உனக்கு English தெரியாதா?

சென்னை அண்ணாசாலையில் உள்ள முடி திருத்தகம் ஒன்றில் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒருவர் வேலை இழந்த கதையை இராம. கி எழுதி இருந்தார். “இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த கதை தானே, இது குறித்து கவலைப்படுவது மிகைப்பட்ட உணர்ச்சியாக இருக்கிறதே” என்று காசி கூறி இருந்தார். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் இந்தியப் பெருநகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது.

ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. “தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா” என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகள், குறுகிய காலம் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதிக்காகவே பயன்படுகிறது.

வெளியாட்களை உள்ளூர் மொழி கற்க விடாமல் செய்வதில் உள்ளூர்க்காரர்களுக்கும் பங்குண்டு. இடாய்ட்சுலாந்தில் எட்டு மாதங்கள் வசித்த போது, கல்லூரிக்கு வெளியே இடாயிட்ச் மொழி தெரியாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற காரணத்தால் இரவும் பகலும் இடாயிட்சு அகரமுதலியோடு சுற்றித் திரிந்தது நினைவு வருகிறது.

நெதர்லாந்துக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நெதர்லாந்து மொழி கற்றுக் கொள்ளத் தூண்டுதல் இல்லை. நெதர்லாந்து மக்களுக்கு ஆங்கிலம் நன்கு தெரிவதாலும் உதவும் மனப்பான்மை இருப்பதாலும் ஆங்கிலத்திலேயே நம்முடன் பேசுகிறார்கள். அரை குறையாக நாம் நெதர்லாந்து மொழி பேசிக் கொலை செய்தாலும் அதைக் காணச் சகிக்காமல் ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறார்கள். இதனால் நெதர்லாந்துக்கு வரும் பல வெளிநாட்டவர்கள் நெதர்லாந்து மொழியில் தேர்ச்சியும் பயிற்சியும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டின் பொருளாதாரமே நெதர்லாந்து மொழியால் இயங்குவதால் ஆங்கிலம் அம்மொழியை அழிக்கும் நிலைக்குச் செல்லவில்லை.

தமிழ்நாட்டில் அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை. அவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் எழுத, பேச, அறிவிக்கப் போய் எங்கும் ஆங்கிலமாகி, இறுதியில் “உனக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று நம்மையே திரும்பக் கேட்கும் நிலை.

Sirக்குத் தமிழ் தெரியாதாம்ப்பா” என்ற கனிவான குரல்; “என் பொண்ணுக்கு Tamil எல்லாம் வராது” என்ற அலட்சியமும் பெருமிதமும் கலந்த குரல்; “உனக்கு English தெரியாதா” என்ற ஏளனமான குரல்… மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் எங்காவது கேட்டுக் கொண்டே இருக்கிறது.

English தெரியாதவன் மரியாதை இழந்து தமிழ்நாட்டிலேயே அவன், இவன், உன் என்றாகிப் போனது எப்போது? இந்த நிலையை எப்படி மாற்றுவது? என்று இந்த நிலை மாறும் ??


Comments

13 responses to “உனக்கு English தெரியாதா?”

  1. கவலைக்கிடமான நிலைதான். டச்சுக் காரர்கள் அதிகமாக முறைப்பாடு செய்வார்களாமே? அவன் அதைச் செய்தான் இதைச் செய்தான் என்று?

    சிங்களவரும், தமிழரும் தம் மொழியை மறப்பதில் கெட்டிக்காரர். சில வேளையில் இலங்கையில் தமிழும், சிங்களமும் ஒன்றாக இருந்திராவிட்டால் இரு மொழியும் இப்போது அருகியிருக்கலாம்!!!

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மயூ, நான் பார்த்த வரை டச்சுக்காரர்கள் பழக இனிமையானவர்கள்..

  3. உள்ளேன் அய்யா!:-)

  4. //தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார்.//

    இதே நிலமையை இலங்கையிலும் பார்க்க முடிகின்றது. தென்னிலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களுடன் பேசுவதானால் சிங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    அதேவேளை தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத தமிழர்கள் யாழ்ப்பாணப் பிரதேசங்களில் அதிகமிருப்பதால், சிங்கள இராணுவத்தினரும் தமிழ் கற்க வேண்டிய கட்டாயத்திற்கு உற்பட்டுள்ளதை காணலாம்.

    உங்கள் கருத்து மிகவும் சரியானது.

    தமிழர் தேசத்தில் தமிழர்களான நாம் எமது மொழிக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தால், அந்நியரும் எமது தேசத்தில் எமது மொழியை கற்றுத் தானே எம்முடன் பேசவேண்டிய நிலை வரும்.

    அதிக தமிழர்களும் வாழும் நாடு தமிழ்நாடானாலும், அது மாநிலமாக இருக்கும் வரை, இந்தியின் ஆதிக்கத்தை எம்முள் புகுத்துவதற்கான முனைப்புகள் ஒரு போதும் ஓயப்போவதில்லை. அற்ப சொற்ப தொழில் வாய்ப்புக்காக அதை ஏற்கும் தமிழர்களும் எம்முள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலை ஆபத்தையே காட்டி நிற்கின்றது.

    சுய ஆட்சி அதிகாரங்களை கொண்ட மொழிகளே இன்றும் பேணிப்பாதுக்காக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு அல்லாத சிறுபான்மை மொழிகள் பெரும்பான்மை மொழிகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

    என்று தமிழரின் தமிழ் மொழி சுய ஆட்சியதிகாரங்களுடன் நிலை நிறுத்தப்படுகின்றதோ, அன்றே எமது மொழியை உலக அரங்கில் நிலைப்பெற ஆக்கப் பூர்வ சட்டத் திட்டங்களை கொண்டுவர முடியும்.

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    காசி – 🙂

    அருண் – தொடர்ந்து விரிவான பயனுள்ள மறுமொழிகளைத் தருவதற்கு நன்றி. தமிழ்நாடு தனி நாடு ஆவது இயலாததும் தற்போதைக்கு தேவை இல்லாததும் ஆகும். ஆனால், ஒரு மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தினாலே தமிழின் நிலையை இன்னும் எவ்வளவோ வலுப்படுத்த இயலும்.

  6. இளங்கோவன் Avatar
    இளங்கோவன்

    //தமிழ்நாடு தனி நாடு ஆவது இயலாததும் தற்போதைக்கு தேவை இல்லாததும் ஆகும்//

    ரவி அவர்களே இவ்வளவு எளிதாகக் கடந்துபோகக் கூடிய
    அளவில் சிக்கல் சிறியதோ எளியதோ அல்ல.

    தமிழகத்தின் முழுச்சிக்கலின் ஒரு சிறு பகுதியே இங்கே விவாதிக்கப்படுகிறது.

    அருணின் கருத்தோடு உடன்படுகிறேன்

  7.  Avatar
    Anonymous

    //தமிழ்நாடு தனி நாடு ஆவது இயலாததும் தற்போதைக்கு தேவை இல்லாததும் ஆகும்//
    ரவி அவர்களே,
    சிக்கல் நீங்கள் கடந்து போவது போல் எளியதாகவும் சிறியதாகவும் இல்லை.
    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தச் சிக்கலின் ஒரு பகுதியே இங்கு விவாதிக்கப்படுகிறது.
    அருணின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

  8. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    இளங்கோவன், anonymous – இந்த விசயம் தொடர் உரையாடலுக்கு வித்திடும் என்று நினைக்கவில்லை 🙂 தமிழ்நாடு தனி நாடு ஆனால், தமிழுக்கு இன்னும் நல்ல நிலையைப் பெற்றுத் தர இயலலாம் என்பது உண்மை தான். ஆனால், ஒரு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்யப்படக்கூடிய பல விசயங்களே இன்னும் செய்யப்படாமல் இருக்கின்றன. இது ஒரு மனநிலைப் பிரச்சினையே. இந்த மனநிலைப் பிரச்சினை இருக்கும் வரை தனிநாடு ஆகியும் பெரிதாக சாதிக்க இயலாது.
    தவிர, தனி நாடு தேவை, இல்லை என்பதை விட அதைப் பெறுவதற்கான தற்காலச் சாத்தியங்களையும் பார்க்க வேண்டும். மக்கள் இயக்கமாக வலுவான காரணங்களோடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்துப் போரிடுவோர் கூட சிறிய நாடுகளில் இருந்து விடுதலைப் பெற இயலாத நிலையில், தனித்தமிழ்நாடு எந்த அளவு சாத்தியம்? அப்படியே தொடர்ந்து போராடி மொழியை மீட்டெடுக்கிறோம் என்றாலும் அதை அடைவதற்குள் மொழிக்குச் சமமான இன்னும் பல விசயங்களை இழந்தே அடைய வேண்டி இருக்கும். மொழிக்காப்பு என்ற ஒரே விசயத்துக்காகப் போராடி தனி நாடு பெற்ற வரலாறுகள் ஏதும் இருந்தால் அறிய விரும்புகிறேன். மொழிக் காப்பு என்பது கூடுதல், இரண்டாவது அல்லது முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்குமே தவிர அதை விடப் பெரிய காரணிகள் பலவும் விடுதலை இயக்கங்களில் உந்த அவசியமாக இருக்கும். மொழி அடிப்படை பாகுபாடு முக்கிய காரணி. இலங்கையில் உள்ளது போல் தமிழன் என்ற ஒரே காரணதுக்காக இந்தியாவில் அரசியல், பொருளாதார, வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றனவா? தற்போது அப்படி ஒரு நிலை இருப்பதாக பெரும்பாலான பொது மக்கள் உணர்வதில்லை என்றே நினைக்கிறேன். ஆங்கிலம் தெரியாததால் வாய்ப்புகள் குறைவது வேறு, தமிழனாகப் பிறந்ததாலேயே பாதிக்கப்படுவது வேறு. உளறுகிறேனா தெரியவில்லை 🙂 இது குறித்த உங்கள் விரிவான கருத்துக்களைப் பதிந்தால் அறிந்து கொள்வேன். நன்றி.

  9. இளங்கோவன் Avatar
    இளங்கோவன்

    ரவி அவர்களே,
    தமிழக விடுதலை (‘தனி’த்தமிழ்நாடு அல்ல) குறித்த விரிந்த விவாதம் இங்கே (இப்பதிவில்) எந்த அளவுக்கு சாத்தியம் என்பது புரியவில்லை.ஆயினும் சில முக்கியப் புள்ளிகளைத் தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.
    1. தமிழகம் ஒரு தேசம்.
    2. தமிழகத்தின் ஒரு தேசத்திற்கே உரிய தன் தீர்மானிப்பு (தற்சார்பு) உரிமைகள் ( அரசியல், பொருளாதாரம், மொழி என நீளும் எண்ணற்ற தளங்களில்) முழுமையானதாக அறுதியானதாக இல்லை.
    3.மேற்சொன்ன தன்தீர்மானிப்பு உரிமைகளை நிறைவுசெய்ய இந்திய அரசமைப்புச் சட்டகத்தின் வரம்புக்குள் அரசியலின் தர்க்கப்படி வாய்ப்புகள் ஏதுமில்லை.
    மேற்கண்ட கருதுகோள்களே தமிழக விடுதலை எனும் அரசியலுக்கு இட்டுச்செல்கின்றன. மேற்கண்ட மூன்று புள்ளிகளில் ஒவ்வொன்றிலும் முரண்பட உங்களுக்கு உரிமையுண்டு:) நான் சொல்வதெல்லாம் இங்கு விவாதிக்கப்படும் மொழிக்காப்பு என்பது ஒட்டுமொத்தத் ‘தமிழக அரசியல் அடிமைத்தன’த்தின் ஒரு சிறு வெளிப்பாடு என்பதே. மற்றபடி தமிழைக்காக்க(!) தனித்(?)தமிழ்நாடு படைக்கவேண்டும் எனச்சொல்லவில்லை. ( தமிழை ஒழித்தால்தான் தமிழனுக்கு வாழ்வு என்றால் அதைச் செய்ய நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை தமிழோடு எந்த சென்டிமெண்ட்டும் எனக்கில்லை) மேலும் //இது ஒரு மனநிலைப் பிரச்சினையே. இந்த மனநிலைப் பிரச்சினை இருக்கும் வரை தனிநாடு ஆகியும் பெரிதாக சாதிக்கஇயலாது // என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.புறச்சூழலின் தாக்கத்தால் ஏற்படும் தவிர்க்க முடியா விளைவுதான் நீங்கள் குறிப்பிடும் மனநிலைப்பிரச்சனை.
    //இலங்கையில் உள்ளது போல் தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவில் அரசியல், பொருளாதார, வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றனவா? தற்போது அப்படி ஒரு நிலை இருப்பதாக பெரும்பாலான பொது மக்கள் உணர்வதில்லை என்றே நினைக்கிறேன்.//
    மேற்கண்ட தங்களின் வரிகள் சாதிய அடிமை நிலையை தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் எனப்பேசும் ஆதிக்கவாதிகளின் குரலை நினைவுபடுத்துகிறது. அடிமைத்தனம் தமிழக மக்களால் கூர்மையாக உணரப்படவில்லை என்னும் தங்கள் கருத்து எனக்கும் உடன்பாடுடையதே. ஆனால்அதற்காக அடிமைத்தேசமாக தமிழகம் இல்லை என வாதிட முடியுமா? இலங்கையின் இனமுரண்பாடு மிகக்கூர்மையானது. அதை இந்தியா போன்ற பல்தேசங்கள் கொண்ட நாட்டுடன் ஒப்பிடுவது எப்படி என விளங்கவில்லை.
    முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு என எழுகிற தமிழகத்தின் தண்ணீர்த் தாகம் (மட்டும்கூட) இந்திய மாயையை மிக எளிதாக விலக்கும் என்பதே என் அரசியல் நம்பிக்கை.
    மற்றபடி ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் விடுதலையுறாத தேசங்களைப்பற்றி பேசுகிற நமக்கு நூற்றாண்டுகள் பல கடந்த அயர்லாந்து விடுதலைப்போராட்டம் என்ன உணர்த்துகிறது? விடுதலை அரசியல் என்பது அரசியல் நியாயப்பாட்டைச்சார்ந்துள்ளதே தவிர நிகழ்கால சாத்தியப்பாட்டைச் சார்ந்ததல்ல. அப்படிச் சாத்தியப்பாட்டை நோக்குவோமானால் அடிமையை விடுதலையை நோக்கி ஆற்றுப்படுத்தாமல் அவனுக்கு தக்க உணவும் உரிய கூலியும் சின்னச் சின்ன சட்ட உரிமைளும் வழங்கக்கோரிப் பரிந்துரைக்கிறவர்களாக நாம் உள்ளோம் என்பதே பொருள்

  10. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    இளங்கோவன், நீங்கள் சொல்லியுள்ள அனைத்துமே ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகின்றன. என்னுடைய கருத்தில் தீவிர நிலையான நிலைப்பாடு ஏதுமில்லை. ஏனெனில் இது விசயத்தில் என்னுடைய புரிதலும் அறிவும் அனுபவமும் குறைவே. உங்களைப் போன்றோரின் சிந்தனைகள் ஓரிடத்தில் விரிவாகப் படிக்கக்கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி.

    1. sasikala Avatar
      sasikala

      i dont accept ur topic

  11. என்னுடைய சக ஊழியர்கள் இருவர் தமிழ் எழுத / படிக்க தெரியாதவர்கள். (தமிழர்கள்)
    இத்தனைக்கும் அவர்கள் வேறு மாநிலங்களில் வளர்ந்தவர்கள் என்றால் கூட பொறுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து CBSE பள்ளிகளில் தமிழுக்கு பதிலாக ஹிந்தி படித்தவர்கள்.

    இங்கே தாய்மொழி பற்றில்லாதவர்கள் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      Joe, சிறு வயதில் தெரியாமல் ஒரு வகுப்பில் இந்தியை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டேன். பிறகு, அப்பா அந்த வகுப்புக்குரிய தமிழ் பாடநூலை வாங்கி வந்து வீட்டிலேயே சொல்லித் தந்தார். சில மாதங்கள் கழித்து வேறு பள்ளிக்கு மாறி தமிழ்ப் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிந்தது.