ஊக்கமுடைமை – திருக்குறள் உரை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று. 591
ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592
மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும்.
ஊக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593
ஊக்கம் இருக்கவங்க, ஒரு வேளை தங்கள் சொத்தை இழந்தாலும், “ஐயோ போச்சே”ன்னு கலங்க மாட்டாங்க. (ஏன்னா ஊக்கம் தான் சொத்துங்கிறதுனால, அதை வைச்சு வேண்டியதை அடையலாம் தானே?)
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. 594
செல்வம், உயர்வு எல்லாம் ஊக்கம் உள்ளவன் எங்க இருக்கான்னு வழி தேடிக் கண்டுபிடிச்சு தானா வந்து சேரும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. 595
குளத்தில் என்ன மட்டத்துக்குத் தண்ணி இருக்கோ அந்த அளவு தான் அதில பூத்திருக்கிற தாமரைச் செடியின் நீளமும் இருக்கும். அது மாதிரி, நாம எந்த அளவு உயர்வோம்ங்கிறது நம்ம மனசுல உள்ள ஊக்கம் அளவுக்குத் தான் இருக்கும்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596
என்ன குறிக்கோள் வைச்சாலும் அது எல்லாம் உயர்வா, பெரிசா இருக்கணும். அதை அடைய முடியாமப் போனாலும், அதுக்காக அப்படி சிந்திக்கிறதை விட்டுடக்கூடாது.
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. 597
உடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் போர் யானை உறுதி குலையாம நிக்கும். அது மாதிரி, ஊக்கம் உள்ளவங்களுக்கு என்ன தான் சிரமம் வந்தாலும் ஊக்கம், உறுதி குலையாம தன் பெருமையை விட்டுக் கொடுக்காம இருப்பாங்க.
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. 598
ஊக்கம் இல்லாதவனால என்னிக்குமே “இந்த உலகில் நான் ஒரு வல்லவன்” அப்படின்னு நினைச்சு மகிழ முடியாது.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 599
யானை பெரிசா இருக்கு; கூர்மையான கொம்புகளை வைச்சிருக்கு. ஆனா, அதுவே கூட ஊக்கம் கூடிய புலி தாக்க வந்தா அச்சப்படும்.
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. 600
மனசுல உறுதி இல்லாதவங்க எல்லாம் மரம் மாதிரி தான். சும்மா பார்க்கத் தான் மனுசங்க மாதிரி இருக்காங்க.
**
பார்க்கவும் – திருக்குறள் உரை பட்டியல்.
Comments
6 responses to “ஊக்கமுடைமை – திருக்குறள் உரை”
எளிமையா எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதுறீங்க. தொடருங்க.
நல்லா இருக்குங்க! எளிமையா என்னைப் போலத் தற்குறிக்கும் புரியும்படி இருக்குங்க. இன்னும் கொஞ்சம் வெளக்கினா நல்லா இருக்கும். உதாரணமா, ஊக்கம்னா என்ன?
நன்றி ரமணன். ஊக்கம் என்பதை will power, mental urge / drive / toughness, inspiration, motivation என்பது போல் புரிந்து கொள்ளலாம்.
ennakku purikirathu ethu pol mattravargalu purinthukolvaarkal
ena nambukiren
தேவய்ப்பட்டால்…
http://www.mediafire.com/?sharekey=44d9d1ac5b579a0cc2b435915e8821d7ae5f824d6240b1d6a2d0568e5b24962e
i can understand very easily without any guidence