ஏன் பாடநூல் கலைச்சொற்களை அப்படியே பின்பற்றத் தேவையில்லை?

பீடபூமி என்ற சொல்லுக்குப் பதில் மேட்டுநிலம் என்ற சொல்லை ஆளலாமா என்றொரு உரையாடல் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்தது.

“பீடபூமி என்ற சொல் பாடநூல் வழக்கில் இருப்பதால் இச்சொல்லையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்; ஒவ்வொரு கலைச்சொல்லிலும் குற்றம் கண்டுபிடித்து மாற்றிக் கொண்டிருந்தால் மாணவர்கள் குழம்ப நேரிடும்” என்று  ஒரு பக்க வாதம் இருந்தது.

குழப்பங்களைத் தவிர்க்க கலைச்சொற்களில் ஒருங்கிணைவு அவசியம் என்றாலும் எல்லா இடங்களிலும் பாடநூல் கலைச்சொற்களை மாற்றாமல் அப்படியே பயன்படுத்தத் தேவையில்லை.

ஏன்?

1. தற்போதும் கூட தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய நாட்டுத் தமிழ் வழி பாடநூல்களுக்கும் இந்தியாவிலேயே கேரளம், தமிழ்நாடு, இன்ன பிற மாநிலங்களில் உள்ள தமிழ் வழி பாடநூல்களுக்கும் கலைச்சொல் பயன்பாட்டில் வேறுபாடுகள் இருக்கின்றன.

2. தமிழ்நாட்டுப் பாடநூல்களிலேயே கூட வெவ்வேறு வகுப்புகளில், வெவ்வேறு பாடங்களில் ஒரே பொருளுக்கு வெவ்வேறு சொற்களை ஆள்கின்றனர். எடுத்துக்காட்டுக்கு ஒரு வகுப்பில் திரிகோணவிதி என்பதை இன்னொரு வகுப்பில் முக்கோணவியல் என்கிறார்கள். பாடநூல்களுக்குள்ளேயே கலைச்சொல் குழப்பங்கள் இருக்கையில், குழப்பம் வரும் என்ற காரணம் காட்டி பொருத்தமான புதிய மாற்றுக் கலைச்சொற்களைத் தடுப்பது சரி இல்லை.

பெரும்பாலான இவ்வகை மாற்றுக் கலைச்சொல் பரிந்துரைகள் இரண்டு அடிப்படையில் எழுகின்றன:

– மொழி அடிப்படை – இரசயாணம் –> வேதியியல்; பௌதீகவியல் –> இயல்பியல்.

– கருத்து அடிப்படை – complex number என்பதை சிக்கல் எண் என்று நேரடியாக மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள். இதற்கு மாற்றாக கலப்பு எண், பலக்கிய எண் போன்று பல்வேறு பரிந்துரைகள் வருகின்றன.

1960கள், 1970களில் தமிழகத்தில் ஏராளமான மொழி அடிப்படை கலைச்சொல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், தமிழ்நாட்டுக் கலைச்சொற்கள் அனைத்தையும் தமிழுக்கு மாற்றி விடவில்லை. பீடபூமி என்ற சொல்லை முன்பே தமிழாக்கி இருந்தால் தற்போது உறுத்தலாக இருந்திருக்காது.

சரி, பீடபூமியைத் தமிழ்ச் சொல்லாக மாற்றி அப்படி என்ன சாதிக்கப் போகிறோம்?

ஞான பீடம், பலி பீடம், பீடாதிபதி என்று பல இடங்களில் இந்த பீடம் வந்தாலும் பீடம் + பூமி = பீட பூமி என்று புரிந்து கொண்டாலும் பீடம் என்றால் என்ன என்று சட்டென புரிபடுவதில்லை. வட மொழிப் புலமையும் சேர்ந்தோருக்குப் புலப்படலாம். பள்ளியில் படித்த எனக்கே இந்த நிலை என்றால் பள்ளிக்கே போகாத பாமரனுக்கு பீடபூமி என்றால் எப்படி புரியும்? பள்ளிக்குப் போகாத வட மொழிப் பாமரனுக்கு பீடம் என்ற சொல் புரியக்கூடியதாக இருக்கையில் ஏன் தமிழ்ப் பாமரன் மட்டும் அதைப் பள்ளிக்குப் போய் புரிந்து கொள்ள வேண்டும்?

மேட்டுநிலம் என்ற சொல் பாமரருக்கும் புரியும். அவர்களாக இத்தகைய ஒரு நிலப்பரப்பை விவரிக்க முற்பட்டார்கள் என்றால் நிச்சயம் மேட்டு நிலம் என்று தான் சொல்வார்கள். களத்து மேடு, ஆத்து மேடு என்று சிற்றூர்களில் புழங்கும் சொற்களைக் கவனியுங்கள். பீடபூமி என்றெல்லாம் சொல்வார்கள் என்று கற்பனை கூட செய்ய இயலாது. சிற்றூரில் வளர்ந்தவன் என்ற முறையில் உலகம், மண், நிலம் என்ற சொற்கள் தான் மக்கள் பேச்சில் புழங்கக் கண்டிருக்கிறேன்.

மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பல இலகுவான சொற்கள் இருந்தாலும் பாடப்புத்தக்கங்களிலும் எழுத்து வழக்கிலும் தேவையின்றி அளவுக்கு மீறிய வடமொழிக் கலப்பு இருப்பதாகப் படித்தும் நண்பர்கள் மூலமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பீடபூமி போன்ற சொற்கள் முதன் முதலில் தமிழ்நாட்டு அச்சுப் படைப்புகளில் ஆளப்பட்ட போது அவற்றை ஆக்கியோர் வடமொழிப் புலமையும் பெற்றிருந்திருப்போராக இருக்கலாம். அதனால், அத்தகைய ஒரு சொல்லை ஆக்கி இருந்தது அவர்களுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை. இது நாம் புலமைச் சொற்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த மதிப்பே. தமிழ்நாட்டில் ஒரு plateau இருந்திருந்தால் கண்டிப்பாக மேட்டு நிலம் போன்ற சொற்களை ஆக்கியிருப்போம். அல்லது, இந்த நிலப்பரப்புக்களுக்குத் தமிழன் பயணம் மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றி ஒரு நல்ல தமிழ்ச் சொல்லை ஆண்டிருப்பான். ஒருவேளை, இலக்கியங்களில் இதற்கான சொல் ஒளிந்து கொண்டும் இருக்கலாம்.

ஆப்பிள் போன்ற இடுகுறிப் பெயர்ச்சொற்கள் எல்லாவற்றையும் தமிழாக்குவது சில வேளை செயற்கையாக இருக்கலாம். ஆனால், பீடபூமி போன்ற காரணப்பெயர்களைத் தமிழாக்கிப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.

ஆனால், இவ்வாறான முயற்சிகள், மொழியைச் ‘செயற்கையாகத்’ தூய்மைப்படுத்தித் தமிழ்ச் சொற்களைத் திணிக்க முற்படுவதாகக் குற்றம் சாட்டப்படுவதுண்டு.

இது குறித்த சுந்தர் சொன்ன கருத்து:

செயற்கையாகத் திணிப்பது என்பது ஒரு பார்வை. ஆனால் எண்ணிப் பார்த்தால், பெரும்பான்மைத் தமிழர்கள் செய்தித்தாள், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களில் பங்களிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. ஆக எந்த ஒரு பயன்பாடும் இந்த குறுகிய வட்டத்தினரின் செயற்கைத் திணிப்பு தான். அப்படி திணிப்பது என்று வந்துவிட்டால் குறைந்தது வெவ்வேறு தமிழ்ச்சொற்களையாவது புழக்கத்தில் விடும் கடமை நமக்கு உள்ளதாகவே எண்ணுகிறேன். அப்படிப் பார்த்தால் இந்த வடமொழிச் சொற்களும் ஒரு நாளில் புகுத்தப்பட்டவைதானே? (திணிக்கப்பட்டவை என்ற வலிய சொல்லைப் பயன்படுத்தவில்லை)

ஒவ்வாரு மொழியும் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றில் செல்கிறது.

  1. எழுத்து மொழி அவ்வளவாகப் புழங்காமல் அல்லது அவரவர் பேசும்வகையிலேயே எழுதும் வழக்கைக் கொண்டிருத்தல். இதனால் நாளடைவில் ஒரு மொழி பல மொழிகளாகப் பிரிகிறது. அல்லது ஒரேயொரு புதியமொழி உருவாகிறது.
  2. இறுக்கமான பரிந்துரை இலக்கணங்களைப் பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடிக்க வலியுறுத்தும் மொழி செத்து விடுகிறது.
  3. இருதர நிலைப்பாடு (diglossia) கொண்டு மொழியும் உயிர்ப்புடன் விளங்கி பழைய சொற்கள் மற்றும் நூல்கள் வழக்கில் இருந்து ஒரு தொடர்ச்சி பேணப்படுகிறது.

தமிழ் இதில் மூன்றாம் வழியில் இதுவரை இருந்து வந்துள்ளது. அதை நாம் தொடர வேண்டுமா மாற்ற வேண்டுமா?

வடமொழி X தனித்தமிழ் என்று நோக்காமல் கடினமான சொல் X எளிய சொல் என்று நோக்கினாலே பல இடங்களில் நல்ல புதிய பொருத்தமான கலைச்சொற்களைப் புழக்கத்துக்குக் கொண்டு வர முடியும்.


Comments

One response to “ஏன் பாடநூல் கலைச்சொற்களை அப்படியே பின்பற்றத் தேவையில்லை?”

  1. மாரியப்பன் Avatar
    மாரியப்பன்

    தங்களது கருத்துகள் நூற்றுக்கு நூறு உண்மை…..

    வாழ்க பல்லாண்டு….