தேடுபொறிகளில் முதல் சில முடிவுகளில் எப்படி வருவது?
இவை அனைத்தும் 100% நான் முயன்று பார்த்து நல் விளைவுகளை உறுதிப்படுத்திக் கொண்ட சில அடிப்படையான விசயங்கள்:
0. முதலில், உங்கள் தளத்தை தேடுபொறிகளால் அணுக இயல்கிறதா, அவை உங்கள் தளத்தை எப்படிப் பார்க்கின்றன என்று அறிய search engine spider simulator பயன்படுத்துங்கள். தளத்தின் தொடக்கத்திலேயே ஏகப்பட்ட ஜாவா நிரல்கள், flash பயன்பாடுகள் இருந்தால் தேடுபொறிகள் உங்கள் தளத்தைப் பார்ப்பதில் சிரமம் இருக்கும். தேடுபொறிகளுக்கு எழுத்துக்கள் மட்டும் தான் புரியும் என்பதால் அவை முழுக்கவும் முதலிலும் இலகுவாகத் தென்படுமாறு தளத்தை வடிவமையுங்கள். frames பயன்படுத்தாதீர்கள்.
1. பிறருக்குப் பயனுள்ள, ஆர்வமூட்டக்கூடிய, தரமான, உருப்படியான ஆக்கங்களைத் தாருங்கள். இத்தகைய ஆக்கங்களுக்குப் பிற வலைத்தளங்கள் தொடுப்புகள் தருவது வழமை. பிற தளங்களில் இருந்து கூடுதல் தொடுப்புகளைப் பெறப் பெற தேடுபொறிகளில் உங்கள் தளத்தின் முக்கியத்துவம் உயரும். உங்கள் தளத்துக்கு எத்தனை தொடுப்புகள் இருக்கின்றன என்பதை விட அத்தொடுப்புகளைத் தருபவர்களின் முக்கியத்துவம் தான் முக்கியமானது. எனவே, தேடுபொறிகளை ஏமாற்றும் முகமாக வெற்றுத் தொடுப்புகளைப் பெற முயல வேண்டாம்.
2. ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் பொருத்தமான குறிச்சொற்கள் இடுங்கள்.
3. பக்க முகவரிகளை அர்த்தமுள்ளதாக வையுங்கள்.
பார்க்க :
– தனித்தளத்தில் வேர்ட்பிரெஸ் வைத்திருப்பவர்கள் இதைச் செய்வதற்கான மயூரேசனின் குறிப்பு.
– பிளாகரில் இதைச் செய்வதற்கான இளாவின் குறிப்பு.
3.5 Dynamic முகவரிகளைத் தவிருங்கள்.
http://example.com/author?=ravi&date?=010101&num?=30&view?=normal என்பது போன்ற ஏகப்பட்ட ??? கேள்விக்குறிகளை அடுக்கும் dynamic முகவரிகள் தேடுபொறிகளுக்கு ஆகாது. இவற்றை பட்டியலிடாமலே போக வாய்ப்புண்டு. கேள்விக்குறிகளை குறைவாக வைத்திருந்தாலும் அவற்றை அடிக்கடி ஊர்ந்து பார்த்து இற்றைப்படுத்தும் வேகம் குறையும். இத்தகைய முகவரிகளைத் தவிர்ப்பது நலம்.
மேற்கண்ட முகவரியையே http://example.com/author/ravi/date/010101/num/30/view/normal என்று மாற்ற இயலும். இதற்கு உங்கள் .htaccess கோப்பில் சில வழிமாற்று விதிகளை எழுத வேண்டும். இந்த வேலையைச் செய்து தர இணையத்தில் பல இலவசக் கருவிகள் கிடைக்கின்றன. “mod rewrite tool” என்று தேடிப் பாருங்கள்.
4. இடப்பக்கம் பக்கப்பட்டை வைப்பதைத் தவிருங்கள்.
தேடுபொறிகள் உங்கள் இடுகைகளைப் பார்க்கையில் தென்படும் முதல் சில வரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இடப்பக்கப் பக்கப்பட்டைகள் உங்கள் இடுகைகளின் உள்ளடக்கத்தை மறைத்துக் கொண்டு நிற்கக்கூடும்.
5. bold HTML tagக்குப் பதில் strong பயன்படுத்துங்கள்.
bold விளைவு மனிதக் கண்களுக்கு மட்டுமே புலப்படும். strong விளைவு மட்டுமே தேடுபொறிகளுக்குப் புரியும்.
6. பத்தி பிரித்து துணைத்தலைப்புகள் வைத்து எழுதுங்கள்.
துணைத்தலைப்புகளுக்குப் பொருத்தமான h2, h3 HTML tagகள் தாருங்கள்.
7. உங்களின் முந்தைய இடுகைகளில் பொருத்தமானவற்றுக்குத் தொடுப்பு கொடுத்து எழுதுங்கள்.
தேடுபொறிகள் கொண்டிருக்கும் பக்கப்பட்டியல்களில் உங்கள் இடுகைகளைச் சேர்த்துக் கொள்ள, முக்கியத்துவத்தை உயர்த்திக் கொள்ள இது உதவும். உங்கள் பக்கங்களின் கூகுள் Pagerankஐப் பிற பக்கங்களுக்குப் பகிர்ந்து தரவும் உதவும். தொடுப்பு கொடுக்கும்போது அவ்விடுகைகளின் உள்ளடக்கத்தை விவரிக்கும் சொற்களைத் தொடுப்புச் சொற்களாகப் பயன்படுத்துங்கள்.
8. அடிக்கடி உங்கள் வலைப்பதிவில் எழுதி தொடர்ந்து இற்றைப்படுத்தி வாருங்கள்.
உங்கள் வலைப்பதிவின் முக்கியத்துவத்தைப் பொருத்து தேடுபொறிகள் உங்களை எவ்வளவு நாளைக்கு ஒரு முறை வந்து பார்க்கின்றன என்பது அமையும். மாதக்கணக்கில் எழுதாமல் இருந்தால் உங்கள் புது இடுகைகள் உடனுக்குடன் கூகுள் முடிவுகளில் தோன்றுவது தாமதமாகலாம்.
9. கூகுள், யாகூ, MSN லைவ் ஆகிய முதல் மூன்று முக்கியமான தேடுபொறிகள் உங்கள் தளத்தை ஊர்வது குறித்த தகவல்கள், கூடிய கட்டுப்பாடுகளைப் பெற Google Webmaster central, Live Webmaster central, Yahoo Site Explorerல் உங்கள் தளத்தைப் பதிந்து கொள்ளுங்கள்.
10. உங்கள் தளத்தின் உள்ளடக்கங்களைப் படி எடுத்து வேறு இடங்களில் ஒட்டாதீர்கள்.
தளப் பாதுகாப்பு காரணங்களுக்காக இடுகைகளைச் சேமிக்க விரும்பினால், தரவிறக்கி உங்கள் கணினியில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடுகைகளை மறுபதிப்பு செய்ய அனுமதி கோருபவர்களிடமும் ஒரு சில வரிகள் மட்டும் மேற்கோள் காட்டச் சொல்லி முழு இடுகையையும் படிப்பதற்கு உங்கள் தளத்துக்குத் தொடுப்பு கொடுக்க கோருங்கள். உங்கள் உள்ளடக்கங்கள் வலையில் பல இடங்களிலும் சிதறினால் அவற்றுக்குக் கிடைக்கும் தொடுப்புகளும் சிதறி, உங்கள் பக்கங்களின் முக்கியத்துவமும் குறைய வழி வகுக்கலாம்.
11. முக்கியமான சொல்லைப் பக்கத்தலைப்பின் தொடக்கத்தில் வருமாறு எழுதுங்கள்.
பக்கத்தலைப்புகளைச் சுருக்கமாக வையுங்கள். பக்கத்தலைப்பில் உள்ள முக்கிய சொற்கள் முதல் பத்தியின் தொடக்கத்திலும் குறிச்சொற்களிலும் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பக்கத் தலைப்புகளில் உங்கள் தளப்பெயர் தோன்றுவதைத் தவிருங்கள். குறிப்பாக, தலைப்பின் தொடக்கத்தில் தளப்பெயர் தோன்றுவதை அறவே தவிருங்கள். தேடல் முடிவுகளில் பக்கத்தலைப்பின் முதல் ஒரு சிலச் சொற்கள் மட்டுமே தென்படும் என்பதால் மேற்கண்ட நடவடிக்கைகள் அவசியம்.
12. தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்:
– பின்வரும் நீட்சிகளைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்: All in one SEO pack, Google (XML) sitemaps generator, Robots Meta, Simple Tags .
– ஒவ்வொரு இடுகைக்கும் உள்ள excerpt வசதியைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் குறிச்சொல், பகுப்பு, தேதி வாரித் தொகுப்புப் பக்கங்கள் அனைத்திலும் ஒரே உள்ளடக்கம் தோன்றுவதைத் தவிர்க்கலாம்.
– தேதி வாரி, ஆசிரியர் வாரி தொகுப்புகள் தேவையின்றி பல பக்கங்களில் திரும்பத் திரும்ப ஒரே உள்ளடக்கத்தைக் காட்டுவதால் Robots Meta கொண்டு இவற்றை நீக்கலாம்.
– All in one SEO pack பயன்படுத்தி ஒவ்வொரு இடுகைக்கும் Meta description தாருங்கள். Settings – All in one SEO போய் Page titleஐ %post_title% என்று தாருங்கள்.
– Page slugஐ வேண்டிய அளவு தொகுத்து முழுமையான, முக்கியமான குறிச்சொற்கள் இடம்பெறுவது போல் செய்யுங்கள்.
Comments
10 responses to “தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி?”
Good information.
நன்றி இளா
ரவி,
நான் முதலில் blogger-ல் பதித்தேன். பிறகு சொந்தமாக தளம் வாங்கி wordpress-ல் பதிக்கிறேன். என்னுடை பழைய பதிவுகளை இம்போர்ட் செய்து விட்டேன். ஆனால் என் பழைய blogger-ல் இன்னும் அவை இருக்கின்றன. இது என் rank-ஐ குறைக்குமா? அவற்றை அழித்து விடவா?
இரண்டு பக்கங்களில் ஒரே உள்ளடக்கம் இருப்பதால் அவ்விடுகைகளுக்கு கிடைக்கக்கூடிய தொடுப்புகள் இரண்டு வெவ்வேறு பக்கங்களுக்குச் சிதறக்கூடும் என்பதால் PageRank குறையலாம். புதிதாக, இனி உன் வேர்ட்பிரெஸ் இடுகைகளுக்கு கிடைக்கக்கூடிய தொடுப்புகளினால் வரும் PageRankஐ எந்த விதத்திலும் இது குறைக்காது. எனவே, இது தேடுபொறிகள் கொடுக்கும் தண்டனை இல்லை.
உன் பழைய பதிவுக்கு நிறைய பேர் தொடுப்புகள் கொடுத்து இருந்து இன்னமும் அதற்கு நிறைய வாசகர் வரத்து இருந்தால் அதை நீக்குவது பரிந்துரைக்கத்தக்கது அல்ல.
**
விளம்பர இடைவேளை 😉 :
கார்த்தி, இது போன்ற கேள்விகளை இனி http://ravidreams.net/forum/ ல் கேட்டா நானும் மன்றத்துக்கு ஆள் சேர்க்கலாம் 🙂
**
நான் இது மாதிரி இடுகைகளை நகர்த்திய பிறகு, அவற்றில் முக்கியமில்லாத சின்னச் சின்ன இடுகைகளை WordPressல் இருந்து அழித்து விட்டேன். நிறைய தொடுப்புகள் பெற்றிருந்த முக்கியமான இடுகைகளுக்கு Blogger இடுகைகளைத் திருத்தி அங்கிருந்து WordPress இடுகைகளுக்குத் தொடுப்பு கொடுத்தேன். எனவே அப்பக்கங்களின் PageRankஐ அப்படியே வேர்ட்பிரெஸ் இடுகைகளுக்கு கடத்த இயலும். Bloggerல் உள்ள ஒரு இடுகையையும் அழிக்க வில்லை என்பதைக் கவனிக்கவும். Blogger பதிவில் கொஞ்சம் இடுகைகள் இருந்தால் இப்படிச் செய்யலாம். நூற்றுக் கணக்கில் என்றால் சிரமம் தான்.
இரண்டு பக்கங்கள்ல ஒரே உள்ளடக்கம் இருந்தா அவற்றில் முதலில் எழுதப்பட்டதற்கு / கூடுதல் தொடுப்புகள் உள்ள பக்கத்துக்குத் தேடுபொறிகள் கூடுதல் முக்கியத்துவம் தரும்.
நன்றி ரவி. மன்றத்துல இணைஞ்சுட்டேன் 🙂
அடடே… இப்பத்தான் படிச்சேன்… சொல்ல நினைத்ததை, அருமையாக எடுத்து வைத்திருக்கிறீர்கள். பல புதிய விஷயங்களையும் அறிய முடிகிறது.
நன்றி பாலாஜி. *உங்களுக்கே* புது விசயங்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது மகிழ்ச்சி 🙂
[…] your site is visible in the search engines ASAP. Learn Basic search engine optimisation tips. (Some SEO tips in Tamil […]
[…] […]
Dear Ravi,
Thanks for ur usefull tips.pls check my website and mail me.
M.Senthil kumar