ஊக்கமுடைமை – திருக்குறள் உரை

ஊக்கமுடைமை – திருக்குறள் உரை

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. 591

ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592

மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும்.

ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593

ஊக்கம் இருக்கவங்க, ஒரு வேளை தங்கள் சொத்தை இழந்தாலும், “ஐயோ போச்சே”ன்னு கலங்க மாட்டாங்க. (ஏன்னா ஊக்கம் தான் சொத்துங்கிறதுனால, அதை வைச்சு வேண்டியதை அடையலாம் தானே?)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. 594

செல்வம், உயர்வு எல்லாம் ஊக்கம் உள்ளவன் எங்க இருக்கான்னு வழி தேடிக் கண்டுபிடிச்சு தானா வந்து சேரும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. 595

குளத்தில் என்ன மட்டத்துக்குத் தண்ணி இருக்கோ அந்த அளவு தான் அதில பூத்திருக்கிற தாமரைச் செடியின் நீளமும் இருக்கும். அது மாதிரி, நாம எந்த அளவு உயர்வோம்ங்கிறது நம்ம மனசுல உள்ள ஊக்கம் அளவுக்குத் தான் இருக்கும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596

என்ன குறிக்கோள் வைச்சாலும் அது எல்லாம் உயர்வா, பெரிசா இருக்கணும். அதை அடைய முடியாமப் போனாலும், அதுக்காக அப்படி சிந்திக்கிறதை விட்டுடக்கூடாது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. 597

உடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் போர் யானை உறுதி குலையாம நிக்கும். அது மாதிரி, ஊக்கம் உள்ளவங்களுக்கு என்ன தான் சிரமம் வந்தாலும் ஊக்கம், உறுதி குலையாம தன் பெருமையை விட்டுக் கொடுக்காம இருப்பாங்க.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. 598

ஊக்கம் இல்லாதவனால என்னிக்குமே “இந்த உலகில் நான் ஒரு வல்லவன்” அப்படின்னு நினைச்சு மகிழ முடியாது.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 599

யானை பெரிசா இருக்கு; கூர்மையான கொம்புகளை வைச்சிருக்கு. ஆனா, அதுவே கூட ஊக்கம் கூடிய புலி தாக்க வந்தா அச்சப்படும்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. 600

மனசுல உறுதி இல்லாதவங்க எல்லாம் மரம் மாதிரி தான். சும்மா பார்க்கத் தான் மனுசங்க மாதிரி இருக்காங்க.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்.

வினைத்திட்பம் – திருக்குறள் உரை

வினைத்திட்பம் – திருக்குறள் உரை

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661

நம்ம மனசு எவ்வளவு உறுதியா இருக்கோ, அவ்வளவு தான் நாம செய்யுற செயலும் உறுதியா இருக்கும். மன உறுதி தவிர்த்த மிச்ச எல்லாம் சும்மா.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662

சிக்கல் வர்றதுக்கு முன்னாடியே அதைத் தவிர்க்கணும்; அதையும் மீறி சிக்கல் வந்தா மனசு தளராம இருக்கணும். செய்யுற செயல உறுதியா செய்யத் தெரிஞ்சவங்க எல்லாம் இந்த இரண்டு வழியைத் தான் பின்பற்றுறாங்க.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். 663

ஒரு செயலைச் செஞ்சு முடிச்சிட்டு அதைப் பத்தி வெளிப்படுத்துறவன் தான் செயலாண்மை உள்ளவன். இடையிலேயே வெளிப்படுத்துனா அதுனால பல சிக்கல்கள் வரலாம்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664

யார் வேணா எதை வேணா சுளுவா சொல்லிடலாம். ஆனா, சொன்ன மாதிரி செஞ்சு காட்டுறது தான் சிரமம்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். 665

செயல்ல உறுதியா இருக்கவங்களை அரசனும் மதிப்பான்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 666

நினைச்சதை செஞ்சு முடிக்கணுங்கிற உறுதி மட்டும் இருந்திட்டா, நாம நினைக்கிறத எல்லாம் நினைச்சபடியே செஞ்சு முடிக்கலாம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 667

அச்சாணி சிறிசு தான். ஆனா, அது இல்லாம அவ்வளவு பெரிய தேர் கூட ஓடாது. அதனால், யாரும் உருவத்தால சின்னவங்கன்னு நினைச்சு கேலி பண்ணக்கூடாது.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

ஒரு செயலைச் செய்றதுக்கு முன்னாடி குழப்பமில்லாம தெளிவா சிந்திச்சு முடிவெடுக்கணும். அப்படி முடிவெடுத்த பிறகு சோர்வு இல்லாம ஒத்திப் போடாம செஞ்சு முடிக்கணும்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 669

கடைசியில நன்மை, இன்பம் தர்ற செயலை, இடையில எவ்வளவு சிரமம் வந்தாலும் துணிவோட விடாம செஞ்சு முடிக்கணும்.

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. 670

வேற என்ன தான் திறமை, பலம், உறுதி இருந்தாலும் ஒருத்தன் கிட்ட ஒரு செயலைச் செஞ்சு முடிக்கிற உறுதி மட்டும் இல்லாட்டி அவனை இந்த உலகம் மதிக்காது.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்.

செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் உரை

செய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் உரை.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101

நாம ஒருத்தருக்கு ஒரு உதவியும் செஞ்சிருக்காதப்ப, அவர் நமக்கு ஒரு உதவி செய்யுறாருன்னா, அதுக்கு பதிலா இந்த உலகத்தையும் வானத்தையும் கொடுத்தா கூட ஈடு ஆகாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102

என்ன உதவிங்கிறத விட அது எப்ப கிடைக்கிறதுங்கிறது தான் முக்கியம். அதனால சரியான சமயத்தில கிடைக்கிற உதவி இந்த உலகத்தை விட பெரிசு.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 103

இவருக்கு இந்த உதவி பண்ணா நமக்கு இந்த நன்மை கிடைக்கும் அப்படின்னு கணக்குப் போட்டுப் பார்க்காம ஒருத்தர் அன்பா செய்யுற உதவியோட சிறப்பு கடலை விடப் பெரிசு.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். 104

ஒரு உதவியோட மதிப்பு தெரிஞ்சவங்களுக்கு திணை அளவு ஒரு சின்ன உதவி செஞ்சாலும் அதை பனை மரம் அளவுக்கு ரொம்பப் பெரிசா மதிப்பாங்க.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

ஒரு உதவியோட மதிப்பு தெரிஞ்சவங்க சின்ன உதவியையும் பெரிசா மதிப்பாங்க. மதிப்பு தெரியாதவங்க எவ்வளவு தான் பெரிய உதவி செஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க. அதுனால், ஒரு உதவியோட மதிப்பு யாருக்கு அதைத் தர்றோங்கிறதைப் பொருத்து தான்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

மாசு இல்லாத நல்லவங்க உறவை மறக்கக்கூடாது. துன்பத்தில நமக்கு உதவினவங்க நட்பை என்னிக்குமே கை விட்டுடக்கூடாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. 107

ஏழு பிறவிக்கும தான் பெற்ற உதவியை மறக்காம நினைக்கிறவன் தான் நல்லவன்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 108

ஒருவர் நமக்குச் செய்த நல்லதை மறப்பது தப்பு. அதுவே அவர் நமக்கு ஏதும் கெட்டது செஞ்சிருந்தா அதை உடனே மறந்திடுறது நல்லது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

நம்மள கொன்னே போடுற அளவுக்கு ஒருத்தங்க கெட்டது செய்யும் போது  கூட அதால புண்பாடம இருக்க என்ன செய்யலாம்? அவர் நமக்கு முன்ன எப்பவாவது ஒரே ஒரு நன்மை செஞ்சிருந்தாக்கூட, அதை நினைச்சுப் பார்த்தா போதும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

என்னென்னவோ பாவங்கள் செஞ்சவுங்களுக்கு எல்லாம் மன்னிப்பு உண்டு. ஆனா, ஒருத்தர் செஞ்ச உதவிக்கு நன்றியில்லாம இருந்தோம்னா, நமக்கு மன்னிப்பே கிடையாது.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்.

மக்கட்பேறு – திருக்குறள் உரை

மக்கட்பேறு – திருக்குறள் உரை

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 61

நல்ல அறிவாளி குழந்தைகளைப் பெறுவதை விட வேற கொடுப்பினை எதுவும் இல்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62

பழி இல்லாத நல்ல பண்பு உள்ள குழந்தைகளைப் பெத்தா, ஒருவருக்கு ஏழு பிறவியிலும் கெட்டதே நடக்காது.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63

ஒருத்தங்களோட குழந்தைங்க தான் அவங்களுக்கு சொத்து மாதிரி. ஆனா, அது எந்த அளவு மதிப்பு உள்ளதுங்கிறத அந்தக் குழந்தைகளோட செயல்களை வைச்சு தான் சொல்ல முடியும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64

குழந்தைகளோட பிஞ்சுக் கைகள் தொட்டுப் பிசைஞ்ச உணவு அதைப் பெத்தவங்களுக்கு அமுதத்தை விட இனிமையா இருக்கும்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

குழந்தைகளை அணைச்சு இருக்கிறது தான் பெத்தவங்க உடம்புக்கு இன்பம். அவங்களோட பேச்சைக் கேட்கிறது தான் அவங்க காதுகளுக்கு இன்பம்.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66

புல்லாங்குழல், யாழ் இசை எல்லாம் இனிமையா இருக்குன்னு சொல்லுறவங்க கண்டிப்பா அவங்க குழுந்தைகளோட மழலைப் பேச்சைக் கேட்டிருக்க மாட்டாங்க.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67

ஒரு அப்பா தன் மகன் / மகளுக்குச் செய்யுற கடமை என்னன்னா, படிச்சவங்க இருக்க அவைல அவங்களை முதல் ஆளா ஆக்குறது தான்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68

பெத்தவங்களை விட குழந்தைகள் அறிவாளிகளா இருந்தா அதுனால இந்த உலகத்துக்கே நல்லது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69

தன் மகனை “நல்லவன், சிறந்தவன்”னு ஊரெல்லாம் புகழும் போது, அவனைப் பெத்தப்ப மகிழ்ந்ததை விட கூடுதல் மகிழ்ச்சியை ஒரு தாய் அடைவாள்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல். 70

“இவனைப் பெக்கிறதுக்கு என்ன தவம் செஞ்சாரோ”ன்னு சொல்லுற மாதிரி வாழ்ந்து காட்டுறது தான் பிள்ளைங்க அப்பாவுக்கு செய்யுற உதவி.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

கல்வி – திருக்குறள் உரை

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. 391

படிக்க வேண்டியதை குறை இல்லாம நல்லா படிக்கணும். படிச்ச பிறகு அதுல சொல்லி இருக்கிற படி செய்யணும்..

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392

எண், எழுத்து இரண்டும் நமக்கு கண்ணு மாதிரி.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். 393

படிப்பு இல்லாட்டி கண்ணு இருந்தும் குருடன் போல தான்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். 394

மனசு மகிழ்ந்து சந்திச்சு, “இனி எப்ப திரும்பப் பார்ப்போம்”னு ஏங்கிப் பிரியுற மாதிரி தான் படிப்பில் சிறந்தவங்க இருப்பாங்க.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். 395

பணக்காரன் முன்னாடி பணிவா நிற்கிற ஏழை மாதிரி படிச்சவங்க கிட்ட இருந்து கத்துக்கிறவங்க தான் உயர்ந்தவங்க. அப்படி பணிவா இருந்து கத்துக்கிறதால ஒன்னும் மதிப்பு குறைஞ்சு போயிடுறது இல்ல. அப்படி கத்துக்காதவங்க தான் மதிப்பு இல்லாம போயிடுறாங்க.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு. 396

தோண்டத் தோண்ட கேணியில இருந்து தண்ணி ஊறுற மாதிரி, படிக்கப் படிக்க அறிவு வளரும்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு. 397

படிச்சவங்களுக்கு எல்லா நாடும் ஊரும் சொந்த நாடு, ஊர் போல தான். அப்புறமும் ஏன்  சிலர் சாகும் வரைக்கும் படிப்பறிவு இல்லாம இருக்காங்க?

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. 398

இந்தப் பிறவில கத்துக்கிறது, ஏழு பிறப்புக்கும் தொடர்ந்து வந்து உதவும்.

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார். 399

படிச்சவங்க தனக்கு இன்பம் தர்ற படிப்பு உலகத்தில உள்ள எல்லாருக்கும் இன்பம் தர்றதைப் பார்த்து இன்னும் மேல மேல விரும்பிப் படிப்பாங்க.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. 400

படிப்பு தான் சொத்து. மிச்சதெல்லாம் ஒன்னுமே இல்ல.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்

**

எச்சரிக்கை : நிறைய மக்கள் திருக்குறள் உரை தேடி இந்தப் பதிவுக்கு வருவதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு திருக்குறள் உரையா போட்டுத் தாக்கப் போறேன் 🙂 !