நம்முடைய பிறருடைய பெயர்களையும் தமிழ்த் தலை எழுத்துகளைக் கொண்டே எழுத முன்வர வேண்டும்.
எடுத்துக்காட்டு, முத்துச்சாமியின் மகன் வெற்றிவேல் = மு. வெற்றிவேல்.
ஏன்?
* மு.Vetrivel அல்லது Mu. Vetrivel என்று எழுதிப் பார்த்தால் இதன் முட்டாள்த்தனம் புரியும்.
* முதல் எழுத்து மு தமிழ் எழுத்தைச் சுட்டுகிறது. ஏ, பி, சி, டி, இ, ஜி, ஐ, ஜே, கே, ஓ, பி, டி, யு, வி போன்றவை எந்தமொழி எனத் தெரியாமல் குழப்பும்.
* 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாகவும் தற்போதும் கூட சிற்றூர்களிலும் தமிழிலேயே தலை எழுத்துகளை எழுதும் வழக்கே இருக்கிறது. தலை எழுத்து என்னும் சொல்லையே கூட அருட்பெருங்கோ மூலம் அறிந்தேன். எங்கள் ஊரில் விலாசம் என்பார்கள். சுப்பையாவை சூனா பானா என்பார்கள். சின்னதம்பியைச் சீனா தானா என்பார்கள்.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சமியாகிய M. S. சுப்புலட்சுமியை ம. ச. சுப்புலட்சமி என்றும் கைலாசம் பாலசந்தராகிய K. பாலசந்தரை கை. பாலசந்தர் என்றும் எழுதத் தயங்குகிறோம்.
இப்படி தயங்குவதற்கான முக்கிய காரணம்:
“இது அதிகாரப்பூர்வப் பெயர். இப்பெயராலேயே பரவலாக அறியப்பெற்றுள்ளனர். தலை எழுத்தை மாற்றினால் குழப்பம் வரும். கே. பாலசந்தரை கை. பாலசந்தர் என்று கை, கால் எல்லாம் போட்டு எழுதுவது மரியாதை குறைவாக உள்ளது.” போன்ற சிந்தனைகளே !
இந்த அதிகாரப்பூர்வப் பெயர் என்ற கருத்துருவும் தயக்கமும் தேவை அற்றது:
* தனி மனிதர்களின் விருப்பை விட பலர் பேசும் மொழியின் தன்மைக்கு மதிப்பு தருவதே நியாயம். பெயருக்குரியவர் அப்படி எழுதிவிட்டார் என்பதற்காக நாமும் தொடர்ந்து மொழியைச் சிதைத்து எழுதலாகாது.
* மக்கள் தொலைக்காட்சி போன்ற பல தமிழார்வல ஊடகங்கள் முழுக்கத் தமிழ் தலை எழுத்துகளைக் கொண்டே செய்திகள் வெளியிடுகின்றன. நாம் புதிதாகவோ கூடாததாகவோ ஒன்றும் செய்யவில்லை.
* சொத்து ஆவணம், வங்கிச் சீட்டு போன்றவற்றில் தான் ஒருவர் எழுதுகிறபடியே பெயர் எழுதவேண்டும். அங்கும் கூட அது அவர் கைப்பட எழுதியது தானா என்றே முதன்மையாகப் பார்க்கப்படும். தமிழா ஆங்கிலமா என்பது இரண்டாம் நிலையே. வேறெங்கும் பெயர் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாக வேண்டிய தேவை இல்லை.
* ஒருவரின் பெயரைத் தமிழில் எழுதினால் மரியாதை குறைவாக இருக்கிறது என்பது ஒரு மொழி சார் இனத்தின் தன்னாண்மைக்கு நேரடியாக விடுக்கப்படும் மிரட்டலாகவே கருத இயலும்.
* Srilanka என்பதை Srilanka அரசு ஸ்ரீலங்கா என்றே எழுதினாலும் ஈழத்தமிழர்கள் ஏன் சிறீலங்கா என்றே எழுதுகின்றனர்? மொழி சார் அரசியல், அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவது தானே காரணம்? ஆனால், ஈழத் தமிழர்கள் பலரும் சிறீலங்கா என்றே எழுதினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏன் விடாது ஸ்ரீலங்கா என்கின்றனர்? பொது வழக்கம், ஈழத் தமிழர்கள் விருப்பம் என்பதைச் சுட்டி தமிழ்நாட்டுத் தமிழரையும் சிறீலங்கா என்றே எழுத வைத்து விட முடியுமா? இதில், எது அதிகாரப்பூர்வமானது என்பதை யார் முடிவு செய்வார்கள்? அதைப் பொது வழக்கில் எப்படி நடைமுறைப்படுத்துவது?
என் புரிதலில் ஒவ்வொருவர் அறியாமை, அரசியல், கொள்கைக்கு ஏற்பவும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரப்பூர்வம் என்று ஒன்று தெளிவாக வரையறுக்கப்படுவதில்லை. அத்தகைய அதிகாரம் ஒன்று இருந்தாலும் நம்முடைய கொள்கைகளைப் புறந்தள்ளி அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.
தமிழில் பெயர் எழுதுவோம்.
Comments
12 responses to “தலை எழுத்து”
//30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாகவும் தற்போதும் கூட சிற்றூர்களிலும் தமிழிலேயே தலை எழுத்துகளை எழுதும் வழக்கே இருந்திருக்கிறது//
உண்மை
நான் எப்பவும் ம.சிவசாம்ராசு தான் 🙂
ஸ்ரீலங்கா என்று இருந்தாலும் ஈழத்தமிழர்கள் ஏன் சிறீலங்கா என்றே எழுதுகின்றனர்? //
ஏனென்றால்..
ஸ்ரீ க்கான விசைப் பலகை எதுவென்று தெரியாது.
ரவி,
இப்போதுதான் இந்தப் பதிவைப் படித்தேன்.
//கே. பாலசந்தரை கை. பாலசந்தர் //
இதில் ஒரு சிக்கல் உள்ளதாக நான் கருதுகிறேன். நம்முடைய பெயரை எழுதும் போது சிக்கல் இல்லை. ஆனால் பிரபலங்களின் பெயரை எழுதும் போது தலையெழுத்தை ஆங்கிலத்தில் அல்லாமல் தமிழிலேயே எழுத வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவரின் தந்தையாரின் பெயரையும் நாம் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் சொன்ன உதாரணப்படியே K.பாலசந்தர் என்பவரின் தந்தையார் க, கா, கி,… என்று எந்த எழுத்துக்களில் வேண்டுமானாலும் தொடங்குவதாக இருக்கலாம். நாமே எப்படி யூகம் செய்து கை.பாலசந்தர் என்று எழுத முடியும். தலையெழுத்து மாறிப் போனால் பிரச்சினையாகி விடாதோ? 🙂
sureshkannan, நீங்கள் முதன்முதலில் என் வலைப்பதிவுக்கு வந்து மறுமொழி இட்டிருப்பதில் மகிழ்ச்சி.
அறியப்பெற்றவர்களின் தந்தை / தாய் / ஊர்ப் பெயர் தெரியாமல் ஊகித்தோ சும்மாவோ தமிழில் எழுதுவது தவறு. அதை நான் பரிந்துரைக்கவில்லை.
ஆனால், இந்த விவரங்கள் தெளிவாகத் தெரியும் நிலையில், தமிழில் எழுதத் தயங்க வேண்டாமே?
இன்று, இணையம், விக்கிப்பீடியா வரவுக்குப் பின் பலரின் விவரங்கள் எளிதில் அறியக்கூடியதாகவே இருக்கிறது.
மற்றவர் பெயரை அவர் அனுமதியின்றி மாற்றி எழுதவேண்டும் என்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம். பண்பின்மையின் வெளிப்பாடு.
தலை எழுத்து என்பதே தேவையில்லாத ஒன்று. அதிலும தந்தை பெயரையோ, கணவரின் பெயரையோ முதல் எழுத்தாகச் சுட்ட வேண்டும் என்னும் ஆணாதிக்கப்போக்கை முதலில் கைவிடவேண்டும்.
தாய் தந்தையரின் பெயரை (கணவரின் பெயரை அல்ல) நம் பெயரோடு சேர்த்துக்கொள்வது உத்தமம்.
உங்கள் கூற்றுப் படி உலக ஊர்கள், ஆட்களின் பெயர்களை எல்லாம் சிதைத்து எழுதிய ஆங்கிலேயர்களே உலகின் மிகப் பெரிய ஆணவக்காரர்கள். அதைப் பேசிக் கொண்டிருப்பதில் உங்களுக்குத் தயக்கம் இல்லையா?
ஒரு மொழியின் இயல்பைக் காட்டிலும் தன்னுடைய பெயர் பெரிசு என்று ஒருவர் எண்ணுவதே ஆணவத்தின் உச்சம்.
அந்தந்த மொழிகளின் இயல்புக்கேற்ப ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு மாதிரி உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது இருப்பது அறியாமையின் உச்சம்.
தலை எழுத்து இல்லாத ஆட்களுக்கு நாம் தலை எழுத்து தருவதில்லை. நாமே தந்தை பெயரை மட்டும் தேர்வு செய்வதில்லை. நாம் செய்வதெல்லாம் அவர்கள் பெயரை அப்படியே தமிழில் எழுதுவது தான். பெண்ணுரிமை பேசுவது முற்போக்காக இருப்பவர்களுக்கு, பெயரைத் தாய் மொழியில் எழுதுவது பிற்போக்காக இருப்பது விந்தையே?
Madurai SanmugaVadivu SubbuLakshmi என்பதை ஆங்கிலத்தில் எழுதும் போதும் M. S என்பது முதல் எழுத்து. அதே பெயரைத் தமிழில் எழுதினால் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமிக்கு ம. ச தானே முதல் எழுத்தாக்கும்? பெயரைத் தமிழில் எழுதினாலும் தலை எழுத்தை ஆங்கிலத்தில் தான் எழுதுவோம் என்பது முட்டாள்த்தனத்தின், அடிமைத்தனத்தின், மோகத்தின், தாழ்வு மனப்பான்மையின் உச்சம் !
>> ஆங்கிலேயர்களே உலகின் மிகப் பெரிய ஆணவக்காரர்கள்.
நிச்சயமாக. யார் இல்லை என்று சொன்னார்கள்? நிற்க. தூத்துக்குடியை Tuticurin என்று எழுதியவன் ஆணவக்காரன்தான். ரஜினியை ரசினி என்று எழுதுபவர்?!!
எம். எஸ். சுப்புலட்சுமியை, அடம்பிடிப்பவர்கள் ‘சுப்புலட்சுமி’ என்றோ மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்றோ எழுதலாம்.
மற்றப்படி அதிகாரப்பூர்வமாகவும், பிரபலமாகவும் இருக்கிற எம்.எஸ் என்ற பெயரை நாமும் பயன்படுத்துவதுதான் பண்பு.
கே. பாலசந்தர் அல்லது ஆர். மாதவன் போன்ற பெயர்களை அப்படியே எழுதுவதில் என்ன பிரச்சனையோ. “எனது மூக்கின் நுனிக்கு சிறு தூரம் வரை தான் உனக்கு உரிமை” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. மற்றவர் எப்படி பெயர் வைக்கவேண்டும் என்று இன்னொருவர் நாட்டாமை செய்வது எவ்வளவு அநாகரிகம்.
ராஜாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பெயர்களோடெல்லாம் விளையாடி பின்னர் அடங்கிவிட்டர்கள். வரலாறு தெரியாதவர்கள் இன்னும் அலட்டிகொள்கிறார்கள்.
>> பெயரைத் தமிழில் எழுதினாலும் தலை எழுத்தை ஆங்கிலத்தில் தான் எழுதுவோம் என்பது முட்டாள்த்தனத்தின், அடிமைத்தனத்தின், மோகத்தின், தாழ்வு மனப்பான்மையின் உச்சம் !
தன்னுடைய பெயரை தான் எழுதும் போது இந்த தெளிவு இருந்தால் போதுமானது. மற்றவர் பெயரோடு விளையாடும் போதல்ல.
balaji,
உங்கள் கூற்றுப்படி, 90% ஆங்கிலப் பெயர்கள் ஆணவத்தின் வெளிப்பாடு தான். ஆங்கிலேயர்களுக்கு பண்பு சொல்லித் தர நீங்கள் முயன்று இருக்கிறீர்களா? குறைந்தபட்சம் உங்கள் ஆங்கிலப் பதிவிலாவது ஆங்கிலப் பெயர்களைப் புறக்கணித்து உள்ளூர்ப் பெயர்களுக்கு முன்னுரிமை தந்து எழுதி இருக்கிறீர்களா? திருச்சி Trichy என்று எழுதுவது ஆணவம் என்றால், அதையும் நாமும் வெட்கமின்றி நம்ம ஊரிலேயே எழுதி வைத்துக் கொள்வது தன்மானமில்லாமை அல்லவா? இல்லை, ஆங்கிலேயன் மட்டும் இப்படி செய்கிறானே என்று கேட்பது தமிழனின் தாழ்வு மனப்பான்மையா?
இணையத்தில் முற்போக்குக்காரர்களுக்குப் பஞ்சமில்லை 🙂
நீங்கள் எவ்வளவு பண்புடையவராக இருந்தாலும் சீனப் பெயர்களை ஆங்கில எழுத்துகளில் எழுத இயலாது. சீனாக்காரனாலே எழுத இயலாது. அவன் எழுதுவது ஒன்றும் உச்சரிப்பதுமாக இருக்கும். நிறைய பேர் பிற நாட்டவர் வசதிக்காக தங்களுக்கு எளிய உலக / ஆங்கிலப் பெயர் ஒன்றும் சூடி இருப்பார்கள்.
தமிழகத்தில் பேருந்தே ஓடாத, சாலை, குடிநீர், பள்ளி, மருத்துவமனை வசதி இல்லாத ஊர்கள் நிறைய இருக்கின்றன. தயவு செய்து இந்த ஊர்களில் போய் ‘வாழ்ந்து’ பாருங்கள். எது தமிழ், தமிழர் யார், அவர்கள் பண்புகள் என்ன என்று புரியும். இல்லை, சீனா, சப்பான், ஐரோப்பா என்று ஆங்கிலம் பேசாத நாடுகளில் போய் ‘வாழ்ந்து’ பாருங்கள். எது மொழிக்காப்பு, மொழிவளர்ச்சி, மொழி இயல்பு, எது பண்பு என்பது புலப்படும்.
உங்கள் கேள்விக்கு பதில் வாதமாகத் தான் ஆங்கிலேயன் ஆணவக்காரனா என்று கேட்டேனே ஒழிய, நான் அவர்களை ஆணவக்காரர்களாக நினைக்கவில்லை. சீனர்கள், ஐரோப்பியர்கள் என்று நிறைய பேருக்கு இந்திய, தமிழ்ப் பெயர்கள் வாயில் நுழைவது சிரமம்.
வாயில் நுழையாத போதும், தங்கள் மொழிக்கு ஏற்றவாறு ஒலிப்பது ம், உலகெங்கும் உள்ள நடைமுறை. நிச்சயம் இதில் பண்புக் குறைவு ஏதும் இல்லை. என்னுடைய பெயரைத் திரித்து ஒலிக்காதே என்று சொல்வது தான் பண்புக் குறைவு. ego தவிர வேறு ஒன்றும் இல்லை.
இது விசயத்தில் நம் இருவர் கருத்துகளையும் முன்வைத்து விட்டோம். தொடர்ந்து உரையாட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்.
//அந்தந்த மொழிகளின் இயல்புக்கேற்ப ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு மாதிரி உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது இருப்பது அறியாமையின் உச்சம்.//
நச்
ரவி அவர்களே,
ஒவ்வொருவரும் தமது முதல எழுத்தை தமிழில் எழுத வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் இந்த முதல் எழுத்து இடும் பழக்கமே நமக்கு அந்நியர் புகுத்தியது என்பது நெருடலான உண்மை.
தமிழர்கள் முதல் எழுத்து இடும் பழக்கம் உடையவர்கள் என்று யாமறியோம்.
சங்க கால புலவர்கள் முதற்கொண்டு, நமது மண்ணின் பேரரசர்கள் வரை எவரும் முதல் எழுத்து கொண்டிருந்ததற்கான சான்றுகள் இல்லை.
தத்தமது செயல்களால் தாம் என்ற பெயர்களை சூடிக் கொல்வதயே தமிழர் விரும்பினர், கடலுள் மாயிந்த காரணத்தினாலேயே பெருவழுதியாய் இருந்தவன் கடலுள் மாயிந்த இளம் பெருவழுதி ஆனது வரலாறு கூறும் உண்மை. பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அவ்வாறே. அருள்மொழிவர்மன் ராசராசனாய் பெரும் புகழ் படைத்த பின்னும் , முதலாம் ராசேந்திரன் தன்னை அ.ராசேந்திரன் என்றோ ரா.ராசேந்திரன் அழைத்து கொள்ளவில்லை, மாறாக தன் சாதனைகளின் விளைவாக தன்னை முடிகொண்டசொழன் எனவும், இரட்டப்பாடிகொண்டசோழன் எனவும், கங்கைகொண்ட சோழன் எனவும் அழைத்து கொள்வதிலே பெருமை கொண்டான்.
விதண்டாவாதம் பேசவேண்டும் என்பதற்காக அன்றி நமது மரபு எது எனச்சொல்லவே இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.
தலைஎழுத்து போட்டுக்கொள்வதே அந்நிய ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்பது என் வாதம்.
என்னை பொருத்தவரை, தலைஎழுத்து போட்டுகொல்வதை விட தன் தாய், தந்தை பெயரையோ, தன் ஊர் பெயரையோ, தன் பெயரோடு இணைத்து முழுவதுமாக கூறுவது ஏற்புடையது என நம்புகிறேன்.
நட்புடன்,
ரகுபதி ராசா சின்னத்தம்பி.
நீங்கள் சொல்லும் கருத்து சிந்திக்க வைக்கிறது. தலை எழுத்து இடுவது வெளிநாட்டவர் வழக்கமாகவே இருந்தாலும் இன்று நடைமுறை காரணங்களுக்காகத் தேவைப்படும் ஒன்றாகி விட்டது. எ.கா: பெயர்ப்பலகை போன்ற இடங்களில் சுருக்கமாக எழுத வேண்டிய தேவை.