வான்சிறப்பு – திருக்குறள் உரை

1.1.2 வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

உலகம் என்னிக்கும் உயிரோட இருக்க மழை தான் காரணம். அதனால, மழைய அமுதம்னே சொல்லலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

நல்ல சுவையான உணவைத் தர்ற பயிர்களை விளைவிக்க மழை உதவும். தாகத்தை தணிக்க தண்ணியாகவும் உதவுறதால, மழையே உணவாகவும் கூட இருக்கும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 13

ரொம்ப நாள் மழை வராம ஏமாத்திடுச்சுன்னா, அப்புறம் உலகமே பசியால வாட வேண்டியது தான்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14

மழை இல்லாமப் போச்சுன்னா, அப்புறம் விவசாயம் செய்ய முடியாது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

சில சமயம் பெய்யாம இருக்கிறதால மக்களுக்கு கேடு் செய்யுறதும் மழை தான். அதே வேளை, நல்லா பெய்யும் போது மக்களுக்கு நன்மை செய்யுறதும் அதே மழை தான்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16

மழை பெய்யாட்டி ஒரு பசுமையான புல்லைக் கூடப் பார்க்க முடியாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17

மழை பெய்யாட்டி கடலே கூட வத்திப் போயிடும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18

வானத்தில் இருந்து வர்ற மழையே பெய்யாட்டி, அப்புறம் அந்த வானத்துல இருக்கிறதா சொல்லபடுற சாமிகளுக்குப் நாளும் கோயில்ல பூசையும் நடக்காது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவும் நடக்காது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19

மழை பெய்யாட்டி, இந்த உலகத்தில தானம், தவம் போன்ற நல்ல விசயம் எல்லாம் தொடராது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

நீரில்லாம உலகம் செயல்பட முடியாது. அது போல, மழை இல்லாம யாரும் தன் கடமையை ஒழுங்கா செய்ய முடியாது. மனிதர்களிடம் ஒழுக்கமும் நிலைக்காது.

**

பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்


Comments

2 responses to “வான்சிறப்பு – திருக்குறள் உரை”

  1. சிவகுமார் Avatar
    சிவகுமார்

    ரவி, விளக்கங்கள் அருமை. எளிய தமிழில் மிகவும் ரசிக்கத் தக்க வகையில் உள்ளன. தொடர்க உங்கள் பணி. சுவையார்ந்த உரைகள்.

  2. marimuthu Avatar
    marimuthu

    arumai arumai!