தமிழ் மோதிரம்

சென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.

பெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.

முன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.

“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா?”

“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.

“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”

“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”

“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க? ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா?”

“இல்லீங்க.. வர்றதில்லீங்க..”

“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா? .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே?”

“…”

பக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

எனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.

“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”

“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”

“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.

“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறாங்க? மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க? பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”

“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”

“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.

“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா?”

“இல்லீங்க..”

“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ?”

சிரித்தார்.

அதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.

ஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.

“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”

அவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.

பெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.

“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா?”

அவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.

“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு? இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா? நீங்க தமிழ் தான?”

அவருடைய முகம் இறுகத் தொடங்கியது.

“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”

“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க? தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்?”

“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”

வாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ?

உத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூபாயை நீக்கினார்.

விற்பனையாளரை நிமிர்ந்து பார்த்தேன்.

சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ?

தமிழில் பெயர்ப் பலகைகள்

பொருளகம், தங்கும் விடுதி, பெரு அங்காடி, காலணியகம், இனிப்பகம், உணவகம், மின்னணுப் பொருளம், எழுது பொருளகம், கணினி பயிற்சி மையம்.. இப்படிச் சென்னையின் சில கடைகளில் புதிய தமிழ்ப் பெயர்ப் பலகைகள் தென்படுகின்றன. என்னடா, இது தமிழ்நாடு தானா இல்லை இலங்கை, சிங்கப்பூரா என்று குழப்பமாகப் போய் விட்டது 🙂

தமிழில் பெயர் எழுத வேண்டும் என்று முன்பே அரசு உத்தரவு இருந்தாலும், இப்போது செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அந்த உத்தரவைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்களாம். நல்ல மாற்றம்.

இருந்தும், பல கடைகளில் மாற்றத்தைக் காணோம். சில கடைகள் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதி உள்ளன. இப்போது மாறியுள்ள சில கடைகளும் தற்காலிகப் பெயர்ப் பலகைகளை வைத்துள்ளன. சென்னைக்கு வெளியே இந்த நடவடிக்கைகளைக் காணவில்லை. மாநாட்டுக்குப் பிறகும் மாற்றம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

தமிழ்நாட்டில் இணையச் சேவைகள்

தமிழ்நாட்டில் இணைய வழிச் சேவைகள் எந்த அளவு உள்ளன? அன்றாட வாழ்க்கையை இலகுவாக்க இணையத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்? சில நாட்களாகத் துருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதம் தான்.

* பேருந்துச் சீட்டு வாங்க Red Bus
* இரயில் சீட்டு வாங்க
* புத்தகம் வாங்க Flipkart , NHM
* கோவையில் திரைப்படம் பார்க்க http://www.thecentralcinemas.com/ . இணையப் பார்வையாளர்களுக்கு என்றே காட்சி நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை மூன்று வரிசை இடங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். இது தெரியாமல் நிறைய நாள் சீட்டு கிடைக்காமல் திரும்ப வந்ததும், கள்ளச்சீட்டு வாங்கியதும் உண்டு 🙁
* Vodafone புதுப்பிப்பு
* Sun DTH புதுப்பிப்பு, Dish TV புதுப்பிப்பு
* ICICI இணைய வங்கி.

இன்னும் சில சேவைகள் வந்தால் நன்றாக இருக்கும்:

* மளிகைப் பொருள் விற்பனை. பீட்சா மாதிரி ஒரு மணி நேரத்துக்குள் வீட்டுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், சீக்கிரம் என் அக்கா மகனாவது வளர்ந்து முக்குக் கடைக்குப் போய் வரப் பழக வேண்டும்.
* NetFlix மாதிரி DVD வாடகை, புத்தக வாடகைச் சேவைகள். உருப்படிக்கு 25 ரூபாய் வைக்கலாம்.
* மின் கட்டணம் போன்ற அனைத்து அரசு கட்டணங்களும் இணையத்தில் செலுத்தும் வசதி.
* அனைத்துத் திரையரங்குகளுக்கான சீட்டுகளையும் ஒரே இடத்தில் பதியும் வசதி. Red Bus போல.

சென்னையில் மின் கட்டணம் செலுத்தல், வாடகை DVD பெறுதல் போன்ற வசதிகள் இருந்தாலும் அனைத்து ஊர்களுக்கும் வர வேண்டும்.

நீங்கள் பயன்படுத்திப் பார்த்து நன்றாக உள்ள இணையச் சேவைகளைத் தெரிவிக்கலாமே?

தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள்

ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.

தலை எழுத்து

ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

நம்முடைய பிறருடைய பெயர்களையும் தமிழ்த் தலை எழுத்துகளைக் கொண்டே எழுத முன்வர வேண்டும்.

எடுத்துக்காட்டு, முத்துச்சாமியின் மகன் வெற்றிவேல் = மு. வெற்றிவேல்.

ஏன்?

* மு.Vetrivel அல்லது Mu. Vetrivel என்று எழுதிப் பார்த்தால் இதன் முட்டாள்த்தனம் புரியும்.

* முதல் எழுத்து மு தமிழ் எழுத்தைச் சுட்டுகிறது. ஏ, பி, சி, டி, இ, ஜி, ஐ, ஜே, கே, ஓ, பி, டி, யு, வி  போன்றவை எந்தமொழி எனத் தெரியாமல் குழப்பும்.

* 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாகவும் தற்போதும் கூட சிற்றூர்களிலும் தமிழிலேயே தலை எழுத்துகளை எழுதும் வழக்கே இருக்கிறது. தலை எழுத்து என்னும் சொல்லையே கூட அருட்பெருங்கோ மூலம் அறிந்தேன். எங்கள் ஊரில் விலாசம் என்பார்கள். சுப்பையாவை சூனா பானா என்பார்கள். சின்னதம்பியைச் சீனா தானா என்பார்கள்.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சமியாகிய M. S. சுப்புலட்சுமியை ம. ச. சுப்புலட்சமி என்றும் கைலாசம் பாலசந்தராகிய K. பாலசந்தரை கை. பாலசந்தர் என்றும் எழுதத் தயங்குகிறோம்.

இப்படி தயங்குவதற்கான முக்கிய காரணம்:

“இது அதிகாரப்பூர்வப் பெயர். இப்பெயராலேயே பரவலாக அறியப்பெற்றுள்ளனர். தலை எழுத்தை மாற்றினால் குழப்பம் வரும். கே. பாலசந்தரை கை. பாலசந்தர் என்று கை, கால் எல்லாம் போட்டு எழுதுவது மரியாதை குறைவாக உள்ளது.” போன்ற சிந்தனைகளே !

இந்த அதிகாரப்பூர்வப் பெயர் என்ற கருத்துருவும் தயக்கமும்  தேவை அற்றது:

* தனி மனிதர்களின் விருப்பை விட பலர் பேசும் மொழியின் தன்மைக்கு மதிப்பு தருவதே நியாயம்.  பெயருக்குரியவர் அப்படி எழுதிவிட்டார் என்பதற்காக நாமும் தொடர்ந்து மொழியைச் சிதைத்து எழுதலாகாது.

* மக்கள் தொலைக்காட்சி போன்ற பல தமிழார்வல ஊடகங்கள் முழுக்கத் தமிழ் தலை எழுத்துகளைக் கொண்டே செய்திகள் வெளியிடுகின்றன. நாம் புதிதாகவோ கூடாததாகவோ ஒன்றும் செய்யவில்லை.

* சொத்து ஆவணம், வங்கிச் சீட்டு போன்றவற்றில் தான் ஒருவர் எழுதுகிறபடியே பெயர் எழுதவேண்டும். அங்கும் கூட அது அவர் கைப்பட எழுதியது தானா என்றே முதன்மையாகப் பார்க்கப்படும். தமிழா ஆங்கிலமா என்பது இரண்டாம் நிலையே. வேறெங்கும் பெயர் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாக வேண்டிய தேவை இல்லை.

* ஒருவரின் பெயரைத் தமிழில் எழுதினால் மரியாதை குறைவாக இருக்கிறது என்பது ஒரு மொழி சார் இனத்தின் தன்னாண்மைக்கு நேரடியாக விடுக்கப்படும் மிரட்டலாகவே கருத இயலும்.

* Srilanka என்பதை Srilanka அரசு ஸ்ரீலங்கா என்றே எழுதினாலும் ஈழத்தமிழர்கள் ஏன் சிறீலங்கா என்றே எழுதுகின்றனர்? மொழி சார் அரசியல், அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவது தானே காரணம்? ஆனால், ஈழத் தமிழர்கள் பலரும் சிறீலங்கா என்றே எழுதினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏன் விடாது ஸ்ரீலங்கா என்கின்றனர்? பொது வழக்கம், ஈழத் தமிழர்கள் விருப்பம் என்பதைச் சுட்டி தமிழ்நாட்டுத் தமிழரையும் சிறீலங்கா என்றே எழுத வைத்து விட முடியுமா? இதில், எது அதிகாரப்பூர்வமானது என்பதை யார் முடிவு செய்வார்கள்? அதைப் பொது வழக்கில் எப்படி நடைமுறைப்படுத்துவது?

என் புரிதலில் ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

தமிழில் பெயர் எழுதுவோம்.