத்திற்குப் பதில் ஐயா!பொழுது இனிதாகட்டும் என்று முக்காலம் பொருந்தும் வகையில் சொல்லலாமா!
தலையெழுத்தை “head letter” என்றால் எப்படியுருக்கும்?. கருத்துக்கருக் கொண்ட ” fate ” அல்லவா மொழிபெயர்ப்பு.
வார இறுதி இனிதாகட்டும்.
வயிறாரச் சாப்பிடுங்கள்!
அலைவாய்க்கரை மக்கள் சற்றே இழுத்தே பேசுவார். ஏனெனில் அலையோசையை மிஞ்சி அடுத்தவர் செவியுட்ப்புலப்பட வேண்டும் என்பதே இழுவைக்கு அடிமுதலாகிறது (cause). நடுக்கும் குளிரில் பேச்சு குளறக் கூடாது எனும் நோக்கில் அழுத்திப் பேசும் நடை ஆங்கிலம் கொண்டுள்ளது. அதை மிடுக்கென்று எண்ணினால் என் சொல்வது?.
அதென்ன தமிங்கிலச் சிநதனை ? புரிகிறது! புரிகிறது!! “Tamiglish”
அப்படித்தானே!
செந்தமிழ்ப் பேராழியில் உங்கள் பயணம் சிறக்கட்டும்(Bon voyage).உங்களோடு என்றும் தோளெடுத்து துடுப்புத் துளாவத் துணை நிற்ப்பேன்.
அன்புடன், மீ.க.
நன்றி மீ.க. உங்கள் கருத்துகளை நீங்களும் ஒரு வலைப்பதிவில் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும்.
அன்பு இரவி,
என் பதிவை எப்படி வலைப்பதிவு செய்வது ? எங்கு செய்வது?. மின்வலைகாட்டில் வழி தேடுவது எனக்குச் சற்று இடராகவே உள்ளது.
வழி காட்டுங்கள்.
அன்புடன்,
மீ.க.
அன்பு இரவி,
என் பதிவை எப்படி வலைப்பதிவு செய்வது ? எங்கு செய்வது?. மின்வலைகாட்டில் வழி தேடுவது எனக்குச் சற்று இடராகவே உள்ளது.
வழி காட்டுங்கள்.
அன்புடன்,
மீ.க.
வணக்கம் மீ.க
http://en.wordpress.com/signup/ போய் ஒரு பயனர் கணக்கும், வலைப்பதிவும் தொடங்கலாம். தொடங்கிய வலைப்பதிவுப் பக்கத்தின் மேல் ஒரு கருவிப்பட்டை போல காணப்படும். அதில் new post என்பதை அழுத்தி உங்கள் கருத்துகளை எழுதலாம். கூடுதல் உதவி தேவை என்றால் ravidreams at gmail dot com க்கு எழுதுங்கள். அல்லது 99431 68304 என்ற எண்ணுக்கு அழையுங்கள். நன்றி
Hi……………….
ravi shankar ,……..
ungal tamil thagam purigiradhu anal angilam ilamal varigal vara marukindrana and one more thing sorry my friend kamala said your so cute and hansome guy like your words
vanakkam Ravi sankar
nengal migavum azagaga irukkirirgal
ungal tamizh migavum inimai
sorry seriously i dont know tamil but
i asked my friend and sent this words to you
really I Like UUUUUUUUUU and your tamil
Vanakam Ravi………
Vanakam Ravi………
ஐயா!பொழுது இனிதாகட்டும்