தமிழ் மோதிரம்

சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.

பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.

முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.

“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?”

“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.

“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”

“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”

“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க? ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா?”

“இல்லீங்க.. வர்றதில்லீங்க..”

“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா? .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே?”

“…”

பக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

எனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.

“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”

“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”

“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.

“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறாங்க? மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க? பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”

“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”

“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.

“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா?”

“இல்லீங்க..”

“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ?”

சிரித்தார்.

அதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.

ஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”

அவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.

பெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.

“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா?”

அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.

“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு? இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா? நீங்க தமிழ் தான?”

அவருடைய முகம் இறுகத் தொடங்கியது.

“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”

“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க? தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்?”

“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”

வாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ?

உத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூபாயை நீக்கினார்.

விற்பனையாளரை நிமிர்ந்து பார்த்தேன்.

சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?

எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?

தமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

எல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான்.
ஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது தான். தவிர,
பல துறையினரின் முதன்மைத் தகுதிகளை இழிவுபடுத்துகிறது. ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ துறைகளில் முன்னேறலாம்.

ஆங்கில அறிவு தான் சோறு போடுகிறது என்றால், ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் தமிழர்களுக்கு ஆங்கிலம் சோறு போடுகிறது?

ஆங்கில அறிவை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு **** முடியாது.

ஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் தொடர்பாடுவதற்கான பிற மொழியறிவு. அதற்கு மேல் பிற மொழியை உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.

ஆங்கிலம் உலகப் பொது மொழிகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் மொழியில் ஆங்கிலத்தில் கலப்பதில்லை. ஆங்கில அறிவு, அதன் மூலமான பல் துறை அறிவு பெற்றுத் தரும் வேலைவாய்ப்புகளை முன்னிட்டு அனைவரும் ஆங்கிலம் கற்பது அவசியம். தமிழர் தமிழருடனும் பிறருடனும் ஆங்கிலத்திலேயே கூட பேசலாம். பெரும்பான்மை மக்கள் மக்கள் தமிங்கிலத்தில் பேச, எழுத பல நியாயமான காரணிகள் உள்ளன. 100% மொழித்தூய்மை சாத்தியமற்றது. ஆனால்,மொழிக் கலப்பை வலிந்தும் தேவையற்றும் செய்வதும் தவறு. ஒரு இனத்துக்கே இன்னொரு மொழி தான் சோறு போடுவது
போல் சித்தரிப்பதும் உள்ளூர் மொழியைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதும் கண்டித்தக்கது.

“சோறு போடும் நன்றிக்காக ஆங்கிலத்தைக் கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த இனமும் ஏற்றுக் கொள்ளாது.

தொடர்புடைய இடுகை: தமிழ் சோறு போடும்

தமிழர் பெயர்கள்

05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற குழந்தைகள் பெயர்கள்:

ஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா, அக்ஷயா, அனுகிரஹா, கீர்த்திவாசன், சுஜேஸ் கார்த்திக், பிரனேஷ், ருத்ரேஷ்பாரதி, அப்ரீன், ஹேமா, மிருதுளா, ரக்ஷனா, அனுஷ், நித்யாஸ்ரீ, ஹரிஷ், திரிஷிதா, சுருதி, நிகிதாஸ்ரீ, அகிலேஷ், சுஜன்,
சத்தியநாராயணன், ரிதிகா, பிரக்னா, சாமுவேல்ராஜ், சிவவிஷ்வா, ஸ்ரீஹரிணி, வைஷ்ணவி, ஸ்ரீராம், ரித்திகா, இலக்கியா, முத்துவிஷால், அருண் ஆதித்யா, விக்வின், சந்தியா, சிவராஜ், கிரண்குமார், லாவண்யா, தர்ஷினிஸ்ரீ, பர்ஷன்பானு, திவ்யா, சூர்யபிரகாஷ், கோகுல்பிரசாத், அனு, ஹரிசுதன், ஹர்ஷவர்தன், சிபு, காயத்ரி, ஓம், இந்துபிரியா, சுபஹரிணி, ரோஹித், ஸ்ரீநிதிவருணா, மணிகண்டன், பரத், சங்கமித்திரை, நேத்ரா, பாலகிருத்திக், சஞ்ஜெய் பிரணவ், அவ்வீஸ், ஹர்ஷினி, யுவநிதர்ஷனா, சிவசங்கர், ரதேஷா, ஹரினிசூர்யா, ஷியாம், பர்ஜானா, கிருஷ்ணன், பில்ஜோபினோய், தேன்மலர், பிரியதர்ஷினி, ஹரிசுதன், ஹையகிரிவி, நேத்ரா, மானஷா, கேத்ரின் சஹானா, தீபன்ஸ்ரீ, விக்னேஷ், அப்ரோஸ், தனுஷ்ராகவ், ரோஸ்மால், ஆதிஷ், ஸ்ரீஜித்குமார், ஆதிஷ், கிறிஸ் ரையன்.

**

பச்சை வண்ணத்தில் இருப்பவை, தமிழ்ப் பெயர்கள் என்று உறுதியாகச் சொல்லத் தக்கவை.

சிகப்பு வண்ணத்தில் தமிழாகத் தான் இருக்குமோ என்று தோன்றுபவை.

– பிற பெயர்கள் தமிழ் இல்லை என்று உறுதியாகத் தெரிபவை.

குறிப்பிட்ட இதழ் வெளியான இடம், அவ்விதழை வாங்குவோரின் சமூகப் பின்னணியைப் பொருத்து தமிழகம் ஒட்டு மொத்தத்துக்கான தரவுகள் இதை ஒட்டியோ மாறியோ இருக்கலாம்.

தொடர்புடைய இடுகை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பெயர்கள்

வாழ்த்துகள்

இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.

இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

இன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.

இப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா? ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே? நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா?

இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயேர்கள் வேளைக்கு ஏற்ப வாழ்த்து சொல்வதைப் பார்த்து நாமும் சூடு போடத் தொடங்கிய தமிழ்ப்’படுத்தல்’, எல்லாவற்றுக்கும் ‘வாழ்த்து’ சொல்கிறேன் பேர்வழி என்று போய் முடிகிறது.

எடுத்துக்காட்டுக்கு,

Happy Pongal – ஆங்கில வழக்கம்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – ஆங்கில வழக்கத்தின் ‘தமிழ்ப்படுத்தல்’?

பொங்கலோ பொங்கல் – தொல் தமிழர் வழக்கம்?

**

வேற என்னவெல்லாம் வருங்காலத்தில் தமிழ்ப்படுத்தலாம்?

Have a nice weekend –  இனிய வாரக்கடைசி வாழ்த்துக்கள் / உங்கள் வாரக்கடைசி இனிதே அமைக !

Bon appetite – இனிதே சாப்பிட வாழ்த்துக்கள் !

😉

**

நீடுழி வாழ்க, நல்லா இருப்பா, மகராசனா இருப்பா போன்ற தமிழ் வாழ்த்துக்கள் எல்லாம் வினைச்சொற்களாக இருப்பதைக் கவனிக்க இயல்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள், மண நாள் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ‘வாழ்த்துக்கள்’ என்ற பெயர்ச்சொல் கூடி வருவன எல்லாம் ஆங்கில வாழ்த்துச் சொற்றொடர்களின் ‘தமிழ்ப்படுத்தலாகவே’ தோன்றுகின்றன.

**

வாழ்த்து சொல்வது, நன்றி சொல்வது முதலியவை நல்ல பழக்கங்கள் என்று நம் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம். ஆனால், நம் ஊர்களில் ஏன் இந்தப் பழக்கம் குறைவாக இருக்கிறது? குறிப்பாக, கடைகளில் நமக்கு சேவை ஆற்றுவோருக்கு நாம் ஏன் நன்றி சொல்வதில்லை? அவர்களும் ஏன் ஒரு சிறு புன்னகையும் சிந்தாமல் வேலை செய்கிறார்கள்?

கூட்ட நெரிசல் ஒரு முக்கிய காரணம். இன்னொரு முக்கிய காரணமாக என்ன தோன்றுகிறது என்றால், நம் பண்பாட்டில் சொல்லப்படுவதை விட உணரப்படுவது முக்கியமானதாக இருக்கலாம். குறிப்பாக, நன்றி நவிலல். நன்றி சொல்வதை விட நன்றி உடையவனாக வாழ்வதையே நம் பண்பாடு சிறப்பித்துக் கூறுகிறதோ?

முற்காலங்களில் சிற்றூர்களில் குழுமி வாழ்ந்த போது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்களோ உறவுகளாகவோ இருந்திருக்கலாம். அந்த ஊரின் பணிகளை ஆளாளுக்குப் பகிர்ந்து செய்திருக்கலாம். எனவே, ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லும் அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாமோ?

கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி

தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.

கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி குறித்த சில தமிழ் வலைப்பதிவு இடுகைகள்:

தமிழ் வளர்ப்பு – அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும் – இலவசக் கொத்தனார்

மேற்கண்ட இடுகைக்கு வந்த தக்க எதிர்வினைகள்:

காதுல பூ – வவ்வால்

பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2% தானா? – புருனோ

இந்த இடுகைகள், மறுமொழிகளில் பிடித்த கருத்துகள்:

* “எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவர் விருப்பத்துக்கு விட வேண்டும்” என்ற சல்லிக்கு எதிராக நவீன் சொன்னது:

* “இப்படி கட்டாயப்படுத்துவது மக்களாட்சியா” என்ற கேள்விக்கு இராமனாதன் சொன்னது.

இந்த விசயம் குறித்த என் சிந்தனைகள்:

தமிழே எழுதப் படிக்கத் தெரியாமல் நல்ல தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி பயின்று தமிழ்நாட்டிலேயே வேலைக்கு அமர்பவர்கள் எப்படி தமிழ் பேசும் பாமர மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும்? (இந்த முக்கியமான பிரச்சினையை வவ்வால் சுட்டி இருந்தார்). ஏற்கனவே ஆங்கில மயமாகி வரும் அரசு, தனியார் துறைகளை தங்கள் வசதிக்காக முழுக்க ஆங்கில மயமாக்குவார்கள். “மனித உரிமை” என்ற பெயரில் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் தமிழர்களே, தமிழ் முழுக்க அரசு மொழியாவதற்கு பெருந்தடையாக இருப்பார்கள்.

ஆங்கிலப் பாடத்தில் பயிற்சி பெறாத ஒரே காரணத்தால் பள்ளியில் தேர்ச்சி அடையாமல் படிப்பைப் பாதியில் எத்தனை மாணவர்கள் கைவிடுகிறார்கள்? இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்?

தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினருக்கும் வெளியே போக வர, பேச தமிழ் தேவை என்ற அடிப்படையில் தமிழ் கற்பிப்பது தவறு இல்லை. கட்டாயத் தமிழ்க் கல்வித் திட்டத்துக்கு எந்த மாணவரும் முணுமுணுப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் தான் குதிக்கிறார்கள். ஏன்?

தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.

வேறு என்ன சொல்ல?